Friday, September 02, 2005

தமிழ் பேசும் முஸ்லிம்களும் தங்கத் தலைவன் பின்னால்.....


தமிழ் பேசும் முஸ்லிம்களும் தங்கத் தலைவன் பின்னால் அணி திரள வேண்டும்: மௌலவி எஸ்.எம்.சகீல் வேண்டுகோள்

வுனியா பிரகனடத்தை நிறைவேற்ற தமிழ்பேசும் முஸ்லிம்களும் தங்கத் தலைவன் பிரபாகரன் பின்னால் அணி திரள வேண்டும் என்று யாழ்ப்பாண இஸ்லாமிய மக்கள் பணிமனை செயலர் மௌலவி எஸ்.எம்.சகீல் வேண்டுகோள் விடுத்தார்.

கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:

ஆண்டாண்டு காலமாக ஆண்டுவந்த பூமியையும் வீதிகளையெல்லாம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் சுற்றிவளைத்தனர்.
சிங்கள அரசுகள் தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக செயற்பட்டன. எங்களுடைய உரிமைகளை நாங்கள் பெற்று வாழ்வதற்குக் கூட தடை விதித்தனர்.
அந்த நிலைமையில் தான் இந்தப் போராட்டம் உருவாக்கப்பெற்றது.
இந்தப் போராட்டத்திலும் முஸ்லிம்கள் என்றும் சளைத்தவர்கள் அல்லர். தமிழர்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்தவர்களாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற வரலாறுகளையும் நாங்கள் பார்க்கின்றோம்.

எங்களுடைய தாயக கடமை என்று புறப்பட்ட இந்தப் போராட்ட பயணத்திலே நாம் தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் கைகோர்த்தவர்களாக என்றும் செயற்படவேண்டும்.
தலைவர் பிரபாகரன் பின்னணியிலே தங்களுடைய வரலாற்றை தமிழர்கள் முன்னெடுத்துச் செல்லுகின்றார்கள். இது பாராட்டப்படக்கூடிய விடயம்.
நாம் நியாயத்தைப் பேசுகின்றோம். உண்மையை இந்த உலகிற்கு, இந்த மண்ணுக்கு, சர்வதேசத்திற்கு நாங்கள் புலப்படுத்துகின்றோம்.

ஆனால் நாங்கள் ஓர் குடும்ப உறவைக் கொண்டவர்கள். தமிழ்மக்கள், முஸ்லிம் சமூகங்களும் ஒரு குடும்ப உறவைக் கொண்டவர்கள். எங்களுக்குள் பல பிரச்சனைகள் எழலாம். அதனை நாங்களே தீர்ப்போம்.
எங்களுடைய குடும்பமே பேசித்தீர்த்துக்கொள்ள முடியும். இதற்குள் அன்னியவர்களின் ஊருடுவல் எங்களுக்குத் தேவையில்லை.

வவுனியா எழுச்சி நிகழ்வில் எடுத்த முடிவுகளை நிறைவேற்ற தங்கத்தலைவன் பின்னால் அணிசேர தமிழர்கள் மற்றுமல்ல தமிழ்பேசும் மக்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்றார் அவர்.

..புதினம்..



Wednesday, August 24, 2005

கதிர்காமர் கொலையின் பின்னரான நிலைவரங்கள்

கதிர்காமர் கொலையின் பின்னரான அரசியல் கள நிலைவரங்கள்
ஸ்ரீலங்காவின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டு மரணச் சடங்கும் ஒருவாறு முடிந்து விட்டது. தமிழ் கிறிஸ்தவ அடையாளத்துடன் பிறந்து, ஆங்கிலக் கிறிஸ்தவ அடையாளத்துடன் வளர்ந்து, சிங்கள பௌத்த அடையாளத்துடன் அவர் மறைந்திருக்கின்றார். சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்திருந்த சிங்கள தேசத்தின் கௌரவத்தை மீட்டெடுத்து நிலைநாட்டியவர் என்ற வகையில் சிங்கள தேசம் அதற்கான நன்றிக் கடனை மரணச் சடங்கினை சிங்கள தேசச் சடங்காக கொண்டாடியதன் மூலம் நிறைவாகவே செய்து முடித்திருக்கின்றது.

அத்துடன், சிங்கள தேசத்தினால் ஒரு தமிழர் கௌரவிக்கப்பட வேண்டுமாயின் அவர் ஒரு சிங்கள பௌத்தராக மாறுதல் வேண்டும் என்ற செய்தியையும் அடையாளம் காட்டியிருக்கின்றது.

இவற்றினை விட இவரது மரணம் சிங்கள தேசத்திற்கு `பிண அரசியல்' ஒன்றினை நடாத்தும் வாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. வாய்ப்புகள் பறிக்கப்பட்டவர்கள் மீண்டும் களத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். பொதுக்கட்டமைப்பின் பிறப்புடன் நிர்ப்பந்தமாக விலக்கப்பட்ட பேரினவாத நிகழ்ச்சி நிரல் மீண்டும் மைய அரசியலில் மேலாதிக்கத்தை பெற்றிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக பேரினவாதத்துடன் கூட்டுச் சேர்வதற்கு விரும்பியும் தடைகளைக் கண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தடைகளை எதிர்ப்பின்றித் தாண்டும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்கின்றது.
பேரினவாத நிகழ்ச்சி நிரலில் இருந்து நிர்ப்பந்தம் காரணமாக வெளியே வந்த ஜனாதிபதி சந்திரிகா மீண்டும் பேரினவாதத்தின் கைதியாக நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைந்திருக்கின்றார்.

