கிழக்கில் உதயமாகிறது சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ "ஜிகாத்" குழு!
சிறிலங்கா இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணியை உருவாக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியதாவது:
இராணுவ முஸ்லிம் படையணியின் தேர்வுக்கான நேர்காணல் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. அம்பாறையில் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் நாள் வரை இந்த நேர்காணல் நடைபெறும்.
இப்படையணியில் மொத்தம் 500 பேர் இணைக்கப்பட உள்ளனர் என்றார் சமரசிங்க.
இது தொடர்பிலான விளம்பரம், சிறிலங்கா அரச ஊடகமான கடந்த ஞாயிறன்று சண்டே ஓப்சர்வரில் வெளியாகி இருந்தது.
புதிதாகச் சேர்க்கப்பட உள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிமாகவும் 8 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு நபருக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாய். இதில் போக்குவரத்து, மருத்துவ சலுகைகள், தங்குமிடம் அனைத்தும் அடங்கும்.
கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களின் துணை இராணுவக் குழுவான ஜிகாத் குழு இயங்கி வருகிறது என்றும் இது பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுத்துறை உதவியுடன் இயங்குவதாகவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பிலான ஆதாரங்கள் உள்ளன என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் "இராணுவத்தில் முஸ்லிம் படையணி" என்பதும் இந்தப் படையணி கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கும் என்பதும் ஒரு உத்தியோகபூர்வமான ஜிகாத் குழுவை உருவாக்கும் நடவடிக்கையாகவே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கும் இந்த முஸ்லிம்கள் குழுக்களின் நீண்டகால செயற்பாடுகள் பற்றிய ஒரு தொகுப்பு:
தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை தொடக்கத்தில் இணைத்துக் கொண்டு தமிழர்கள் மீதான பாரிய படுகொலைகளை சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டது.
இதற்கு வீரமுனை கிராமப் படுகொலையை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீரமுனை என்கிற தமிழ்க் கிரமாமமானது பல முஸ்லிம் கிராமங்களைச் சூழ்ந்து அமைந்தது.
மட்டக்களப்பு நகரிலிருந்து 38 கிலோ மீற்றர் தென்மேற்கில் இக்கிராமம் உள்ளது.
1990 ஜூன் மாதம் 11 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையேயான யுத்தம் தொடங்கிய போது வீரமுனை கிராமம் 3 பாரிய படுகொலைகளைச் சந்திக்க நேர்ந்தது.
ஜிகாத் அமைப்பு, சிறிலங்காவின் "ஊர்காவல்" படையினர், சிறிலங்கா அரசாங்கத்தினது இராணுவம், சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இந்தப் படுகொலைகளை நடத்தின.
தமிழ்க் கிராமங்களில் யுத்த காலத்தில் படுகொலைகளையும் மனித உரிமைகளையும் மீறியதில் பாரிய பங்களிப்புச் செய்தது சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை.
1990 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று மேலே குறிப்பிட்டுள்ள குழுவினருடன் இணைந்து கொண்ட சிறிலங்கா இராணுவம் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து கொண்டுவெட்டுவான் முகாமுக்குக் கொண்டு சென்றது.
பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அனைவரையுமே படுகொலை செய்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடைமைகளையும் வீடுகளையும் எரித்து நாசப்படுத்தினர்.
அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் சிறப்பு அதிரடிப்படையினர், ஜிகாத் அமைப்பில் உள்ள முஸ்லிம்கள், ஊர்க்காவல் படையினர் வீரமுனை கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.
முன்னைய பாரிய படுகொலைச் சம்பவங்களால் அச்சமடைந்த அம்மக்கள் சிந்தையாதிரை பிள்ளையார் ஆலயத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் ஆலயத்துக்குள் உள்நுழைந்த முஸ்லிம் தீவிரவாத இளைஞர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் ஆலயத்திலேயே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 56 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர்.
இந்தப் படுகொலைகளால் வீரமுனை கிராமமே ஒட்டுமொத்தமாக வெளியேறி காரைதீவு அகதி முகாமுக்கு இடம்பெயர்ந்தது. 1993 ஆம் ஆண்டு இக்கிராமத்தினர் சிலர் வீரமுனை கிராமத்துக்குத் திரும்பினர். பெருமளவானோர் இன்னமும் அகதி முகாம்களிலே வசித்து வருகின்றனர்.
