Saturday, August 13, 2005

கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன?

திர்காமர்: இலங்கையிலே இருக்கும் அமைச்சர்களில் தமிழும் தெரியாத சிங்களமும் தெரியாத ஒருவர் என்றால் அவர் கதிர்காமராகத்தான் இருப்பார்.
அவரின் ஒரு சிறு நீரகம் ஒரு பெளத்த பிக்குவினால் தானமாக வழங்கப்பட்டது தமிழர்களுக்கு எதிராக அவர் செய்த சேவைகளுக்காக.யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக்(தினமலர் வழமை போலவே தவறான தகவல் தருகிறது) கொண்ட கதிர்காமரின்
தந்தை ஒரு இராணுவ அதிகாரி.பண்டாரநாயக்கா குடும்பத்துக்கு மிகவும்
வேண்ணியவர்.

கொழும்பே அவரின் பிறப்பிடம்.சந்திரிகாவினால் திடீரென அரசியலுக்குள்
கொண்டுவரப்பட்ட கதிர்காமர்,சந்திரிகா எதற்காக அவரை வெளிவிவகார
அமைச்சராக்கினாரோ அந்த நோக்கத்தினை சிறப்பாக நிறைவேற்றினார்.
இலங்கையின் வரலாற்றினை பார்த்தால் வெளிவிவகார அமைச்சர்கள் பலர்
சிறுபான்மையினராகவே காணப்பட்டனர்.இதில் ஏ.சி.எஸ்.ஹமீட் 17 ஆண்டுகள்
வெளிவிவகார அமைச்சராக பணியாற்றினார். இதன் நோக்கம் கூட மத்திய
கிழக்கு நாடுகளில் இருந்து பல சலுகைகளை பெறும் நோக்கில் ஜே.ஆர் அவரை மந்திரியாக்கினார். அதன் பின்பு கதிர்காமர்.பெயரளவில் தமிழரான
கதிர்காமரை வெளிநாட்டுமந்திரியாக்கினால் பிறநாடுகள் ஒரு
"தமிழ்" வெளிவிவகார மந்திரி புலிகள் பற்றி சொல்வதை காது கொடுத்து கேட்கும் என்பதாகும். இதற்கு கனதியும் அதிகம் என்றும் சந்திரிகா நம்பினார்.இதில் சில வெற்றிகளும் பெற்றார்

நாம் கோடரிக்கு பிடியினை(காம்பு) ஒரு மரத்தில் இருந்து போட்டுவிட்டு அந்த மரத்தையே வெட்டுவதில்லையா? அதுதான் இங்கு நடந்தது.

புதினம் இணையத்தளம் இது பற்றி ஒரு கண்ணோட்டம் தருகிறது.
புதினம் இணையத்தளம் தரும் "கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன?" இங்கே வாருங்கள்.

Friday, August 05, 2005

சனி,ஞாயிறு வந்தால் முகத்தில் சிரிப்பு


ந்த வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை இங்கு கனடாவில் விடுமுறை பாருங்கோ .சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து மூன்று தினங்கள் விடுமுறை.அதை இங்கு லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்.ஏப்பிரல் மாதத்தின் பின்னர் 4,5 மாதங்களிற்கு இந்த லாங்வீக்கெண்ட் வரும்.திங்கட்கிழமை எண்டு இல்லை.வெள்ளிக்கிழமையும் வரும்.ஆனால் பொதுவாக வார இறுதிநாட்களை ஒட்டியே வரும்.கனடாவில் விடுமுறை நாட்களை எண்ணினால் இரண்டு கைகளில் எண்ணலாம்.அப்படி மிகவும் குறைவு. இதனால் எல்லோரும் இப்படியான விடுமுறை தினங்கள் எப்போது வரும் என்று எதிர் பார்த்திருப்பார்கள்.ஜந்து நாள் வேலை இரண்டு நாள் ஓய்வு இது சரிதான்.அனால் இங்கு 7 தினங்களும் கடுமையாக உழைபவர்களும் இருக்கின்றனர்.இப்படிஉழைப்பவர்கள் பொதுவாக கனடாவிற்கு வந்தேறுகுடிகளாக வந்தவர்களாக இருப்பதை காணலாம்.