மரணம் நிகழ்ந்த ஆரம்பத்தில் பிரதமரோ, ஜனாதிபதியோ பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லத் துணியவில்லை. யுத்த நிறுத்தம் குழம்பிவிடுமோ என்ற அச்சம் தான் அதற்குக் காரணம். ஜனாதிபதி வெளியிட்ட முதலாவது அறிக்கையில் புலிகளின் பெயரைக் கூறாமல்தான் கொலைக்கான கண்டனத்தை தெரிவித்திருந்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட பொலிஸாரின் அறிக்கை புலிகளைக் குற்றம் சாட்டுவதாக மட்டும் கூறியிருந்தார்.

ஜே.வி.பி. மரணச் சடங்கு நிகழ்ச்சிக்குள் நுழைந்த பின்னர் தான் எல்லாமே தலை கீழாக மாறின. ஜே.வி.பி. இம்மரணத்தை புலிகளுக்கு எதிரான அரசியலுக்கு பயன்படுத்த முன் வந்தது. அதற்கான நிகழ்ச்சி நிரலும் போடப்பட்டது. அடுத்தடுத்து நான்கு காரியங்கள் அரங்கேற்றப்பட்டன. முதல் கட்டத்திற்கு அனைத்து கட்சிகளையும் இணைத்த மாநாடு கூட்டப்பட்டது.
அம்மாநாட்டில் புலிகளே இக்கொலையைச் செய்தார்கள் என பகிரங்கப்படுத்தும்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிர்ப்பந்திக்கப்பட்டார். சர்வதேச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இக்கொலையினைப் பார்க்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடப்பட்டது. அதேவேளை, புலிகளைப் பெயர் குறித்து கண்டிக்காதது தொடர்பாக ஜனாதிபதி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. உடனடியாக ஜனாதிபதி இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

இதன் பின்னர் தான் ஜனாதிபதி உண்மை நிலையினை தரிசிக்கத் தொடங்கினார். சிங்கள தேசத்திடம் இருந்து தன்னை அந்நியப்படுத்தும் வேலைத் திட்டம் ஒன்று அரங்கேறுவதை அடையாளம் கண்டார். இதிலிருந்து தப்புவது என்றால் தானும் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டு, பொதுக் கட்டமைப்பு நிர்ப்பந்தம் காரணமாக தான் கழற்றி எறிந்த பேரினவாத கவசத்தை மீண்டும் எடுத்து போர்த்துக் கொண்டார். இந்தப் போர்ப்புடன் இரண்டாவது கட்டம் அரங்கேறத் தொடங்கியது.

இரண்டாவது கட்டத்தில் ஜனாதிபதி நாட்டுமக்களுக்காக தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். புலிகளை எவ்வளவு தூரம் வெழுத்து வாங்க முடியுமோ அவ்வளவிற்கு வெழுத்து வாங்கினார். புலிகள் தான் இந்தக் கொலையைச் செய்தார்கள் என உறுதிபடக் கூறினார். அதன் மூலம் பேரினவாத அரசியலை நடாத்த ஜே.வி.பி.க்கு மட்டும் தெரியும் என நினைக்கக்கூடாது. தனக்கு அவர்களை விட நிறையத் தெரியும் என்பதை ஜே.வி.பி. யின் காதுகளில் உறைக்கக் கூறினார். அவரது செயற்பாடு எனக்கு பிரேமதாஸா காலத்தை நினைவுபடுத்தியது. அக்காலத்தில் ஜே.வி.பி.யினை விட இந்திய எதிர்ப்பினை உரக்கக் கூறி ஜே.வி.பி. யை திக்குமுக்காடச் செய்தார் பிரேமதாஸா. இந்த புலி எதிர்ப்பு உரைக்கு மத்தியிலும் மறைமுகமாக ஜே.வி.பி.யினைத் தாக்குவதையும் ஜனாதிபதி கைவிடவில்லை.

