Tuesday, July 05, 2005

ஆபாச பின்னூட்டங்கள்! ஒரு பார்வை!

மிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிகளின் அனுபவங்கள் இப்படி பல்வேறு நாடுகளில் இருந்து பல ஊர்களில் இருந்து பல்வேறு பதிவுகள்.நாகரீகமான வார்த்தையாடல்கள்,ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள்,நாகரிகமான பின்னூட்டங்கள் இப்படிதான் போய்க்கொண்டிருந்தது வலைப்பதிவுலகம்.பின்பு காசி தனது பணம் நேரம் யாவற்றினையும் செலவு செய்து தமிழ்மணம் உருவாக்க புதுபொலிவு காட்டியது வலைப்பதிவுலகம்.இதற்கு முன்பும் பின்பும் மதியின் பங்களிப்பும் உண்டு.எண்ணிக்கையும் பெருகியது.பெருகிக்கொண்டிருக்கிறது.இது பிளாஷ் பாக்

என்னை பொறுத்தவரையில் வேலை அதனால் ஏற்படும் ரென்ஷன் போக்க நான் வருவதே தமிழ்மணத்துக்குதான்.(சிலர் தண்னியடிப்"பார்"கள்,நண்பர்களுடன் அளவளவுவார்கள்,சுற்றுவார்கள்)ஆனால் எனக்கு நண்பன் தமிழ்மணம் தான்.எனது வேலைகளைப்பு,பிற கவலைகள்யாவும் போக்குமெனது நல்லதொரு நண்பன் தமிழ்மணம் தான்.

வலைப்பக்கம் வந்தால் பொழுது போகும் எண்டால் சிலர் சீரியசாக தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளைஎல்லாம் வலையில் கொட்டி "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்ற ரீதியில் பின்னூட்டம் இட்டு பின்னூட்டப் பக்கம் எல்லாம் நாறுது. போதாததுக்கு சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பனுக்கும் அவரது மனைவிக்கும் இந்த தமிழ்மணத்தினை அறிமுகப் படுத்தி வைத்தேன்.இன்று அவர்கள் வீட்டுக்கு போனபோது நண்பனிடமும் அவரது மனைவியிடமும் எப்படி பொழுது போகுது,எப்படி பதிவுகள் எல்லாம் எப்படி என்று நண்பனிடம் கேட்க நண்பனின் மனைவி என்னை பார்த்த பார்வை ஒரு மாதிரி இருக்கவே, என்ன என்று நண்பனிடம் கேட்கவும், அவன் சில பதிவுகளுக்கான (ஆபாச) பின்னூட்டங்களை காட்ட நான் தலை குனிந்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.கஷ்டகாலத்திலும் ஒரு நல்ல காலம் நான் வலை பதிவது அவர்களுக்கு தெரியாது

காசி அரும்பாடுபட்டு நல்ல விஷயங்களுக்காக உருவாக்கிய தமிழ் மணத்தினை நாறடிக்கவென்றே பல அனாமதேயங்கள் அரும் பணியாற்றுகின்றார்கள். யார் யாருடைய பெயர்களில் எல்லாமோ பின்னூட்டம் இடுகின்றனர். யார் போலி யார் உண்மை என்றே தெரியாமல் இருக்கிறது.
ஒருவருடைய பெயரினை பாவித்து ஆபாசபின்னூட்டம் இடுவதில் அப்படி
என்ன அலாதி பிரியமோ நானறியேன்.
சாதி துவேசம்,மத துவேசம்,நடிகர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இப்படி பல கூட்டங்கள் இங்கு. படித்த படிப்புக்கும் ,வாழும் வாழ்க்கைக்கும், பண்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதனை நிரூபிக்கின்றன பல "அனாமதேயங்கள்".
ப்ளாக்கரில் அனாமதேய வசதி வைத்ததே சில நல்ல நோக்கங்களுக்காக இப்படி இவர்கள் துஷ்பிரயோகம் செய்வார்கள் என அவர்கள் நினைத்திருக்க
மாட்டார்கள். கிட்டத்தட்ட ப்ளாக் பண்ணி பிரைவேட் கோல் எடுப்பதை
கனடாவில்" பெல் கனடா" அனுமதித்திருப்பதற்க்கு என்ன காரணமோ அதுபோலவே பிளாக்கரும் இதற்கு வசதி செய்து தந்திருக்கின்றனர்.

