Sunday, January 16, 2005

அனானுக்குப் போட்ட தடை அம்மாவின் அம்மா காட்டிய நடைமுறையே!

அனானுக்குப் போட்ட தடை அம்மாவின் அம்மா காட்டிய நடைமுறையே!

. நா. செயலாளர் நாயகம் கொபி அனான் வடபகுதிக்கு வராமலேயே திரும்பச்சென்று விட்டார். ஏன் வரவில்லை என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லுகின்றனர்.அனான் வடபகுதிக்குச் செல்வதை சிங்கள பௌத்த மேலாண்மை அனுமதிக்காதென்பது முன்னரே தெரிந்ததுதான்.இதனால்தான் கடைசி நிமிடம்வரை தமிழ்மக்கள் தரப்பில் சுனாமி அனர்த்தத்தால் பெரும் அழிவுகளுக்குள்ளான வடக்கு - கிழக்குப் பகுதிகளையும் நேரில் வந்து பார்த்துப்போகும் படி கோரிக்கை விடுத்துவந்தனர். கொபி அனான் பார்க்க வேண்டிய அனர்த்த அழிவுகளை விட சிங்களபௌத்த ஆதிக்க சக்திகளின் “அனர்த்தங் களை” இன்று உலகம் முழுவதும் அறிந்துகொள்ள முடிந் திருக்கிறது.

இது இப்பொழுது சந்திரிக்கா ஆட்சியில்தான் இலங்கை யில் நடந்திருக்கும் சம்பவமல்ல.1970 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் சர்வதேச நாடாளு மன்ற பிரதிநிதிகளின் மாநாடொன்று நடந்தது.கொழும்பில் பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடந்த இந்த மாநாட்டுக்கு உலகின் பல நாடுகளையும் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் பிரதிநிதிகள் என்று பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சமயம் இலங்கையில் சந்திரிகாவின் அம்மா சிறிமா பண்டாரநாயகாவின் அரசு ஆட்சியிலிருந்தது. அந்த மாநாட் டில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் கலந்துகொண்டார். இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயும் கலந்து கொண்டார்.

மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசி தமிழர் தாயகத்துக்கும் அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் சென்று பார்வையிடவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.இதற்கு வாஜ்பாயும் சம்மதம் தெரிவித்தார். மாநாடு முடிவடைவதற்கு முன் பிரதிநிதிகள்; நாட்டில் விரும்பிய இடங்களுக்குச் சென்று பார்த்தும் பேசுவதற்கும் வழக்கம்போல ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வாஜ்பாயும் மற்றும் சிலரும் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒழுங்குசெய்யப்பட்டது.கொழும்பிலிருந்து விமானத்தில்
வாஜ்பாய் குழுவினருடன் தமிழ் அரசுக்கட்சியைச் சேர்ந்த வி.என்.நவரத் தினமும் மற்றும் இரண்டொருவரும் யாழ்ப்பாணம் வந்தனர்.
வாஜ்பாய் குழுவைத் தமிழரசுக் கட்சியினரே யாழ்ப் பாணம் அழைத்துவருவதாகவே இந்த ஏற்பாடு அமைந் திருந்தது.வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஒரு நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் அவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கும் அரசாங்கத்தின் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இவரை புரட்டக்கோல் என்று அழைப்பார்கள். வாஜ்பாய் குழுவுக்கும் ஒரு புரட்டக்கோல் பொறுப்பாக விமானத்தில் அவர்களுடனேயே வந்தார்.

யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவர்களுக்கு ஒரு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழரசுக் கட்சி எம்.பி.வி.என்.நவரத்தினம் வாஜ்பாயிடம் சொல்லித் தங்களுடன் வருமாறு அழைத்தார்.
இதே விமானத்தில் வந்த அரசின் புரட்டக் கோல் அதற்கெல்லாம் நேரமில்லையென்றும்
தங்களுடனேயே வாஜ்பாய் குழு நிற்க வேண்டுமென்றும் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதற்கு இடமில்லையென்றும் தெரிவித்து வாஜ்பாய் குழுவை தம்முடன் வருமாறு கேட்டார்.வாஜ்பாய் எதுவும் சொல்ல முடியவில்லை. இப்பொழுது கொபி அனான் சொன்னதுபோல இவரும் அரசின் விருந்தின ராகவே வந்திருந்தார்.விமான நிலையத்தில் வி.என்.நவரத்தினத்திடமும் தமிழரசுக்கட்சி எம்பிக்களிடமும் வாஜ்பாய் பிரியாவிடை பெற்றார்.

நான் அடுத்தமுறை தனிப்பட்ட முறையில் யாழ்ப்பாணம் வருவேன். அப்பொழுது தமிழ்மக்களையும் அவர்கள் வாழும் இடங்களையும் பார்ப்பேன். அவர்களுடன் பேசுவேன் என்று சொல்லி விடைபெற்று புரட்டக்கோலுடன் சென்றார்.
வாஜ்பாய் அதன்பின் தனிப்பட்ட முறையிலும் வரவில்லை. பிரதம மந்திரியாக பதவியேற்ற பின் உத்தியோக ரீதியிலும் யாழ்ப்பாணம் வரவில்லை! யாழ்ப்பாணமே அவருக்கு நினைவிருக்காது.வாஜ்பாய் வந்த காலத்தில் இங்கு விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. போர்க்களமும் இருந்ததில்லை. இந்தியா வின் காந்தி காட்டிய வழியில் அகிம்சையைப் பின்பற்றிய செல்வநாயகம் தலைமையில் ஜனநாயக வழியில் சென்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி;தான். தமிழர் தாயகத்தில் மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டி ருந்தது.