மூன்றாவது கட்டம், மரணச் சடங்கில் அரங்கேற்றப்பட்டது. அங்கு வழமையான மரபிற்கு மாறாக, அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் உரையாற்றினார். கொலைக்கு புலிகளை குற்றம் சாட்டியதுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு தங்களோடு கைகோர்த்து வரும்படி சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொண்டார். அவ்வுரை ஜே.வி.பி. எழுதிக் கொடுக்க பிரதமர் வாசிப்பது போல இருந்தது. உரைமுழுவதும் ஜே.வி.பி.யின் நாற்றம் அடித்தது. இவ்வளவு காலமும் பிரதமர் பேரினவாதத்தின் பக்கம் இருந்தாலும் வெளித்தோற்றத்தில் ஒரு நடுநிலையானவராகவே காட்சியளித்தார். இந்த உரையோடு அவரது வெளித்தோற்றம் கழன்றுவிட உண்மைத் தோற்றம் வெளியில் வர ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் ஜே.வி.பி. தம்பிமார் தம்மோடு நிற்கின்றனர் என்ற குஷிதான் காரணம். கதிர்காமரின் கொலை தனக்கு அதிர்ஷ்டத்தை தந்ததாக நினைத்து புளகாங்கிதமடைந்து காற்றில் பறந்தார். பிரதமர் பதவிக்காக கதிர்காமர் வில்லனாக நின்றதையும், ஜே.வி.பி. தம்பிமார் அவருக்கு பக்கபலமாக நின்றதையும், அவர்களை வெல்வதற்கு பௌத்த பரிவாரங்களை தான் திரட்ட நேர்ந்ததையும் ஒரு கணம் மறந்தார்.

நான்காவது கட்டத்தில், மரண நிகழ்விற்கு வந்த வெளிநாட்டுப் பிரமுகர்கள், மரணச் சடங்கிற்கு வராமல் தூதுவராலயங்களில் முடங்கிக் கிடந்த இராஜதந்திரிகள் எல்லோரும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பயங்கரவாதம் பற்றிய பெரிய வகுப்பொன்று எடுக்கப்பட்டது. கௌசல்யன் படுகொலை, சிவராம் படுகொலையெல்லாம் பயங்கரவாதமல்ல என விளக்கப்பட்டு கதிர்காமரின் கொலையே மாபெரும் பயங்கரவாதம் என எடுத்துரைக்கப்பட்டது. இராஜதந்திரிகள் எல்லாம் தங்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இவ்வாறு நான்கு வகையான அரங்கேற்றங்கள் எல்லாம் சர்வதேச சக்திகளுக்காக செய்தும் அவை ஒன்றும் அவர்களின் காதில் விழவில்லை. அமெரிக்க ஜனாதிபதி புஷ் தொடக்கம் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் வரை கூறிய வார்த்தை ஒன்றே ஒன்றுதான்.

"கதிர்காமரின் கொலையைப் படிப்பினையாகக் கொண்டு யுத்த நிறுத்தத்தை வலுப்படுத்துங்கள். சமாதானத்தை முன்னெடுங்கள்"

அவர்களைப் பொறுத்தவரை கதிர்காமரின் கொலையை ஒரு தனி நிகழ்வாகப் பார்க்கவில்லை. மாறாக, தொடர் நிகழ்வின் விளைவாகத்தான் பார்த்தனர். அண்மைக் காலமாக அரங்கேறும் தொடர் நிகழ்வு தொடர்ந்தால் இவ்வாறான விளைவுகள் தான் ஏற்படும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது. எனவே, விளைவுக்கு வைத்தியம் செய்வதனை விடுத்து, தொடர் நிகழ்வுக்கு வைத்தியம் செய்வதிலேயே அவர்கள் கவனமாக இருந்தனர்.

அந்தத் தொடர் நிகழ்வு என்பது இரு தரப்பினரிடையேயும் நடந்து கொண்டிருக்கும் நிழல் யுத்தம் தான். நிழல் யுத்தங்கள் தொடர்ந்தால் சாதாரணமான மனிதர்கள் மட்டுமல்ல மகா மனிதர்களும் மரணமடையக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என்பது நிழல் யுத்தத்தின் விதி. இதனால் தான் சிவராம் மட்டுமல்ல, கதிர்காமரும் மரணமடைந்தார். இந்த விதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதிக்கும் தெரியாவிட்டாலும் சர்வதேச சக்திகளுக்கு நன்றாகவே தெரிந்தது.

இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்தியா தொடர்ச்சியான புலிக்காய்ச்சலில் இருக்கின்றது. அந்த புலிக்காய்ச்சல் தணியுமட்டும் சர்வதேச விழுமியச் செயற்பாட்டிற்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்க முடியாது. இந்தியர்கள் போரை இந்தியா வரை விஸ்தரித்தவர்கள். அதனால் ராஜிவ்காந்தியைப் பறிகொடுத்தவர்கள். எனவே, பீடித்த புலிக்காய்ச்சல் விரைவில் விட்டுப் போகும் எனக் கூறிவிட முடியாது. இந்தப் புலிக்காய்ச்சல் விடும்வரை பேரினவாதத்துடனான அவர்களது கைகோர்ப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

இந்த நிழல் யுத்தம் என்பது தமிழ்த்தேசம் தொடங்கிய யுத்தமல்ல - தமிழ்த்தேசம் மீது சிங்கள அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட யுத்தம். இதுவும் சர்வதேச சக்திகளுக்கு நன்றாகத் தெரியும். சர்வதேச சக்திகளின் சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு இதுவரை காலமும் தமிழ்த்தேசம் ஒத்துழைத்து வந்ததே தவிர, சிங்கள தேசம் ஒத்துழைக்கவில்லை என்பதும் சர்வதேச சக்திகளுக்கு அனுபவ ரீதியாகத் தெரியும். அதுவும் ஒரு உச்ச நிலை அனுபவத்தை பொதுக் கட்டமைப்பு விவகாரம் அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்திருந்தது. எனவே, தங்களோடு ஒத்துழைக்கின்ற தமிழ்த் தேசத்தோடும் அதன் பிரதி நிதிகளோடும் ஒரு மோதல் நிலையினைப் பின்பற்ற சர்வதேச சக்திகள் விரும்பவில்லை. கதிர்காமர் கொலை தொடர்பாக ஒரு வேறுபட்ட அணுகுமுறைக்கு இவையே காரணம்.