1998 ஆம் ஆண்டு அம்பாறை அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.என்ற முஸ்லிம் ஆயுதக் குழு உருவானது. இக்குழுவானது முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தமிழர்கள் உள்நுழவதைத் தடை செய்வதாக அறிவித்தது. இத்தகைய பெயரில் 1985, 1990 ஆண்டுகளில் தமிழர் விரோத சக்திகள் ஒரு குழுவை உருவாக்க முனைந்துள்ளனர். அக்குழுவினர் 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் வெளியிட்ட துண்டறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கைகளை முஸ்லிம் பகுதிகளில் கைவிட வேண்டும் என்று எச்சரித்தது.
இருப்பினும் இக்குழுவின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை இருப்பதாக செய்திகள் வெளியாகின.
1999 ஆம் ஆண்டு அபுசாலி ஜூலியா (வயது 34) என்ற ஏறாவூர் தாமரைக்கேணியைச் சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருமணமான வேறு ஒரு ஆணை விரும்பியதால் இஸ்லாமிய மதச் சட்டத்தை அப்பெண் மீறியதாகக் கூறி முஸ்லிம் ஆயுதக் குழுவினர் படுகொலை செய்தனர்.
அதன் பின்னர் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறத் தொடங்கிய 2002 ஆம் ஆண்டு சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் பாரிய படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற ஊர்காவல் படையில் உள்ள 23 ஆயிரம் பேரினது எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
கற்பிட்டியில் ஜூன் மாதம் 21 ஆம் நாள் ஊர்காவல்படையினர் முகாமில் ஜோன் அமரதுங்க பேசியதாவது:
சிறிலங்கா காவல்துறையினரது கடமைகளை ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினரை விட குறைவான ஊதியம் பெறுகின்றனர். நாளாந்த ஊதியமே ஊர்காவல் படையினருக்கு வழங்கப்படுகிறது.
அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஊர்காவல் படை கலைக்கப்படமாட்டாது. மாறாக அது வலுப்படுத்தப்படும் என்றார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜூன் 23 ஆம் நாள் (2002) விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில்,
முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை ஒப்புக் கொண்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான நல்லிணக்கச் சூழலைச் சீர்குலைக்கும் வகையில் சில சக்திகள் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அமைதியை விரும்புகிற அனைத்து முஸ்லிம்களும் இத்தீவிரவாதக் குழுக்களின் செயற்திட்டங்களுக்குப் பலியாகாமல் அமைதிக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் மீதான இத்தாக்குதலையடுத்து தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பதற்றம், மோதல் ஏற்பட்டது.
அப்போது மக்கள் நடத்திய பாரிய அளவிலான பேரணியில் "ஒசாமா" குழு எனப்படுகிற முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது.
ஒசாமா குழு என்றும் ஜிகாத் குழு என்றும் இயங்கி வந்த இக்குழுவை சிறிலங்கா இராணுவம் இயக்கியது. அதன் தலைவராக ஹக்கீம் என்பவர் செயற்பட்டு வந்தார்.
ஜூன் மாதம் 26ஆம் நாள் (2002) இல் பி.பி.சி. தமிழோசை நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த தமிழ் ஊடகவியலாளர் பி. சதாசிவானந்தத்தின் மூதூர் இல்லம் மீது மீண்டும் ஒசாமா அணி என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த ஜிகாத் குழு தாக்குதல் நடத்தியது.
சதாசிவானந்தம் நடத்திய ஆதரவற்ற சிறார் விடுதியையும் இந்த ஜிகாத் குழு தாக்கியது.
மூதூரில் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 6 பேர் பலியாயினர்.
வன்முறைப் பகுதிகளை பார்வையிடச் சென்ற சிறிலங்கா உள்விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிய கதையாக ஒரு உண்மையையும் அவர் ஒப்புக் கொண்டார்.
அமைச்சராக இருந்த ஜோன் அமரதுங்க,
கடந்த வாரம் (2002 ஜூன் 23 ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை) நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக அரசாங்கம் நம்புகிறது என்று கூறினார்.
