Wednesday, November 09, 2005

ஐ.தே. க. பின்னிய சர்வதேச வலை!


.தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவாக்கமே கருணாகுழு. புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் யுத்தத்துக்குப் போனால் அவரது புலிப்படையை எதிர்த்துப் போராட அமெரிக்க, இந்தியப் படைகளைத் தயாராக ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றார் ரணில்'' என்று ஐ.தே. கட்சி எம்.பியான நவீன் திஸநாயக்கா பெருமிதத்தோடு கூறினார் என வெளியான செய்தியை அவரே மறுத்திருக்கின்றார். நவீ னின் மறுப்பு பிரசுரமான பத்திரிகை அச்சாகும் அதேவேளை யில் நவீன் திஸநாயக்கா கூறியவை என வெளியான கருத்தை ஒத்த விடயங்களை ஐ.தே. கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருங்கியவருமான மிலிந்த மொற கொட கூறியிருக்கின்றார் என்ற செய்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் அச்சாகியிருக்கின்றது.

ரணில் பிரதமராயிருந்த போது தமிழர் தரப்போடு முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளில் முக்கிய பங்காற்றிய வரும், தற்போது ரணிலின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான மிலிந்த மொறகொடவிடமி ருந்து இக் கருத்துகள் வெளிவந்திருக்கின் றன என்பது முக்கியமாகும்."" ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகளவான பங்களிப்பி னால் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளின் உருவாக்கமே கருணா.""யுத்தச் சூழ்நிலையில் கருணா போன்ற அதிருப்தியா ளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் உருவாகவே முடியாது. துப் பாக்கிகளை அமைதியடைய வைத்து தடைகளை அகற்றி பாதைகளைத் திறந்து அதன்மூலம் இரக்கமேயில்லாத விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு மாற்றுவழியை அளிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஐக் கிய தேசியக் கட்சியினரான நாங்கள்தான்'' இப்படி பெரு மிதத்தோடு கருணா குழுவின் உருவாக்கத்துக்கு உரிமை கோரி யிருக்கின்றார் மிலிந்த மொறகொட.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை உறுப்பினர்களுக்கும், அதிலிருந்து வெளியே மீண்டு வேறு மாற்றுப் பாதைக்குத் திரும்புவதற்கான சூழ்நிலையைத் தமது கட்சியே ஏற்படுத்திக் கொடுத்தது என்றும் அவர் அந்தச் செயலுக்கு தமது கட்சியின் சார்பில் பாந்தயம் கோருகின்றார்.இலங்கை அமைதி முயற்சிகளில் சர்வதேச வலைப் பின்னலை தமது ஐ.தே. கட்சி அரசு கொண்டு வந்து செருகியதையும் கூட இந்தப் பேட்டியில் தங்கள் சாதனையாக பெருமையாக மார்தட்டி சுட்டிக்காட்டியிருக்கின்றார் மொறகொட.

அந்த சர்வதேச வலைப்பின்னலை நாங்கள் ஏற்படுத்தியதால்தான் இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பினருமே யுத்தத்துக்குத் திரும்ப முடியாமல் யுத்த நிறுத்தத் தடத்தை விட்டு விலகமுடியாமல் அமைதி நிலையில் நின்று பிடிக் கின்றார்கள் என்றும் அவர் தம்பட்டம் அடித்திருக்கின்றார்.ஐ.தே.கட்சித் தலைவர்களாலும் அக்கட்சியின் முன்னைய அரசினாலும் பின்னப்பட்டது என்று பெருமிதத்துடனும், உரிமையுடனும் இப்போது கூறப்படுகின்ற இந்த சர்வதேச வலையை தமிழர்கள் எப்படி நோக்குகின்றார்கள்?முன்னைய சமாதானப் பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்ததற்கு இந்த வலைப் பின்னலும் முக்கிய காரணம் என் பதுதான் தமிழர் முடிவு. இந்த முயற்சிகளில் தமிழர் தரப்பில் தலைமை வகித்து நேரடியாக அதில் ஈடுபட்ட மதியுரைஞர் பாலசிங்கமே அதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இந்த சமாதான முயற்சிகள் தொடர்பான தமது மதிப்பாய்வின் இறுதியில் அவர் இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறார்.

""பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல் கேந் திர அபிலாஷைகளும் அதிகார வீச்சுகளும், பேச்சில் பங்கு கொண்ட இரு தரப்பினரது அதிகாரச் சமவலு உறவில் பாதிப்பை ஏற்படுத்தின. உலக அரசுகளின் கூட்டணியான சர்வதேசச் சமூகம், ஸ்ரீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நின்றது. இதனால், சம உறவு நிலை எமக்குப் பாதகமாக அமைந்தது. உதவி வழங்கும் சர்வதேச நாடுகள், ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதல் காரணமாக, அரசியல் தீர்வுக்கு வரம்பு களைத் திணிக்கத் துணிந்தன.

இத்தலையீடானது, எமது அரசியல் தகைமையையும் தலைவிதியையும் நாமே நிர்ண யித்துக் கொள்ளும் எமது சுயாதீன உரிமையைப் பாதித்தது. சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலி களைக் கட்டுப்படுத்தி, அமுக்கும் (இணிணtச்டிணட்ஞுணt) தனது அந்தரங்கத் திட்டத்தையே " சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறி வந்தார். சமாதானத்தின் பெயரால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் விக்கிரமசிங்க அரசு விரித்து வைத்த சர்வதேசச் சதி வலைப்பொறிக்குள் சிக்கி விடாது இருப்பதில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது.

சமாதானப் பேச்சுகளை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையைச் சர்வதேச மயப் படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால், அதே வேளை, எமது மக்களின் விடுதலைப் போராட்ட இலட்சியத் தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு, தலையீடு செய்வதை நாம் வன்மையாக எதிர்த்தோம். மூன்றாம் தரப்பு அனுசரணை யாளரின் மத்தியஸ்துடன், எமது மக்களின் பிரச்சினையை நேர்மையுடன் பேசித்தீர்க்கும் பக்குவமும், அதிகாரமும் அற்ற விக்கிரசிங்கவின் நிர்வாகம், அமெரிக்காவின் தலைமையி லான உலக நாடுகளை அணிசேர்த்து, புலிகளைப் பொறியிட முனைந்ததும் பேச்சுகள் முடங்கிப் போனதற்கு இன்னொரு காரணமாகும்'' என்கிறார் மதியுரைஞர் பாலா.

சமாதானப் பேச்சுகள் முடங்குவதற்குக் காரணமான சர்வதேச வலைப் பொறியை இப்போதும் தனது சாதனையாகத் தூக்கிப் பிடிக்கிறது ஐ.தே. கட்சி.அதன் உள்நோக்கங்களை அம்பலப்படுத்திப் புலப்படவைக்கின்றன மொறகொட போன்ற தலைவர்களின் கருத்துகள். அவ்வளவே.

யாழ் உதயன் பத்திரிகையின் 09-11-2005 இதழில் வந்த ஆசிரியர் தலையங்கமே இது.

Tuesday, November 08, 2005

வலதுசாரியாகிவிட்ட வாசுதேவா-ஒரு மடல்!

வாசுதேவ நாணயக்காரவுக்கு!

ஒரு காலத்தில் இடது சாரிகள் சிங்கள அரசியலில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளின் யதார்த்தத்தை ஒட்டுமொத்தமாகப் புரியாவிட்டாலும் சிறிதளவாவது அவர்கள் புரிந்து விட்டார்கள் போன்ற உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. வலதுசாரிகள் அல்லாமல் இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சி அமைக்குமானால் தமிழ் மக்களது பிரச்சினை விடயத்தில் அணுகுமுறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எண்ணபாடு இருந்தது.

இதற்குக் காரணம் உங்களைப் போன்றவர்களின் பேச்சுக்கள் ஒரு காலத்தில் சிங்களவர்களிடையே வாசு நல்லவர், நமது பிரச்சினையின் ஆள நீளத்தைப் புரிந்திருக்கிறார், இவரைப் போன்றவர்கள் தெற்கே கணிசமானளவு புரிந்து கொள்வார்களாயின் நல்ல சூழல் உருவாகும் என தமிழ் மக்கள் அபிப்பிராயப்பட்டதும் உண்டு.