இப்போது மீண்டும் எழுகின்ற கேள்வி கொலையை யார் செய்தார்கள்?

அண்மைக்காலமாக கதிர்காமர் பல்வேறு தரப்பட்டவர்களினாலும் விரும்பப்பட்ட ஒருவராக இருக்கவில்லை.

சர்வதேச சக்திகள் நகர்த்த இருக்கும் சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு பெருந்தடையாக இருக்கின்றார் என்பதற்காக அமெரிக்கா உட்பட சர்வதேச சக்திகளினால் விரும்பப்பட்ட ஒருவராக இருக்கவில்லை.

ஐ.தே.க.வின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு சவாலாக இருக்கின்றார் என்பதனால் அக்கட்சியினால் விரும்பப்பட்ட ஒருவராக இருக்கவில்லை.

தான் நகர்த்த இருக்கின்ற பொதுக் கட்டமைப்பிற்கு எதிராக இருக்கின்றமையால் ஜனாதிபதியால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.

கதிர்காமரின் கதிரையில் தொடர்ச்சியாக கண் வைத்திருப்பதனால் ஜயந்த தனபாலவினால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.

பதவி நிலையில் தான் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற போதும், தன்னுடன் போட்டி போடக் கூடிய கவர்ச்சி நிலையில் இருப்பதனால் மஹிந்த ராஜபக்ஷவினால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.

தமிழ்த் தேசத்தின் அபிலாஷைகளுக்கு எதிரானவராக இரு
ந்ததனால் புலிகளினால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.

அவரை விரும்பியது ஜே.வி.பி. யினரும் இந்தியாவும் தான்.

இவ்வாறு பலரால் விரும்பப்படாத ஒருவராக இருக்கும் போது கொலைக்கு ஒரு தரப்புத்தான் காரணம் என எவ்வாறு உறுதியாகக் கூற முடியும்?

உயர் பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் கூட்டு முயற்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். அப்படியானால் இதில் புலிகளின் பங்கு பற்றிய ஊகம் 1/5 ஆக மட்டுமே இருக்க முடியும். சிலவேளை விஷேட பங்கு புலிகளுக்கு இருந்திருக்கக் கூடும் என தர்க்கிக்கலாம்.

புலிகள் தான் இதில் விஷேட பாத்திரத்தை ஆற்றியிருப்பார்களானால், அவர்கள் மூன்று தெளிவான செய்திகளை சிங்கள தேசத்திற்கு கூறியிருக்கின்றார்கள்.

முதலாவது, கிழக்கினை உங்களால் குழப்ப முடியுமாயின் தெற்கினை எம்மால் குழப்ப முடியும்.

இரண்டாவது, நாங்கள் எப்போதும் போருக்குத் தயார்.

மூன்றாவது, எமது தலைவர்களை கொலை செய்துவிட்டு உங்களது தலைவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

உண்மையில் நிழல் யுத்தத்தின் வளர்ச்சியான தர்க்கமும் இதுவாகத் தான் இருக்கும்.

தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்து விட்டது என மஹிந்த ராஜபக்ஷ காற்றில் பறக்கலாம்.
பேரினவாத நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகிய ஸ்ரீலங்காவின் மைய அரசியலை பேரினவாத நிகழ்ச்சி நிரலிற்குள் கொண்டு வந்து விட்டோம் என ஜே.வி.பி. யினர் எக்காளம் போட்டு சிரிக்கலாம்.
ஆனால், யதார்த்த நிலையில் சிங்கள தேசம் தொடர்ச்சியாக தோல்விகளையே தழுவிக் கொண்டிருக்கின்றது.

இதுதான் சிங்கள தேசத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்!

பிற தேசங்களை ஒடுக்கும் எந்தத் தேசமும் தோல்விகளைத் தழுவும் என்பதே இயக்க விதி! சிங்கள தேசம் மட்டும் இதற்கு எவ்வாறு விதிவிலக்காக இருக்க முடியும்.

நன்றி:- தினக்குரல்,கொழும்பு

Thursday, August 18, 2005

மதம் பிடித்தலையும் மனிதர்களே!

ந்துமதத்தினை போற்றியொரு பதிவு.
இந்து மதத்தினை தூற்றியொரு பதிவு.
இஸ்லாத்தினை தூற்றியொரு பதிவு.
இஸ்லாத்தினை போற்றியொரு பதிவு.
ஏசுவை போற்றியொரு பதிவு.
ஏசுவை தூற்றியொரு பதிவு.

