Friday, July 29, 2005

தமிழ் தேசிய தொலைக்காட்சி தென் ஆசியா நோக்கி..

இந்த வருடம் மார்ச் 26 ந் திகதி தனது ஒளிபரப்பினை ஆரம்பித்த தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது இன்றைய திகதி வரையில் ஜரோப்பிய நாடுகளில் மட்டுமே பார்க்கமுடியும். வருகின்ற ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் த.தே.தொலைக்காட்சியானது தனது ஒளிபரப்பினை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஒளிபரப்பவுள்ளது.

தாயக நேரம் பி.ப 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை (GMT 13.30-15.30)தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்கள் இந்த ஒளிபரப்பினை கண்டுகளிக்கலாம் என கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமது வியக்கத்தக்க பல இராணுவ நடவடிக்கைகள் மூலம் போராட்டத்தினை நகர்த்திச் சென்ற புலிகள் இப்போதைய சமாதான காலத்தில் தமது சாதுர்யமான பல இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் உலகை திரும்பிப் பார்க்கவைத்திருக்கின்றனர்.

அத்துடன் போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள்,இன்றைய சமாதான காலசெயற்பாடுகள்,தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படி பலவற்றை
உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்திருக்கின்றனர்.

இன்றைய சமாதான காலகட்டத்தில் அவர்கள் சந்தித்த பல நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பலநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் பல நாடுகளுக்கு சென்று பெற்ற அனுபவங்களூடாக இன்றைய உலகில் ஊடகங்களின் சக்தியினை அவர்கள் தெளிவாக புரிந்திருக்கின்றனர் என்பது அவர்களின் அண்மைக் காலநடவடிக்கைகள் உணர்த்துகின்றன.அது அச்சு ஊடகங்களாக இருந்தாலும்சரி இலத்திரனியல் ஊடகங்களாக( தொலைக்காட்சி,வானொலி,இணையம்)இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் அவர்கள் இன்று கால் பதிக்க தொடங்கியிருக்கின்றனர்.அதில் ஒன்றுதான் இந்த சாட்டலைட் தொலைக்காட்சி.

இன்றைய உலகில் ஊடகங்களின் வலிமை என்பது எல்லொருக்குமே தெரிந்த ஒன்றுதானே.ஆப்கான் யுத்தம்,இராக் யுத்தம்,போன்றவற்றில் நாம் பார்த்தது தானே.யுத்தத்தின் போக்கையே மாற்ற இன்று ஊடகங்களால் முடியும். இது கூட நாம் அறிந்ததே.

இன்றைய நாட்களில் ஊடகங்கள் என்னதான் நடுநிலமை வேடம் போட்டாலும் அவற்றின் முதலாளிகளின் அல்லது பணியாளர்களின் அல்லது தாம் சார்ந்த நாடுகளின் நலன்களையே அவை முன்னிலைப்படுத்தும்.அவற்றுக்கு எதிரானசெய்திகளை அல்லது கருத்துக்களை அவை வெளிப்படுத்த மறுப்பதுடன் சில வேளைகளில் தமக்கு சார்பாக செய்திகளை திரிப்பதும் உண்டு. இதில் உலகின் புகழ்பூத்த சில ஊடகங்களும் விதிவிலக்கில்லை.

கடந்த காலங்களில் இலங்கையில் இதுதான் நடந்தது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைப்பெற்ற பல சம்பவங்கள் இலங்கை ஊடகங்களால் மறைக்கப்பட்டன அத்துடன் சிலவற்றை திரித்தும் வெளியிட்டனர்.இதில் அரச ,தனியார் ஊடகங்களென்ற பேதங்கள் இருக்கவில்லை.அப்படியும் சில செய்திகள் வெளிவந்தநிலையில் போட்டதுதான் பத்திரிகைதணிக்கை என்ற பெரியதொரு பூட்டு.

ஆரம்ப நாட்களில் புலிகளின் கையில் இருந்தது பத்திரிகை ஒன்றுதான்.அதுகூட யாழப்பாணம் மற்றும் வன்னியின் சில பகுதிகளுடன் முடங்கவேண்டிய நிலை. இப்படியான நிலையில் பரந்து பட்ட அளவில் செய்திகளை கொண்டு போகவேண்டிய தேவை ஏற்பட்ட போது வந்துதான்"புலிகளின் குரல்" வானொலி.ஆரம்பத்தில் யாழப்பாணத்தில் மட்டும் கேட்க முடிந்த புலிகளின் குரல் வானொலி இன்று வன்னியில் இருந்து ஒலிபரப்பாகிறது.

இன்று,திருகோணமலை,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் கேட்கமுடிவதுடன் இந்தியாவின் சில பகுதிகளிலும் கேட்கமுடியும்.

அத்துடன் 2000ம் ஆண்டிலிருந்து என்று நினைக்கிறேன் "தேதுன்ன" என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலி தனது சிங்கள மொழி ஒலிபரப்பினையும் ஆரம்பித்து சிங்கள மக்களுக்கு தமது நோக்கங்கள்,கொள்கைகள்,செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வசதிசெய்ததுடன் இலங்கையின் அரச,சிங்களஆங்கில ஊடகங்களின் முகத்திரையினை கிழிக்க ஆரம்பித்தது.பல சிங்கள மக்கள் மட்டும் அல்ல இராணுவத்தினர் கூட இதன் மூலம் சரியான களநிலவரங்களை அறிந்து கொண்டனர்.

