Wednesday, June 01, 2005

01 ஜி.பி இணைப்பு அனுப்ப வேண்டுமா?

சில நாட்களுக்கு முன்னர் எனக்கு ஒரு சிக்கல்.என்னவென்றால் ஒரு பெரிய கோப்பினை எனது நண்பர்ஒருவருக்கு மின்ஞ்சல் மூலமாக அனுப்பவேண்டி இருந்தது. எப்படி அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

சரி அக் கோப்பினை சுருக்கி அனுப்பலாம் என்று முயற்சி பண்ணினேன்.அப்பவும் அது 10 எம்.பி க்கு மேலேதான் இருந்தது.என்ன செய்வது என்று யோசித்து விட்டு இணையத்தில் தேடினேன். அப்போது கிடைத்ததுதான் இந்தத்தளம்.

இதன் மூலம் உங்களிடம் இருக்கும் பெரிய கோப்புக்களை படங்களை அனுப்பலாம் அதுவும் இலவசமாக மிகவும் பாதுகாப்பாக என்று வேறு சொல்கின்றனர். யாகூ மற்றும் ஜீமெயில் போன்றவை தமது மின்னஞ்சலுடன் 10 எம்.பி இணைப்புக்களையே அனுப்பவசதி செய்து தந்திருக்கின்றனர்.

ஆனால் இந்த தளத்தின் மூலம் 1000 எம்.பி( 01ஜி.பி) அனுப்பலாம்.மிகவும் பாதுகாப்பாகவும் (secure transfers), சாதாரணமாகவும் (Normal transfers) இரண்டு முறைகளில் இத்தளத்தின் மூலம் அனுப்ப வசதி செய்து தந்திருக்கின்றனர்.இருந்தாலும் இரகசியமான அல்லது பெறுமதியானதகவல்களை அனுப்புவதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளவும்.

இணையம் என்பது ஒரு அழகான ,கவர்ச்சிகரமான ஆனால் ஆபத்தான உலகம்
என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

தளம் இது தான் www.yousendit.com

Tuesday, May 31, 2005

பிள்ளையார் கோயிலில் திணிக்கப்பட்ட புத்தர் சிலை.

வவுனியா ஓமந்தை பிள்ளையார் கோவில் நிலத்திலும் புத்தர் சிலையை திடீரென சிறிலங்கா இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
மூன்றடி உயரத்தில் இந்த புத்தர் சிலையை கடந்த மார்ச் மாதம் சிங்கள இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.

பிள்ளையார் கோவில் குருக்களாக இருந்தவரை சித்திரவதை செய்து அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடித்துள்ளனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அங்கு வாழ்ந்த குருக்களின் நான்கு தலைமுறையினர் இந்த பிள்ளையார் ஆலயம் அருகிலேயே வசித்து வந்ததாக சுட்டிக்காட்டும் அம்மக்கள், அப்பகுதி மக்கள் அனைவரையும் கட்டாயப் புகைப்படம் எடுத்துள்ள சிங்கள இராணுவம், புத்தர் சிலைக்கு எதிராக எதுவிதப் போரட்டத்தையும் நடத்தக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

இராணுவத்தினர் அங்கு இருப்பதால் பொதுமக்கள் அச்சிலை அருகே செல்ல அச்சமடைந்த நிலையில் இருக்கின்றனர். தற்போது திணிக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலைக்கு அருகில் பல நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய வைரவர் சிலை இருப்பதை சுட்டிக்காட்டும் உள்ளுர்வாசி ஒருவர், அக்கோவிலில் இருந்த பழமையான பளிங்கு கற்களைக் கொண்டே திடீர் புத்தர் சிலை அமைத்துள்ளதாகவும் போதி மரம் ஒன்றையும் கூட அருகாமையில் நட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஓமந்தை மகா வித்தியாலத்திற்கு எதிரே முகாமிட்டுள்ள சிங்கள இராணுவத்தினர் வெசாக் பண்டிகை நாளின் போது இங்கே பழமையான புத்த ஆலயம் இருப்பதாக சிங்கள மொழியில் எழுதி வைத்துள்ளனர்.
பல தலைமுறையினராக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் இதுவரையில் அப்படியானதொரு ஆலயம் தமது பகுதியில் இருந்ததே இல்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரால்தான் இது உருவாக்கப்பட்டது என்றும் அப்பிரதேசவாதிகள் கூறுகின்றனர்.

இது குறித்து வன்னி அரச அதிபர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் ஓமந்தையைச் சேர்ந்தவருமான சிவசக்தி ஆனந்தன் ஆகியோரிடம் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
திடீர் புத்த ஆலயம் குறித்து கருத்து தெரிவித்த வன்னி ஆனந்தன், இதுவரையில் தான் புத்த ஆலயம் இருந்தது என்பதாக நான் கேள்விப்படவில்லை என்றும் இது குறித்து உடனடியாக அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு சிக்கலுக்குத் தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1997 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இப்பகுதி மக்கள் இடப்பெயர்வுக்குள்ளாயினர். 2003 ஆம் ஆண்டு ஜூன் முதல் இப்பகுதிக்கு மக்கள் திரும்பத் தொடங்கினர்.
அப்போது இந்த திடீர் புத்தர் ஆலயம் உருவாக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 2004 ஆம் ஆண்டு இந்த புத்தர் சிலையை மக்கள் அகற்ற முற்பட்டபோது சிங்கள இராணுவத்தினர் கடுமையாக அச்சுறுத்தி உள்ளனர்.

தற்போது திருமலை விவகாரத்தைத் தொடர்ந்து இந்த புத்தர் சிலை சிக்கலையும் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

தகவல்- புதினம்.