எனது நண்பன் ஒருவன் இருக்கிறான் புதன் கிழமை எண்டால் சொல்லுவான் அப்பாடா புதன் கிழமை வந்திட்டுது.ஒருமாதிரி இந்த வாரமும் போய்விடும் எண்டு.இனி திங்கட்கிழமை இழுத்து பறித்துக் கொண்டு அலுவலகம் வந்துவிடுவான்.பின்பு புதன்கிழமை வர அதுமாதிரி சொல்லிக் சொல்லிக் கொண்டு ,இப்படியே சொல்லி சொல்லியே 14 வருடங்களாக கனடாவில் இருக்கிறான்.இப்படி பலர் இருக்கின்றனர். சரி நீங்கல் எப்படி எண்டு யாரோ கேக்கிறமாதிரி காதில் விழுது.சும்மா என்னைப்பற்றி எல்லாம் சொல்ல கூடாது.சரி பரவாயில்லசொல்லுறன்.நான் போனவாரமே திங் பண்ணீட்டன் திங்கட்கிழமை விடுமுறை.இந்தவாரம் 04 நாள்தான் வேலை அதனால் இந்த வாரம் ஒரு சோர்ட் வாரம் எண்டு. இது என்னைபோல சிலரின் கவலை

இப்படி சிலருக்கு அலுவலகம் வருவது பிரச்சனை எண்டால் இன்னும் சிலருக்கு சனி,ஞாயிறுகளில் அலுவலகம் இல்லை என்பது கவலை.என்ன கடும் உழைப்பாளியோ எண்டு கேட்கிறமாதிரி இருக்கு.நீங்கவேற. கடுமையா "அவவுடன்" கடலை போடுற பலருக்கு இழப்புதானே பின்ன.இது இளந்தாரி
மாரின் கவலை.

இதிலே இன்னொரு வகையான ஆக்கள் இருக்கினம் பாருங்கோ.அவைக்கு அலுவலக கணினிக்கு முன்னால் இருந்தால் தான் கற்பனை பிச்சுக்கொண்டு ஓடுமாம்.வலைப்பதிவு,பின்னூட்டம் எல்லாம் அலுவலக கணினியில்தானாம்.வீட்டில்கணினி பார்க்க நேரமே இல்லையாம்.அப்படி இருந்தாலும் கற்பனை வராதாம்.இப்படியான் ஆட்களை வேலைக்கு வச்சிருக்கிற முதலாளிமார் இப்படி லீவுகள் வாறபடியால் தான் ஒருமாதிரி தப்பி பிழைக்கினம் பாருங்கோ.
ஆரது அந்தநாலெழுத்து வலைபதிவாளரின் பெயரெல்லாம் சொல்லுறது

கனடாவந்த பிறகுதான் லீவின்ற அருமைதெரியுது.இலங்கையில இருகேக்க வருசத்திலே பாதி நாள்தான் வேலை பாருங்கோ.மீதி நாள் என்ன ஆச்சு எண்டு கேக்கிறியளோ?அது எல்லாம் லீவுகள் பாருங்கோ.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருநாள் பெளர்ணமி விடுமுறை வரும் பாருங்கோ.சிங்களத்திலை போயா எண்டு சொல்லுவினம். இலங்கையிலே இருக்கேக்க நித்திரையில எழுப்பி கேட்டாலும் எந்தமாதத்தில் என்ன தினத்தில் பெளர்ணமி விடுமுறை
வரும் எண்டு கலண்டரை பாக்காமலே சொல்லுவனாக்கும்.