ஆனால், அது இப்போ தப்பாகப் போச்சு. ஏனெனில் வாசு இப்போது இடது சாரியல்ல. இனவாதக் கூட்டுடன் நெருக்கமாகி விட்டார். பேரினவாதக் கயிற்றை விழுங்கி விட்டார். தமிழர்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும் என அன்று கூக்குரலிட்ட வாசுதேவா அல்ல இவர். நாட்டை துண்டாடக் கூடாது. தமிழனுக்கு உரிமையை வழங்கக் கூடாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு நிறுவக் கூடாது. போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்வோம் என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும் மங்களவுக்கு எப்படி ஐயா சாமரம் வீசமனசு வந்தது.

வெற்றிலைக்கு நேரே புள்ளடி போடுங்கோ! என தென்னிலங்கை மக்களிடையே துணிந்து கூறுகிறீர்களே! அன்று சொன்னதை ஒருக்கால் ஞாபகமூட்டிப் பாருங்கோ புரியும். போர்க் காலச் சூழலில் படையினர் தமிழ் மக்களை வெட்டிக் குதறி, கொலைசெய்த போது நீங்கள் தமிழ் மக்களது பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டுமெனக் கூறியது இப்போது என்னாச்சு. பேரினவாதம் இடது சாரிகளை ஆக்கிரமித்து விட்டது.

கட்டுக் கட்டாக பணம், கை நிறைந்த சலுகைகள் கொட்டித் தருகிறார்கள். உங்கள் மனதைக் குளுமைப்படுத்துகிறார்கள். அதற்கு பிரதியுபகாரமாக இடதுசாரிக் கொள்கைகள், முற்போக்கான சிந்தனைகள், சிறுபான்மையினம் தொடர்பான எண்ணங்கள் சிந்தனைகளையெல்லாம் புதைகுழியில் போட்டு மூடிவிட்டு இனவாதத்தில் உழன்று கொண்டிருக்கின்ற கூட்டத்துடன் ஒருவராக அங்கத்துவமாகி விட்டீர்கள்.

இனியும் ஏமாறாது எமது இனம். எங்கள் இனத்தின் மீது பரிந்து பேசுபவர்கள் நாளை பேரினவாதிகளுடன் நின்று குழிவெட்டுவார்கள். எமது தமிழினம் இனி எச்சரிக்கையாகவே இருக்கும். வாசு அல்ல வாசு போன்ற வழித் தோன்றல்கள் சிரித்த முகத்துடன் சமத்துவம் பேசினாலும் தமிழினம் ஏற்காது. ஏனெனில் இனி இடது சாரிகளையும் நம்பத் தேவையில்லை. நீங் களே வலது சாரியாகி விட்டீர்கள் என்று கூறி மடலை முடிக்கின்றேன்.

இங்ஙனம் ஈழமகன்
நன்றி ஈழநாதம் செய்திப்பத்திரிகை( மட்டு பதிப்பு)

Friday, November 04, 2005

சு.ரா பற்றிய ஒரு வித்தியசமான மடல்!

சு.ரா வின் மறைவினையொட்டி பல பதிவுகள் தமிழ்மணத்தில் வந்ததும்
பல அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டதும் யாவரும் அறிந்ததே.
ரொரன்ரோவில் இருந்து வெளிவரும் முழக்கம் ஏட்டின் 21.10.2005 இதழின்
"மக்கள் களம்"
ஒரு வாசகர் எழுதிய சு.ராவைப் பற்றிய கடிதம் ஒன்று எனது கண்ணில் பட்டது.
சு.ரா வைப்பற்றி அறிந்துள்ளேனே தவிர அவரது நூல்களோ அல்லது அவரது
கருத்துக்களோ எனக்கு பரிச்சயமானவை அல்ல.பொதுவாகவே எனக்கு
இலக்கியத்தில் பெரிதாகவே ஈடுபாடு இல்லை.இங்கு இந்த முழக்கம் பத்திரிகை வெளியிட்டிருக்கும் வாசகரின் கருத்தினை நான் ஒரு வித்தியாசமான கருத்திலையே பார்க்கிறேன். .இப்படியான ஒரு விடயத்தினை இங்கு இதுவரையில்
யாரும் தொட்டதாக எனக்கு நினைவில்லை.கடிதம் இதுதான்.