இந்தக் காலகட்டத்தில்தான் இத்தகைய தீவிரவாதக் குழுவினரைக் கொண்டு சிறிலங்காவின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக முஸ்லிம் ஊர்க்காவல் படை வலுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் இந்த ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.
தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபக்கம் தனது துணைப் படைகளில் இணைத்துக் கொண்டிருந்த நிலையில் - சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிற லஸ்கர் இ தொய்பா, சிறிலங்காவின் ஆசீர்வாதத்துடன் கிழக்கில் கால் பதித்தது.
சிறிலங்காவின் கிழக்கில் ஜிகாத் குழுவாக அறியப்படுகிற இந்தக் குழு பாகிஸ்தானின் உதவியுடன்தான் இயங்கி வருவதாக கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தியாவும் எச்சரித்திருந்தது.
இந்தியாவின் "அவுட்லுக்" வார ஏட்டில் இது தொடர்பான கட்டுரையும் வெளியாகி இருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி.ராமன், முஸ்லிம் ஜிகாத் குழு தொடர்பிலான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அப்போது சிறிலங்கா
வுக்கான பாகிஸ்தானிய தூதுவராக ஓய்வு பெற்ற இராணுவ கேணல் பசீர் வாலி நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தை நிராகரிக்குமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தார்.
அவர் எழுதிய கட்டுரையின் விவரம்:
இந்தியாவுக்கு எதிராக கொழும்பை பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நேரடியாக பயன்படுத்துவது தொடர்பில் எதுவித ஆதாரமும் இல்லை. இருந்தபோதும் சிறிலங்காவின் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஜிகாத் குழுவில் சேர்ப்பது தொடர்பாக லஸ்கர் இ தொய்பா அமைப்பு ஆர்வம் காட்டுகிறது.
கிழக்கு மாகாண தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தீவிரவாத உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது.
2002 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நடந்த இன வன்முறைகளுக்கு மத்தியில் "ஒசாமா படையணி" என்பது தீவிரமாகச் செயற்பட்டது.
பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் லஸ்கர் இ தொய்பா நெருங்கிய தொடர்புகொண்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இராஜதந்திர நிலையில் தனது இரு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தது.
இது போன்ற செயற்பாடுகள் மூலம் கொழும்பை தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிடுவதாக தெரிகிறது.
ஏனெனில் இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் செயற்பாடுகள் பல தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இவை தொடர்பிலான தரவுகளைச் சேகரிக்க கிழக்கில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தலாம்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்திய உளவாளிகள் இரகசியமாக கராச்சி செல்வதற்காக கொழும்பு வழியை பயன்படுத்துகின்றனர். கொழும்பில் அத்தகைய நபர்களது கடவுச் சீட்டுகளில் சிறிலங்காவில் நுழைந்தமைக்கான பதிவுகளை சிறிலங்கா செய்வதில்லை என்றும் இராமன் தெரிவித்திருந்தார்.
"அவுட்லுக்" இதழ் வெளியிட்டிருந்த இக்கட்டுரையை 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாளன்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட மறுப்பறிக்கை:
இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்கிறது.
இந்திய உளவு அமைப்பான றோவின் முன்னாள் செயற்பாட்டாளரால் தவறான தகவலை பரப்பும் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் எதுவித ஆபத்தான சூழ்நிலை உணரப்பட்டாலும் பாகிஸ்தான் மீது பகைமையைத் தூண்டு வகையில் ஐ.எஸ்.ஐ. மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானிலிருந்து இயங்குகிற காஸ்மீர் ஆயுதக் குழு லஸ்கர் இ தொய்பா. மர்கஸ் தாவா- வல்- இர்ஸாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஆயுதக் குழுதான் லஸ்கர் இ தொய்பா.
இச்சூழலில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் ஆலயம் அமைக்க பேரினவாத சக்திகள் முயற்சித்தன. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன.
இதைக் கண்டித்து ஏப்ரல் 12ஆம் நாள் (2005) கொழும்பில் சிங்கள பௌத்த தேசியவாதிகள், பௌத்த பிக்குகள் கண்டனப் பேரணி நடத்தினர்.