அதைவிட இந்து,முஸ்லிம்,பெளத்த விடுமுறை எண்டு சொல்லி பல விடுமுறைகள்.இதனால் உலகத்திலே ஆகக்கூடிய விடுமுறைகள் கொண்ட நாடு எண்டு சொன்னால் அது இலங்கை தான் பாருங்கோ.கிட்டடியிலேபாராளுமன்றத்திலே விவாதம் கொண்டுவந்தவை இப்படி விடுமுறையளை குறைக்கிறது சம்பந்தமாக ஒரு விவாதம்.
அமைச்சர்கள், உறுப்பினர்கள் சொல்லிப்போட்டினம் லீவுகளை குறைக்கவேண்டாம் எண்டு.அவைக்கு தெரியும் தானே வேலைக்கு வாறதும் ஒண்டுதான் வீட்டில் இருக்கிறதும் ஒண்டு தான் எண்டு.ஏனெண்டால் பாம்பின் கால் பாம்பறியும் தானே.


இஞ்ச இந்த படத்தை ஒருக்கா பாருங்கோ.சரியாக சனி,ஞாயிற்றுக்கிழமை
கிழ்மைகளில் தான் முகத்தில் சிரிப்பே வருகுது.
இதில் எனதும் உங்களினதும்?? மனச்சாட்சி தெரிகிறதோ?
ஆராருக்கு தொப்பி(முகமூடி) அளவா இருக்கோ அவரவர் போட்டுக்கொள்ளுங்கோ.நான் மேல சொன்ன மாதிரி..முகமுடி அண்ணாச்சி தப்பா எடுக்காதீங்கோ. உங்களை ஒண்டும் சொல்லேல்ல அண்ணாச்சி.

முதலாவது படத்திலை பாத்திங்களோ.
அய்யாமருக்கும் தம்பிமாருக்கும் இடையே
நடக்கிற போட்டியை .என்ன யோசிக்கிறியளோ?
எனக்கென்னவோ இதுவும் சரியாகவே படம் போட்டிருப்பதாக தோன்றுகின்றது.நீங்கள் என்ன சொல்றிங்கள்?

Thursday, August 04, 2005

உண்மையில் எது பிரச்சனை?

ங்கிலாந்தின் ஜ.ஆர்.ஏ அமைப்பானது தனது ஆயுதப்போராட்டத்தினை
கைவிட்ட நிலையில் அதே போலவே இலங்கையிலும் புலிகள் ஆயுதக்களைவினை செய்யவேண்டும் என்று அரசாங்கம் கேட்டுள்ள நிலையில், ஆயுதங்களை புலிகள் கைவிட சர்வதேசத்தின் அழுத்தங்கள் புலிகள் மீது போதுமானதாக இல்லை என இலங்கையின் நலன் விரும்பியும் இலங்கைக்கு இலவச ஆலோசனை கூறிவரும் "இந்து" பத்திரிகை கவலைப்பட்டு கண்ணீர்விட்டுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிவரும் "தினக்குரல்" பத்திரிகையின் இன்றைய ஆசிரிய தலையங்கம் மேற்படி விடையங்கள் தொடர்பாக அலசி நல்லதொரு
பதிலை விடையாக தந்துள்ளது.அதை இங்கு தருகிறேன்.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் ஆனால் எருமை மாட்டுக்கு?

தினக்குரல் பத்திரிகையின் தலையங்கம்:-

இலங்கையில் சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் போர்நிறுத்த உடன்படிக்கை சீர்குலைந்துவிடக் கூடாது என்றும் அக்கறை காட்டும் சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்ற அளவுக்கு விடுதலை புலிகளுடனான விவகாரங்களில் கடும் போக்கைக் கடைப்பிடிக்காமல் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கிறது என்ற அபிப்பிராயமொன்று தென்னிலங்கையில் வலுவடைகிறது. பாதுகாப்பு நிலைவரம் படுமோசமாகிக் கொண்டு போவது குறித்து விசனம் தெரிவித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் 2003 டோக்கியோ மகாநாட்டுக் கூட்டுத் தலைமை (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வே) கடந்த மாத நடுப்பகுதியில் விடுத்திருந்த அறிக்கை அரசாங்கத்தையும் விடுதலை புலிகளையும் சமத்துவமாக நோக்குவதாகக் கூட அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

கொலைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை புலிகள் இயக்கம் அதன் போராளிகளினால் மேற்கொள்ளப்படும் சகல கொலைகளையும் நிறுத்த வேண்டும். போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்க இலங்கை அரசாங்கம் சகல பரா இராணுவக் குழுக்களும் நிராயுதபாணிகளாக்கப்பட்டு, வன்செயல்களுக்கு வழிவகுக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுத பாணிகளான விடுதலை புலிகளின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்' என்று கூட்டுத் தலைமையின் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அரசாங்கம் கூறுவது போன்று, போர்நிறுத்த உடன்படிக்கைக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் சம்பவங்களுக்கு விடுதலை புலிகள் மாத்திரம் காரணமல்ல, அரசாங்கமும் அதன் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச சமூகம் கருதுவதன் பிரதிபலிப்பாகவே அந்த அறிக்கையை நோக்க வேண்டியிருந்தது. அதையடுத்து தன்னைச் சந்தித்த கூட்டுத் தலைமை நாடுகளின் இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க, போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் விடுதலை புலிகளுடன் மீளப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதாக அறிவித்தார். தற்போதைய நிலைவரங்களுக்கு வழிவகுத்த சம்பவங்களில் அரசாங்கத்துக்கு குறிப்பாக, பாதுகாப்பு படைகளுக்கு இருக்கின்ற தொடர்புகளை மறைக்கும் அல்லது மறுதலிக்கும் நோக்குடனேயே திருமதி குமாரதுங்க இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.

இதற்குப் பிறகு இரு வாரங்கள் கடந்த நிலையில், போர்நிறுத்த உடன்படிக்கை எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்களில் ஒருவித தணிவை ஏற்படுத்தக் கூடியதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முயற்சிகள் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால், போர்நிறுத்த உடன்படிக்கையுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் எந்தளவுக்கு பயனுறுதியுடைய ஊடாட்டத்தையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கூறக் கூடியதாக இல்லை. இத்தகையதொரு பின்புலத்திலேயே, விடுதலைப் புலிகள் மீது நெருக்குதல்களைக் கொடுக்காமல் நெகிழ்வுத் தன்மையுடன் சர்வதேச சமூகம் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படும் கருத்துகளை அவதானிக்க வேண்டியிருக்கிறது.

வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக மேற்கொண்டு வந்த ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக ஐரிஷ் குடியரசு இராணுவம் (ஐ.ஆர்.ஏ.) அறிவித்ததையடுத்து இலங்கையில் விடுதலை புலிகளும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதியின் சுயசரிதம் நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றுகையில் ஐ.ஆர்.ஏ.யின் அறிவிப்பை வெகுவாகப் பாராட்டிய வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், இலங்கையில் விடுதலை புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படாதமை குறித்து கவலை தெரிவித்திருத்தார். `தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் மற்றும் எமது விவகாரத்தில் பங்கொன்றை ஆற்றும் சர்வதேச சமூகம் உட்பட இலங்கை நெருக்கடியில் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஆயுதங்களைப் பயன்பாட்டில் இருந்து விலக்கி வைப்பது அல்லது ஆயுதக் களைவு தொடர்பில் குறிப்பிடுவதை மிகுந்த கவனத்துடன் தவிர்த்திருக்கின்றன' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்றே ஐ.ஆர்.ஏ.யின் அறிவிப்பு குறித்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆசிரிய தலையங்கம் தீட்டிய இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான சென்னை `இந்து' வன்முறைப் பாதையைக் கைவிட வேண்டுமென்று விடுதலை புலிகள் மீது போதுமான சர்வதேச நெருக்குதல்கள் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு முழுமையான ஒரு சிவில் அமைப்பாக மாறும்வரை இலங்கை நெருக்கடிக்கு இறுதித் தீர்வைக் காண முடியாது என்று கதிர்காமர் கூறிய அதேதொனியில்
`இந்து'வும் விடுதலைப் புலிகள் தங்களை மாற்றிக் கொள்ளாதவரை, நிலையான சமாதானத்தைக் காண்பதற்கான இலங்கையின் பிரயத்தனங்கள் பயனளிக்காத நிலையே நீடிக்கும் என்று அந்த ஆசிரிய தலையங்கத்தில் தெரிவித்திருக்கிறது. சர்வதேச சமூகம் விடுதலை புலிகள் மீது போதிய நெருக்குதலைக் கொடுக்கவில்லை என்பதே இந்துவின் விசனம்.