'காலச்சுவடு" குழுவைச்சேர்ந்த சுந்தரராமசாமி அவர்கள் கடந்த கிழமை மறைந்துவிட்டார். அவருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறிவாளிகள் வரிசையில் இருக்கின்றோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் அவரின் ரொரன்ரோ ஆதரவாளர்கள்; சுந்தர ராமசாமியின் மறைவையொட்டி இரங்கல் கூட்டம் நடத்தி உள்ளனர். அந்த இரங்கல் கூட்டத்தின்போது மதுவருந்தி தங்கள் கவலையைப் போக்கியும் உள்ளனர். இந்த கிழமை இறுதிநாளிலும் ஒரு இரங்கல் கூட்டம் திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதில் என்ன நடக்கப் போகின்றதோ... யாரறிவார்? சுந்தர ராமசாமி இறந்து விட்டார் இறந்தவரைப் பற்றி கெட்டது கூறுவது தமிழ் மரபுக்கு எதிரானது. ஆனால் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்டவரை இன்று அல்லாவிடினும் என்றாவது வெளிப்படுத்தவேண்டுமே!

'காலச்சுவடு" கூட்டமானது தமிழகத்தில் நெடுமாறன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்துள்ளது. சுந்தரராமசாமியின் மகன் கண்ணன் என்பவர் தமிழகத்திலுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக எங்காவது பேசினால் அந்தப் பேச்சை வைத்து அவர்கள் மேல் எந்த சட்டத் தொகுதி, நுணுக்க அடிப்படையில் வழக்குப் போடலாம் போன்ற வற்றை தமது உறவுக்காரரான சோ இராமசாமி நடத்தும் 'துக்ளக்" இதழில் போடுவார். மறுநாளே கைது இடம் பெறும். இதில் இருந்து வலைப் பின்னல்பற்றி யோசித்துப் பாருங்கள். இருக்க,ரொரன்ரோவில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்துபவர்களிலும்; பலர் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பவர்களாக உள்ளார்கள். என்ன ஒற்றுமை..?

- அருண் கனகராஜா, ரொரன்ரோ.

முழக்கம் பத்திரிகை(21.10.2005) இதழுக்கான இணைப்பு

Sunday, October 30, 2005

சிங்கள ஊடகங்களின் `கொலை'ச் செய்திகள்

சிங்கள நாளேடான `சத்தின' வின் காரண காரிய விளக்கங்கள்.


இலங்கையில் கிழக்கில் இன்று மினி யுத்தம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அதில் தவறேதுமில்லை என்று கூறலாம்.
கிழக்கில் இன்று சூரியன் உதிக்கின்றதோ இல்லையோ தினம் ஒரு படுகொலை நிகழ்ந்த வண்ணமேயுள்ளது.

அந்த வகையில், கடந்த 11 ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற சம்பவமொன்றில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு பயணம் செய்த வாகனத் தொடரணி மீது கருணா தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இத்தாக்குதலில் கேணல் பானுவும் புலனாய்வு துறைத் தலைவர் கீர்த்தியும் படுகாயமடைந்ததாகவும் படுகாயமடைந்த கீர்த்தி கொழும்பு அப்பலோ மருத்துவமனைக்கு இராணுவ ஹெலிக்கொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் சிங்கள ஊடகங்கள் மிகுந்த மகிழ்ச்சியான தலைப்புச் செய்திகளுடன் செய்திகளை பிரசுரித்தன.

சிங்கள ஊடகங்கள் இச்சம்பவத்தினை விடுதலைப் புலிகளுக்கு பாரிய தோல்வியினை ஏற்படுத்தி விட்டதாகவும் அதனால் சிங்களத் தேசத்திற்கு பல நன்மைகள் கிட்டிவிட்டதாகவும் என்ற வகையில் தமது செய்திகளை பிரசுரித்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பவ தினத்திற்கு அடுத்த நாள் வெளியான சிங்கள நாளேடுகளில், திவயின பத்திரிகை தமது தலைப்புச் செய்தியாக "கிழக்கு மாகாண தளபதி பாய்ந்தோடி உயிர் தப்பியுள்ளார். கருணா தரப்பினரின் தாக்குதலில் வன்னிப்புலிகளில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு வாகனங்கள் அழிந்துள்ளன." என அதன் தலைப்புச் செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்காதீப பத்திரிகையின் உபதலைப்புச் செய்தியாக "கருணா தரப்பினர் மூலம் பாரிய தாக்குதலொன்று புலிகளின் கிழக்கு தளபதி பானு ஆபத்தான நிலையில், புலிகளில் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லக்பிம பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் "கருணா தரப்பு தாக்குதலில் புலிகளின் இரு தலைவர்கள் உட்பட நால்வர் கொலை. எட்டுப்பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் கிழக்குத் தளபதி பானுவும் இருந்துள்ளார். காயமடைந்த ஒருவரை கொண்டு செல்வதற்கு இராணுவ ஹெலிக்கொப்டரொன்று" என தனது தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தினமின பத்திரிகையின் முன்பக்கச் செய்தியில் "புலிகளின் கிழக்கு தளபதி பானுவின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்". இச்செய்தியில் மேலும் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