அன்றைக்கு அம்மாவின் ஆட்சியிலேயே வாஜ்பாய் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களைப் பார்த்துப்போகவும் பேசவும் தேநீர் விருந்தில் தமிழர்களின் விருந்தோம்பலை ஏற்கவும் இடமிருக்கவில்லையென்றால் இன்று சுனாமி அனர்த்தத்தின் பின் மகள் சந்திரிகா அனுமதிப்பாரா?

இதுமட்டுமல்ல 1950 ஆம் ஆண்டுகளில் தொண்டமானாறிலிருந்து இந்தியாவின் கோடிக்கரைக்கு நவரத்தினசாமி என்ற நீச்சல் வீரன் முதல் தடவையாக நீந்திச் சென்று உலக சாதனை படைத்தார்.இந்தச் சாதனையைப் பெரும் தயக்கத்துடன் பலநாட்கள் கழித்து இலங்கையில் அன்று ஆட்சியிலிருந்த சேர்.ஜோன் கொத்தலாவலையின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு பாராட்டுத் தெரிவித்தது.இதன்பின் பிரதமர் சேர்.ஜோனின் வாசஸ் தலத்தில் நடந்த ஒரு வைபவத்தில் நீச்சல் வீரன் நவரத்தினசாமியை பிரதமர் வரவேற்றுப் பாராட்டுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். நீச்சல் வீரனும் அங்கு சென்றிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நவரத்தினசாமியைக் கைகுலுக்கிப் பாராட்டுவதை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்கவே மறுத்து விட்டார்கள்.

இது தான் சிங்கள பௌத்த மேலாண்மை வாதிகள் தமிழ் மக்களுக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் இதைத்தான் அவர்கள் இன மத மொழி பாகுபாடற்ற ஒரு மைப்பாடு என்று சொல்லுகிறார்கள்.இன்றும் இலங்கை மக்கள் மத்தியில் சுனாமி பேரலைகள் பேதங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டதாகச் சொல்லி உலகையே ஏமாற்றுகிறார்கள்.அவர்களுக்கென்று ஒரு நாடு இருக்கிறது. அவர்களுக்கான மொழி அரச மொழியாக இருக்கிறது. அவர்கள் சொல்வதை உலகமும் நம்பும்.சிங்கள பௌத்த மேலாண்மைவாத ஊடகங்கள் இயற்கை அனர்த்தத்தை மறந்துவிட்டதாகவே நடந்து கொள்கின்றன.

கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலையிலிருந்த சந்திரிகா அரசுக்கு சுனாமி பேரலைகள் உதவி என்ற பெயரில் அள்ளிக்கொடுக்கும் கொடை வள்ளலாகவுமிருக்கின்றது. ஜே.வி.பியின் விமல் வீரவன்ச இதுதான் புலிகளைப் பேச்சுக்கு இழுக்கவேண்டிய தருணம் என்று அலோசனை சொல்கிறார்.அஸ்கிரிய பீடாதிபதியும் அனுஸானம் வழங்குகிறார். எல்லாமே இலவசமாக வந்து கொட்டும்போது சுனாமியின் பேரழிவில் மாண்டவர்களைப் பற்றியோ உறவுகளைப் பலிகொடுத்து பதறி நிற்கும் மக்களைப் பற்றியோ இவர்க ளுக்கென்ன கவலை?

நாங்கள் மட்டுமென்ன? இழந்த தமிழீழ அரசை மீண்டும் அமைப்பதற்கு 1977 இல் தமிழ் மக்களிடம் ஆணைகேட்டுப் பெற்று. நாடாளுமன்றத்தில் ஆறாண்டுகள் பதவி வகித் தோம். கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றப் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றதால் வெற்றி பெற்றவர்கள் நியாயமான முறையில் வெற்றிபெறவில்லையென்று நீதி மன்றக் கதவைத் தட்டி தடுத்துநிற்கிறோம். ஆனாலும் எனக் குப் பதவி ஆசை இல்லையென்று இன்றும் சங்கூதிக்கொண்டு சகுனிவேலை செய்து கொண்டிருக்கிறோம்.இப்படிப்பட்டவர்களும் நம்மிடையே இருக்கும்போது மற்றவர்களைச் சொல்லி என்னபயன்?

நன்றி:- ஈழநாடு

Sunday, December 19, 2004

மீண்டும் யாழ்பாணத்திலிருந்து "சிரித்திரன்"

சிறு வயதில் என்னை ஆனந்தவிகடன் எப்படி நகைச்சுவையால் மகிழ்வித்ததோ அதற்கு சற்றும் குறையாமல் மண் வாசனையுடன் மகிழ்வித்தது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த"சிரித்திரன்" இதழ் .

திரு எஸ்.சிவஞானசுந்தரத்தினால் வெளியிடப்பட்ட அந்த நூலில் இடம்பெற்ற கருத்தோவியங்கள் காலத்தால் மறக்கமுடியாதவை. சிரிக்க வைத்ததுடன் மக்களை சிந்த்திக்கவும் வைத்தவை. கார்ட்டூன் என்பதை கேலிச்சித்திரம் என்று தமிழ்நாட்டிலிருந்து வரும் இதழ்கள் பயன்படுத்திய காலங்களில் கருத்தோவியம் என்று அதற்குரிய சரியான சொல்லை அறிமுகப்படுத்தியதுடன் இன்றும் ஈழத்தில் கருத்தோவியம் என்ற சொல் புழங்கி வருவதற்கும் காரணி திரு.எஸ்.சிவஞானசுந்தரம் ஆவார்.

மண்வாசனையுடன் வந்த அவரின் படைப்புக்களான சவாரித்தம்பர் என்ற கருத்தோவிய கதாபாத்திரம்,மற்றும் சின்னக்குட்டி,மைனர் மச்சான், மிஸ்டர் அண்ட் மிஸிஸ் டாமோதரம், மகுடியார் ,மெயில் வாகனத்தார்,ஷீமான் செல்லக்கிளி, வேலரும் மயிலரும் இன்றும் பல ஈழத்தவரின் மனத்தில் நிலைத்து நிற்பவை.