உண்மையில், விடுதலைப் புலிகள் மீது சர்வதேச சமூகம் போதியளவு நெருக்குதல்களைப் பிரயோகிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் அதன் விளைவாக அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கின் கணிசமான பிரதேசங்கள் வந்ததையும் ஒரு பிரச்சினையாகக் காண்பிக்கும் நோக்குடனானதே. ஆனால், அவர்களின் இராணுவக் கட்டமைப்பு அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாகத் தீர்க்கப்படாத ஒரு அரசியல் நெருக்கடியின் தவிர்க்கமுடியாத உருவாக்கம் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். இலங்கை இனநெருக்கடியை சர்வதேச மயப்படுத்திய விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டமல்ல உண்மையான பிரச்சினை, அந்தப் போராட்டத்துக்கான நிர்ப்பந்தத்தை தோற்றுவித்த கொழும்பு அரசாங்கங்களின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையே யாகும்.

Wednesday, August 03, 2005

ரொரண்டோவில் பாரிய விமான விபத்து.

இன்று மாலை 4.30 மணிக்கு
279 பயணிகளுடன் ரொரன்ரோ பியர்சன் சர்வதேச வானூர்தித் தளத்தில் தரையிறங்க முற்பட்ட ஏயர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எயர் பஸ் 340 ரக வானூர்தியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது வானூர்தியில் பெரியளவில் தீப்பிடித்தபோதும் பயணிகள் எவருக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியத்தில் இருந்து கடும் காற்றும் இடிமுழக்கத்துடன் கூடிய மழையும் பெய்து கொண்டிருந்தது ரொரண்டோவில். அப்படி இருந்த நிலையில் தரையிறங்கமுற்பட்ட இந்த விமானம் இடிமின்னல் காரணமாக
விபத்துக்கு உள்ளாகியது.

401 அதிவிரைவு நெடுஞ்சாலை வழியே சென்றவர்கள் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை காணமுடிந்ததாக கூறினார்கள்.
நல்லவேளையாக விமானப்பயணிகளுக்கோ அல்லது நெடுஞ்சாலை வழியே
சென்றவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை.விமானப்பயணிகளுக்கு காயம்
மட்டும்தான்.

விமான நிலையம் இவ் நெடுஞ்சாலைக்கு அண்மையிலேயே இருப்பது
குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு:-

www.ctv.ca

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1937&Itemid=43

Saturday, July 30, 2005

தமிழ்நெட்டின் கருத்தோவியங்கள்!

தமிழ்நெட் இணையத்தளம் அண்மைக்காலமாக கருத்தோவியங்களை(cartoons)
தனது தளத்தில் இட்டு வருகிறது .மிகவும் அழகான வர்ணத்தில் இலங்கை
நிலவரங்களை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் இந்த கருத்தோவியங்களை (cartoon என்பதை தமிழில் கேலிச்சித்திரம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை) காண இங்கே வாருங்கள்.

http://www.tamilnet.com/cartoon.html?fid=43848

http://www.tamilnet.com/cartoon.html?fid=43485

http://www.tamilnet.com/cartoon.html?fid=43393

http://www.tamilnet.com/cartoon.html?fid=43051

http://www.tamilnet.com/cartoon.html?fid=42863

அதைப் போலவே
வலையுலகில் மூனாவும் தனது கருத்தோவியங்களை பதிந்து வருகிறார்.
அரசியல் ரீதியான கருத்தோவியங்களை கிறுக்கல் வலைப்பதிவிலும் பொதுவான
விடயங்களை துகிலிகை வலைப்பதிவிலும் பதிந்து வருகிறார்.அவருடைய
ஓவியங்களை பார்ப்பதுடன் ஒருவரி பாராட்டினையும் தெரிவித்து விடுங்களேன்.