டெய்லி நியுஸ் பத்திரிகையின் முன்பக்கச் செய்தியில் "பானு பயணஞ் செய்கையில் தாக்கப்பட்டுள்ளார்." இதன் செய்தியில் வன்னிப் புலிகள் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இத்தாக்குதலை கருணா தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏசியா ட்ரிபுயூன் இணையத்தளத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டெய்லி மிரர் பத்திரிகையின் முன்பக்கச் செய்தியாக "விபத்துக்குள்ளான எல்.ரி.ரி.ஈ. தளபதிக்கு அரசாங்கம் ஹெலிக்கொப்டர் வழங்கியுள்ளது. "இதன் செய்தியில் குறைந்த பட்சம் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக அதன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் நாளிதழ்களான தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி ஆகியன இச்சம்பவத்தினை முன்பக்கச் செய்தியாக பிரசுரித்திருந்தன. அத்தாக்குதலில் எவரும் உயிரிழந்ததாக செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை. அதேவேளை, கேணல் பானுவின் பேட்டியொன்றை வீரகேசரி பிரசுரித்திருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்துடன் சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்களை ஒப்பிடுமிடத்து எவ்வாறு செயல்பட்டுள்ளன? என்பது நன்கு புலனாகிறது. சிங்கள ஊடகங்களிலும் ஆங்கில ஊடகங்களிலும் இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டள்ளவர்களின் எண்ணிக்கை வித்தியாசமாகும். இவற்றுள் எந்த எண்ணிக்கையினை நம்புவது? என்ற குழப்பம் வாசகர்கள் மத்தியில் ஏற்படுகிறது. அத்துடன், தமிழ் பத்திரிகைகளில் இத்தாக்குதலில் எவரும் கொலை செய்யப்படவில்லையென்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்துடன் சிங்கள ,ஆங்கில ஊடகங்களின் செயற்பாட்டினை நோக்குமிடத்து, அவ்ஊடகங்கள் தத்தமது வாசகர்களை ஏமாற்றியுள்ளதுடன் சிங்கள சமூகத்தினருக்கு பொய்யான தகவல்களையும் வழங்கியுள்ளனர். அத்துடன், சிங்கள ஊடகங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இச்சம்பவத்தினை செய்தியாக பிரசுரித்திருந்தன. ஊடகங்கள் இவற்றையல்ல மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பிரஜைகளுக்கு உண்மையினை வழங்குதல் வேண்டும். அத்துடன், எந்தவொரு ஊடகமும் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதிருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாதிருப்பதற்கு யார் பொறுப்பேற்றல் வேண்டும்? என்ற கருத்துகளை முன்வைக்காதது இவ் ஊடகங்கள் விட்ட தவறாகும்.

இதேபோல், கடந்த பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் கௌசல்யன் கொலை செய்யப்பட்ட பொழுது, 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பிரசுரமான திவயின பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் "பாம்பின் விசம்" என்ற தலைப்பில் அவர் தனது பத்தியில் இவ்வாறான நபர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என குறிப்பிட்டிருந்தார். இன்றும் அப்பத்திரிகை உட்பட ஏனைய பத்திரிகைகளும் மறைமுகமாக, குறிப்பாக இச்சம்பவத்தின் போதும் தமது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளன என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

அதேவேளை, கருணா தரப்பினர் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக ஜே.வி.பி. ஆதரவு பத்திரிகையான லங்கா பத்திரிகை தெரிவித்துள்ளது. அப்பத்திரிகைக்கு கருணா தரப்பினருடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக காணப்படும் பல கட்டுரைகள் கடந்த காலங்களில் பிரசுரமாகின. அதனால் இச்செய்தியினை ஒரே தடவையில் வாந்தி என்று கூறி எறிந்து விடுதல் பொருத்தமற்றது. கருணா தரப்பினர் அச்செய்தி பொய்யென தமது இணையத்தளத்தில் ஊடாகவேனும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