இதில் மைனர் மச்சான் பாத்திரமானது அந்த கால படித்தவேலையற்ற ஈழத்து இளைஞனை பிரதிபலித்த ஒருபடைப்பாகும். வேலைதேடும் ,அதில் தோல்விகளையே சந்தித்த ஒருவர்.காதலுக்கு தூண்டில் போடும் அவருக்குகாதலிலும் வெற்றிகிட்டாது.இடையிடை மது பாவித்து விட்டு புலம்பும் அவருக்கு அந்த்த காலத்தில்பிரபலமான பெல்பொட்டம் பாண்டும் ,காலர் பெரிதான உடலை இறுக்கும் சேட்டும் ,நீண்ட தலை முடியும் வரைந்திருப்பார் திரு சுந்தர்.

"செய்யும் தொழிலே தெய்வம் சிரிப்பே சீவியம்" என்னும் வாசகங்களுடன் வெளிவந்த சிரித்திரன் சஞ்சிகைசுந்தரின் மறைவின் பின்னர் வெளிவரவில்லை. தற்போது சில வருட காலத்தின் பின்னர் மீண்டும் சிரித்திரன் சஞ்சிகையானது வெளிவர இருக்கிறது எனும் ஒரு நற்செய்தியை அறியமுடிந்தது. மீண்டும் ஈழத்தவரின் கரங்களில் தவழும் சிரித்திரன் இதழானது முன்னைப் போலவே தரத்திலும்,சமூக முன்னேற்றத்திலும் அக்கறையாக இருக்கும் என நம்பலாம்.

Wednesday, December 15, 2004

மதத்தீவிரவாத பேராபத்து.!

நேற்றைய தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியத்தலையங்கம் இது. தேவை கருதி அதை இங்கு மீண்டும் பிரசுரித்திருக்கிறேன். நன்றி- தினக்குரல்

கொழும்பு குதிரைப் பந்தய திடலில் கடந்த சனிக்கிழமை இரவு பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் குழுவினரின் நிகழ்ச்சியின் இறுதியில் இளவயதினர் இருவரைப் பலிகொண்டு பலரைக் காயமடையவைத்த கிரனேட் தாக்குதல் சம்பவத்துக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென்று எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி ஒருவரே பின்னணியில் இருந்ததாக அரசாங்கமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்த வண்ணமிருக்கின்றன.

அந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பதற்கான பிரயத்தனமாக பௌத்த பிக்குமார் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமயவினர் இப்போது கூறுகிறார்கள்.
திருமதி குமாரதுங்க தனது ஜனாதிபதி பதவியின் 10 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் நேர்மையான மார்க்கத்தில் மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்துக்கு தங்களால் வரமுடியாதென்பதை உணர்ந்து விட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியொருவர் தனது குண்டர்களைப் பயன்படுத்தி நாட்டில் அச்சத்தையும் வன்முறைகளையும் மூளவைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் என்று முற்றிலும் கட்சி அரசியல் உணர்வுடனான குற்றச் சாட்டொன்றை முன்வைத்திருக்கிறார்.

கிரனேட் தாக்குதல் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கும் இந்திய அரசாங்கம் இலங்கைப் பொலிஸாரின் விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
உண்மையிலேயே அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ குதிரைப் பந்தயத் திடல் கிரனேட் தாக்குதல் சம்பவத்துக்கு வழிவகுத்த அரசியல்-மதவாதப் பின்னணிகளை உகந்த முறையில் நோக்குவதற்குத் தயாராயில்லை; மாறாக, அந்தப் பின்னணிகளின் ஆரோக்கியமற்ற தன்மைகளை மூடிமறைத்து தங்களுக்கு அரசியல் ஆதாயத்தைத் தேடும் வக்கிர உணர்வுடனேயே அவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் பௌத்த பிக்குமாரின் வெளிப்படையான பிரவேசத்தினால் தோன்றியிருக்கும் தற்போதைய சர்ச்சைகளைவிட மிகவும் கூடுதலான அளவுக்கு செல்வாக்கைச் செலுத்தி அரசியலில் மதவாதத்தை முனைப்புடன் முன்னெடுக்கக் கூடியவராக வந்திருக்கக் கூடிய கங்கொடவில சோம தேரரின் முதலாவது நினைவு தினத்தன்று ஷாருக்கான் குழுவினரின் களியாட்ட நிகழ்ச்சி நடத்தப்படக் கூடாது என்ற பௌத்த பிக்குமாரில் ஒரு பிரிவினரின் கோரிக்கையே அன்றைய அசம்பாவிதங்களுக்குக் காரணம்.

இலங்கை அரசியலில் பின்னணியில் இருந்து பிக்குமார் செல்வாக்கைச் செலுத்தி ஆட்சியாளர்களின் நடத்தைப் போக்குகளைத் தீர்மானித்து வந்திருக்கிறார்கள் என்ற போதிலும், அண்மைக் காலமாக அவர்களில் ஒரு சாரார் காண்பிக்க ஆரம்பித்திருக்கும் நேரடி அரசியல் ஈடுபாடு ஏற்கெனவே ஆரோக்கியமற்றதாக இருக்கும் தென் இலங்கை அரசியல் அரங்கில் மேலும் இருள் சூழ்ந்த சிந்தனைப் போக்குகளின் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கப் போகின்றது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

குறிப்பிடத்தக்க சில புறநடைகள் இருந்த போதிலும், இலங்கை அரசியலில் பிக்குமாரின் பாத்திரம் அநேகமாக எதிர் மறையானதாகவே இருந்து வந்திருக்கிறது. கௌதம புத்தரின் சிந்தனைகளையே அவமதிக்கின்ற வகையிலான 'சிங்கள பௌத்தம்" என்ற கருத்தாக்கம் இதற்கு ஒரு பிரகாசமான உதாரணம். மஞ்சள் அங்கி அணிந்த ஒரு பிக்கு சிங்கள மக்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட ஒரு பிரதமரைச் சுட்டுக் கொன்றதும் இன்னொரு பிக்கு இக் கொலையில் குற்றஞ் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை பெற்றதும் தற்செயலானவையல்ல. சிங்களவர் மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப்பம் ஆகியவற்றுக்கு சிங்கள, பௌத்த மத சிந்தனையில் ஒழுக்க நியாய பாரம்பரியம் ஒன்று இல்லை என்பதற்கான சரித்திர நினைவுச் சின்னம் போன்ற சான்றே இச்சம்பவங்கள்.

