Friday, March 30, 2007

தேவையா இது இந்தியாவுக்கு?

திவயின சிங்களப் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் ( 28.03.2007)

இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்

இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும்.

முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து சிறிலங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன.

ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன.

1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம்.
2. பிரபாகரனின் தாயகக் கொள்கை
3. இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987)

மேற்படி மூன்று விடயங்களில் இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு என்பது ஸ்ரீ லங்காவுக்கு இந்தியா நேரடியாக இல்லாத முறையில் சுற்றி வந்து கொடுக்கும் அழுத்தமாக அமைந்துள்ளது. இதற்கேற்ப இந்தியாவுக்கு வேண்டாத முறையிலான ஸ்ரீ லங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறியடித்தல் மேற்படி இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையில் ஒரு அங்கமாகும். (கட்டுநாயக்கவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலுக்கும் இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையே பொறுப்புக் கூற வேண்டும். இது பற்றி தொடரும் பந்திகளில் விபரித்துள்ளோம்.)

ஸ்ரீலங்கா குழப்பங்களற்ற சமாதானமான பிராந்தியமாக முன்னேற்றமடைந்து வருவதை விரும்பாத நிலையில் இந்தியாவே பிரபாகரன் என்ற வியாதியை ஸ்ரீலங்காவில் அறிமுகப்படுத்தியது. இந்தியா ஸ்ரீ லங்கா மீது பலாத்காரமாக 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திணித்ததற்குக் காரணமும் இந்தியாவின் ஆதிக்க விஸ்தரிப்பு நிலைப்பாட்டுக்கேற்ப ஸ்ரீ லங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலத்தை பிரபாகரனிடம் ஏலம் போடுவதற்கேயாகும்.


இனி மேற்படி இந்தியாவின் விஸ்தரிப்பு அழுத்தமும் மற்றும் இந்நாட்டின் மீதான பலவந்தக் கொள்கையும் கட்டுநாயக்காவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

கடந்த 2002 ஆம் ஆண்டில் அதிநவீனமான ராடர் உபகரணத்தின் தேவை ஸ்ரீ லங்காவுக்கும் ஏற்பட்டிருந்தது.
அது நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராடர் உபகரணத்தைப் பெற வேண்டிய அத்தியாவசிய தேவையாகும். இவ்வாறான உயர் தொழில் நுட்ப ராடர்களை சீனா உற்பத்தி செய்து நியாயமான விலைகளில் விற்று வந்ததால் சீனாவிலிருந்து ராடர்களை விலைக்கு வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா முயற்சி எடுத்தது. ஆனால், சீனாவுடன் பனிப்போரில் நெடுங்காலமாக ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு இவ்வாறு ஸ்ரீ லங்கா சீனாவுடன் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக் கொள்வதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் உடைய ராடர் கருவிகளை ஸ்ரீ லங்காவில் பொருத்தி வைத்தால் இந்தியப் பிரதேசங்களிலுள்ள யுத்த தளங்களின் இரகசியங்கள் அந்நியர் கைகளில் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் இந்தியா தானாகவே முன்வந்து அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ராடர் கருவியை ஸ்ரீ லங்காவுக்கு வழங்கியது.


கட்டுநாயக்க விமானப்படை முகாமில் பொருத்தப்பட்ட இந்தியாவின் ராடர் உபகரணம் இன்னும் முற்றாகப் பொருத்தி முடிக்கப்படாத பழைய வகை ராடர் உபகரணமாகும்.

தொழில் நுட்ப ரீதியில் முன்னைய முதலாம் பரம்பரைக்குரியதென கருதப்படும் இரட்டை அமைப்புடைய அந்த ராடர் கருவி மூலம் பெறக்கூடிய பயனைப் பொறுத்தவரை எந்த பிரியோசனமும் கிடையாது என்பது இப்போது தெரிந்து விட்டது. (அப்படி ஏதேனும் பயன் இருந்திருந்தால் பிரபாகரனின் விமானங்கள் கட்டுநாயக்காவை நெருங்கியிருக்க முடியாது).

இந்தியா அன்று ஸ்ரீ லங்காவுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு பயங்கரமான ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது. இதன் மூலம், நிகழ்ந்து கொண்டிருப்பது யாதெனில், இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பிரபாகரன் எனப்படும் நாசகார சக்தி இந்தியாவின் அழுத்தத்திற்கேற்ப தொடர்ந்து மனிதப் படுகொலைகளை செய்து கொண்டிருக்கப் போகிறது. இந்தியா எம்மீது சுமத்தியுள்ள ராடர் எனப்படும் பழைய இரும்புக் குவியலிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த இரும்புக் குவியலை உருக்கி மண்வெட்டிகள் செய்வதற்காக வைத்துக் கொண்டு வேறுநாட்டிலிருந்து அதிநவீன டாடர் உபகரணங்களை நாம் பெற்றுக் கொள்ளா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து மிகப் பெரியதாகவே இருக்கும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயுள்ள பகைக்கு ஸ்ரீலங்கா பலியாகிவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீ லங்காவின் அனைத்து அரசாங்கங்கள் மீதும் இந்தியா பிரயோகித்த அழுத்தங்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். எமது மூத்த சகோதரன் என்ற ஸ்தானத்தில் இருக்க வேண்டிய நாடு இன்று எங்களை அழித்தொழிக்க முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ளுவதும் கடினமாகும்.