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதனை மதத்தினூடாகவோ சாதியினூடாகவோ கண்கொண்டு நோக்காதீர்கள்.அது வலைப்பதிவுகளுக்கும் பொருந்தும்.ஒருவர் தனது கருத்தை எழுதுகிறார் என்றால் அவரின் கருத்துக்கு எல்லோரும் உடன்படுவார்கள் என்றுஎதிர் பார்ப்பது மடமை.நாலு பேர் நாலு கருத்து சொல்வார்கள்.ஒரு கருத்தினை எழுதுவருக்கு எழுத இருக்கும் உரிமை போலவே மற்றொருவருக்கு அக் கருத்தினை ஒட்டியோ வெட்டியோ பேச உரிமை உண்டு.மொத்தத்தில் எல்லொருக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை இங்கு (வலைப்பதிவில்)உண்டு.

இங்கு நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் அந்த எழுத்துரிமை மற்றவர்களின் உணர்வுகளைபுண்படுத்தாமல், மற்றவர்களின் மனதினை குத்திக்கிழிக்காமல் இருப்பதே சிறப்பு. நாலு கெட்ட வார்த்தைகளால் திட்டி யாருக்கு என்ன பயன்? உங்கள் குழந்தைகள் ,மனைவிகள் இவற்றினை படிப்பது இல்லை என்ற தைரியம் தானே? இப்படியான கெட்ட வார்த்தைகளை கொண்ட ஒரு மொட்டைக் கடிதம் உங்கள் வீட்டுக்கு வந்தால் உங்கள் மனம் என்ன பாடு படும் என்பதனை சிந்தித்தீர்களா?முகம் தெரியவா போகுது என்ற தைரியம் வேறு?ஒரு சபை நடுவே இப்படி கருத்து முரண்பாடுகள் ஏற்படும் போது இப்போது நீங்கள் பின்னூட்டம் இட்டதை போன்று பேசுவீர்களா?

உங்களுக்கு இருக்கும் பேச்சுரிமையினையோ எழுத்துரிமையோ மற்றவர்களின் மூக்கு நுனி வரைதான். எனவே நண்பர்களே! உலகெங்கினும் வாழும் பல முகம் தெரியாத பல தமிழ் சகோதர சகோதரிகள் பலரும் இப்பதிவுகளை படிக்கின்றனர், எழுதுகின்றனர் என்ற மனப்பான்மையுடன் நாகரீகமாக பண்பாக மற்றவர்களின் மனதினை குத்திக்கிழிக்காமல் சாதி மதம் புறம் தள்ளி எமது கருத்துக்களை எழுதுவோம்.அது பதிவாகட்டும் அல்லது பின்னூட்டமாகட்டும். ஒரு சபை நடுவே உங்கள் வேட்டி அவிண்டால் என்ன பாடுபடுவீர்களோ ,அதே போலதான் இப்படியான பின்னூட்டங்களை பார்க்கும் போது பலருக்கு இருக்கிறது.எனவே தயைகூர்ந்து எதையும் பண்பாக நாகரீகமாக விமர்சியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கும் பல எதிர்வினைகள் வரும் என்று நினைக்கின்றேன்.

எல்லோம் ஒன்றிணைவோம்! இணையத்தால் தமிழ் வளர்ப்போம்.!

Sunday, July 03, 2005

பரிசோதனை முயற்சி! ஹீ....ஹீ....ஹீ

புளக்கர் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும், படங்களை நேரடியாகவே புளக்கரில் இடும் வசதியினை சோதித்து பார்ப்பதற்காக இட்ட படம் இது.முன்பு ஏதோ ஒரு தளத்தில் இருந்து சுட்டது. இதற்கும் திருமாளவனின்
கனடா பயணத்திற்கும் சம்பந்தம் உண்டாக்கி பார்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் எனது அண்மைய இரு பதிவுகள் திருமாவளவன் பற்றியது. நான் சொல்லிறதை சொல்லிப் போட்டன். இனி........

ஹீ...ஹீ......ஹீ.....ஹீ

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெற்றுக்
கொள்வது என்றும் உங்கள் அன்பின் கரிகாலன்(சக்தி எவ்.எம் கொஞ்சத்துக்கு முதல் கேட்டேன் அதன் பாதிப்பு. தவறா நினைக்காதீங்க.)

ரொரன்ரோவில் திருமாவளவன்.

ரொரண்டோ வருகை தந்த திரு திருமாவளவன் ஈழமுரசு பத்திரிகையின் "இனிய மாலை 2005 "முதல் நாள் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அவரின் உரை தொடர்பாகவும் விழா நிகழ்வுகள் தொடர்பாகவும் விபரங்களுக்கு கீழ்கண்டசுட்டிகளுக்கு செல்லவும்.