இலங்கையின் மாபெரும் வரலாற்றுப் பதிவேடாகக் கருதப்படும் மஹாவம்சம், மகாநாம என்ற மதகுருவால் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. மஹாவம்ச நூலின் பிரதிகள் அனைத்தையும் தீயில் பொசுக்க வேண்டும். ஏனென்றால், சிங்கள பௌத்தர்களின் இன ரீதியான சிந்தனைக்கு அவைதான் பெரிதும் பொறுப்பாயிருக்கின்றன என்று மதிப்புக்குரிய ஒரு சிங்களக் கல்விமான் கலாநிதி ஈ.டபிள்யூ. அதிகாரம் தெரிவித்திருந்ததை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

'கௌதம புத்தர் அரசியல், போர் மற்றும் சமாதானம் ஆகியவை குறித்து மிகவும் தெளிவாகவே போதித்திருக்கிறார். பௌத்த மதம் அதன் போதனைகளில் அகிம்சையையும் சமாதானத்தையும் மக்களுக்கான செய்தியாக வலியுறுத்துகிறது; எந்த வகையான வன்முறையையோ அல்லது உயிர்ச் சேதத்தையோ அது ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. பௌத்த சிந்தனைகளின் படி நீதியான போர் என்று கூட ஒன்று இல்லை" என்று 'புத்தர் போதித்தது என்ன?" என்ற தேரவாத பௌத்தம் குறித்த பிரபல பாடநூலை எழுதிய பேராசிரியர் வல்பொல ராகுல தேரோ கூறியிருக்கிறார்.

ஆனால், இன்று இலங்கையில் அநேகமான பௌத்த பிக்குமார் இந்தப் போதனைக்கு முற்றிலும் மாறாக அல்லவா செயற்படுகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான போரை நியாயப்படுத்துவதுடன் மஞ்சள் அங்கிகளை களைந்துவிட்டு துப்பாக்கியைக் கையில் ஏந்திப் போர் முனைக்குச் செல்லவும் தயார் என்று பகிரங்கமாக மேடைகளில் முழங்குகிறார்கள். சிறுபான்மையினத்தவர்களின் நியாயபபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசைகளையையும் ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

அண்மைக் கால சமாதான முயற்சிகளுக்கு எதிரான பிரசார இயக்கங்களில் பிக்குமார் முன்னணியில் நின்று செயற்படுகிறார்கள். சிறுபான்மை இனத்தவர்கள், மதத்தவர்களுக்கு எதிரான பிரசாரங்களை நிகழ்ச்சித் திட்டங்களாகக் கொண்டே அவர்கள் நேரடி அரசியலிலும் இறங்கியிருக்கிறார்கள்.

அமைதி, சமாதானத்துக்கு எதிராக செயற்படுகின்ற அரசியல்வாதிகளை சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்ட பிக்குமார் அந்த அரசியல் வாதிகளை விடவும் தீவிரமாக அமைதிக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். சமாதானத்தின் பெறுமதியை சமுதாயம் விளங்கிக் கொள்வதற்கு பெரும் தடையாக இந்த பிக்குமார் இலங்கையில் விளங்குவதை அடிப்படையாகக் கொண்டே இன்றைய துரதிர்ஸ்டவசமான நிலைவரங்களின் பின்னணிகளை நோக்க வேண்டும்.

பௌத்த மதத் தீவிரவாதம் அரசியலை வழிநடத்துமானால், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அல்லது கைப்பற்றிய அரசியல் அதிகாரத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கு அரசியல்வாதிகள் அந்தத் தீவிரவாதத்துக்கு இசைவான அனுகுமுறைகளைக் கடைப்பிடிப்பார்களேயானால், இலங்கை அதற்குரித்தான அமைதி மற்றும் பொருளாதார மேம்பாடு சகலவற்றையும் பரிதாபகரமாகப் பறிகொடுத்துஉலகில் தோல்வி கண்ட சமுதாயமாக அந்தகாரத்தில் மூழ்கப் போகிறது.

Saturday, December 11, 2004

நீங்களும் ரசிக்கலாம் கோடையின் வனப்பை.

குளிர் தேசத்தில் வாழும் எமக்கு கோடை காலத்தின் அருமை
ந்ன்றாகவே தெரியும்.
கடும் குளிர் காலம் எப்படி இருக்கும் என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும். கடும் குளிர் காலத்தில் இருக்கும் எமக்கு ஆறுதலாக இருப்பது இவை போன்ற கோடையில் எடுத்த படங்கள் தான்.




Sunday, October 31, 2004

நரசிம்ஹன் ராம் யாருடைய குரல்?

நரசிம்ஹன் ராம் யாருடைய குரல்?

இலங்கைத் தமிழர்களுக்காகப் பரிந்துபேச தமிழகத்தில் வலுவான சக்திகள் இல்லை என்று கூறுவதன் மூலம் யாருக்கு தெம்பூட்டுகிறார்?

பத்திரிகையாளன் என்ற நிலைக்கு அப்பால் இலங்கை விவகாரத்தில் இவர் அதீத ஈடுபாடு


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் காமினி திசாநாயக்கவின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான "இந்து' வின் பிரதம ஆசிரியர் நரசிம்ஹன் ராம் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

"இந்தியாவும் இலங்கையும்; முன்னாலுள்ள எதிர்காலம்' என்ற தலைப்பில் ராம் ஆற்றிய ஒரு மணிநேர உரையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவரைப் பற்றி எம்மை ஆழமாகச் சிந்திக்க வைத்தன.

ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் இலங்கை அரசியல் மீது ராம் ஆரம்பத்தில் காட்டி ய ஈடுபாடு பின்னர், அவரே ஒத்துக் கொள்கின்ற முறையில், பத்திரிகைத் தேவைக்கு அப்பால் சென்று விட்டது. "ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவிடம் இருந்து பேட்டியொன்றைப் பெறுவதற்காகவே நான் அப்போது இலங்கைக்கு வந்தேன். பின்னர் எனது பங்கு பத்திரிகைத் துறைக்கு அப்பால் சென்று விட்டது' என்று அன்றைய நினைவுப் பேருரையில் ராம் குறிப்பிட்டி ருக்கிறார்.

இப்போது ராம் இலங்கை அரசினதும் அரசுக்கு வரக்கூடிய அரசியல் கட்சிகளினதும் உயர் மட்டத் தலைவர்களின் நெருங்கிய நண்பனாக வந்து போகிறார். காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றவர்களுடனான அதீத நெருக்கம் பற்றிக் குறிப்பிடும் ராம், கடந்த வாரம் உரையாற்றுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை நண்பர் ராஜபக்ஸ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நண்பர் ரணில் என்றும் அடிக்கடி, விளித்தார். இத்தகையதொரு நெருக்கம் இந்தியாவின் வேறு ஒரு பத்திரிகையின் ஆசிரியருக்கும் இருக்கும் என்று நினைப்பதற்கில்லை.

ராம் மீண்டும் இந்துவின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கை இன நெருக்கடி விவகாரத்தில் அப்பத்திரிகை ஆழமான ஈடுபாட்டைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்துடன் கருணா முரண்பட்டுக் கொண்டு வெளியேறிய பின்னர் அந்த விவகாரம் குறித்து "இந்து' பத்திரிகை 4 க்கும் அதிகமான தடவைகள் ஆசிரிய தலையங்கம் தீட்டி யிருந்தது. கருணாவின் சகோதரர் ரெஜி கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் ஆசிரிய தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது. 100 கோடி க்கும் அதிகமான மக்களையும் எண்ணிலடங்காத பிரச்சினைகளையும் கொண்ட இந்திய தேசத்தின் ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகை இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு அரசியல் முக்கியத்துவ நிகழ்வுப் போக்கிற்கும் அதன் பிரதிபலிப்பை ஆசிரிய தலையங்கம் ஊடாக வெளிக்காட்டுகின்றதென்றால், அதன் ஆசிரியருக்கு இலங்கை விவகாரத்தில் ஒரு பிரத்தியேகமான ஈடுபாடு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் துரதிர்ஸ்டவசமாகத் தேக்க நிலையடைந்திருக்கும் ஒரு சூழ்நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசு நிலை உறவுகள் எவ்வகையில் அமைந்திருக்கின்றன என்பது குறித்து தனது உரையில் ராம் முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்திருக்கிறார்.
1987 ஜூலை 29 இல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனாவும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் கொழும்பில் கைச்சாத்திட்ட இலங்கை -இந்திய சமாதான உடன்படிக்கையில் இருந்து ஆரம்பித்து, அந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போன காரணங்களைச் சொல்லி அதன் பின்னரான இன்றைய நிலை பற்றிய தனது ஆய்வைச் செய்திருக்கிறார் "இந்து' பிரதம ஆசிரியர். சமாதான உடன்படி க்கையை நடைமுறைப்படுத்த முடியாமல் போன சூ ழ்நிலைக்கு கொழும்பு செய்த எதிர்மறையான பங்களிப்புக் குறித்து கவனத்தை ஊன்றாமல் மேலோட்டமாகப் பேசிய ராம், விடுதலைப்புலிகள் மீதே அதற்கான குற்றத்தை முழுமையாகச் சுமத்தும் தொனியில் கருத்து வெளியிட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இங்கு ஒரு முக்கிய விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை, இன நெருக்கடி தொடர்பிலான இந்திய அனுகுமுறையை, தற்போதைய சமாதான முயற்சிகள் தொடர்பிலான தங்கள் அனுகுமுறைகளையெல்லாம், 1991 மே 21 க்குப் பின்னரான பின்புலத்திலேயே அதாவது சென்னைக்கு அடுத்ததாகவுள்ள பெரம்புதூரில் ராஜீவ் காந்தி தற்கொலைக் குண்டுப் போராளியினால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னரான இந்திய உணர்வு நிலைகளின் பின்புலத்தில் தான் ராம் நோக்கின்றார். 1991 க்குப் பின்னரான கால கட்டத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகள் தங்களை வலுப்படுத்திக் கொண்டதை தனது உரையின் பல இடங்களில் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கை அரசியலின் ஒவ்வொரு நிகழ்வுப் போக்கிலும் உள்ள நுண்ணிய அம்சங்கள் மீதெல்லாம் அக்கறை காட்டுகின்ற ராம், இலங்கை இன நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான தற்போதைய சமாதான முயற்சிகளில், பேச்சுவார்த்தைகளில் இந்தியா எந்தவிதத்திலுமே பங்குபற்ற முடி யாதென்பதை தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்தியாவில் ஒரு பயங்கரவாத இயக்கமாக விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்டி ருப்பதே இதற்குக் காரணம் என்று காரணம் கற்பிக்கும் ராம், அந்த விவகாரத்தில் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்வதற்கு இந்தியா தயாரில்லை என்பதைப் பிரகடனம் செய்கிறார். விடுதலைப்புலிகள் என்னதான் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றிருந்தாலும், மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு அக்கறை கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டாலும் நாட்டுப் பிரிவினை என்ற அடிப்படை நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் விலகவேயில்லை என்று உறுதிப்படக் கூறுகிறார் ராம்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்து இந்திய அமைதிகாக்கும் படை வெளியேறியதற்கு பின்னரான கால கட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் சீரடைந்ததன் விளைவாக வளர்த்தெடுக்கப்பட்ட பொருளாதார உறவுகள் குறித்து தனதுரையில் ராம் பெருமளவுக்கு குறிப்பிட்டி ருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்ததாக இலங்கையுடன் பெருமளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடாக இலங்கை இன்று விளங்குகிறது. இலங்கையில் கணிசமான இந்திய முதலீடு இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளின் மேம்பாட்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சி செய்த பங்களிப்பை ராம் வெகுவாகப் பாராட்டுகிறார்.

