Sunday, June 21, 2015

அப்பா!! எனக்கு இரண்டு டொலர் ($2) தருவீங்களா ?

நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு வீடடுக்கு திரும்பினார்  ஒரு தந்தை வேலைக் களைப்பு மற்றும் குளிர் அவரை சோர்வடைய வைத்திருந்தது .கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்த தந்தையை எதிர்கொண்டான் அவரது 12  வயதான மகன் .தந்தை எப்போது வருவார் என்ற தவிப்பும் நீண்ட நேரம் காத்திருந்தகோபமும் அவனது முகத்தில் இருப்பதை தந்தையால் உணர்ந்துகொள்ள முடிந்தது .

ஏன் அப்பா இவ்வளவு லேட் ?இன்றைக்கு என்றாலும் கொஞ்சம் வேளைக்கே வேலையால் வீட்டுக்கு வந்திருக்கலாமே என்றான் மகன்

"அலுவலகத்தில் ஒரு அவசரமான மீட்டிங் அதுதான் வர  தாமதம் ஆகி விட்டது" என்று சமாளித்தார் தந்தை.

உடனே மகன் கேட்டான் தந்தையிடம் அது சரி "நீங்கள் மீட்டிங்கில் இருக்கும் நேரத்துக்கும் உங்களுக்கும் சம்பளம் வருமா?" என்று

தந்தை சிறிது விறைத்த முகத்துடன் மகனை நோக்கி சொன்னார்  ஆம் என்றார்

உடனே மகன் கேட்டான் ஒரு மணித்தியாலத்துக்கு உங்கள் சம்பளம் என்ன அப்பா ?

ஏற்கனவே களைப்புடன் வந்த தந்தைக்கு மகனின் இக் கேள்வி கோபத்தை ஏற்படுத்தி விடவே மிகக் கோபத்துடன் சொன்னார் மகனைப் பார்த்து "இது உனக்கு தேவைஇல்லாத விடயம் .வயதுக்கு மீறி கதைக்கக்கூடாது இனி இப்படி என்னிடம் கேள்வி கேட்காதே என்று இரைந்தவர் சரி நேரம் ஆகிவிட்டது .படுக்கைக்கு போ ,நாளை உனக்கு பாடசாலை அல்லவா என்று சொல்லவே முகத்தினை தொங்கப்போட்ட வாறு எழுந்த மகன்  தனது அறைக்குள் புகுந்து கொண்டான் .

தந்தையார்  முகம் எல்லாம் கழுவிவிட்டு சாப்பாடு மேசையில் வந்து அமர்ந்த தந்தைக்கு மகனின் கேள்வியும் தான் சத்தம் போட்டதும் மீண்டும் மனதில் நிழலாடகொஞ்சநேரம் அப்படியே யோசித்துக் கொண்டிருந்தவர் .எழும்பி மகனின் அறைக்கு சென்றார் .அங்கே மகன் கட்டிலில்  குப்புற படுத்தபடி அழுதுகொண்டிருப்பதைகண்டவுடன் துணுக்குற்ற தந்தையார் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் மகனின் தலையை கோதிவிட்டவாறு கட்டிலில் அமர்ந்தபடி  சொன்னார்

மகனே நீ என்னுடைய மணித்தியால சம்பளம் பற்றிக்கேட்டவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது ,எனக்கு வேலைக்களைப்பு ,பசி வேறு அதனால் தான் அப்படி நடந்துகொண்டேன் என்றவர்.

அது சரிஎதற்காக அப்படிஎன்னிடம் கேள்வி கேட்டாய்? என்றார்.

எந்த ஒரு பதிலும் சொல்லாத மகன் எழுந்து தன்னுடைய அலுமாரியை திறந்து ஒரு உண்டியலை எடுத்து கையில் வைத்துக்கொண்டு "இப்போது சொல்லுங்கள் அப்பா

உங்கள் ஒரு மணித்தியால சம்பளம் என்ன" ? என்று கேட்டான் .

சரி மணித்தியாலத்துக்கு ஒரு இருபது டொலர் என்று வைத்துகொள் என்றார் தந்தை இரக்கத்துடன்

சரி அப்படி என்றால் எனக்கு ஒரு இரண்டு டொலர்கள் தருவீங்களோ அப்பா என்றான் மகன்

கண்டிப்பாக தருகிறேன் ,நீ எதுக்கென்று காரணம் சொன்னால் என்றார் தந்தை

இல்லை அப்பா ,எனது உண்டியலில்  வெறும் பதினெட்டு டொலர்தான்  இருக்கிறது.நீங்கள்  இன்னும் இரண்டு டொலர்கள் எனக்கு தருவீர்கள் அனால் நான்

எல்லாவற்றையும் சேர்த்து இருபது டொலர்களாக உங்களுக்கு தருவேன் என்றான் மகன்

சிரித்துக்கொண்டே தந்தை கேட்டார் "ஏன் எனக்கு நீ இருபது டொலர்கள் தரப்போகிறாய் என்பதை அறிந்துகொள்ளலாமா"?

இல்லை அப்பா. நாளைக்கு ஒரு மணித்தியாலம்  முன்பாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து என்னோடு சேர்ந்து  டின்னர் சாப்பிடவேண்டும்

செய்வீர்களா?அப்பா என்றான்  மகன் .

துணுக்குற்ற தந்தையின் கண்களில் இருந்து நீர் ததும்ப தொடங்கிற்று .தந்தை ஏன் கண்ணீர் விடுகிறார் என புரியாமல் திகைத்த மகனை அணைத்து முத்தமிட்டவாறே  தந்தை நீண்ட நேரம் அந்த கட்டிலில் அமர்ந்தபடியே யோசித்துக்கொண்டிருந்தார் .


