Thursday, October 25, 2012

மனிதனைப்போலவே பேசும் அமெரிக்க திமிங்கிலம் -ஆய்வாளர்கள் ஆச்சரியம்

 

மெரிக்காவைச் சேர்ந்த அதிசய வெள்ளைத்திமிங்கலம் ஒன்று மனிதனைப்போல பேச்சொலி எழுப்புவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.இந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை கண்டுபிடித்த கதையே ஒரு சுவாரசியமான கதைதான்.

கலிபோர்னியாவில் இருக்கும் தேசிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆய்வுமையத்தில் பணிபுரியும் ஆழ்கடல் மூழ்குபவர் ஒருநாள் நீருக்குள் மூழ்கியிருந்தார். அவர் திடீரென நீரிலிருந்து மேலே வந்தார். வந்தவர் என்னை உடனடியாக நீரிலிருந்து மேலே வரச்சொல்லி கூப்பிட்டது யார் என்று கேட்டார்.

கரையில் நின்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அவரை நீரிலிருந்து மேலே வரும்படி அவர்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால் நீரில் மூழ்கியிருந்தவரோ தனக்கு மேலே வரச்சொல்லி குரல் கேட்டதாக அடித்துச் சொன்னார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சில திமிங்கலங்களைத்தவிர.

ஆய்வாளர்களுக்கு லேசாக சந்தேகம் தட்டியது. இந்த திமிங்கலங்கள் ஏதாவது குரல் எழுப்பியிருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கள், அந்த திமிங்கலங்களை கண்காணிக்கத்துவங்கினார்கள். சில தினங்களிலேயே அவர்களின் சந்தேகம் நிஜமானது .

என் ஓ சி என்று பெயரிடப்பட்டிருந்த ஒன்பது வயது பெலூகா இன வெள்ளைத்திமிங்கிலம் தான் மனிதர்களை மாதிரி ஒலி எழுப்புகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது அவர்களின் ஆச்சரியம் பலமடங்கானது.

காரணம் இதுநாள் வரை டால்பின்களை மட்டுமே மனிதனை மாதிரி ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என்று நினைத்திருந்த ஆய்வாளர்களுக்கு, இந்த வெள்ளைத்திமிங்கலம் எந்த பயிற்சியும் இல்லாமல், தானாகவே மனிதர்களைப் போல பேச முயல்வது மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.

அந்த பகுதி மீனவர்கள் மத்தியில் உலவும் நாடோடிக்கதைகளில் திமிங்கிலங்கள் மனிதனைப்போல பேசியதாக சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எவையும் இல்லை.

எனவே இந்த குறிப்பிட்ட திமிங்கலம் எப்படி இந்த ஒலிகளை எழுப்புகிறது என்பதை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.இதன்படி, இந்த என் ஓ சி எழுப்பும் ஒலிகளை பதிவு செய்த ஆய்வாளர்கள், இந்த ஒலிகள் மனிதர்களின் பேச்சு ஒலிகளைப்போலவே கால அளவிலும் ஓசையின் ஒலியை அளக்கப்பயன்படுத்தப்படும் மாத்திரை அளவிலும் அமைந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். அடுத்த கட்டமாக இந்த திமிங்கிலம் இந்த ஒலியை எப்படி எழுப்புகிறது என்பதை ஆராய்ந்தனர்.

அவர்களுக்கு அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. திமிங்கலங்கள் வழமையாக ஒலி எழுப்புவதற்கு செய்யும் முயற்சிக்கு மாறாக இந்த என் ஓ சி திமிங்கலம், மனிதர்களைப்போல ஒலி எழுப்ப நினைக்கும்போது தனது மூக்குப்பகுதியில் இருக்கும் வெற்றிடத்தில் ஏற்படும் அழுத்தத்தை வேறு விதமாக மாற்றியமைத்தது.

நுரையீரலுக்குள் தண்ணீர் போகாமல் தடுப்பதற்காக, இதன் தலைக்கும் உடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் காற்றடைத்த பை போன்றதொரு உடலுறுப்பை, இந்த திமிங்கலம் கஷ்டப்பட்டு ஊதிப்பெரிதாக்கி மனிதனைப்போல பேச முயல்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

சுருக்கமாக சொல்வதானால் மனிதனைப்போல பேசுவது என்பது இந்த வெள்ளைத்திமிங்கலத்துக்கு சுலபமான விடயமல்ல. ஆனால் அதற்கு அதில் ஆர்வம் இருக்கிறது. இந்த ஒலிகள் மூலம் அது மனிதர்களுடன் பேச விரும்புகிறது என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

அதேசமயம், யாருடைய தூண்டுதலும் இல்லாமலே இந்த திமிங்கலம் இந்த sமுயற்சியில் ஏன், அல்லது எப்படி ஈடுபட்டது என்கிற கேள்விக்கு மட்டும் ஆய்வாளர்களால் விடை காண முடியவில்லை.

அனால் எனக்கு ஒரு சந்தேகம் சிவனே என்று இருந்த இந்த திமிங்கிலம் மனிதனைப்போல பேச முயற்சித்து என்ன பாடுபடப்போகுதோ ,?

3 comments:

Anonymous said...

மனிதன் மட்டுமே கடவுளின் செல்லப் பிள்ளை அதனால் தான் மொழிக் கொடுத்தான் என்ற கப்சா இனி செல்லாது, செல்லாது.

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பாக உள்ளது... முடிவில் நீங்கள் சொல்வது போல் என்ன பாடுபடப் போகுதோ...? நல்லா காசு பார்த்து விடுவார்கள்...

நன்றி...
tm1

துஷ்யந்தன் said...

ஆஹா.... அப்போ இனி மனிதன் பாடு திண்டாட்டம் தான்... ஹா ஹா......