இதற்காக ஐ.தே.க. வையும் ரணிலையும் பாராட்டும் 'இந்து" பிரதம ஆசிரியர், சமாதான முயற்சிகள் தொடர்பில் இன்று ஐ.தே.க. எடுத்திருக்கும் நிலைப்பாட்டை வரவேற்கவில்லை. விடுதலைப் புலிகள் முன்வைத்திருக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின் அடி ப்படையில் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்; அதற்கு பரிபூரண ஆதரவு அளிக்கத் தயார் என்று, ஐ.தே.க. செய்திருக்கும் பிரகடனம் ராமின் மனதுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுபோலும். ராமின் பேச்சு முழுவதிலும் ஒருவரியைத் தவிர தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகள் - உரிமைகள் பற்றி அவர் எதையுமே பேசவில்லை.

விடுதலைப் புலிகளின் எந்தக் கோரிக்கைக்குமே இணங்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதில் அதீத அக்கறை காட்டிய ராம், அத்துடன் நின்றுவிடாமல், இலங்கையின் வடக்கு, கிழக்கின் நிலைவரங்களில் அடிப்படையில் தளமாற்றம் ஏதாவது இடம்பெறுமானால், இந்தியாவின் தற்போதைய இலங்கைக் கொள்கை தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுகிறார். அத்தகைய, அடிப்படை மாற்றம் எதுவுமே நிகழுமானால், இந்தியா பார்த்துக் கொண்டி ருக்காது என்று தென்னிலங்கைச் சிங்கள அரசியல் சமுதாயத்துக்கு ராம் தெம்பபூட்டுகிறார்.

இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும், பாக்குநீரிணையில் கூட்டு ரோந்தில் ஈடுபடவேண்டுமென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் யோசனைக்கு ராம் தனது பரிபூரண ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை இனநெருக்கடி, தொடர்பில் தமிழகத்தில் எந்தவித உணர்வு நிலைமாற்றமும் ஏற்படுவதற்கில்லை. தென்னிலங்கை அது குறித்து அஞ்சவே தேவையில்லை என்றும் ராம் தெம்பூட்டுகிறார். ஒருசில குழுக்களும் தமிழுணர்வு அரசியல் இயக்கங்களுமே குரலெழுப்புகின்றன. மற்றும்படி இலங்கைத் தமிழர் சார்புப் போக்கு என்பது தமிழகத்தில் இல்லை என்று கூறும் ராம், தனது பேச்சு முழுவதிலுமே இலங்கை அரசுக்கும் அரசுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய கட்சிகளுக்குமே தனது செய்தியை எடுத்துணர்த்துகிறார்.

தமிழகத்தில் திராவிட இயக்கம் வலுவிழந்த சூழலில், தமிழக அரசியல் சமூ கத்துக்கும் இலங்கையில் உள்ள தமிழ் இயக்கத்துக்கும் இடையேயான தொடர்பின் தற்போதைய நிலை குறித்த ராமின் கருத்துக்கள் வெறுமனே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடா? அல்லது திராவிட இயக்கங்களை அவற்றின் அடிப்படை உணர்வுப் போக்குகளில் இருந்து வலுவிழக்கச் செய்து விட்டதில் தமிழகப் பிராமணியத்தின் வெற்றி எக்காளமா? தமிழகத்தில் தமிழுணர்வு இல்லை என்பதை சிங்கள அரசியல் தலைமைத்துவங்களுக்கு சொல்லி வைக்கிறார் ராம். இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துபேசுபவர்கள் தமிழகத்தில் சக்திமிக்கவர்களாக இல்லை என்பதை ராம் கொழும்பில் பிரகடனம் செய்கிறார்.

தனது உரையில் ஒரு கட்டத்தில் ராம், இந்திய அரசுக்கு காஸ்மீர் விவகாரத்தில் எவ்வாறு விட்டுக் கொடுக்க முடியாதோ இதேபோன்றே இலங்கையின் வடக்கு, கிழக்கு விவகாரத்திலும் இலங்கை அரசுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்ற வகையிலான கருத்தை அழுத்தியுரைக்க முயற்சித்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் சொல்லும் ராம், உலகத் தலைவர்களின் தலைவன் என்று தனக்கு முடி சூடிக் கொள்ள ஆசைப்படும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு. கருணாநிதியின் நல்ல நண்பர். ராமின் கொழும்பு உரை குறித்து தமிழ்நாடு எந்த விதமான பிரதிபலிப்பைக் காட்டப் போகிறது? வைகோ, ராமதாஸ் என்ன சொல்லப்போகிறார்கள்?உண்மையிலேயே ராம், இந்தியாவுக்காகப் பேசுகின்றதைப் போலக் காட்டிக்கொண்டு, இலங்கை அரசுக்கும், அரசுக்கு வரக்கூ டிய கட்சிகளுக்கும் அறிவுரை கூறுவதைப் போன்று காட்டிக் கொண்டு, இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை அமுக்கும் நோக்கிலேய தனது குரலை ஒலிக்கிறார்.
இத்தனைக்கும் இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.