மதம் யானைக்கு மட்டும் தான் வரும்
என்று இருந்தேன்.
மனிதனுக்கு வழிகாட்டுவது தான் மதம்
என்று எண்ணியிருந்தேன்.ஆனால் இங்கு
மதம் மனிதனை மதம்கொள்ளச்செய்கிறதே.
இப்போது தான் தெரிகிறது ஏன் மதத்திற்கு மதம்
என்று பெயர்வைத்தார்கள் என்று.

இது பிடித்தால்
மனிதர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்
என்பதனாலாகுமோ?
எது நடக்கிறதோ அது நன்றாகவேநடக்கிறது
என்றாய் கீதையில் மதம் பிடித்த மனிதர்கள்
தலைகால் புரியாமல் பேசுகின்றனர்,எழுதுகின்றனர்.
மற்றைய மதமும் தன் மதம் போல்தான்.
காலத்துக்கு ஒவ்வாத விடயங்கள் ராமின்
மதத்திலும் உண்டு,
ரகீமிடத்திலும் உண்டு,ராபர்ட்டிடமும் உண்டு.தன்
முதுகுபார்க்க மறுப்பவர்கள்,தவறுபவர்கள் மற்றவர்
முதுகை அழுக்கு சுட்டும்
விந்தையை என்ன சொல்வது ?

ஆயிரத்தெட்டு அழுக்குகள் உம் முதுகு
மேலிருக்க மற்றவர் முதுகழுக்கு சுட்டும் மதம்
பிடித்த மனிதர்களே!
உங்கள் முதுகழுக்கு களைந்த
பின்னர் மற்றவர் முதுகழுக்கு சுட்டலாம் நெஞ்சு நிமிர்த்தி!.
மதத்தின் மேல் காதல் கொள்வீர்!.வேண்டாம் வெறி!.
அதுவரையில் இறைவனே இப்பாவிகளை
மன்னித்தருளும்!.

Saturday, August 13, 2005

கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன?

திர்காமர்: இலங்கையிலே இருக்கும் அமைச்சர்களில் தமிழும் தெரியாத சிங்களமும் தெரியாத ஒருவர் என்றால் அவர் கதிர்காமராகத்தான் இருப்பார்.
அவரின் ஒரு சிறு நீரகம் ஒரு பெளத்த பிக்குவினால் தானமாக வழங்கப்பட்டது தமிழர்களுக்கு எதிராக அவர் செய்த சேவைகளுக்காக.யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக்(தினமலர் வழமை போலவே தவறான தகவல் தருகிறது) கொண்ட கதிர்காமரின்
தந்தை ஒரு இராணுவ அதிகாரி.பண்டாரநாயக்கா குடும்பத்துக்கு மிகவும்
வேண்ணியவர்.

கொழும்பே அவரின் பிறப்பிடம்.சந்திரிகாவினால் திடீரென அரசியலுக்குள்
கொண்டுவரப்பட்ட கதிர்காமர்,சந்திரிகா எதற்காக அவரை வெளிவிவகார
அமைச்சராக்கினாரோ அந்த நோக்கத்தினை சிறப்பாக நிறைவேற்றினார்.
இலங்கையின் வரலாற்றினை பார்த்தால் வெளிவிவகார அமைச்சர்கள் பலர்
சிறுபான்மையினராகவே காணப்பட்டனர்.இதில் ஏ.சி.எஸ்.ஹமீட் 17 ஆண்டுகள்
வெளிவிவகார அமைச்சராக பணியாற்றினார். இதன் நோக்கம் கூட மத்திய
கிழக்கு நாடுகளில் இருந்து பல சலுகைகளை பெறும் நோக்கில் ஜே.ஆர் அவரை மந்திரியாக்கினார். அதன் பின்பு கதிர்காமர்.பெயரளவில் தமிழரான
கதிர்காமரை வெளிநாட்டுமந்திரியாக்கினால் பிறநாடுகள் ஒரு
"தமிழ்" வெளிவிவகார மந்திரி புலிகள் பற்றி சொல்வதை காது கொடுத்து கேட்கும் என்பதாகும். இதற்கு கனதியும் அதிகம் என்றும் சந்திரிகா நம்பினார்.இதில் சில வெற்றிகளும் பெற்றார்

நாம் கோடரிக்கு பிடியினை(காம்பு) ஒரு மரத்தில் இருந்து போட்டுவிட்டு அந்த மரத்தையே வெட்டுவதில்லையா? அதுதான் இங்கு நடந்தது.

புதினம் இணையத்தளம் இது பற்றி ஒரு கண்ணோட்டம் தருகிறது.
புதினம் இணையத்தளம் தரும் "கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன?" இங்கே வாருங்கள்.

