Sunday, April 19, 2020

கரிகாலன் : - அன்றைய நாட்களும்.... முடி வெட்டுவதும்.....

 இந்த அனுபவம் பொதுவாக பெண்களுக்கு கிடைக்காதது .இது ஓரு ஆண்களுக்கான உலகம்.
இப்படித்தான் அன்றைய நாட்கள் இருந்தன.

நான் சொல்வது மயிர் வெட்டுவது பற்றி , அம்பட்டன், பாபர் இப்படி பல பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டதும் சாதிய படி நிலையில் இவர்களுக்கு ஓரு இடம் தந்து நாங்கள் "கவுரவித்ததும் "எங்கள் நினைவில் இருந்து அகலாதது.

நான் சிறுவனாக இருந்த காலங்களில் பார்த்தது எங்கள் அப்பப்பா வீட்டுக்கு ஒருவர் வருவார் .பொதுவாக அவர் வரும் நாட்கள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும்.

கையில் ஓரு பெட்டி , அரையில் மடித்து கட்டிய வேட்டி, மேலே வெறும் மேனி,முகத்தில் ஒரு வார தாடி அத்துடன் காலமும் சமூகமும் கொடுத்த அனுபவங்கள் முகத்தில் சுருக்கங்களாய்.

கதவை திறந்து ,வீட்டுக்கு முன்னே வந்து அய்யா என்று அழைப்பார். இதற்காகவே காத்திருக்கும் அப்பப்பா அவரை வீட்டுக்கு பின்னே அழைத்து செல்ல ஒரு தென்னை மரத்துக்கு கீழே அப்பப்பா ஒரு சிறு கம்பளம் விரித்து அமர வைக்கப்படுவார்.

வந்தவர் கொண்டுவந்த பெட்டியை திறந்து தனது பொருட்களை எல்லாம் எடுத்து வைப்பார். அப்பப்பா கையில் ஒரு சிறிய கண்ணாடி கொடுக்கப்படும். ரசம் போன கண்ணாடி அது
வந்தவர் கத்திரிக்கோலும் சீப்பும் கொண்டு மயிர் வெட்ட தொடங்குவார். கைகள் வேலை செய்ய இருவரின் வாய்களும் ஊர் அண்டல் அளப்புகள் எல்லாம் பேசி நிற்கும்.

மயிர் வெட்டி முடிய ஒரு நீள பிரஸ் எடுத்து சோப்பில் குழைத்து அப்பப்பாவின் முகம் முழுவதும் சோப் பூசி தாடியை சவரம் செய்ய தொடங்குவார்.இந்த கட்டடத்தில் அப்பப்பா மிகவும் அமைதியாக இருப்பார். முடி வெட்டுபவர் ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார். அப்பப்பா எதுவும் பேச மாட்டார். நாங்கள் ஏதும் கேட்டாலும் பதில் வராது. ஏனெனில் கத்தி கழுத்தில் இருக்கும்.

இதுவும் முடிய அடுத்த கட்டம் இனி அப்பப்பா ஒவ்வொரு கைகளாக தூக்க கமக்கட்டு மயிர் வழிக்கப்படும். இது எனக்கு அருவருப்பாக இருக்கும் என்பதால் முதல் இரண்டு கட்டங்கள்
முடிந்து மூன்றாம் கட்டடத்துக்கு வரும் போது நான் அந்த இடத்தை விட்டு ஓடி விடுவேன்.

அப்பொழுது எல்லாம் ஒரு நீளமான கத்தி தான் சவரம் செய்ய பாவிக்கப்படும். அது குப்பனுக்கு தலைமயிரும் வெட்டும் சுப்பனின் முகத்தினையும் மழிக்கும்
தர்மனின் கமக்கட்டு மயிரையும் சிரைக்கும். கீதையில் கண்ணன் சொன்மாதிரி அதன் கடமையை செய்து கொண்டே இருக்கும்.

அதை சுத்தம் செய்கிறார்களா? இல்லையா? யாரும் அந்த நாட்களில் அதைப் பற்றி கவலைப் பட் டதில்லை. அப்பொழுது கோரோனா ,எயிட்ஸ் போன்ற இன்ன பிற வியாதிகள் இல்லை தானே.