Friday, July 29, 2005

தமிழ் தேசிய தொலைக்காட்சி தென் ஆசியா நோக்கி..

இந்த வருடம் மார்ச் 26 ந் திகதி தனது ஒளிபரப்பினை ஆரம்பித்த தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது இன்றைய திகதி வரையில் ஜரோப்பிய நாடுகளில் மட்டுமே பார்க்கமுடியும். வருகின்ற ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் த.தே.தொலைக்காட்சியானது தனது ஒளிபரப்பினை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஒளிபரப்பவுள்ளது.

தாயக நேரம் பி.ப 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை (GMT 13.30-15.30)தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்கள் இந்த ஒளிபரப்பினை கண்டுகளிக்கலாம் என கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமது வியக்கத்தக்க பல இராணுவ நடவடிக்கைகள் மூலம் போராட்டத்தினை நகர்த்திச் சென்ற புலிகள் இப்போதைய சமாதான காலத்தில் தமது சாதுர்யமான பல இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் உலகை திரும்பிப் பார்க்கவைத்திருக்கின்றனர்.

அத்துடன் போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள்,இன்றைய சமாதான காலசெயற்பாடுகள்,தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படி பலவற்றை
உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்திருக்கின்றனர்.

இன்றைய சமாதான காலகட்டத்தில் அவர்கள் சந்தித்த பல நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பலநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் பல நாடுகளுக்கு சென்று பெற்ற அனுபவங்களூடாக இன்றைய உலகில் ஊடகங்களின் சக்தியினை அவர்கள் தெளிவாக புரிந்திருக்கின்றனர் என்பது அவர்களின் அண்மைக் காலநடவடிக்கைகள் உணர்த்துகின்றன.அது அச்சு ஊடகங்களாக இருந்தாலும்சரி இலத்திரனியல் ஊடகங்களாக( தொலைக்காட்சி,வானொலி,இணையம்)இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் அவர்கள் இன்று கால் பதிக்க தொடங்கியிருக்கின்றனர்.அதில் ஒன்றுதான் இந்த சாட்டலைட் தொலைக்காட்சி.

இன்றைய உலகில் ஊடகங்களின் வலிமை என்பது எல்லொருக்குமே தெரிந்த ஒன்றுதானே.ஆப்கான் யுத்தம்,இராக் யுத்தம்,போன்றவற்றில் நாம் பார்த்தது தானே.யுத்தத்தின் போக்கையே மாற்ற இன்று ஊடகங்களால் முடியும். இது கூட நாம் அறிந்ததே.

இன்றைய நாட்களில் ஊடகங்கள் என்னதான் நடுநிலமை வேடம் போட்டாலும் அவற்றின் முதலாளிகளின் அல்லது பணியாளர்களின் அல்லது தாம் சார்ந்த நாடுகளின் நலன்களையே அவை முன்னிலைப்படுத்தும்.அவற்றுக்கு எதிரானசெய்திகளை அல்லது கருத்துக்களை அவை வெளிப்படுத்த மறுப்பதுடன் சில வேளைகளில் தமக்கு சார்பாக செய்திகளை திரிப்பதும் உண்டு. இதில் உலகின் புகழ்பூத்த சில ஊடகங்களும் விதிவிலக்கில்லை.

கடந்த காலங்களில் இலங்கையில் இதுதான் நடந்தது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைப்பெற்ற பல சம்பவங்கள் இலங்கை ஊடகங்களால் மறைக்கப்பட்டன அத்துடன் சிலவற்றை திரித்தும் வெளியிட்டனர்.இதில் அரச ,தனியார் ஊடகங்களென்ற பேதங்கள் இருக்கவில்லை.அப்படியும் சில செய்திகள் வெளிவந்தநிலையில் போட்டதுதான் பத்திரிகைதணிக்கை என்ற பெரியதொரு பூட்டு.

