Tuesday, November 15, 2005

மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர்! தீர்வு என்ன?

மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர்! தீர்வு என்ன?

ஒரு தேசிய இனம் தனது விடுதலைக்காகப் போராடி வரும் தருணம் இது. இந்தப் போராட்டத்தினை ஒடுக்க ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு ஆக்கிரமிப்பு வடிவங்களைப் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி எமது இளம் சந்ததியை நசுக்கிவிட, அவர்களைப் போராட்டத்தின் திக்கிலிருந்து திசை கெடவைக்க முனைப்புடன் முனைந்துவருகிறார்கள் என்பதும் உங்களுக்குப் புதிய செய்தியல்ல.தமிழனின் கை கொண்டே அவனது கண்ணைக்குத்தும் முயற்சியாக தமிழ்ச் சிறார்களின் மனங்களில் நச்சு விதைகளை விதைத்துத் தறிகெட வைக்கச் சிங்களப் புலனாய்வுத்துறை முயன்றுவருவதும், யாழ் மண் ஆக்கிர மிக்கப்பட்ட காலம் முதல் இந்த நடவடிக்கைக்கான பரீட்சைக் களமாக யாழ் மண் விளங்குவதையும் தமிழீழ மக்கள் நன்கு அறிவர். யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி மீதான வன்புணர்வு மற்றும் படுகொலையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டம் படிப்படியாக விரிவடைந்து இன்று ஆபாசப் படங்கள், போதைதரும் பாக்குகள், சாராயக் கடைகள், அப்பக் கடைகள் என்று பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு இளைய தமிழர்கள் திசை மாறவேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயற்படும் சிங்களதேசம் தனது நோக்கம் நிறைவேறி வருவதாகத் தற்போது எண் ணத்தலைப்பட்டுள்ளது. 06-10-2005 கொழும்பில் பிரசுரமான சண்டே ரைம்ஸ் வார இதழில் யாழ்ப்பாண இளைஞர்கள் அனைவரும் போராடப் போய்விட்டதாகத் தோன்றிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் தீபாவளி தினத்தன்று வடக்கின் தலைப்பட்டினத்தில நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மனோகரா திரையரங்கின் முன் புதிய திரைப்படமான சிவகாசியைக் காண வரிசை கட்டி நிற்கும் வித்தியாசமான காட்சியைக் காண முடிந்தது. என்ற விளக்கத்துடன் முதற் பக்கத்தில் படம் ஒன்று பிரசுரமாகி யிருப்பதாக அறிய முடிகிறது. (நன்றி சண்டேரைம்ஸ்)

இளைஞர்கள் படத்திற்குச் செல்வதும், வரிசைகட்டுவதும் அந்தக்காலத்திலிருந்து நடந்துவரும் காரியங்கள். இதற்கு இப் பொழுது என்ன முக்கியத்துவம் வந்தது என்று சிந்தித்துப் பாருங்கள்.சிறிலங்கா அரசினதும் அதன் புலனாய் வாளர்களினதும் உள்ளக்கிடக்கையை, அவர்கள் எதை விரும்பினார்களோ அதைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை மேற்படி செய்தியிலிருந்து நீங்கள் அறிய வில்லையா?

படம் பார்ப்பதால் என்ன வந்து கெட்டது. நாங்கள் பார்க்காத படமா? என்று உங்களிற் சிலர் நியா யமான ஒரு கேள்வியை எழுப்பலாம்.நீங்கள் படம் பார்த்தீர்கள், படலையைப் புரட்டி நட்டீர்கள். ஆனால் தெருவில் செல்லும் பெண் புரசுகளைப் பதம்பார்க்கும் எண்ணமோ, அல்லது முதுகின் பின்னே கத்தியைச் செருகிச்சென்று கண்முன்னே கண்டவரைச் சீவித்தள்ளும் வெறியோ உங்களுக்குள் இருக்கவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