கடந்த ஆகஸ்ட்டில் இலங்கைக்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பொன். கந்தையா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்திய போது 'ஐக்கிய இலங்கைக்குள் சிறுபான்மையினங்களுக்கு குறிப்பாக தமிழ்பேசும் மக்களுக்கு கூடுதல்பட்ச சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு" என்று குறிப்பிட்டார். ராமின் உரையை நோக்கும்போது, அவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரா என்று கேள்வி எழுகிறது.

இலங்கை விவகாரத்தில் பத்திரிகைத்துறைக்கு அப்பால் எத்தனையோ, மைல்களைக் கடந்து சென்று இலங்கை அரசியல் அதிகாரவர்க்கத்தின் உற்ற நண்பனாகச் செயற்படும் ராம் யாருடைய குரல் -இந்திய அரசின் குரலா? இந்துப் பத்திரிகையின் குரலா? திராவிட இயக்கத்தைச் சீரழித்து விட்டதால் பெருமிதம் கொள்ளும் தமிழகப் பிராமணியத்தின் குரலா? அல்லது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தும் பிராமணக் குழுவின் குரலா?

நன்றி:- தினக்குரல்

Sunday, October 17, 2004

ஆனந்தசங்கரிக்கு தன்மானத்தமிழனின் மடல்

அன்புடன் ஆனந்தசங்கரி!

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நீங்கள் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகப் பத்திரிகை களில் வாசித்து அறிந்தேன்.பொதுத்தேர்தல் படுதோல்வியோடு, வெளிநாட்டுச் சுற்றுலா என்ற பெயரில் இங்கிலாந்து போன நீங்கள், மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி பெயரிலான கடிதத் தலைப்போடு உங் கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட் டீர்கள்.வெளிநாட்டில் ஏந்திய கைகளுக்குக் கிடைத்த சன்மானத்துக்கு கைமாற்றாக அங்கு ஏவப்பட்ட பணியை நீங்கள் ஆற்றுகின்றீர்கள் என்பது எங்களுக்குப் புரிகின்றது.

தலைவர் பிரபாகரனுக்கு அரசியல் விவகாரங் களில் ஆலோசனைக் கடிதம் வரையும் தகுதி யும், தைரியமும் உங்களுக்கு உள்ளதாக நீங் கள் கருதும் நிலை இருப்பது ஈழத்தமிழர்களின் துரதிஸ்டமேயன்றி வேறில்லை.கருணா என்ற தனிமனிதப் பிறழ்வுடன் - நம்பிக்கைத் துரோகியுடன் - ஒரு விடுதலைப் போராட்டத் தலைவரை இணங்கிப்போக ஆலோ சனை கூறுகின்றீர்கள்.கருணாவின் தரத்தில் இருக்கும் உங்களுக்கு ஜாரியான கருணாவுடன் நீங்கள் இணங்கிப் போவதன் வெளிப்பாடே இக்கோரிக்கையன்றி வேறில்லை.கருணாவின் கழுத்தில் விழக்கூடிய யமனின் பாசக் கயிற்றிலிருந்து கருணாவை விடுவித்தால், உங்கள் பக்கமும் யமனின் வருகை இருக்கும் என்ற பயத்திலிருந்து நீங்கி விடலாம் என நப்பாசை கொள்கின்றீர்கள் போலும்.

ஜயா சங்கரியாரே!
இப்போது நீங்கள் அரசி யலில் போக்கிடமற்ற அநாதை, வெறும் துரும்பு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கடிதத் தலைப் புத் தவிர, உங்களுக்குத் தடுப்புச்சுவர் வேறேது மில்லை. எனவே, உங்களுடன் மினக்கெடுவதற்கு புலிகளுக்கு தேவையோ, அர்த்தமோ, நேரமோ இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே, பயமின்றி உங்கள் பித்தலாட்டத்தை நீங்கள் தொடருங்கள், என்ன வேடிக்கை மனிதர் இவர்! என்று ஒரு விதூகனைப் பார்த்து, அனு பவிக்கும் வாய்ப்பு தமிழருக்குத் தொடரட்டும்.

கருணாவைப் போன்று பல துரோகங்களைத் தமது விடுதலைப் போராட்டத்தில் கண்டவர் தலைவர் பிரபாகரன், அந்தத் துரோகத் தூசு களின் பட்டியலில் மற்றொரு தூசாக வலம் வரும் தாங்கள், விடுதலை வேள்வியின் தாற் பரியம் புரியாமல் உங்களின் குள்ளநரித்தன மான அரசியலின் அங்கமாக அதைக் கருதி தத்துவம் பேச முனைகின்றீர்கள்.நீங்கள் கேட்பதை சிங்களவர்களும், முஸ் லிம்களும் தருவார்களா? என்று தலைவர் பிரபாவிடம் நீங்கள் உங்கள் கடிதத்தில் கேட் பதில் விந்தையில்லை.ஏனென்றால் கேட்டும், இரந்தும் பெறும் பிச்சைதான் உரிமை என நினைப்பவர் - கருதிச் செயற்படுபவர் - நீங்கள்.

இந்தியாவிடமும், பிற ஈழத்தமிழர் விரோத சக்திகளிடமும் ஏந்திப்பெற்ற பிச்சைக்காக நீங்கள் அப்படித்தான் கேட்க வேண்டும். வேறு வழியில்லை. நீங்கள் கேட்பதற்கு உடன்படும் ஏதேனும் அரசு, அதன்பின் பதவியில் நிலைக்கமுடியுமா? என்று தலைவரைப் பார்த்து வினாவுவதன் மூலம் அவர்கள் தரக்கூடியதை மட்டும் கேளுங் கள் என்கிறீர்கள்.
நல்லது. சங்கரி ஐயோவே! கடந்த ஐம்பது ஆண்டு காலம் ஈழத்தமிழரை ஏமாற்றி, நீங்களும் உங்களைச் சார்ந் தோரும் நாடாளுமன்றை அலங்கரிப்பதற்காக காலத்துக்குக்காலம் முன்வைத்த கோரிக்கை கள் எவையேனும் அவ்வப்போது இருந்த அரசு களால் நிறைவேற்றப்பட்டனவா? தரப்பட்டனவா? அவை தரமாட்டா என்பதற்காக நீங்கள் கேட்காமல் விட்டீர்களா? இடைக்கால நிர்வாகமே இன்று எட்டமுடியாது என்று இப்போது கூறும் நீங்கள் தானே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் னர் தனித் தமிழீழம் என்று பெரும் கதை அளந்தீர் கள். 2001 தேர்தல் வரை அதே கயிற்றை அவிழ்த்து விட்டீர்கள்.

தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிக ளையும் பொறுத்தவரை ஈழத்தமிழர்களுக்கு நியா யமானதை அவர்கள் கேட்கிறார்கள். கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தவறினால் பிடுங்கி எடுக்கவும் முடியும்; எடுக்கவும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அதை அவர்கள் கேட் கின்றார்கள்.இப்போது உயிரிழப்புப் பற்றி நீலிக்கண் ணீர் வடிக்கும் நீங்கள், அடுத்த மேதினம் தமி ழீழத்தில்! என்ற நிறைவேற்ற முடியாத விவ காரத்தை உங்களின் அந்நேரத் தலைவருடன் சேர்ந்து தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றலா கச் சுற்றிப் பேய்க்காட்டிய போது ஒரு தடவை சிந்தித்திருக்கலாம்.

உங்களைப்போன்று வாக்குகளுக்காக மணலைக் கயிறாகத் திரிக்கும் வாக்குறுதிகளை அவிழ்த்து விடுபவர்களல்லர் புலிகள்.சொன்னதைச் செய்யவும், செய்வதைச் சொல் லவும் திராணியும், வீரமும், வலுவும் பொருந்திய விடுதலைப் போராளிகள் அவர்கள்.அவர்கள் வெற்றுவேட்டு அரசியல்வாதிகளாக நினைத்து நீங்கள் பிரபலாபிப்பது உங்களின் அறியாத்தனத்தைக் காட்டுகிறதே அன்றி வேறில்லை.உங்கள் கடிதத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமாக நீங்கள் முதலைக் கண் ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பற்றிய புலிகளின் திட்டம், இலங்கை அரசு பரிசீலிக்கக்கூடிய ஒன்றல்ல என்றும் நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரே இந்த யோசனையைப் புலிகள் முன்வைத்து விட்டனர். அதுமட்டுமல்ல, அந்த யோசனையை தேர்தலில் ஒரு பிரேரணையாக முன்வைத்தே ஈழத்தமிழர் களின் பிரதிநிதிகள் போட்டியிட்டு தமிழ்மக் களின் ஏகோபித்த ஆதரவோடு தெரிவானார் கள். இந்தத் தன்னாட்சி அதிகாரசபை யோசனை ஈழத் தமிழர்களால் வாக்கெடுப்பு மூலம் அங் கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள். இன்று, அதற்கு நீங்கள் கொடுக்கும் பொருத்த மற்ற வியாக்கியானத்தை - தேர்தலுக்கு முன்னர் நீங்கள் கொடுத்திருப்பீர்களேயாயின், கடந்த பொதுத்தேர்தலில் உங்களுக்கு கிடைத்த ஐயாயி ரம் வாக்குகளும் ஐநூறாகியிருக்கும். தப்பி விட்டீர்கள் போங்கள்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்திய அரசமைப்பு மாதிரியில் தீர்வு என்பது பற்றியும் உங்கள் கடிதத்தில் கூறியிருக்கிறீர்கள். இந்தியத்தரப்பு வீசிய எலும்புக்கு நன்றியாக இதை யாவது நீங்கள் கூறாவிட்டால் உங்களுக்கா கத் தொடர்ந்து வேறு யார்தான் இருப்பார்கள்? எனவே, இனத்தை விற்றாவது உண்ட வீட்டுக்கு நன்றி செய்ய முயல்கிறீர்கள். வாழ்க உங்கள் நன்றிமறவாப் பண்பு!வீரர்களோடுதான் எட்டப்பர்களும் வளர்ந் தார்கள். அதுதான் சரித்திரம் நமக்குத் தரும் கடந்தகால அனுபவம்.தந்தை செல்வாவுடனும், ஜீ.ஜீ.பொன்னம்பலத் தோடும் உறவாடிப் பழகியதை நீங்கள் உங்க ளுக்குச் சான்றிதழாகப் பட்டியலிடும்போது எட்டப் பர் கதைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

இறுதியாக, நாம் பழைய விடயங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்த வேண் டும் எனத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கின்றீர்கள்.அப்படிப் பேசுவதை நிறுத்தினால், உங்கள் துரோகச் செயல்களும் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்று எண்ணுகிறீர்;கள் போலும்.எத்தனை தடவை நீங்கள் மண்டியிட்டாலும் நீங்கள் புரிந்தசெயல்கள் - அதுவும் நீங்கள் அலங்கரித்த பதவி, உங்களுக்குத் தமிழினம் தந்த மரியாதை மற்றும் பொறுப்பு - ஆகியவற் றுக்கு மத்தியில் நீங்கள் செய்த வேலைகள், வரலாற்றில் என்றும் உங்களுக்கு மன்னிப்புத் தர இடமளிக்கா என்பதே உண்மை.

பிராயச்சித்தமே செய்யமுடியாத வகையில் பிழைமேல் பிழை - தவறு மேல் தவறு - புரிந்துவரும் நீங் கள், உங்களைப் பொறுத்தவரை ஆனந்தசங்கரி யாக இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழருக்கு துக்க சங்கடமே!

அன்புடன் தன்மானத் தமிழன்.

Sunday, October 03, 2004

ஈழத்தின் அழகு.

ஈழத்தின் அழகு தனி அழகு.