1900 ஆம் ஆண்டுக்கு முன்னர் "நிதர்சனம்"என்ற பெயரில் சிலமணிநேர தொலைக்காட்சி ஒலிபரப்பினை புலிகள்நடத்தியதும் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய படையினரால் அவை அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


இப்போது புலிகளின் குரல் வானொலி இணையத்தின் வாயிலாக உலகெங்கினும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. புலிகள் "புலிகளின் குரல்"வானொலியினை நடாத்திவருவதுடன் "தமிழீழ வானொலி" என்று இன்னுமொரு வானொலி சேவையினையும் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இரண்டினையும் இணையத்தின் வாயிலாக கேட்கமுடியும்.அத்துடன் வன்னியில் இருந்து "ஈழநாதம்" எனும் பத்திரிகையினையும் மட்டக்களப்பில் இருந்து ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது.அதனையும் இன்று இணையத்தின் வாயிலாக பார்க்கலாம்.

அத்துடன் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான "புலிகளின் குரல்" இன்று இணையத்தில் கிடைக்கிறது.மேலும் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவினரின் "அருச்சுணா" இணையத்தளம்.அதுபோலவே மேலும் பல துறைகளும் கூட இணையத்தில் கிடக்கிறது. இன்று கிடைக்கும் வசதிகள், வாய்ப்புக்கள்,யுத்தநிறுத்தம் போன்றவை இதற்கு துணை நிற்பதுடன்,புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் பங்களிப்பையும் இதில் காணமுடிகிறது. இணையம்வழி இவை வருவதற்கு இதுவரையில் தடையில்லை.த.தே.தொலைக்காட்சி ஜரோப்பாவில் ஒளிபரப்பப்பட்ட வரையில் சரி. இப்போது கிழக்காசியா எண்டால் கண்டிப்பாக இலங்கையில் தெரியும். இந்தியாவிலு........ம் தெரியும்.

ஆக அங்குதான் நிற்கிறான் சூரியன்.இனி பெரியாண்ணன் என்ன சொல்லப்போகிறார்?அம்மாக்கள் என்ன சொல்லப்போகின்றனர்?இன்று வெள்ளமென இலங்கை,இந்தியா நாடுகளை நோக்கி பாய்ந்துவரும் மேற்குல நாட்டு ஊடகங்கள் தராத பாதிப்புக்களை அல்லது பாதிக்காத இறையாண்மையினை இந்த ஒளிபரப்பு பாதிக்கும் என எழும் குரல்களை நாளையிலிருந்து கேட்கலாம்.நிச்சயமாக கேட்கலாம்.

கண்டிப்பாக எதிர்ப்புகள் வரும்.எதிர்ப்புக்களையும் மீறி ஒளிபரப்புவார்களா?அல்லது ....... எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.சில வாரங்களில் விடை கிடைக்கும்.


இன்று இணையத்தில் கிடைக்கும் புலிகளின் தளங்கள்.

புலிகளின் சமாதான செயலகம்.

"விடுதலைப்புலிகள்" பத்திரிகை

ஈழநாதம்.

ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு.

"புலிகளின் குரல்" வானொலி

நிதித்துறை

நீதித்துறை.

விளையாட்டுத்துறை

தினசரிச் செய்திகள்.

ஈழம்வெப்

"அருச்சுணா" ஒளிக்கலைப்பிரிவு



5 comments:

வசந்தன்(Vasanthan) said...

//1900 ஆம் ஆண்டுக்கு முன்னர் "நிதர்சனம்"என்ற பெயரில் சிலமணிநேர தொலைக்காட்சி ஒலிபரப்பினை புலிகள்நடத்தியதும்//

அண்ணே,
இலக்கப்பிழை.

இணைப்புக்களைத் தந்ததுக்கு நன்றி.
ஏற்கெனவே வன்னியன் செய்தியைத் தந்திருந்தாலும் மீண்டும் பதிந்ததுக்கு நன்றி.

இவ்வளவும் செய்தவர்கள், இன்னும் 'வெளிச்சம்' சஞ்சிகையை இணையத்தில் கொண்டு வராததுதான் கவலையளிக்கிறது என்பதைவிட ஆத்திரம்தான் வருகிறது.

Anonymous said...

நன்றி.
வசந்தன் பிழையினை சுட்டிக்காட்டியதுக்கு.1990 1900 ஆகிவிட்டது.
அவசரமாக தட்டச்சு செய்து போட்டதில் சில பிழைகள் வந்துவிட்டது.ஒளிபரப்பு ஒலிபரப்பு வேறு ஆகிவிட்டது.

அத்துடன் வன்னியனின் பதிவினை
நீங்கள் சுட்டியதின் பின்புதான் பார்த்தேன்.
கலை பண்பாட்டு கழகத்தினால் வெளிவரும் வெளிச்சம் இதழ் வராதது
நிச்சயமாக பெரிய குறைதான்.மிகவும்
தரமான இதழ் அது.அதுவும் வரும் என்று நம்புகிறேன் காலகெதியில்.
கவிஞர் புதுவையின் ஒரு தளம் இருக்குது பாத்தீங்களோ?

வசந்தன்(Vasanthan) said...

//கவிஞர் புதுவையின் ஒரு தளம் இருக்குது பாத்தீங்களோ?//



பார்த்தேன். அதுக்குப்பிறகு தானே ஆத்திரமே வந்தது.

Anonymous said...

பெரியண்ணனைச் சீண்டாதவரை, அவர் கண்டுக்காம இருப்பார்னு நெனைக்கிறேன்.

- பெரியண்ணன் ஊர்க்காரன்.

NONO said...

இனையப்பக்கங்கள் எல்லாம் நல்லாய்தான் இருக்கின்றன!! ஆனால் சில பக்கங்களின் தரம் செரியாக இல்லை!! புது வடிவமைப்பு தேவை!!! சில பக்கங்கள் யுனிகோட்டில் உள்ளது, சில பாமினியில் அமைந்துள்ளது!!! எல்லாப்பக்கங்களும் யுனிக்கோட்டில் அமைத்தால் நன்றாய் இருக்கும்!!