யாழ்ப்பாணம போதனா வைத்திய சாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில்(Surgical words) போய்பாருங்கள். பெண் நோயியல் மருத்துவரை (Gynecologist) , சிறுவர் பிரிவில் கடமைபுரியும் வைத்தியர் களைக் (Pediatricians) கேளுங்கள். பேரினவாதத்தின் திட்டமிட்ட, ஆனால் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப் பட்டுவரும் இன அழிப்பின் புதிய வடிவம் குறித்து உங்களுக்கு ஒரு செய்தியை அவர்கள் சொல்லுவார்கள்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தினந் தோறும் அடிகாயங்களுடனும், வெட்டுக் காயங்களுடனும் விபத்துப் பிரிவில் (casualty) அனுமதிக்கப்படுபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பதின்வயதைச் (teenage) சேர்ந்த தமிழ் இளைஞர்கள். இவர்களில் பலருக்கு அடியும், வெட்டும் விழுவது தலையில். வெட்டுவதும் தமிழன். வெட்டப்படுவதும் தமிழன். வெட்டு விழுவதோ தலையில். தலை என்பது மிகவும் பிரதானமான அங்கம் என்பது எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்று என்றைக்கோ எழுதிவைத்த தமிழனின் இன்றைய வாரிசுகளுக்குத் தெரியவில்லை.

இனி வெளிநோயார் பிரிவைப் (OPD) பார்ப்போமா? அங்கும் இளைஞர்கள் தென்படுகிறார்கள். பார்க்க வாட்ட சாட்டமாக, அழகாகத் தென்படும் இவர்க ளுக்கு என்ன குறை?இவர்கள் தற்போது வருந்துவற்குக் காரணமே, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் தலையில் பட்ட அடிதான். அந்த அடியின் பின்விளைவாகத் தற்போது மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டதால், உடலின் ஏதாவது ஒரு அல்லது பல பாகங்களில் வலி, சோர்வு, செயலிழப்பு, உணர்வின்மை போன்ற நரம் புத்தொகுதி சார்ந்த வியாதிகள் இவர்க ளைப் பீடித்துள்ளது. அதாவது இத னை இன்னொரு விதமாகச் சொல்வதானால், யாழ்ப்பாணத்தை இரா ணுவம் ஆக்கிரமிப்புச் செய்து சிலகாலம் கழிகையில் அப்போது பதின்வயதில் இருந்த இந்த இளைஞர்கள், படங்களில் தாங்கள் பார்த்ததைப் பரீட்சித்துப் பார்த்ததன் பின்விளைவுகள் இவை.

இந்த நானாவித குளறுபடிகளுக்கும் காரணம் வைத்தியத் துறையால் இதுவரைக்கும் மாற்றுக் கண்டு பிடிக்கப்படாத அங்கமான மூளையில்- மைய நரம்புத் தொகுதியில் (CNS - Central Nervous system)- ஏற்பட்ட நிரந்தரப் பாதிப்புகள்.இனி மருந்து மாத்திரைகளுடன் கழியப் போகும் இவர்களது எதிர்காலம் என்ன? இவ்வாறு மௌனமாக ஒரு இனத்தின் இளம் சமூகம் திட்டமிட்ட விதத்தில் முடமாக்கப்படுவது குறித்துக் குடா நாட்டிலுள்ள எவருமே - விடுதலைப் புலிகளைத் தவிரப்- புரிந்துகொண்டிருப்ப தாகத் தெரியவில்லை.

இதற்குச் சற்றும் குறையாத வேதனைக் கதைகளுடன் பெண்கள் பிரிவும், சிறுவர் பிரிவும் இயங்குகின்றன. பராயமடையாத சிறுமிகளைக் கூட சிறுவர்களே தீண்டி யதாக வழக்குகள். பதின்வயதில் கர்ப்பமாகி நடுத்தெருவில் நிறுத்தப்படும் சிறுமிகள், சட்டவிரோத கருக்கலைப்பால் தினசரி ஒருவராவது ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொடுமை. இப்படிச் சிறுவயதிலேயே உளரீதியாக முடமாக்கப்படும் பெண்கள், சிறுமிகள் குறித்து எந்தப் பெண்ணுரிமை வாதிகளாவது, எந்தச் சர்வதேச சிறுவர் அமைப்புகளாவது கண்கொண்டு பார்த் தனரா? பாதிக்கப்பட்ட பின்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அறிக்கை விடுப்பதும்தான் இவர்களது செயற்பாட்டின் எல்லைகளா?? இப்படியான சம்பவங்கள் மேலும் நிகழாது தடுக்க இவர்களில் எவரிட மாவது தொலைநோக்கான திட்டங்கள் இருக்கிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தவிர வேறு எந்தச் சனநாயகத்தின் காவலராவது இந்தச் சீரழிவு குறித்து ஒரு வரியாவது சிந்தித்திருக்கிறார்களா? பேசியி ருக்கிறார்களா?