எல்லாம் முடிந்த பின்னர் அப்பப்பா அப்படியே கிணற்றடிக்கு போய்விடுவார் முழுக்கு போடுவதற்காக. "பத்தல் "
அடைக்கப்பட்டு அதற்குள் தென்னோலைகள் போடப்பட்டிருக்கும் ஊறுவதற்காக, அதற்கு மேலே நின்று துலாவால் இறைத்து முழுக்கு போடத் தொடங்கி விடுவார். துலா இறைப்பது என்பது ஒரு கலை. உடனடியாக எல்லோராலும் இறைக்க முடியாது. போதுவாக ஊரில் எல்லா வீடுகளிலும் "கப்பி" கயிறுதான் இருக்கும்.

மயிர் வெட்டியவரை அப்படியே விட்டு விட்டேன். அவர் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்பக்கம் வந்து திண்ணையில்அமர்வார் .அப்பாச்சி அவரின் சுக நலன்களை விசாரித்துக் கொண்டே "மூக்குபேணியில்"
"தேத்தண்ணி " கொண்டுவந்து கொடுப்பார். அவர் அதை குடித்து விட்டு காசை வாங்கிக்கொண்டு போவார். அந்த மூக்கு பேணி கழுவி ஒரு ஒரமாக வைக்கப்படும் மீண்டும் அவர் வந்தால் கொடுப்பதற்காக, அல்லது அவரை போன்றவர்கள் வந்தால் கொடுப்பதற்காக....

அப்பப்பா ---அப்பாவின் அப்பா
 அப்பாச்சி ---- அப்பாவின் அம்மா
  பத்தல் ---- கினற்றடியில் நின்று குளிப்பதற்காக  போடப்                                                                பட்டிருக்கும்    சீமெந்து மேடை ....
 துலா :- கிணற்றில் நீர் அள்ள  உபயோகிக்கும்  ஒரு முறை .
                                    முழு பனை மரம் இதில் பயன்படுத்தப்படும் .
  மூக் கு பேணி ---   நீர் , டீ போன்றவை அருந்துவதற்காக                                                                                       பயன்படுத்தப்பட்ட ஒரு  ரம்ளர்  ,    கேத்தலில்                                                                     இருப்பது மாதிரி ஒரு       வெட்டு   இருக்கும்
  தேத்தண்ணி --- தேநீர் ,டீ

   * யாழ்ப்பாணத்தில்  பொதுவாக மயிர் என்று தான் சொல்வார்கள் ,
                         தமிழகத்தில் முடி என்பார்கள் .

தொடர்வேன்....

Monday, April 13, 2020

தமிழன்டா!!

இலங்கை, இந்தியாவில் லாக்டவுன் காரணமாக சாராய கடைகள் பூட்டி இருக்கின்றன. தமிழகத்தில் குடிமக்கள் பலர் காலையில் கண் விழிப்பதே சாராய கடையில்தான்.

ஒருநாள் கூட சாராயம் இல்லாமால் இருக்க முடியாதவர்கள் இவர்கள். பலருக்கு காலையிலேயே கைகள் நடுங்க ஆரம்பித்து விடும்.சாராயம் உள்ளே போனால்தான் நிதானத்துக்கே?? வருவார்கள்.

இப்போது மது கிடைக்காத படியால் பல வீடுகளில் குடும்பத்தகராறுகள், கொலைகள் நடக்க தொடங்குகின்றன.

அத்துடன் "குடிமக்கள்" பலர் மன உளைச்சல், உடல் வலிகள் காரணமாக தற்கொலைகளும் செய்கிறார்கள்.

இப்படி தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் இருப்பவர்களில் நடிகை மனோரமாவின் மகனும் ஒருவர். அவர் ஒரு பெரும் குடிமகன்.

அடுத்து நேற்று ஒருவர் hand sanitizer அருந்தி இறந்து விட்டார். இன்னும் இருவர் வித்தியாசமாய் சிந்தித்து After Shaving Lotion அருந்தி வெற்றிகரமாக உயிரை விட்டிருக்கிறார்கள்.