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1439&Itemid=41

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1444&Itemid=41

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1443&Itemid=41

கனேடிய தமிழ் வானொலி, கீதவாணி வானொலி என்பவற்றிலும் T.V.I தமிழ்
தொலைக்காட்சியிலும் அவருடைய செவ்விகள் இடம்பெற்றன.என்னால் செவிமடுக்கவோ பார்க்கவோ முடியவில்லை. இல்லாவிட்டால் உங்களுடன்
பகிர்ந்திருப்பேன்.

Wednesday, June 29, 2005

தொல்.திருமாவளவன் ரொரண்டோ வருகிறார்.

மிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும் ஈழத்தமிழர்களின் பால் கரிசனை உள்ளவருமாகியதிரு.தொல்.திருமாவளவன் அவர்கள் ஜூலை மாதம் 2,3 திகதிகளில் ரொரண்டோவிலிருந்து வெளிவரும்ஈழமுரசு பத்திரிகை நடாத்தும் "இனிய மாலை 2005" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனடாவருகிறார்.

தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு பத்திரிகையான ஈழமுரசு, தான் நடாத்தும் "இனிய மாலை 2005" நிகழ்ச்சிக்கு திரு.திருமாவளவனையும், பி.பி.சி. தமிழோசையின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில்ஒருவராகிய திரு விமல் .சொக்கநாதனையும் அழைத்திருக்கின்றனர். ரொரண்டோ வாழ் தமிழர்களால் 2 ம் திகதி அவருடன் கலந்துரையாட முடியும் என நினைக்கிறேன்.

என்னால் சந்திக்க முடியுமானால் விபரங்கள் தருகிறேன். நிகழ்ச்சி நடைபெறும் இடம்,நேரம். தொலைபேசி இலக்கம் என்பனவற்றிற்கு இங்கே பார்க்கவும்.

ஏற்கனவே மயிலாடுதுறை சிவா, திருமா சிங்கை வருகிறார் என ஒரு பதிவு இட்டு அதையொட்டி எழுந்த வாதப்பிரதிவாதங்களையும் நான் படித்திருக்கிறேன். இங்கு ரொரண்டோவில் ஈழத்தமிழர்களால் வாரா வாரம் பதிப்பிக்கப்படும் ஒரு இலவச செய்திப் பத்திரிகைதான் ஈழமுரசு. இதனைப் படிப்பவர்கள் 99 சதவீதம் ஈழத்தமிழர்கள் தான். விளம்பரங்கள் கொடுப்பவர்களும் 99 சவீதத்தினர் ஈழத்மிழர்கள் தான்.

எதற்காக திருமாவை தனது நிகழ்விற்கு அழைக்கவேண்டும்?.தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடுபவரும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் அமைத்து தமிழ் மொழிக்காக பாடுபடுபவரும் சிறந்த ஒரு போராட்டவாதியும் குறிப்பாக ஈழத்தமிழர்களின் விடிவுக்காக பொடாக்கு அஞ்சாது குரல் கொடுத்தவரும்,குரல் கொடுத்துவருபவருமாகிய திரு தொல்.திருமாவளவனை சிறப்பிக்கவேண்டும்.அவரிடம் நாம் பல கருத்துக்களில் கலந்துரையாடவேண்டும்.அவரிடம் இருந்து பல கருத்துக்களை நாம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் திரு.திருமாவை அழைத்திருக்கின்றனர்.

தமிழை நேசிப்பது தமிழிற்காக குரல் கொடுப்பது
கூட பலருக்கு கேலியாக இருக்கிறது. உங்களுக்கு தமிழின் அருமை தெரியவில்லை புரியவில்லை.ஆனால் எங்களுக்கு புரிந்திருக்கிறது
ஏனெனில் தமிழை பேசாதே என தடுக்கப்பட்டோம். தமிழ் புறக்கணிக்கப்பட்டது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டோம். தமிழை பேசியதற்காக குரவளையினையே அறுத்தார்கள். என்ன நடந்தது? மேன்மேலும் எங்களுக்கு தமிழ் மீது காதல் ஏற்பட்டதேயல்லாமல் வெறுப்பு ஏற்படவில்லை. ஒன்றினை மறுக்கும் போது அல்லது மறைக்கும் போதுதான்
அதன் மீது வெறியே ஏற்படுகிறது.அப்படி தான் எங்களுக்கு தமிழும் ஆகிபோனது. அப்படியே தமிழுக்காக போராடுபவர்கள் மீதும் காதல் வருகிறது. இதை சிலர் அரசியல் என்று சொன்னாலும் கூட ஏனெனில் தமிழ்நாட்டில் 04 வருடங்கள் தங்கியிருந்து கண்ணார காதார "தமில்"
கேட்டவன் நான். தமிழுக்கு எவ்வளவு மதிப்பு என்பதனையும் உணர்ந்தவன்.