தாமே சனநாயகத்தின் காவலர்கள் என்றும் தமிழர்களைக் காக்க வந்த இரட்சகர்கள் என்றும் உளறித் திரியும் எவராவது இந்தச் சீரழிவுகளைத் தடுப்பது குறித்து ஏதாவது செய்திருக் கிறார்களா? தமிழ் மக்கள் அவசியம் தங்களைத் தாங்களே கேட்டுணரவேண்டிய கேள்வி இது. கேவலம்! இதிலே கூடப் புலிகளுக்கு ஆதரவான எவராவது அரிதாகச் சிக்குப்பட்டால் மட்டும் இவர்களது கண்ணுக்கு அது தென்படும். அதுவும் நீதிமன்றமே எச்சரிக்கும் அளவிற்கு அது பற்றி வீணையை மீட்டிக்கூச்சலிடுவார்கள். ஆனால் மற்றவர்கள் குறித்து அவர்களிற்குக் கவலையில்லை. ஏன் தெரியுமா? புலிகளை எதிர்த்துக் கூச்சலிட்டால் மட்டுமே இவர்களுக்குச் சம்பளமும், சலுகைகளும் கிடைக்கும். வயிறு நிரம்பும்.

இங்கே உதாரணத்திற்குக் குறிப்பிட்டது யாழ் குடாவின் -யாழ்ப்பாண வைத்திய சாலையின்- எல்லைக்குள்ளான நிலைவரம். வடக்குக் கிழக்கில் எத்தனை இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்பது உங்களுக்கே தெரியும். இவ்வாறு சொல்லுந்தரமற்ற வகையில் எமது இளம் சந்ததி இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில்; இரகசியமாக அழிக்கப்பட்டு வருவதை தடுப்பதற்கு வழி என்ன? நிச்சயமாக இதனை எமது மக்கள்தான் தடுக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் எவராவது வரவேண்டும் என்று பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து மக்களே செயலில் இறங்கவேண்டும். அதாவது அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து தமிழ் மக்களால் அகற்றப்படவேண்டும். அதுவே இந்தச் சிக்கலிற்கான இறுதித் தீர்வாக அமையும்.

நன்றி- திருமகள் (ரஷ்யா)1 comment:

Sri Rangan said...

கரிகாலன் நியாயமான பார்வையைக் கொண்டிருக்கும் கட்டுரைதாம் இஃது.

ஆனாலும் மற்றவாகளைக் குறை கூறுவதைவிட,சமூகத்தில் அனைத்து ஆளுமைகளையும்,ஏகப்பிரதிநித்துவத்தையும் புலிகள் கோரி நிற்பதால், அவர்கள்தாம் இதைப் போக்க நடவடிக்கையெடுப்பது ஆச்சரியமில்லை.மற்றவர்கள் தனித்தியங்குவதற்குப் புலிகளும் விடப்போவதில்லை,இரணுவமும் விடப்போவதில்லை, அதுபோல் மற்றைய குழுக்களும் விடப்போவதில்லை.


இலங்கையில் மக்களின் சுயமான செயற்பாடு எப்படியுள்ளது?


இருவேறு அரச ஜந்திரத்தோடு மக்கள்படும் வேதனைகள் கோடி.