இன்னும் இருவர் வார்னிசை எடுத்து குடித்து மேலோகம் போய் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை.

இங்கு கனடாவில் LCBO எனப்படும் சாராய கடைகளை அத்தியாவசிய சேவைகள் என்ற பிரிவினுள் கொண்டு வந்து , திறந்து வைத்திருக்கின்றனர். என்ன திறந்திருக்கும் நேரத்தினை மட்டும் குறைத்திருக்கிறார்கள்.

ங் , மேற்படி கடைகள் அரசுக்கு உரியவை. பூட்டினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்

கஞ்சா விற்பனை கடைகளையும் அத்தியாவசியம் என்று சொல்லி திறந்து வைத்திருந்தவர்கள். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருப்பவை தனியார் கடைகள். கடைகளை பூட்டி விட்டு ஆன்லைனில் விற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

நேற்று பார்த்தேன் லொட்டொவும்(லாட்டரி ) இணையத்தில் வாங்கலாமாம்... இனி என்ன இணையத்தில் வாங்கி, இணையத்தில் முடிவை பார்த்து பொழுதை கழிக்கலாம்.

 நன்றி .....

Friday, April 10, 2020

எப்படி பொழுதை போக்குவது ? இந்த நாட்களில்

 இந்த கொரோனா  காலங்களில் .
எப்படி பொழுதை கழிப்பது என்பது   ஆண்களாகிய எங்களுக்கு  கஸ்டம் தான்.

குதிரை மாதிரி இரண்டு பக்கமும் பார்வையை திருப்பாது ஒரே நேர்கோட்டில்  பார்வையை ஒட்டி ,வாழ்க்கைதேரை நகர்த்திக் கொண்டிருந்த எங்களுக்கு  இந்த "ஸ்தம்பிதம்" ஒரு    பெரும் வலிதான்.

இருந்தும் இந்த வலியும் கடந்து போகும்.போகவேண்டும்.  அதுதான் வாழ்க்கை. அதற்கு மத்தியில்  இந்த பொழுதுகளை எப்படி நகர்த்தலாம் என்பதுக்கு சில ஆலோசனைகள்.

வீட்டில் இருக்கும் பொழுதுகளில் தேவை இல்லாமல்  வாயை திறக்காதீர்கள்,சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறவுங்கள்,
மனைவி   கோபத்தில்  கத்துகிறாரா? 

 கண்டு கொள்ளளாதீர்கள். இன்றைய நாட்களில் மன அழுத்தம் எல்லோருக்கும் உண்டு. இரண்டு கைகள் தட்டினால் தான் சத்தம் வரும்.
ஒரு கை தட்டி ஒன்றும் ஆகப்போவதில்லை.  எனவே நாவடக்கம் முக்கியம் இன் நாட்களில்.

பிடித்த புத்தகங்களை படிக்கலாம்,நிறைய புத்தகங்கள்  இணையத்தில் கிடைக்கின்றன . இல்லை சினிமா பார்க்கலாம். அல்லது நல்ல இசையை ரசித்து கேளுங்கள்  மனம் அமைதி அடையும்.

வீட்டு தோட்டத்தில் நேரம் செலவிடலாம். செடி,கொடி, வைத்து நீரூற்றுங்கள். மனம் அமைதி அடையும்.

உங்கள் வேலைக்கு தேவையான சில படிப்புகளை ஒன்லைன் மூலம் படிக்கலாம். இந்த இடைவெளியை பயன்படுத்தி வேலையில் ஒரு முன்னேற்றம்    ஏற்படுத்தலாம்.

 இன்னுமொரு நேரம் போவதும், மன அமைதியையும் கொண்டுவருவதுமான ஒரு விடையம்

 சமைப்பது  ,ஒரு ரெசிபியை   யூடியிப்பில் பாருங்கள் , பொருட்களை தயார் படுத்துங்கள் ,   பிள்ளைகளையும் துணைக்கு அழைத்து கொள்ளுங்கள்,
சமைத்து அசத்துங்கள். உங்கள்  மனைவியின் அன்பு உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும்.😁

வீட்டில் நிறைய கடிதங்கள் வந்து இருக்கும்.அவற்றை எடுத்து  தேவையானவற்றை வைத்து க் கொண்டு ,தேவை இல்லாதவைகளை  கிழித்து  ஏறியலாம்.
நேரமும் போகும் வீடும் சுத்தமாகும்.

