Friday, April 12, 2013

மு.க .அழகிரியையும் விட்டுவைக்காத விக்கிலிக்ஸ்!!!!

 

திமுக தலைவர் கருணாநிதியின் மகனான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மற்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பற்றியும் அமெரிக்க தூதரக ஆவணங்களில் கூறப்பட்டிருப்பதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது.

"தென்னிந்தியாவில் ஓட்டுக்குப் பணம்" என்ற தலைப்பிட்டு 2009 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

சென்னை மற்றும் ஹைதராபாத் நகரின் குடிசை பகுதிகளுக்கு நாங்கள் சென்ற போது தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் ஏழை மக்கள் பணத்தை எதிர்பார்ப்பதை அறிய முடிந்தது.

அதிமுக, திமுக என்ற இரண்டு பெரிய அரசியல் கட்சிகளுமே தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் என்று சென்னையில் குடிசைப் பகுதிகளில் தொண்டாற்றும் என்.ஜி.ஓ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதுவும் அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள்தான் இந்த பண பட்டுவாடா நடைபெறுகிறது. இது பற்றி எங்களிடம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கார்த்தி சிதம்பரம் பேசினார்.

 

சிவகங்கை தொகுதியில் அவரது தந்தை போட்டியிடுவதால் அவர்தான் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

"ஒவ்வொரு கிராமத்து தலைவர்களும் இரண்டு விஷயத்தை எங்களிடம் எதிர்பார்ப்பாங்க.. சிலர் உள்ளூர் கோயில்களுக்கு நன்கொடை.. இன்னும் சிலர் சமூக நலக் கூடங்கள் கட்டித் தர கோரிக்கை விடுப்பாங்க.. இப்படி வரும் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொடுக்க முடியாது..

இதனால சிலவற்றை கொடுத்து என்னுடைய தந்தைக்கு வாக்களிக்க வைப்போம். ஆனா ஓட்டுக்குப் பணம் கொடுக்கமட்டோம். கிராமங்களில் பணம் கொடுப்பது என்பது சாத்தியமானது அல்ல என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

ஆனால் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரோ, சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் பணி சிறப்பானதாக இருக்கிறது. கொஞ்சம் பணமும் மக்களுக்கு அவர் கொடுத்திருக்கிறார் என்றார். அண்மையில் தென் தமிழ்நாட்டில் மதுரைக்குப் போயிருந்தோம். அங்கு முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி போட்டியிடுவது பற்றிதான் எங்கும் பேச்சாக இருந்தது. அவரது அடியாட்கள் பலம் பற்றி பேசுகின்றனர்.

சிறிதுகாலத்துக்கு முன்புதான் 2003 ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் அவர் விடுதலையாகி இருந்தார். 2007ஆம் ஆண்டு அழகிரியின் செல்வாக்கு பற்றி கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

அதில் அழகிரிக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்து எரித்ததில் மூன்று பேர் இறந்து போயிருந்தனர்.

மதுரை அருகே திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அழகிரி வாக்காளர்கலுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். மதுரையின் முன்னாள்மேயரும் அழகிரியின் நம்பிக்கைக்குரியவருமான எம். பட்டுராஜன் என்பவர் எங்களிடம்.

இதுல ஒன்னும் ரகசியம் எதுவும் இல்லை. ஒரு ஓட்டுக்கு திருமங்கலத்தில் ரூ5 ஆயிரம் கொடுத்தோம் என்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். கண்ணன் என்பவர் இ ஒரு ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுத்ததால் திருமங்கலத்தில் எல்லாமே மாறிப்போனது என்றார். மதுரையின் தி ஹிந்து ஆசிரியராக இருக்கும் எஸ். அண்ணாமலையும் ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறார்.

அத்துடன் தி ஹிந்து பத்திரிகையில் பணியாற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுமே பணம் வாங்கியிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். திருமங்கலத்தில் செய்தததைப் போலவே பார்லிமென்ட் தேர்தலிலும் செய்யப்பட்டது. துக்ளக் வார இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்இ மதுரை லோக்சபா தொகுதியில் பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்கிறார்.

மதுரையில் ஒரு ஓட்டுக்கு ரூ1000 ஆயிரம் கொடுக்கவே அழகிரி விரும்பினார் என்கிறார் துக்ளக் பத்திரிகையாளர். ஒரு வாரம் கழித்து மீண்டும் அந்த பத்திரிகையாளரை சந்தித்த போது மதுரையில் ஒரு ஓட்டுக்கு ரூ500 கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஓட்டுக்குப் பணம் பற்றி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், கோடீஸ்வரரான அனில் அம்பானியே தேர்தலில் நின்றாலும் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாதான் ஜெயிக்க முடியும் என்கிறார் என்று அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஏராளமானோரிடம் அமெரிக்க அதிகாரிகள் பேசி அவர்களது கருத்தையும் மேற்கோள் காட்டி அறிக்கையைத் தயாரித்திருக்கின்றனர் என விக்கிலீக்ஸ் தகவல் குறிப்பிடுகின்றது.

நன்றி -----தமிழ்வின்

1 comment:

valliamman said...

வாழ்க இந்திய ஜனநாயம்,
அந்த நாட்டில் இது எல்லாம் சாதாரணமப்பா.