Friday, August 05, 2005

சனி,ஞாயிறு வந்தால் முகத்தில் சிரிப்பு


ந்த வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை இங்கு கனடாவில் விடுமுறை பாருங்கோ .சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து மூன்று தினங்கள் விடுமுறை.அதை இங்கு லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்.ஏப்பிரல் மாதத்தின் பின்னர் 4,5 மாதங்களிற்கு இந்த லாங்வீக்கெண்ட் வரும்.திங்கட்கிழமை எண்டு இல்லை.வெள்ளிக்கிழமையும் வரும்.ஆனால் பொதுவாக வார இறுதிநாட்களை ஒட்டியே வரும்.கனடாவில் விடுமுறை நாட்களை எண்ணினால் இரண்டு கைகளில் எண்ணலாம்.அப்படி மிகவும் குறைவு. இதனால் எல்லோரும் இப்படியான விடுமுறை தினங்கள் எப்போது வரும் என்று எதிர் பார்த்திருப்பார்கள்.ஜந்து நாள் வேலை இரண்டு நாள் ஓய்வு இது சரிதான்.அனால் இங்கு 7 தினங்களும் கடுமையாக உழைபவர்களும் இருக்கின்றனர்.இப்படிஉழைப்பவர்கள் பொதுவாக கனடாவிற்கு வந்தேறுகுடிகளாக வந்தவர்களாக இருப்பதை காணலாம்.

எனது நண்பன் ஒருவன் இருக்கிறான் புதன் கிழமை எண்டால் சொல்லுவான் அப்பாடா புதன் கிழமை வந்திட்டுது.ஒருமாதிரி இந்த வாரமும் போய்விடும் எண்டு.இனி திங்கட்கிழமை இழுத்து பறித்துக் கொண்டு அலுவலகம் வந்துவிடுவான்.பின்பு புதன்கிழமை வர அதுமாதிரி சொல்லிக் சொல்லிக் கொண்டு ,இப்படியே சொல்லி சொல்லியே 14 வருடங்களாக கனடாவில் இருக்கிறான்.இப்படி பலர் இருக்கின்றனர். சரி நீங்கல் எப்படி எண்டு யாரோ கேக்கிறமாதிரி காதில் விழுது.சும்மா என்னைப்பற்றி எல்லாம் சொல்ல கூடாது.சரி பரவாயில்லசொல்லுறன்.நான் போனவாரமே திங் பண்ணீட்டன் திங்கட்கிழமை விடுமுறை.இந்தவாரம் 04 நாள்தான் வேலை அதனால் இந்த வாரம் ஒரு சோர்ட் வாரம் எண்டு. இது என்னைபோல சிலரின் கவலை

இப்படி சிலருக்கு அலுவலகம் வருவது பிரச்சனை எண்டால் இன்னும் சிலருக்கு சனி,ஞாயிறுகளில் அலுவலகம் இல்லை என்பது கவலை.என்ன கடும் உழைப்பாளியோ எண்டு கேட்கிறமாதிரி இருக்கு.நீங்கவேற. கடுமையா "அவவுடன்" கடலை போடுற பலருக்கு இழப்புதானே பின்ன.இது இளந்தாரி
மாரின் கவலை.

இதிலே இன்னொரு வகையான ஆக்கள் இருக்கினம் பாருங்கோ.அவைக்கு அலுவலக கணினிக்கு முன்னால் இருந்தால் தான் கற்பனை பிச்சுக்கொண்டு ஓடுமாம்.வலைப்பதிவு,பின்னூட்டம் எல்லாம் அலுவலக கணினியில்தானாம்.வீட்டில்கணினி பார்க்க நேரமே இல்லையாம்.அப்படி இருந்தாலும் கற்பனை வராதாம்.இப்படியான் ஆட்களை வேலைக்கு வச்சிருக்கிற முதலாளிமார் இப்படி லீவுகள் வாறபடியால் தான் ஒருமாதிரி தப்பி பிழைக்கினம் பாருங்கோ.
ஆரது அந்தநாலெழுத்து வலைபதிவாளரின் பெயரெல்லாம் சொல்லுறது

கனடாவந்த பிறகுதான் லீவின்ற அருமைதெரியுது.இலங்கையில இருகேக்க வருசத்திலே பாதி நாள்தான் வேலை பாருங்கோ.மீதி நாள் என்ன ஆச்சு எண்டு கேக்கிறியளோ?அது எல்லாம் லீவுகள் பாருங்கோ.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருநாள் பெளர்ணமி விடுமுறை வரும் பாருங்கோ.சிங்களத்திலை போயா எண்டு சொல்லுவினம். இலங்கையிலே இருக்கேக்க நித்திரையில எழுப்பி கேட்டாலும் எந்தமாதத்தில் என்ன தினத்தில் பெளர்ணமி விடுமுறை
வரும் எண்டு கலண்டரை பாக்காமலே சொல்லுவனாக்கும்.

அதைவிட இந்து,முஸ்லிம்,பெளத்த விடுமுறை எண்டு சொல்லி பல விடுமுறைகள்.இதனால் உலகத்திலே ஆகக்கூடிய விடுமுறைகள் கொண்ட நாடு எண்டு சொன்னால் அது இலங்கை தான் பாருங்கோ.கிட்டடியிலேபாராளுமன்றத்திலே விவாதம் கொண்டுவந்தவை இப்படி விடுமுறையளை குறைக்கிறது சம்பந்தமாக ஒரு விவாதம்.
அமைச்சர்கள், உறுப்பினர்கள் சொல்லிப்போட்டினம் லீவுகளை குறைக்கவேண்டாம் எண்டு.அவைக்கு தெரியும் தானே வேலைக்கு வாறதும் ஒண்டுதான் வீட்டில் இருக்கிறதும் ஒண்டு தான் எண்டு.ஏனெண்டால் பாம்பின் கால் பாம்பறியும் தானே.