நாம் திருமாவை நேசிப்பது இந்த காரணிகளால் தான். தமிழ்நாட்டு "அரசியல்" பற்றி நாம் கவலைப்படவில்லை.கூட்டணிகள் குத்துவெட்டுகள் பற்றி கவலை இல்லை. கலைஞர் கருணாநி மீது நம்பிக்கை இருந்தது."தமிழினத் தலைவர்"என்று அவரை அழைப்பதை கேட்க இப்போ சிரிப்புதான் வருது.அவருக்கு வாக்களித்தால் தமிழன் புத்தியுள்ளவன்.வாக்களிக்காவிட்டால் "சோற்றால் அடித்த பிண்டம்"அத்துடன்
அவருக்கு வாக்களித்தால் தமிழன் விழித்துவிட்டான். இல்லாவிட்டால்
"தமிழன் இன்னும் உறங்குகிறான்" என்று கொமன்ற் வேறு. எது எப்படியோ திருமாவை அழைத்தவர்கள் தமது பணத்தில்தான் வரவழைத்திருப்பார்கள் இதில் சிலருக்கு சந்தேகம் அதுதான் சொன்னனான்.

.வைகோ,.நெடுமாறன்,.திருமா,சுபவீரபாண்டியன் போன்றோரை பல தடவைகள் பல நாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் அழைத்திருக்கின்றனர் தமது காசில்.
ரொரண்டோவில் 2.5இலட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இதில் 98 வீதம் ஈழத்தினை சேர்ந்தவர்கள். மிகுதி 02 சத வீதத்தினர் தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள். இதனை ஏன் இங்கு சொன்னேன் என்றால் சிலர் அடிக்கடி இந்தியா,இலங்கைக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வசிக்குமிடம் ரொரண்டோ என பொத்தாம் பொதுவாகஎழுதுகின்றனர்.நான் நினைக்கிறேன் அவர்களுக்கு எழுத்தில் கூட ஈழத்தமிழர்களை பற்றி சொல்ல மனம் இல்லை போலும்.ஈழத்தமிழர்களின் பங்கை வளர்ச்சியினை ஏன் மறைக்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.இந்தியாவுக்கு வெளியே தமிழர்கள் என்றால் மலேசியா,சிங்கப்பூர் என்று சொல்லலாம் என நினைக்கிறேன்.இலங்கைக்கு வெளியே என்றால் கனடா என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டால் சரி.

மற்றும் படி ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு சகோதரர்கள் இடையே வேறுபாடு காட்டவோ வேறு எந்த நோக்கிலோ இப்பதிவு எழுதப்படவில்லை என்பதனை கண்டிப்பாக மனதில் இருத்தவும்.

Monday, June 27, 2005

தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை!.

Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கண்ட காட்சியை அன்பர் ஒருவர் வர்ணிக்கிறார்.
ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். அவர் வேறு யாருமல்ல, பனை உச்சியில் இருந்து கொண்டு கள் இறக்கிக் கொண்டிருந்த சீவல் தொழிலாளிதான்.

அவர்களின் உரையாடலைக் கேளுங்கள்.
எனக்கு ஆறு போத்தல் வேண்டும் தரமுடியுமா?
தனது கையடக்கத் தொலைபேசியில் சீவல் தொழிலாளி பதிலளிக்கிறார்.
ஆறு என்றால் முடியாது. ஐந்து தரலாம் மிச்சத்துக்கு வேறு யாரையாவது பிடியுங்கள்.

கையடக்கத் தொலைபேசிகளில் இருவரும் பேரத்தை முடித்து விட்டார்கள். அதுவும் ஒருவர் பனை உச்சியிலிருந்தே!

தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை சென்றுவிட்டது!

Image hosted by Photobucket.com


நன்றிகள்- தினக்குரல் (செய்தி), தமிழ்நெட் (படம்)

Monday, June 20, 2005

உலக சாதனைகள் படைக்கும் ஈழத்தமிழன் சுரேஸ் ஜோக்கிம்!

ந்த மாதம் ஜூன் 08,2005 புதன்கிழமை ரொரண்டோவில் உலக சாதனையாக ten bin bowling என்ற விளையாட்டினை தொடங்கிய சாதனையாளன் அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து அந்த விளையாட்டினை விளையாடி ஜூன் 12 ,2005 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்து தனது முப்பதாவது உலக சாதனையினை நிலைநாட்டினார்.

அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிமின் இந்த உலக சாதனையானது அண்மையில் மால்ராவில் இத்தாலியர் ஒருவர் நிலைநாட்டிய இதே சாதனையினை ( 60மணி 15 நிமிடங்களை) முறியடித்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை முப்பது உலக சாதனைகள நிலைநாட்டியிருக்கும் சுரேஸ் அதிகளவு உலக சாதனைகளை செய்தவர் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் திருமணத்தினையே ஒரு உலகசாதனையாக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 2003 ஆண்டு ரொரண்டோவில் உள்ள கீதவாணிவானொலியில் 120 மணித்தியாலங்கள் தொடர்ந்து அறிவிப்பாளனாக இருந்து ஒரு உலக சாதனையினைநிறைவேற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழனாகிய சுரேஸ் ஜோக்கிம் செய்யும் உலக சாதனைகளை நல்ல நோக்கங்களுக்காக செய்வதுடன்
நிகழ்ச்சிகளின் போது சேரும் பணத்தினை ஆசிய ஆபிரிக்க குழந்தைகள் பட்டினியில் இருந்து மீள்வதற்காக செலவிடுகிறார்.பசி பட்டினி மற்றும்
போரிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதும் அவரின் ஒரு கனவு. அதனை அவரின் நிகழ்வுகளின்போதும் அவரின் இணையதளத்திலும் வலியுறுத்துகின்றார்.

அவரின் அடுத்த 31 வது உலக சாதனையாக 2005 டிசெம்பரில் ஜெருசலேமில் இருந்து அமைதி தீப்பந்தத்தினை ஏந்திக் கொண்டு ஆரம்பமாகும் அவரின் நடைப்பவனி 54 நாடுகளினூடாக சென்று அவுஸ்திரேலியாவில் முடிக்கின்றார்.அன்நாளில் உலக யுத்த நிறுத்த நாளாக பிரகடனப்படுத்துமாறு கோரும் 01 மில்லியன் மக்களின் கையெழுத்துக்கள் கொண்ட விண்ணப்பத்தினையும் ஐ.நா.செயலாளரிடம் கையளிக்கவும் திட்டம் தீட்டிஉள்ளார். இந்த நடைப்பவனியில் சேரும் பணத்தினையும் குழந்தைகளுக்காகவே செலவிடப்போவதாகவும்கூறுகிறார்.

இப்படி குழந்தைகள் மேல் அவர் காட்டும் பரிவுக்கும் அத்துடன். யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் காப்பாற்றவேண்டும் என்ற அவரின் அவாவுக்கும் காரணமாக இருப்பது எது வென்றால் 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது சிங்கள காடையர்களால் தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களின் கோரக்காட்சிகள் தான் என்பதுடன் அந்த வேளையில் தனது பாடசாலை விடுதியில் இருந்து தான் கண்ட தமிழர் மீதான தாக்குதல்களை தன்னால் இன்னமும் மறக்க முடியாது உள்ளது எனவும் கூறுகிறார் சுரேஸ் ஜோக்கிம்.

சாதனை படைக்கும் ஈழத்தமிழன் சுரேஸ் ஜோக்கிம் மேலும் பல சாதனைகள் படைக்க நானும் வாழ்த்துகிறேன்.அத்துடன் நீங்களும் வாழ்த்துக்கள் சொல்லப்
போறீங்களா?

Saturday, June 11, 2005

ரொரன்ரோவில் எஸ்.வி.சேகரின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.

ரொரன்ரோவில் நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியினை
புறக்கணிக்கும்படி தமிழ் படைப்பாளிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே இங்கு இது போன்ற ஒரு புறக்கணிப்பு விசுவுக்கு எதிராக கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் மேற்கொள்ளப்பட்டதும் அது முழு வெற்றி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஒரு பதிவு கடந்த வருடம் நான் எழுதியிருந்தேன்.
தற்போது இடம்பெறும் இப் புறக்கணிப்பு தொடர்பான கருத்துக்களை
அடுத்த பதிவில் தருகிறேன்.

( ஆகா எனது இந்தவலைப் பூ ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டதே)
வெற்றிகரமான 365 ஆவது நாள். ஆனால் என்னஎழுதிக் கிழிச்சனி எண்டு
மட்டும் கேட்கவேண்டாம். ஜாதி,மதம்,தனிமனிதர் மீதான தாக்குதல்கள்,மாறுவேட பின்னூட்டங்கள்,வம்பு வழக்கு இப்படி எதிலும்
சிக்காமல் 365 நாள் வலைப்பூ நடத்தியதற்கு யாராவது "பட்டம்"
தரமாட்டார்களா? ஆனால் என்ன எழுதிக் கிழிச்சனீர் எண்டு யாராவது கேட்கக்
கூடாது.