அவற்றுக்கிடையில், கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பில் கருணா தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலின்போது 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அத்தாக்குதலை கருணா தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் கருணாவின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறிப்பிடத்தக்க அளவு விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தால் இலங்கையின் இனப்பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலைமையே உருவாகும்.
இன்று கிழக்கில் இயங்கும் தமிழ் துரோக துணைப்படைகளின் ஆதரவுடன் இராணுவத்தினர் மேற்கொள்ளும் நிழல் யுத்தம் இப்பொழுது படிப்படியாக யாழ்ப்பாணத்தையும் நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருப்பதனை அண்மைக்காலம் முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்களிலிருந்தும் சிங்கள ஊடகங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளிலிருந்தும் நன்கு காணக்கூடியதாகவுள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (23.10.2005) பிரசுரமான "சத்தின" பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் "யாழ் .வைத்தியசாலையில் 22 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், புலி உறுப்பினர்களைச் சேர்ந்த இரு வைத்தியர்களின் திட்டமொன்று" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் யாழ். வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட இருப்பத்தியிரண்டு (22) இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பாக இப்பொழுது பாரிய சந்தேகங்கள் தோன்றியுள்ளன.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மற்றும் வேறு நோய்களின் போது யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இராணுவ வீரர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக உயிரிழப்பதுடன் அந்த இராணுவ நோயாளர்களுக்கு உரிய முறையில் உரிய சிகிச்சை கிடைக்காமையினாலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு காரணம் யாழ். வைத்தியசாலையில் பணிபுரியும் இரு தமிழ் வைத்தியர்களின் வைத்திய தொழிலிற்கே பொருந்தாத மனிதாபிமானமற்ற செயற்பாடுகளே எனத் தெரிய வருகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடையும் இராணுவத்தினருக்கு உரிய சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்காதிருப்பதற்கு இவ்விரு வைத்தியர்களும் செயற்படுவதுடன் அதற்கு ஏனைய ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதற்கேற்ப இராணுவ வீரர்களின் நோய் உச்ச நிலையினை அடைந்து, பின்னர் அவர்கள் உயிரிழக்க வழி செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்விரு வைத்தியர்களும் சில காலம் புலிகள் அமைப்பின் வைத்திய பிரிவில் இருந்தவர்களெனவும் பின்னர் யாழ். வைத்தியசாலையில் சேவைக்கு இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்விருவரும் கமலன் பாலச்சந்திரன் மற்றும் பத்மநாதன் சிவராசன் என இனங்காணப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப யாழ்ப்பாணத்தில் விபத்துகளுக்கு மற்றும் நோய்களுக்கு இரையாகும் முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அனுப்பப்படுவதனால், மரணம் சம்பவிக்கப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவல்கள் மூலம் தெரிய வந்தள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பாக யாழ் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்; இச்செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியொன்றாகும். கடைசியாக இற்றைக்கு சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பே மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். (மேஜர் சுசந்த மெண்டிஸின் படுகொலை) என அவர் தெரிவித்தார்.

இப்பத்திரிகை எந்நோக்கத்திற்காக இச்செய்தியினை பிரசுரித்தது? எனத் தெரியவில்லை. ஆனால், இவ்வாறான செய்திகள் கிழக்கில் போன்று வடக்கிலும் தொடரப்பட்டால் நிலைமை எங்கு? எதில்? எவ்வாறு முடிவடையும்? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எஸ்.நயனகணேசன்/தினக்குரல்.

Saturday, October 15, 2005

இந்திய உளவுப்பிரிவின் குறி!

இந்திய உளவுப்பிரிவால் இலக்கு வைக்கப்படும் இலங்கை தமிழ் ஊடகத்துறை. ஏன்? எதற்கு? எப்படி?

இலங்கையில் உள்ள தமிழ் ஊடகத்துறையினரை வளைத்து போடும் முயற்சியில் இந்திய உளவுப்பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அன்பாகவும், அதட்டலாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இராணுவ ஆய்வாளர் சிவராமின் படுகொலைக்கு பின்னரே இந்த விடயம் வெளித்தெரிய வந்துள்ள போதிலும் அதற்கு முன்னரே இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமது நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்தினையுடைய ஊடகவியலாளர்களை மிரட்டி பணியவைப்பதற்கு தமிழ் ஆயுதக் குழு ஒன்றின் உதவி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையுடன் தொடர்படைய இந்த குழுவினருக்கு இந்திய உளவுப் பிரிவால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

இந்திய உளவுப் பிரிவு தமிழ் ஊடகத்துறையை கட்டுப்படுத்த முயல்வது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாதது.
........................................................................................