இஞ்ச இந்த படத்தை ஒருக்கா பாருங்கோ.சரியாக சனி,ஞாயிற்றுக்கிழமை
கிழ்மைகளில் தான் முகத்தில் சிரிப்பே வருகுது.
இதில் எனதும் உங்களினதும்?? மனச்சாட்சி தெரிகிறதோ?
ஆராருக்கு தொப்பி(முகமூடி) அளவா இருக்கோ அவரவர் போட்டுக்கொள்ளுங்கோ.நான் மேல சொன்ன மாதிரி..முகமுடி அண்ணாச்சி தப்பா எடுக்காதீங்கோ. உங்களை ஒண்டும் சொல்லேல்ல அண்ணாச்சி.

முதலாவது படத்திலை பாத்திங்களோ.
அய்யாமருக்கும் தம்பிமாருக்கும் இடையே
நடக்கிற போட்டியை .என்ன யோசிக்கிறியளோ?
எனக்கென்னவோ இதுவும் சரியாகவே படம் போட்டிருப்பதாக தோன்றுகின்றது.நீங்கள் என்ன சொல்றிங்கள்?

Thursday, August 04, 2005

உண்மையில் எது பிரச்சனை?

ங்கிலாந்தின் ஜ.ஆர்.ஏ அமைப்பானது தனது ஆயுதப்போராட்டத்தினை
கைவிட்ட நிலையில் அதே போலவே இலங்கையிலும் புலிகள் ஆயுதக்களைவினை செய்யவேண்டும் என்று அரசாங்கம் கேட்டுள்ள நிலையில், ஆயுதங்களை புலிகள் கைவிட சர்வதேசத்தின் அழுத்தங்கள் புலிகள் மீது போதுமானதாக இல்லை என இலங்கையின் நலன் விரும்பியும் இலங்கைக்கு இலவச ஆலோசனை கூறிவரும் "இந்து" பத்திரிகை கவலைப்பட்டு கண்ணீர்விட்டுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிவரும் "தினக்குரல்" பத்திரிகையின் இன்றைய ஆசிரிய தலையங்கம் மேற்படி விடையங்கள் தொடர்பாக அலசி நல்லதொரு
பதிலை விடையாக தந்துள்ளது.அதை இங்கு தருகிறேன்.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் ஆனால் எருமை மாட்டுக்கு?

தினக்குரல் பத்திரிகையின் தலையங்கம்:-

இலங்கையில் சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் போர்நிறுத்த உடன்படிக்கை சீர்குலைந்துவிடக் கூடாது என்றும் அக்கறை காட்டும் சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்ற அளவுக்கு விடுதலை புலிகளுடனான விவகாரங்களில் கடும் போக்கைக் கடைப்பிடிக்காமல் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கிறது என்ற அபிப்பிராயமொன்று தென்னிலங்கையில் வலுவடைகிறது. பாதுகாப்பு நிலைவரம் படுமோசமாகிக் கொண்டு போவது குறித்து விசனம் தெரிவித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் 2003 டோக்கியோ மகாநாட்டுக் கூட்டுத் தலைமை (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வே) கடந்த மாத நடுப்பகுதியில் விடுத்திருந்த அறிக்கை அரசாங்கத்தையும் விடுதலை புலிகளையும் சமத்துவமாக நோக்குவதாகக் கூட அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

கொலைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை புலிகள் இயக்கம் அதன் போராளிகளினால் மேற்கொள்ளப்படும் சகல கொலைகளையும் நிறுத்த வேண்டும். போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்க இலங்கை அரசாங்கம் சகல பரா இராணுவக் குழுக்களும் நிராயுதபாணிகளாக்கப்பட்டு, வன்செயல்களுக்கு வழிவகுக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுத பாணிகளான விடுதலை புலிகளின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்' என்று கூட்டுத் தலைமையின் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அரசாங்கம் கூறுவது போன்று, போர்நிறுத்த உடன்படிக்கைக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் சம்பவங்களுக்கு விடுதலை புலிகள் மாத்திரம் காரணமல்ல, அரசாங்கமும் அதன் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச சமூகம் கருதுவதன் பிரதிபலிப்பாகவே அந்த அறிக்கையை நோக்க வேண்டியிருந்தது. அதையடுத்து தன்னைச் சந்தித்த கூட்டுத் தலைமை நாடுகளின் இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க, போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் விடுதலை புலிகளுடன் மீளப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதாக அறிவித்தார். தற்போதைய நிலைவரங்களுக்கு வழிவகுத்த சம்பவங்களில் அரசாங்கத்துக்கு குறிப்பாக, பாதுகாப்பு படைகளுக்கு இருக்கின்ற தொடர்புகளை மறைக்கும் அல்லது மறுதலிக்கும் நோக்குடனேயே திருமதி குமாரதுங்க இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.

