Friday, July 22, 2005

குழந்தை பிறக்காமல் இருக்க...............

குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஒரு பெண் டாக்டரிடம் கேட்டாள்.
அதுக்கு டாக்டர் சொன்னார் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும் என்று.
மூன்று வருடங்களாக முத்தநிறுத்தம். இனி என்ன நடக்கப் போகிறது.?

இது என்ன மஞ்சள் பத்திரிகையின் தலைப்பு போல இருக்கிது எண்டு நீங்கள் யோசிக்கிறது தெரியுது.நானும் தலைப்பை படிச்சு போட்டு சத்தியமாக குழம்பிப்போட்டன். பொறுங்கோ விசியத்தை சொல்லுறன்.இது இஞ்ச ரொரண்டோவில் இருந்து வெளிவருகின்ற ஒரு தமிழ் பத்திரிகையின்4,5 மாதத்துக்கு முந்திய இதழின் முன்பக்க தலைப்பு செய்தி அது. தடித்த எழுத்தில் வேறு போடப்பட்டிருந்தது.தலைப்பு செய்திக்கு கீழே ஒரு விபரமும் இல்லை.மிகுதி மூன்றாம் பக்கம் எண்டு போட்டிருந்தது.

சரி பத்திரிகையின் பெயர்,முன்பக்கம் தான் மஞ்சள் கலரில வருது எண்டால் விடயமுமெல்லோ மஞ்சள் மண்டிக் கிடக்குது எண்டு போட்டு அவசரமாக மூண்டாம் பக்கம் போனால் அதில் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இலங்கை விடயங்கள்தான் இருந்தது. சரி எண்டு போட்டு மற்றைய பக்கங்களையும் புரட்டி பாத்தால் ஒண்டையும் காணேல்ல.மீண்டும் ஒருக்கா மூண்டாம் பக்கம் வந்து பார்த்தால் தான் எனக்கு விசியமே விளங்கிச்சு.

சரி இவ்வளவு சொல்லியிருக்கிறன் உங்களுக்கு ஏதாவது விளங்கிச்சோ.விளங்கேலையோ.சரி பொறுங்கோ. தலையங்கத்தை சரியா தாறன் இப்ப ஏதாவது புரியுதோ எண்டுபாருங்கோ.

குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஒரு பெண் டாக்டரிடம் கேட்டாள்.அதுக்கு டாக்டர் சொன்னார் ஒன்றும் செய்யாமல்இருந்தாலே போதும் என்று.மூன்று வருடங்களாக யுத்தநிறுத்தம்.இனி என்ன நடக்கப் போகிறது.?

இப்ப புரிஞ்சுதோ என்ன விசியம் எண்டு. யுத்தம் முத்தமாக மாறியதை.
"யு"த்த நிறுத்தம் "மு"த்தநிறுத்தமாக மாறியதைக் கூட கவனிக்காமல் அப்படி என்னதான் பத்திரிகை வெளியிடுகின்றனர்.சரி ஒரு பந்தியில் ஒரு எழுத்து பிழை என்றால் பரவாயில்லை.முன்பக்கத்தில் அதுவும் பிரதான செய்தி தலையங்கத்தில்இப்படி ஒரு பிழை வந்ததைக் கவனிக்காமல் பத்திரிகை அச்சாகியதுடன் அல்லாமல் மக்களையும் சென்றடைந்திருக்கிறது.ஒரு பத்திரிகை அச்சாகும் முன்னர் பிழைதிருதுவார்கள்.அச்சாகிய பின்னர் பிழை இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.இவர்கள் இவை எவற்றினையும் பார்ப்பதில்லை.இலவசப்பத்திரிகை விளம்பரங்கள் மூலம் காசு வருகிறது.அது போதும் அவர்களுக்கு.1970ம் ஆண்டுகளிலே யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிகையின் பெயரினை தாங்கிய இந்தப் பத்திரிகைஅச்சுப்பிழைகளுக்கெனவே பெயர் போனதாக இருந்தது.இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ பத்திரிகைகள்வெளியிடுபவர்கள் அல்லது அதன் வாசகர்களுக்கும் இடையே இருக்கும் தேவைகளுக்கும் இங்குகனடாவில் வெளிவரும் பத்திரிகைகளை வெளியிடுபவர்களுக்கும் அத்துடன் அதன் வாசகர்களுக்கும் இடையேயான தேவைகள் நிச்சயம் வேறுபாடானவை.அது கூட இவற்றுக்கு காரணிகளாக அமையாலாம்.
மேற்படி பத்ரிகையின் ஒரு ஆசிரிய தலையங்கத்தினை கீழே பாருங்கள்.எவ்வளவு தப்பும் தவறுகளும்.அப்பத்திரிகை ஆசிரியரால் எழுதப்படும்
ஆசிரிய தலையங்கத்திலேயே இப்படி என்றால் பத்திரிகையில் எப்படி இருக்கும்?



(கிளிக் பண்ணிபெரிதாக பார்க்கலாம்.)

தமிழ்மக்களின் நல்ல காலமோ என்னவோ அப்பத்திரிகை இப்போது புதிய ஆசிரியரின் நிர்வாகத்தின் கீழ் இப்போது எழுத்து பிழைகள் இல்லாமல் தரமாக பல விடயங்களை தாங்கி வெளிவருகிறது.இருந்தாலும்இங்கு வெளியாகும் சில பத்திரிகைகளில் எழுத்துபிழைகள் மலிந்தே காணப்படுகிறது.கனடாவில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் பற்றி ஒரு பதிவு எழுதவே எண்ணியிருந்தேன். சினேகிதியின் வலைப்பூவில் (காணவில்லை?)அண்மையில் பத்திரிகைகள் தொடர்பாக பலர் தெரிவித்த கருத்துக்களே இதற்கு காரணிகளாக அமைந்தது.அப்படி இருக்கும் நிலையில் தான் இன்று இந்த தலையங்கத்தினை தாங்கிய பழைய பத்திரிகையினை கண்டேன்.உடனே இந்த பதிவை பதிந்துள்ளேன்.பின்பு ஒரு விரிவான பதிவு தருகிறேன்

2 comments:

Voice on Wings said...

யுத்தம் முத்தமாக மாறியது வேடிக்கை. :)

வலைப்பதிவுகளிலும் இத்தகைய நிலையைக் காணலாம். தோன்றியவாறு 'நியாபகம்', 'கருப்பு', 'அன்னியன்' என்றெல்லாம் எழுதுகிறார்கள். அவ்வப்போது தட்டச்சுப் பிழைகள் வேறு, சரியான spelling தெரிந்திருந்தும்.

தமிழ் வலைப்பதிவுகளில் போலி / ஆபாசப் பின்னூட்டங்கள், ஐ.பி முகவரி சேகரிப்பு போன்றவற்றை விட அதிகமாகக் கவலையளிக்கும் செய்தி என்னவென்றால் அது தமிழர்களால் எழுத்துப் பிழையின்றித் தமிழை எழுத இயலாத நிலைதான். மொழிப்பற்றை மைப் பூசுவது, மற்ற மொழிகள் மீது வெறுப்புணர்வுகளைத் தூண்டுவது என்றெல்லாம் வெளிப்படுத்துவதை விட, அதனை மரியாதையுடன், கவனத்துடன், பிழைகளில்லாமல் கையாளுவது என்ற வகையில் வெளிப்படுத்தினால்........ மொழி கொஞ்சமாவது சிறப்படையும்.

வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.