இத்தகைய சமூகச் சிதைவு ஏற்படுமென யாழ்பாணம் பறிபோகும்போது நாம் எழுதினோம்.அதை இந்தக்கட்டுரையாளர் படித்திருக்கவில்லைப்போலும்.இது இன்றுநேற்றைய திட்டமில்லை.சிங்கள அரசினது திட்டமோ நீண்டகாலத் திட்டமாகும்.இது யாழ்ப்பாணப் பிராந்தியத்தேயே சிங்களப ;பிராந்தியமாக்கும்.வரலாற்றுப் பெயர்களாக ஊர்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டுவது மட்டுமல்ல தமிழ்பேசுவோரின் பெயர்களும் மாற்றப்படும்.யாழ்பாணத்தில் இராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சமூகவாழ்வே தமிழருக்குக் கிட்டியுள்ளது.இது எதனால் நிகழ்ந்தது?எப்படி நிகழ்ந்தது?வெறுமனவே மற்றவர்களைப் பேசுவது தப்பிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றுதாம்.சாதராண மனிதர்களால் இஃது சாத்தியமற்றது.


அதிகாரத்தைக் கைகளில் வைத்திருப்பவர்களே இவற்றைப் போக்கமுடியாது தாம் ஒதுங்கிய பகுதிகளில் வாழ்வைச் செலுத்தும்போது,சாதரணக்குடிமக்கள் எதைச் செய்யமுடியும்?


அடுத்துப் புலிகளின் உறுப்பினர்கள்,அநுதாபிகள் செய்யும் பாலியல் பலாத்தகாரத்தைப்பற்றிக் கதைப்பவர்கள் இராணுவ அட்டூழியத்தைப் பற்றிப்பேசுவதில்லையென்பதும் சரியான பார்வையில்லை.


சிங்கள இரணுவம் அந்நிய இராணுவம்!அது இத்தகைய அழிவுகளைச் செய்யுமென்பதை எல்லோருமே அறிவார்கள்.அதுதாம் எல்லோரினதும் அநுபவம்.ஆனால் மக்களுக்காகப் போராடுபவர்கள் மக்களையே பதம்பார்ப்பதுதாம் சகிக்கமுடியாத கொடுமை.இதை எதனாலும் சமப்படுத்த முடியாது.


இராணுவக் குடியிருப்பாக மாறிவரும் தமிழ்ப் பிரதேசங்களைவிட்டு சிங்களப்படைகளை வெளியேறுமாறு-உயர்பாதுகாப்பு வலையங்களை அகற்றுமாறு எவ்வளவு தூரம் புலிகள் போராடியுள்ளார்கள்,எத்தகைய கோரிக்கைகளை முதன்மைப்படுத்தியுள்ளார்கள்?


பொதுக்கட்டமைப்பல்ல இன்றைய அவசியம்.


மாறாக இரணுவ வலையங்கள் அகற்றப்பட்டு மக்கள் வாழ்வாதார வதிவிடங்கள் சிவில் நிர்வாகத்துக்குள் வருவதே இன்றைய தேவை!


இத்தகைய நிலையேற்படாதவரையும் இந்தச் சமூகச் சீரழிவை மாற்ற முடியாது.இது போரில் தோற்ற பகுதிகளுக்கு-நாடுகளுக்கு ஏற்படும் சாபக்கேடு.இதை மாற்றுவதற்கு அதிகாரத்தைக் கையில் வைத்திப்பவர்கலேதாம் முடியும்.இதை விட்டு மற்றவர்கள்மீது பிழைகூறுதல்,பழிபோடுதல் சமூக இயக்கத்தையும்,அரச ஆதிக்கத்தையும் புறந்தள்ளிய அல்லது புரியாத சிந்தனைதாம்.


எனவேதாம் கூறுகிறோம்:'எப்போதும் அடக்குமுறை ஜந்திரத்தின்மீது கைவைப்பதற்கு முதலில் அரச ஆதிக்கத்தை உடைத்துவிட வேண்டுமென்று'இங்கே நடந்தது-அரச வன்முறை ஜந்திரத்தின்மீது அப்பப்ப நொட்டினோமே தவிர சிங்கள அரச ஆதிக்கத்தை எதுவுமே செய்யமுடியாது போய்விட்டது.இதெல்லாம் தற்செயல் நிகழ்வல்ல.

ப.வி.ஸ்ரீரங்கன்