இதற்குப் பிறகு இரு வாரங்கள் கடந்த நிலையில், போர்நிறுத்த உடன்படிக்கை எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்களில் ஒருவித தணிவை ஏற்படுத்தக் கூடியதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முயற்சிகள் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால், போர்நிறுத்த உடன்படிக்கையுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் எந்தளவுக்கு பயனுறுதியுடைய ஊடாட்டத்தையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கூறக் கூடியதாக இல்லை. இத்தகையதொரு பின்புலத்திலேயே, விடுதலைப் புலிகள் மீது நெருக்குதல்களைக் கொடுக்காமல் நெகிழ்வுத் தன்மையுடன் சர்வதேச சமூகம் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படும் கருத்துகளை அவதானிக்க வேண்டியிருக்கிறது.

வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக மேற்கொண்டு வந்த ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக ஐரிஷ் குடியரசு இராணுவம் (ஐ.ஆர்.ஏ.) அறிவித்ததையடுத்து இலங்கையில் விடுதலை புலிகளும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதியின் சுயசரிதம் நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றுகையில் ஐ.ஆர்.ஏ.யின் அறிவிப்பை வெகுவாகப் பாராட்டிய வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், இலங்கையில் விடுதலை புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படாதமை குறித்து கவலை தெரிவித்திருத்தார். `தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் மற்றும் எமது விவகாரத்தில் பங்கொன்றை ஆற்றும் சர்வதேச சமூகம் உட்பட இலங்கை நெருக்கடியில் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஆயுதங்களைப் பயன்பாட்டில் இருந்து விலக்கி வைப்பது அல்லது ஆயுதக் களைவு தொடர்பில் குறிப்பிடுவதை மிகுந்த கவனத்துடன் தவிர்த்திருக்கின்றன' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்றே ஐ.ஆர்.ஏ.யின் அறிவிப்பு குறித்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆசிரிய தலையங்கம் தீட்டிய இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான சென்னை `இந்து' வன்முறைப் பாதையைக் கைவிட வேண்டுமென்று விடுதலை புலிகள் மீது போதுமான சர்வதேச நெருக்குதல்கள் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு முழுமையான ஒரு சிவில் அமைப்பாக மாறும்வரை இலங்கை நெருக்கடிக்கு இறுதித் தீர்வைக் காண முடியாது என்று கதிர்காமர் கூறிய அதேதொனியில்
`இந்து'வும் விடுதலைப் புலிகள் தங்களை மாற்றிக் கொள்ளாதவரை, நிலையான சமாதானத்தைக் காண்பதற்கான இலங்கையின் பிரயத்தனங்கள் பயனளிக்காத நிலையே நீடிக்கும் என்று அந்த ஆசிரிய தலையங்கத்தில் தெரிவித்திருக்கிறது. சர்வதேச சமூகம் விடுதலை புலிகள் மீது போதிய நெருக்குதலைக் கொடுக்கவில்லை என்பதே இந்துவின் விசனம்.


உண்மையில், விடுதலைப் புலிகள் மீது சர்வதேச சமூகம் போதியளவு நெருக்குதல்களைப் பிரயோகிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் அதன் விளைவாக அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கின் கணிசமான பிரதேசங்கள் வந்ததையும் ஒரு பிரச்சினையாகக் காண்பிக்கும் நோக்குடனானதே. ஆனால், அவர்களின் இராணுவக் கட்டமைப்பு அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாகத் தீர்க்கப்படாத ஒரு அரசியல் நெருக்கடியின் தவிர்க்கமுடியாத உருவாக்கம் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். இலங்கை இனநெருக்கடியை சர்வதேச மயப்படுத்திய விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டமல்ல உண்மையான பிரச்சினை, அந்தப் போராட்டத்துக்கான நிர்ப்பந்தத்தை தோற்றுவித்த கொழும்பு அரசாங்கங்களின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையே யாகும்.

Wednesday, August 03, 2005

ரொரண்டோவில் பாரிய விமான விபத்து.

இன்று மாலை 4.30 மணிக்கு
279 பயணிகளுடன் ரொரன்ரோ பியர்சன் சர்வதேச வானூர்தித் தளத்தில் தரையிறங்க முற்பட்ட ஏயர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எயர் பஸ் 340 ரக வானூர்தியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது வானூர்தியில் பெரியளவில் தீப்பிடித்தபோதும் பயணிகள் எவருக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியத்தில் இருந்து கடும் காற்றும் இடிமுழக்கத்துடன் கூடிய மழையும் பெய்து கொண்டிருந்தது ரொரண்டோவில். அப்படி இருந்த நிலையில் தரையிறங்கமுற்பட்ட இந்த விமானம் இடிமின்னல் காரணமாக
விபத்துக்கு உள்ளாகியது.

401 அதிவிரைவு நெடுஞ்சாலை வழியே சென்றவர்கள் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை காணமுடிந்ததாக கூறினார்கள்.
நல்லவேளையாக விமானப்பயணிகளுக்கோ அல்லது நெடுஞ்சாலை வழியே
சென்றவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை.விமானப்பயணிகளுக்கு காயம்
மட்டும்தான்.

விமான நிலையம் இவ் நெடுஞ்சாலைக்கு அண்மையிலேயே இருப்பது
குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு:-

www.ctv.ca

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1937&Itemid=43