உங்கள் போனில்  அல்லது மனைவியின் போனில் எடுத்த படங்கள் பல்லாயிர கணக்கில் இருக்கும். தேவையானவற்றை வைத்து கொண்டு
 தேவை இல்லாதவைகளை அழித்து விடுங்கள் .போனும் சுத்தமாகும் நேரமும் போகும்.

இவற்றை முயற்சி செய்து பாருங்கள் .பொழுது போகும்

தொடருவேன் 

Sunday, April 05, 2020

மீண்டும் கரிகாலன்!,எழுத வருகிறேன் !

நீண்ட நாட்களின் பின்னர் இன்று  எனது வலைபதிவில் எழுதுகிறேன் ,இனி தொடர்ந்து எழுதலாம் என நினைத்துக்கொண்டு இருக்கிறேன் . இடைபட்ட காலத்தில் உலகில் என்னென்னவோ நடந்து கொண்டு இருக்கிறது  உங்களுக்கு தெரியும் .வாழ்க்கை மிகவும் அழகானது ,எங்கள் வாழ்கையை தீர்மானிப்பது நாங்கள் தான் .மற்றவர்களின் பங்கும் இதில் உள்ளது என்றாலும் பெரும்பகுதி எமது பங்குதான்

இன்றைய இந்த ஆபத்தான நேரத்தில் சரியான திட்டமிடல் மிகவும் அவசியும் ,பலருக்கு பொருள்  இழப்பு .,பணஇழப்பு  இருந்தாலும்  மிகவும் பெறுமதியானது உயிர் ,அது இருந்தால் எதனையும் சம்பாதித்து கொள்ளலாம் .
எனவே எமது உயிர் முக்கியம் அத்துடன் எமது குடும்பத்தினரின் உயிரும் முக்கியம் ,சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .எங்களை, ,குடும்பத் தினரை பாதுகாப்போம் ,இதன் மூலம் மற்றவர்களையும் பாதுகாப்போம் ,

இதுதான் இன்று உலகெங்கும் நிலை ,நான் வாழும் கனடாவிலும் இதுதான் நிலை .இங்கும் வீதிகள் வெறிச்சோடி இருக்கின்றன ,மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவு ,கடைகளில் பொருட்கள் கிடைத்தாலும்  விரைவாக காலி ஆகின்றமை
பல் இலட்சக்கணக்கானோர் வேலை இழப்பு இப்படி பல,

வரும் நாட்களில் இது பற்றி நிறைய எழுத எண்ணி இருக்கிறேன் .
துவண்டது தமிழ்மணம் மட்டும் அல்ல நானும் தான்  இப்போது தமிழ்சரத்தின்வருகையோடு ,அதன் துணை கொண்டு பயணிக்க எண்ணி இருக்கிறேன். சிக்கல் இல்லாமல் தமிழ் சரத்தில்  இந்த பதிவு  வருகிறதா 
  என்னவோ தெரியவில்லை ......பார்ப்போம், 
.

அடுத்து நான் பல வருடங்களாக  கூகிள் தமிழ் எழுதிதான் பயன்படுத்தி வருகிறேன்   ,இருந்தும் அதில் ஒரு சிக்கல் ,சொற்களை அடித்து விட்டு என்டர் தட்டும்  போது சில வேளைகளில் வேறு சொல்லாக மாறிவிடுகிறது என்பதுடன்  அர்த்தமும்  மாறிவிடுகிறது ,கவனிக்காமல் அப்படியே விட்டால் சிக்கல் ஆகிவிடுகிறது .

எது பயன்படுத்துவதற்கு  மிகவும் எளிமையான ,வசதியான தமிழ் எழுதி என்பதை தெரியப்படுத்தினால்  நன்றி உடையவனாக இருப்பேன் ,


மீண்டும் சந்திப்போம்…..
கரிகாலன்