ஆரம்ப நாட்களில் புலிகளின் கையில் இருந்தது பத்திரிகை ஒன்றுதான்.அதுகூட யாழப்பாணம் மற்றும் வன்னியின் சில பகுதிகளுடன் முடங்கவேண்டிய நிலை. இப்படியான நிலையில் பரந்து பட்ட அளவில் செய்திகளை கொண்டு போகவேண்டிய தேவை ஏற்பட்ட போது வந்துதான்"புலிகளின் குரல்" வானொலி.ஆரம்பத்தில் யாழப்பாணத்தில் மட்டும் கேட்க முடிந்த புலிகளின் குரல் வானொலி இன்று வன்னியில் இருந்து ஒலிபரப்பாகிறது.

இன்று,திருகோணமலை,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் கேட்கமுடிவதுடன் இந்தியாவின் சில பகுதிகளிலும் கேட்கமுடியும்.

அத்துடன் 2000ம் ஆண்டிலிருந்து என்று நினைக்கிறேன் "தேதுன்ன" என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலி தனது சிங்கள மொழி ஒலிபரப்பினையும் ஆரம்பித்து சிங்கள மக்களுக்கு தமது நோக்கங்கள்,கொள்கைகள்,செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வசதிசெய்ததுடன் இலங்கையின் அரச,சிங்களஆங்கில ஊடகங்களின் முகத்திரையினை கிழிக்க ஆரம்பித்தது.பல சிங்கள மக்கள் மட்டும் அல்ல இராணுவத்தினர் கூட இதன் மூலம் சரியான களநிலவரங்களை அறிந்து கொண்டனர்.

1900 ஆம் ஆண்டுக்கு முன்னர் "நிதர்சனம்"என்ற பெயரில் சிலமணிநேர தொலைக்காட்சி ஒலிபரப்பினை புலிகள்நடத்தியதும் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய படையினரால் அவை அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


இப்போது புலிகளின் குரல் வானொலி இணையத்தின் வாயிலாக உலகெங்கினும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. புலிகள் "புலிகளின் குரல்"வானொலியினை நடாத்திவருவதுடன் "தமிழீழ வானொலி" என்று இன்னுமொரு வானொலி சேவையினையும் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இரண்டினையும் இணையத்தின் வாயிலாக கேட்கமுடியும்.அத்துடன் வன்னியில் இருந்து "ஈழநாதம்" எனும் பத்திரிகையினையும் மட்டக்களப்பில் இருந்து ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது.அதனையும் இன்று இணையத்தின் வாயிலாக பார்க்கலாம்.

அத்துடன் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான "புலிகளின் குரல்" இன்று இணையத்தில் கிடைக்கிறது.மேலும் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவினரின் "அருச்சுணா" இணையத்தளம்.அதுபோலவே மேலும் பல துறைகளும் கூட இணையத்தில் கிடக்கிறது. இன்று கிடைக்கும் வசதிகள், வாய்ப்புக்கள்,யுத்தநிறுத்தம் போன்றவை இதற்கு துணை நிற்பதுடன்,புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் பங்களிப்பையும் இதில் காணமுடிகிறது. இணையம்வழி இவை வருவதற்கு இதுவரையில் தடையில்லை.த.தே.தொலைக்காட்சி ஜரோப்பாவில் ஒளிபரப்பப்பட்ட வரையில் சரி. இப்போது கிழக்காசியா எண்டால் கண்டிப்பாக இலங்கையில் தெரியும். இந்தியாவிலு........ம் தெரியும்.