சுவிஸிலிருந்து சத்திரியன் எழுதிய இக்கட்டுரையினை மேலே தொடர்ந்து
படிக்க கீழே உள்ள சுட்டியினை சுட்டுங்கள்.

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=2990&Itemid=44

Thursday, October 13, 2005

சிறி சுவாமிநாராயண் மந்திர்!


இங்கே நீங்கள் படத்தில் காண்பது கனடா ரொரண்டோவில் இருக்கும் சிறி சுவாமி நாராயண் மந்திரின் அழகிய தோற்றமே இது.உலகெங்கும் 45 நாடுகளில் இயங்கும் சுவாமி நாராயண் அமைப்பினரால் இவ் ஆலயம்,ஆச்சிரமம் அமைக்கப்பட்டுபராமரிக்கப்பட்டு வருகிறது.

எனது கமெராவினால் கிளிக்கிய படங்கள் இது.முற்றுமுழுதாக சலவைக்கல்லால்அமைக்கப்பட்டுள்ள ஒரு அழகிய இந்து ஆலயம்.ரொரண்டோவில் பார்க்கவேண்டிய இடங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும்.சில தினங்களுக்கு முன்னர் நண்பன் ஒருவரை காண இந்தப் பகுதிக்குசென்றிருந்தேன்.அப்போது இந்த ஆசிரமத்திற்கும் சென்று வந்தேன்.மிக அழகாக,தூய்மையாக,சிறந்த ஒழுங்கமைப்புடன் இந்த மந்திர்செயற்பட்டு வருகிறது.சுவாமிகளின் உரையினைக் கேட்கலாம்என்றால் உரை அன்று குஜராத்தி மொழியிலே இடம்பெற்றது.

தமிழ்நாட்டிலும் கோயம்புத்தூரிலும் சென்னையிலும் இவர்களின் ஆச்சிரமம் இருப்பதாக அங்கு பணிபுரிந்த தொண்டர் தகவல் சொன்னார்.தனியே மதத்துடன் நின்றுவிடாது பல சமூகப்பணிகளிலும் இவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

Thursday, September 29, 2005

இதுவும் ஒரு செருப்பு மேட்டர் தான்!

இந்த குஷ்பு மேட்டருக்கு பின்பு பிரபலமாகிவிட்டது செருப்பு,துடைப்ப மேட்டர்.செருப்பை வைத்து தொழில் புரிவோரை அவமானப்படுத்தியது என்று பதிவுகள் வேறு. இதுவும் ஒருசெருப்பை பற்றிய பதிவுதான்.இணையத்தில் கண்ட ஒரு படத்தினைதான் இங்கு நீங்கள் பார்க்கின்றீர்கள்.பல வரிகளில் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதேபோல இந்த படத்திலுள்ள செருப்பையும் அணிந்திருக்கும் கால்களையும்பார்த்தவுடன் ஒரு இனம்தெரியாத சோகம் எழுகிறது மனதில்.அத்துடன் உடனடியாக இந்த செருப்புக்கும்,கால்களுக்கும்சொந்தக்காரனின் முகத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.வறுமையும் இயலாமையும் எப்படி மனிதனை ஆட்டுவிக்கிறது என்பதனை முகத்தில் அறையும் விதமாய்சொல்கிறார் இப் படப்பிடிப்பாளர்.ஒரு நல்லபுகைப்படபிடிப்பாளனின் வெற்றி இப்படியான விடயங்களில் தான்தங்கி இருக்கிறது. ஹவானாவில் இப்படம்
பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.மேலதிக விபரங்கள் புரிந்துகொள்ளமுடியவில்லை.

செருப்பணிந்தவன் சப்பாத்து அணிந்தவனை ஏக்கத்துடன் பார்க்கிறான்.ஆனால் கால் இல்லாதவன் அவன் கால்களை ஏக்கத்துடன் பார்ப்பதை மறந்துவிடுகிறான்.