அந்தப் பேரணி முடிவில் புத்த சாசன அமைச்சுவிடம் சிங்களப் பேரினவாதிகள் கையளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
பொத்துவில் பிரதேசத்தில் சட்டபூர்வமான பௌத்த மத செயற்பாடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், ஆயுதமேந்திய முஸ்லிம் தீவிரவாதிகளும் எதிர்க்கின்றனர். இந்த முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் கல்முனையில் இரு சிறிலங்கா காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேரணியை ஜாதிக ஹெல உறுமய நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜிகாத் குழுவின் தலைவராக குற்றம்சாட்டு வந்த அப்துல் சமது அப்துல் ஹக்கீம் என்ற மதுகர ஹக்கீம் (வயது 42) அடையாளம் தெரியாத நபர்களால் மூதூர் பளை நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவ நாளன்று மோட்டார் சைக்கிளில் தனது ஹலால் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. எப்போதும் அவருடன் இருக்கும் 6 பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த போது உடனிருக்கவில்லை.
கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ முகாமிலிந்து 500 மீற்றர் தொலைவில் மூதூர் பிரதான வீதியில் ஹக்கீம் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜிகாத் குழுவினரிடையிலான உள்மோதல் அல்லது வர்த்தக மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர்.
1985, 1990, 1995 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பாரிய அளவில் நடைபெற்ற தமிழ், முஸ்லிம் வன்முறைகளில் தொடர்புபட்டவர் இந்த ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் மீது ஜிகாத் குழு இயங்குகிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டன.
இந்த அறிக்கையின் விவரங்களை கொழும்பு ஆங்கில நாளேடான "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியிருந்தது.
ஜிகாத் குழுவின் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த திருகோணமலையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 22 ஆம் படையணியில் மேஜர் தரத்திலான அதிகாரி, புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.
சிறிலங்காவின் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஊடாக ஜிகாத் குழுவினருக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன என்பதையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது.
இருப்பினும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பாகிய பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி றொட்ரிக்கோ, கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிட்ட போது கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுதக் குழு இயங்குகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.
அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்திய போதும் தான் ஜிகாத் குழு என்று சொல்லவில்லை சில ஆயுதக் குழுக்கள் இயங்குகிறது என்று மீண்டும் விளக்கமளித்தார்.
அண்மையில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுத்த பல முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தாக்கி அச்சுறுத்தியிருந்தது.
முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்கள் இயங்குவது தொடர்பான செய்திகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் நேரடியாக பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர்.
இருப்பினும் முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுவில் இணைவதற்கான சூழல் இருப்பதாக எச்சரித்து வந்தனர்.
அண்மையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் முஜிபுர் ரகுமான் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதமேந்துகிற உரிமை இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.
கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுத நடமாட்டத்தை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார்.
"அப்பிரதேசத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் நடமாடலாம் ஆனால் அவர்கள் ஆயுதக் குழுவினரா? ஜிகாத் குழுவினரா என்பது எமக்குத் தெரியாது என்று பிரசாத் சமரசிங்க கூறியிருந்தார்.
சிறிலங்கா இராணுவமானது முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரை முதலில் ஊர்காவல் படையில் இணைத்து உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக செயற்படுத்தியது.
சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் துணையுடன் ஜிகாத் குழுவை உருவாக்க அனுமதித்து தெற்காசிய பிராந்திய அமைதிச் சீர்குலைவுக்கு உடந்தையாக சிறிலங்கா செயற்பட்டு வருகிறது.
இதனிடையே ஜெனீவா பேச்சுக்களில் இந்தக் குழுவினரை விடுதலைப் புலிகள் பகிரங்கப்படுத்தி சர்வதேச சமூகத்தின் முன்னர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திவிட்டனர்.
இதனால் சர்வதேச சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற நடுக்கத்தில்-
உத்தியோகப்பூர்வமான ஜிகாத் குழுவாக-
"கிழக்குப் பிரதேச சிறிலங்கா இராணுவ முஸ்லிம் படையணி"யை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நன்றி:-www.puthinam.com
No comments:
Post a Comment