ஆக அங்குதான் நிற்கிறான் சூரியன்.இனி பெரியாண்ணன் என்ன சொல்லப்போகிறார்?அம்மாக்கள் என்ன சொல்லப்போகின்றனர்?இன்று வெள்ளமென இலங்கை,இந்தியா நாடுகளை நோக்கி பாய்ந்துவரும் மேற்குல நாட்டு ஊடகங்கள் தராத பாதிப்புக்களை அல்லது பாதிக்காத இறையாண்மையினை இந்த ஒளிபரப்பு பாதிக்கும் என எழும் குரல்களை நாளையிலிருந்து கேட்கலாம்.நிச்சயமாக கேட்கலாம்.

கண்டிப்பாக எதிர்ப்புகள் வரும்.எதிர்ப்புக்களையும் மீறி ஒளிபரப்புவார்களா?அல்லது ....... எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.சில வாரங்களில் விடை கிடைக்கும்.


இன்று இணையத்தில் கிடைக்கும் புலிகளின் தளங்கள்.

புலிகளின் சமாதான செயலகம்.

"விடுதலைப்புலிகள்" பத்திரிகை

ஈழநாதம்.

ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு.

"புலிகளின் குரல்" வானொலி

நிதித்துறை

நீதித்துறை.

விளையாட்டுத்துறை

தினசரிச் செய்திகள்.

ஈழம்வெப்

"அருச்சுணா" ஒளிக்கலைப்பிரிவு



Sunday, July 24, 2005

சில நேரங்களில் சில நினைவுகள்.





1983 ஜூலையில் இலங்கை எங்கினும் நடைபெற்ற தமிழர்கள் மீதான வன்முறைகளின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை.இப்போது இருக்கும் வசதிகள்அன்றைய நாட்களில் இருந்திருக்குமானால்இன்னும் நிறைய படங்கள்,விபரங்கள் எமது வருங்கால சந்ததிக்கு கிடைத்திருக்கும்.ஆனால் தூரதிர்ஸ்டமாக 83 இன வன்முறை தொடர்பான புகைப்படங்கள் அரிதாகவே இருக்கின்றன.செய்திகள் வந்த அளவு புகைப்படங்கள் பெரிதாக இல்லை.கொலைவெறிதாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எந்த தமிழனாவது கமராவைத் தூக்கிக்கொண்டுபோய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கமுடியாதல்லவா?அதுதான் 83 ம் ஆண்டு நடந்தது.

வெளிவந்த படங்கள்கூட பல பிறநாட்டு பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்டது என்பது அறிந்ததே.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையினர் நிறைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல புகைப்படங்களை சேர்த்துவைத்திருந்ததாகவும் ஆனால் பின்னாளில் இலங்கை,இந்தியப் படையினரினரால் ஈழநாடு பத்திரிகை தீக்கிரையாக்கப்பட்டபோது நிறைய படங்கள் அழிந்து போனதாகவும் நான் கேள்விப்பட்டதகவல்கள் சொல்கின்றன.

நான் கூட நிறைய புகைப்படங்கள்இப்படியான சம்பவங்கள் தொடர்பாக சேர்த்துவைத்திருந்தேன்,ஆனால் ஊரைவிட்டோடி அகதியாகி வேறு ஊரில் வாழ்ந்துபின்பு அந்த ஊரையும் விட்டோடி வேறு ஊரில் வாழ்ந்துபின்பு அங்கிருந்தும் இடம்பெயர்ந்து இப்படி நாடுகள் நகரங்கள் தாண்டி இப்போது இந்த தேசத்தில் என்னிருப்பு.இப்படி ஓடி,ஓடி வந்ததில் நான் சேகரித்த புகைப்படங்கள் யாவும் என்கை விட்டு போய்விட்டன.சிலவற்றினருமைஅவை எம்மிடம் இருக்கும் போது தெரிந்தாலும்நாம் அவற்றை சரியாக உணருவதில்லை.ஆனால் அவை எமை விட்டு அகன்றபின்னர் தான் அவற்றின் அருமை எம் மீது இருள் மாதிரி கவிகின்றது.இப்போது எனக்கு ஒரு பாடல் வரி ஞாபகத்தில் வருகிறது.
இது கூட.....................

"அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்"