Tuesday, April 10, 2018

அண்ணாவின் தந்திரம் ! .... பெரியாரின் கோபம் !.....

திராவிடர் கழகத்தில் பெரியாரிடம் அண்ணா செயலாளராகப்  பணிசெய்து  கொண்டிருந்த காலம் அது . அந்த நாளில் திராவிடர் கழக காரியாலயத்துக்கு வெள்ளை அடிக்கவேண்டும் என ஒரு நாள் அண்ணா தெரிவித்தார்.

“சரி  நாளை ஒரு நல்ல ஆளாக பார்த்து அழைத்து வா!”  என்றார் பெரியார் .மறுநாள் அது போல ஒரு ஆளுடன் போய் நின்றார் அண்ணா .

வெள்ளை அடிக்க வந்தவருக்கு முதலில் கட்டிடத்தை முழுவதும் சுற்றிக்காட்டி விட்டு “என்ன கூலி கேட்கிறாய்?” என்றார் பெரியார் .


வந்தவர் “ஜந்து ரூபா தாருங்கள்” என்றவுடன் கோபமடைந்த பெரியார் “நீ என்ன படித்திருக்கிறாய்?” என்று கேட்டார் .


“படிச்சிருந்தா நான் ஏன் இந்த வேலைக்கு வருகிறேன் “படிக்கலிங்க. என்றார் அண்ணா அழைத்து வந்தவர்.


உடனேயே பெரியார் அண்ணாவை சுட்டிக்காட்டி “ இதோ நிற்கிறாரே , இவர் எம்.ஏ படித்தவர்.இவருக்கே மாதச்சம்பளம் ஜந்து ரூபா தான் தருகிறேன் .கூலியை பார்த்துக் கேள் !” என்றவர்  பின்பு “இரண்டு ரூபா தருகிறேன்! “  என்றார் .


“கட்டாதுங்க!” என்று கூறிப்போய் விட்டார் வெள்ளை அடிக்க வந்தவர் .


இப்படி அண்ணா அழைத்து வந்த பலராலும் ,கூலி தகராறினால் வெள்ளை அடிக்கமுடியாமல் போகவே பல மாதங்களாக காரியாலயத்துக்கு வெள்ளை அடிக்க முடியாமல் காரியாலயம் மிகவும் அவலட்சணம் அடைந்து வருவது கண்டு யோசித்த அண்ணா ஒரு உபாயம் மேற்கொள்ள தீர்மானித்தார் .


ஒரு தொழிலாளியிடம் போய் “ஜயா ஒரு பெரியவரிடம் உங்களை அழைத்துச் செல்வேன் .அவர் கொடுக்கும் கூலிக்கு ஒப்புக்கொண்டு வேலை செய்யுங்கள் . உங்களுக்குரிய மீதிப் பணத்தினை, வேலை முடிந்ததும் வெளியே வந்து என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறி அவரை அழைத்து வந்தார் .


அவரும் அண்ணா கூறியபடி வந்து காரியாலயத்துக்கு வெள்ளை அடித்துக்கொண்டு இருந்தார். அண்ணா இல்லாத உணவு இடைவேளையில் அங்கு வந்த பெரியார் அந்த தொழிலாளியை ஏற இறங்க பார்த்துவிட்டு “ஏம்பா! நீ நன்றாக வெள்ளை அடிப்பாயா?” என்று கேட்டார்.


“ஏன் ஐயா இப்படி கேட்கிறீர்கள்?” என்று திடுக்கிட்டவாறு கேட்டார் வெள்ளை அடித்துக்கொண்டிருந்தவர் .


அதற்கு பெரியார்” அதில்லைப்பா; உனக்கு முன்னர் வந்த பலர் இந்த கூலிக்கு முடியாது என போய்விட்டார்கள். நீ மட்டும் எப்படி ஒப்புக்கொண்டாய் ? அனேகமாக உனக்கு வேலை சரியாக தெரியாது என நினைக்கிறேன்!” என்றார்  பெரியார் .


உடனே தன்மான உணர்வு மேலிட “ நான் ஒன்றும் கற்றுக்குட்டி அல்ல” என்று தொடங்கி அண்ணா அழைத்து வந்த விடயங்களையும் சொல்லி பணத்தினை  வெளியே வாங்கும் படியான ஏற்பாட்டையும் கக்கி விட்டார் .


இதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பெரியார் “ அப்படியா விடயம் ! “ சரி நீ வேலை செய்தது போதும் .பூச்சு மட்டையை கிழே வைத்து விட்டு முழுப்பணத்தையும் அவரிடமே வாங்கிகொண்டு  போ !” என்று அவரை அனுப்பியதும் அல்லாமல் அவருடன் சேர்த்து அண்ணாவையும் வெளியே அனுப்பி விட்டார் .


அதன் பின்பு நீண்டகாலத்தின் பின்னர் தான் அண்ணாவை மன்னித்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார் பெரியார் .



அண்மையில் வாசித்த ஒரு நூலில் ரசித்த பகுதி உங்களுக்காக இங்கு தந்திருக்கிறேன் . நீங்கள்  படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மறு பதிவில் சந்திக்கிறேன் .
நன்றி

Sunday, April 08, 2018

பயனுள்ள தகவல்கள் ……. பகுதி 3



51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.


லப்... டப்..!


53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


கிட்னியைக் கவனியுங்கள்....


58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.


பல்லுக்கு உறுதி...!


62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

முக்கிய குறிப்பு :-

ஆரோக்கியம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் எந்த முறையையும் பின் பற்ற முன்னர் மருத்துவரிடம் கேட்டுவிட்டே பின்பற்றவேண்டும் .சில உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது கூட சில பக்க விளைவுகளை உண்டாக்கும் .எனவே சொந்த பொறுப்பில் ,அனுபவம் பெற்றவர்களிடம் கேட்டுவிட்டே  செய்து பார்க்கவேண்டும் . இது எனது கருத்து .நன்றி