இது ஒரு ஆங்கில கதை நீண்டகாலத்துக்கு முன்னர் படித்தது .தமிழில் சிறிது மெருகூட்டி தந்திருக்கிறேன் .ஜூன் 21 திகதி தந்தையர் தினம் .

நீங்கள் ஒருதந்தையானால் கண்டிப்பாக இந்தக்கதை உங்களை பாதித்திருக்கும் .இந்த கதையை படித்த காலங்களில்  இதன் பாதிப்பு எனக்கு நிறையவே  இருந்தது .விளைவு நான் பிள்ளைகளுடன், மனைவியுடன் செலவளிக்கும்  நேரத்தினை அதிகரித்திருந்தேன் என்னை அறியாமலேயே .

இன்றைய காலங்களில் பெரும்பாலும், தாய் ,தகப்பன் இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய நிலைதான் பெரும்பாலும் உலகெங்கும் .விளைவு பிள்ளைகளுடன்
செலவிடும் நேரம் குறைவடைகிறது .இதனை நிவர்த்திசெய்யஇதனால் ஏற்படும்   ஒரு குற்ற உணர்வுடன் பிள்ளைகள் எது கேட்டாலும் அல்லது கேட்காமலேயே பலதையும் பிள்ளைகளுக்கு  வாங்கிகொடுப்பதுடன் பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமாக் பணத்தினையும் கொடுத்து பிள்ளைகளை பழுதாக்குகிறார்கள் .நான் எனது பிள்ளைகள் கேட்பதை உடனடியாக வாங்கிக்கொடுப்பதில்லை அவர்களுக்கு பணத்தின் மதிப்பை உணர்த்தி ,பொருட்களின் பெறுமதியை உணர்த்தியபின்னரே வாங்கிக்கொடுப்பேன் .நாலு கடைகளுக்கு கூட்டிச்சென்று பொருட்களின் விலை வித்தியாசங்களை உணரச்செய்திருக்கிறேன் .மொத்தத்தில் பணத்தின் பெறுமதியை அவர்களை  உணரச செய்திருக்கிறேன் .என்பதில் பெருமிதம் அடைகிறேன் .

.அந்தந்த வயதில் கேட்டதை எல்லாம் நிறைவேற்றியே வந்திருக்கிறேன் .ஒரு பிள்ளை அந்தந்த பருவங்களில் கேட்பதை வாங்கிக் கொடுப்பதில் தவறில்லை .
அந்தந்த பராயங்களில் விளையாடுவதை அல்லது அனுபவிப்பதை வளர்ந்து பெரியவன் ஆனதும் அதை சொந்தமாக  வாங்க வசதி இருந்தாலும் அனுபவிக்க முடியாது அதை அதை அந்தந்த பராயங்களில் தான் செய்முடியும் .சிறு வயதில் பலூன் கேட்கும் பிள்ளைக்கு அந்த வயதில் தான் பலூன் வாங்கிகொடுக்கவேண்டும் .இருபது வயதில் பலூன்களை வாங்கிக்கொடுத்து விட்டு விளையாடு என்றால் எப்படி இருக்கும் ?

மொத்தத்தில் நான்  என் பிள்ளைகளிடம் கண்டது எத்தனை ஆயிரத்துக்கு பொருட்களை வாங்கிக்கொடுத்தாலும் நாங்கள் பிள்ளைகளுடன் செலவளிக்கும்மணித்துளிகள் தான் பிள்ளைகளை சந்தோசமாக வைத்திருக்கும் இது எனது அனுபவம் .மேலே உள்ள கதை உணர்த்துவதும் அதையே .

நீங்கள் எப்படி? ஒரு  நல்ல ஒரு தந்தையா? அல்லது கதையில் வரும் தந்தையை போன்றவரா ? எப்படி என்று கண்டிப்பாக  உங்களுக்கே தெரிந்திருக்கும் .இந்த கதையில் வரும் தந்தை போல என்றால்  கண்டிப்பாக உங்களை திருத்திக்கொள்ளுங்கள் .

இன்றைய தந்தையர் தினம் ஒரு ஆரம்பமாக  இருக்கட்டும் .நீங்கள் ஒரு நல்ல தந்தை என்றால் கண்டிப்பா நீங்கள் உங்கள் சட்டை கொலரை உயர்த்திவிட்டுக்கொள்ளலாம்.

இறுதியாக :எந்தக் குழந்தையும் நல்ல  குழந்தைதான் மண்ணில் பிறக்கையில் ,அது நல்லவராவதும் தீயராவதும் "தந்தை" வளர்ப்பினிலே

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் '

கரிகாலன் .

5 comments:

சென்னை பித்தன் said...

தினம் சில மணித்துளிகளாவது குழந்தைகளுடன் செலவிட வேண்டியது அவசியமே

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு தந்தையாய்
நெகிழ்ந்து போய்விட்டேன் நண்பரே
நன்றி

கரிகாலன் said...

உண்மைதான் சென்னை பித்தன் ,பிள்ளைகள் எம்மிடம் எதிர்பார்ப்பதும் அதுவே

கரிகாலன் said...

உண்மைதான் கரந்தை ஜெயகுமார் இதன் பாதிப்பு எனக்கும் நீண்ட நாள்
இருந்தது

‘தளிர்’ சுரேஷ் said...

உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!