Tuesday, August 03, 2004

"அதுக்கு" தயாரித்தது "இதுக்கு" கைகொடுக்கிறது.

வயது வந்தோருக்கானது

ண்மையில் திரு வெங்கட்டின் வலைப்பதிவில் ஆணுறைகள் பற்றிய ஒரு பதிவினைப் பார்க்கமுடிந்தது. ஆணுறைகள் பற்றியும், ஆணுறைகளின் வகைகள் பற்றியும், உபயோகிக்கும் முறைகள் பற்றியும் அதை வாங்குபவர்கள் கூச்சம் இன்றி வாங்கும் வழிவகைகள் பற்றியும், ஆணுறைகளின் இதர பயன்பாடுகள் பற்றியும் மிகவும் எளிய தமிழில் அழகாக விளக்கியிருக்கிறார் திரு வெங்கட் அவர்கள். தன்னுடைய பதிவில்ஆணுறைகளின் 04 பிற உபயோகங்கள் பற்றியும் கூறியிருக்கின்றார்.

இது இப்படியே இருக்க இன்றைய தினமலர் நாளிதழில்
(03-08-2004) ஆணுறைகளின் பயன்பாடு பற்றிய ஒரு புதிய செய்தி வெளி வந்திருக்கிறது செய்தி இதுதான் இந்தியாவின் புனித நகரான வாரணாசியில் ஒரு நாளைக்கு 6 இலட்சம் ஆணுறைகள் விற்பனை ஆகின்றனவாம்.ஆணுறைகள் அதிகம் விற்பதால் அங்கு சிறப்பு குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறதோ என்று எண்ணுகிறீர்களோ? அதுதான் இல்லை. மேலே படியுங்கள்.

பனாரஸ் பட்டுப் புடவைகள் பற்றி உலகம் அறிந்ததே.அது போலவே வாரணாசி நகரும் பனாரஸ் பட்டுக்கு புகழ் பெற்றது. இங்கு ஏராளமான நெசவாளர்கள் மேற்படி சேலை தயாரிக்கின்றனர். நெசவுத் தறியில் இங்குங்கும் ஓடும் ஓடக்கட்டையில் ஆணுறைகளைத் தேய்க்கும் போது நல்ல மசகாக(lubricate) தொழிற்படுகிறது.இதனால் ஓடக்கட்டை மிக வேகமாக ஓட நெசவு விரைவாக ஆகின்றது. வாரணாசியில் இருக்கும் ஒன்றாரை லட்சம் முதல் 2 லட்சம் வரையான நெசவாளர்கள் தினசரி 3 முதல் 4 ஆணுறைகளை பயன்படுத்துகின்றனராம்.

இது போன்ற முறைகளைப் பயன் படுத்தி சேலை தயாரிக்கின்றனர் என்பது வெளியில் தெரிந்தால் சேலை வாங்குவோர் சேலையைப் புறக்கணிக்கக்கூடும் என்பதால் பல நெசவாளர்கள் உண்மையை மறைத்து விடுகின்றனராம். இதைப் போல நல்ல ஒரு பொருள் இந்த உபயோகத்துக்கு கிடைக்கும் என்றால் தாங்கள்ஆணுறை பாவிப்பதை நிறுத்தி விடுவதாக அங்குள்ள நெசவாளர்கள் சொல்கின்றார்களாம். "அதுக்கு" உருவாக்கியது எதுக்கெல்லாம் பயன்படுகிறது பார்த்தீங்களோ?

எனக்கென்னவோ வாரணாசி நெசவாளர்கள் வாசனையூட்டப்பட்ட ஆணுறைகளை முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வாசத்துக்கு வாசமும் ஆச்சு ஓடக்கட்டைக்கு மசகும் ஆச்சு. அப்பிள்,ஒறேஞ் போன்றவிதவிதமான வாசனைகள், நெய்யும் புடவைகளிலும்,நெசவுத்தறிகளிலும், நெசவாளர்களின் மூக்குகளிலும், மணக்கும்.ஊதுபத்தி,சாம்பிராணி செலவும் மிச்சம். இனி சேலை வாங்குபவர்கள் யாராவது ஆணுறை பாவித்து நெய்த சேலையோ என்று கேட்டால் கூட ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த வாசனையூட்டப்பட்ட ஆணுறை பாவித்தது என்று சொல்லிக் கொள்ளலாம். யாருங்கோ நறு நறு என்று பல்லை நறுமிறது?

No comments: