Sunday, December 28, 2014

அமெரிக்காவையும் ,இணையத்தையும் தனது நேர்மையால் நெகிழவைத்த வீடற்ற மனிதர்


மெரிக்காவைப்பற்றி ஒரு பதிவை  சில நாட்களுக்கு முன்னர் இட்டிருந்தேன் .பலரும் பார்த்திருப்பீர்கள் .அமெரிக்காவில் வீடு இல்லாமல் வாகனங்களில்  வாழ்கின்ற மனிதர்கள் பலர் இருக்கின்றார்கள்.அதைவிட ரோட்டில் படுத்து எழும்புபவர்களும் இருக்கிறார்கள் .அதில் ஒருவரைப்பற்றிய சம்பவம் தான் நான் சொல்ல போவது .

கடந்த சில தினங்களாக யூரியுப் இல் பலகோடிப் பேர்களால் பார்வை இடப்பட்டு அமெரிக்காவிலும் இணையத்திலும் புகழடைந்த ஒரு சம்பவம் இது .

இவர்களை போன்ற மனிதர்களை இங்கு கனடாவில் கூட பெருந்தெருக்களுக்கு அண்மையில் கண்டிருக்கிறேன் .பெரும்பாலும் இவர்கள் மது ,போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள்
அவர்களை பார்க்கும் போதே அதை தெரிந்து கொள்ளலாம் .பொலிஸ் இவர்களை கண்டால் கூட்டிக்கொண்டு போய் காப்பகங்களில் ஒப்படைத்து விடுவார்கள் .அங்கு உடை ,உணவு உட்பட
அத்தியாவசியமான  பொருட்கள் கொடுப்பார்கள் .அனால் இவர்களுக்கு அத்தியாவசியம் மது ,போதைவஸ்து அல்லவா ? எனவே சில நாட்களில் அங்கிருந்து கம்பி நீட்டிவிடுவார்கள் .
பெரும்பாலும் வெள்ளையர்களை தான் கண்டிருக்கிறேன் . ஒரே ஒரு முறை ஒரு முஸ்லிம் பெண்மணியை கண்டேன் .ஒரு அட்டையில் "பசிக்கிறது உதவவும்", "வீடில்லாதவன் உதவவும்"
இப்படி தான் எழதி வைத்திருப்பார்கள் ,வாயால் எதையும் கேட்கமாடடார்கள்.

இனி விடையத்துக்கு வருகிறேன்

அந்த யுரியுப் விடியோ எடுக்கப்பட்டது என்னவோ நையாண்டி மற்றும் கிண்டலுக்காக தான் .அந்த விடியோவை எடுத்த ஜோஸ் என்பவரோ அல்லது விடியோவைப்  பார்த்துக்கொண்டிருக்கும் நாமோ அந்த வீடில்லாத மனிதர் எங்கு போவார் என்று எதிர் பார்த்தோமோ அங்கு தான் போகின்றார் .பின்பு வெளியில் வந்து அவர் செய்வது தான் திருப்பம்' மனிதநேயத்தினைப் பற்றி
யாவருக்கும் உணர்த்தியிருக்கிறார் அந்த வீடற்றவர் .

சரி இனி வீடியோவை  பாருங்கள்

அமெரிக்கா இளைஞரான ஜோஸ் பேலர் லின் (josh Paler Lin) யூரியூப் உலகில் வெகு பிரபலம். ஜோஷ் குறும்பும் நையாண்டியும் கலந்த
வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு,  உலகில் தனக்கென ரசிகர்களை
தேடிக்கொண்டிருப்பவர். அவரது வேலையே இப்படி ஏதேனும் குறும்பு செய்து அதில் சிக்குபவர்களை வீடியோவில் படம் பிடித்து தன்னுடையை யூரியூப் சேனலில் வெளியிடுவதுதான்.
இதற்காக என்றே பிரத்யேகமாக யோசித்து புத்துப்புது குறும்புகளாக உருவாக்கி இருக்கிறார்.இப்படி பல சனல்கள் இருக்கின்றன

இப்படிதான் கடந்த வாரம் அவர்   வீடில்லாத மனிதர் ஒருவரிடம் 100 டாலரை கொடுத்து அவர் என்ன செய்கிறார் என ரகசியமாக படம் பிடித்து வெளியிட வேண்டும் என்னும் நோக்கத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கண்ணில் பட்ட வீடில்லாத மனிதர் ஒருவரை தேர்வு செய்தார். அவர் யார் என்றும் தெரியாது.
அவரது பெயரும் தெரியாது. அவரிடம் ஜோஸ் 100 டாலர்களை கொடுத்தார். வீடில்லாத மனிதருக்கு முதலில் ஆச்சர்யம். 100 டாலர்களை திகைப்புடன் வாங்கியவர், பின்னர் அது மிக அதிகம் என திருப்பிக்கொடுக்க முயன்றார். ஜோஸ் உங்களுக்குதான் பணம் என்று வலியுறுத்திக் கொடுத்தார்.

வீடில்லாத மனிதர் பணத்தை வாங்கி கொண்டு விடைபெற்று சென்றார். ஜோஸ் சிறிது இடைவெளி விட்டு அவரை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றார். எதிர்பாராமல் 100 டாலர் கையில் கிடைத்ததும் வீடில்லாத மனிதர் என்ன செய்கிறார் என அவர் படம் பிடித்துக்காட்ட விரும்பியிருந்தார். வீடில்லாத மனிதர் கொஞ்ச தூரம் நடந்து மதுக்கடை ஒன்றுக்கு சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.நாம் நினைத்தபடியே

இது வரை ஜோஷ் மனதில் உருவாக்கி வைத்திருந்த திரைக்கதை படி எல்லாம் நடந்தது,
ஆனால் இதன் பிறகு அந்த வீடில்லாத மனிதர் செய்தது தான் ஜோஸ்கொஞ்சமும் எதிர்பாரதது. அந்த மனிதர் அருகே இருந்த பூங்காவுக்கு சென்று, அங்கே இருந்த தன்னைப்போன்ற வீடில்லாத மனிதர்களுக்கு தான் வாங்கி வைத்திருந்த உணவு பொருட்களை விநியோகிக்க துவங்கினார்.
மதுக்கடையில் உணவுப்பொருட்கள் தான் வாங்கியிருக்கிறார் அந்த வீடற்றவர் .


இந்த காட்சியை பார்த்ததும் ஜோஸ் வியந்து போனார். வீடில்லாதவர் கையில் கிடைத்த பணத்தை குடித்து மகிழ்வார் என நினைத்தற்காக தன்னை தானே நொந்துகொண்டார். உடனே அந்த மனிதரிடம் சென்று தான்
 அவரைப்பற்றி தவறாக நினைத்ததற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரது செயலை படம் பிடித்துக்கொண்டிருப்பதையும் ஒப்புக்கொண்டார்.

அப்போது அந்த மனிதர், "பணத்தை வாங்கி நான் குடித்து மகிழ்வேன் என நினைத்தீர்களா? பணத்தால் வாங்க முடியாத பல இருக்கின்றன, நான் செய்யும் செயல்கள் மூலம் மகிழ்ச்சியை பெற முயற்சிக்கிறேன் “ என்று பதில்
சொல்லியிருக்கிறார். அதை கேட்டு நெகிழந்து போன ஜோஸ் அவரது பின்னணியை கேட்டிருக்கிறார்.

தோமஸ் எனும் பெயர் கொண்ட அந்த மனிதர் , நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது பெற்றோர்களை கவனித்துக்கொள்வதற்காக வேலையை விடும் நிலை ஏற்பட்டதாகவும், அதன் பிறகு பெற்றோர்கள் இறந்துவிட , பார்த்து கொண்டிருந்த வேலை, இருந்த  பெற்றோர்களின் வீடு இரண்டும் போய் வீதிக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
 ஜோஸ் அவரிடம் மீண்டும் 100 டாலர் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு , தனது போன் நம்பரையும் தந்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் இந்த முழு சம்பவத்தையும் வீடியோவாக தனது சனலில் பகிர்ந்து கொண்டார். "இது போன்ற ஒரு காட்சியை நான்
எதிர்பார்க்கவில்லை, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வீடில்லாதவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன்.
ஆனால் இத்தகைய ஒரு அருமையான காட்சியை படம் பிடிக்க முடிந்தது எனக்கு மகிச்சியை தருகிறது . இந்த சனலின் வரலாற்றில்
 இதுதான் அற்புதமான தருணம். ஒரு வீடில்லாதவருக்கு நான் உதவ முடிந்ததுடன் ,ஒரு மகத்தான் மனிதர் மற்றும் நண்பரையும் சந்தித்துள்ளேன்”
 எனும் அறிமுகத்துடன் இந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.

வீடில்லாமல் வசிக்கும் எல்லோரும் சோம்பேறிகள் அல்ல, வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோட்டு
 விடக்கூடாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த எல்லோருமே வீடில்லாத மனிதர் தோமசின் கருணையால் நெகிழ்ந்து போயினர். தன்னிடம் காசு இல்லாத நிலையிலும், தனக்கு கிடைத்த பணத்தை
தன்னைப்போன்றவர்களுக்கு கொடுத்து மகிழந்த அவரது செயல் எல்லோரையும் உருக வைத்தது. அடுத்த சில நாட்களில்
அந்த வீடியோ விரைவாக  பரவியது. நான்கு நாட்களுக்குள் அந்த வீடியோ 2 கோடிக்கும் அதிமான முறை பார்க்கப்பட்டுள்ளது


இதனிடையே ஜோஸ் அந்த மனிதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவருக்காக நிதி திரட்டும்
முயற்சியில் ஈடுபட்டார். இணையம் மூலம் நிதி திரட்டுவதற்கான இண்டிகோகோ  இணையதளத்தில் தோமஸுக்காக  ஒரு பக்கத்தை துவக்கி , அவருக்கு நிதி அளிக்க கோரிக்கை வைத்தார். தோமஸ் புது வாழ்வு துவங்க கைகொடுங்கள் எனும் கோரிக்கையோடு , இந்த வீடியோவையும் அதன் பின்னே உள்ள கதையையும் குறிப்பிட்டு நிதி உதவி கேட்டிருந்தார்.

தன்னிடம் எதுவும் இல்லாத நிலையிலும் அடுத்தவருக்கு உதவிய தோமஸு க்கு உதவுவோம் என அவர் குறிப்பிட்டிருந்ததை இணையவாசிகள் பலரும் ஏற்றுக்கொண்டு நிதி அளித்தனர். விளைவு.. வீடியோ நான்கு நாளில் ஹிட்டானது போல் நான்கே நாட்களில் தோமாஸுக்கு உதவுதற்காக ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் நிதி குவிந்திருக்கிறது. இன்னும் குவிகிறது.
இப்பொது நான் இந்த பக்கத்தினை பதிவேற்றும்  போது அண்ணளவாக $116,693 USD கிடைத்திருக்கிறது.அவரின் இலக்கை விட அதிகம் பணம் திரட்டப்பட்டுள்ளது

நிதி அளித்த பலரும் இந்த பக்கத்தில் தோமஸ் பற்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்,
 தோமஸுக்குகு பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் அவருக்கு உதவி செய்ததன் மூலம், இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் சிறப்புமிக்கதாக மாறியதாகவும் தெரிவித்திருந்தனர்.

 உங்கள் செயலால் அசந்து போனேன். உங்களைப்போல் மேலும் பலருக்கு, கொடுக்கும் தன்மை வர வேண்டும் அத்துடன்  கிறிஸ்மசின் உண்மையான அர்த்ததை இது புரிய வைத்துள்ளது” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய எல்லோரும் அதை கருத்தைதான் கொண்டிருந்தனர். கூடவே மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இனி தோமஸ் தனது புது வாழ்க்கையினை புது வருடத்தில் தொடங்குவார் என்ற நம்பிக்கையுடன் கரிகாலன் ........................

5 comments:

Anonymous said...

AWESOME

குலவுசனப்பிரியன் said...

மனதை நெகிழவைக்கும் காட்சி. பகிர்வுக்கு நன்றி.

ஊமைக்கனவுகள். said...

அருமையான மற்றும் அவசியமான பதிவு நண்பரே!
உண்மையில் இதுபோலத்தான் நமது கருத்தேற்றங்கள் பொய்யாகிப் போகும் தருணங்களின் ஆச்சரியங்கள்!
மனித நேயம் இன்னும் மரித்துப் போய்விடவில்லை என்பதைக் காட்டுகிறது இந்நிகழ்வு!
பகிர்விற்கு நன்றிகள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஏழைகள் விசால மனம் படைத்தவர்கள்.
இதே போன்றதொரு சம்பவம் 10 வருடங்களுக்கு முன் சுனாமியுடன் சென்னையில் நடந்தது. சுனாமியில் தங்கள் மகனை இழந்து விட்டோமென இருந்த, எல்லாவற்றையும் இழந்து நிற்கதியாக நின்ற தம்பதிகளுக்கு அரசு
1 லட்சம் இறந்த மகனுக்காகக் கொடுக்கிறது.
அதில் ஒரு ரூபாவையும் செலவு செய்யாமல், பலர் போல் தங்கள் மகனும் திரும்பி வருவார் எனத் தேடிய பெற்றோர். 6 நாள் மகன் மீளக் கிடைகிறான். அப்பணம் என் மகன் இறந்து விட்டான் என தந்தீர்கள். ஆண்டவன் பிள்ளையைத் தந்து விட்டான். இப்பணம் வேண்டாமென அதிகாரிகளிடம் அப்பெற்றோர் திரும்பக் கொடுத்தபோது, அவர்கள் அதை திரும்பப் பெற மறுத்த போது, இவர்கள் என்ன செய்வதென தெரியாது. ஆனந்த விகடன் சுனாமி நிதிக்குக் கொண்டு சென்று கொடுத்த செய்தி அன்று விபரமாக வந்தது.
அதனால் நேர்மை, நியாயம்,உதவும் பாங்கு இன்னும் பல நல்ல அம்சங்கள் ஏழைகளிடமே உண்டு.

வேகநரி said...

நல்ல தகவல்