Sunday, November 27, 2005

தேர்தல் பகிஷ்கரிப்பு!

சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலை குழப்பிவிட்டுள்ள தேர்தல் பகிஷ்கரிப்பு

* தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இனவாதக் கோஷத்தை சற்று அடக்கி
வாசிக்க நிர்ப்பந்திக்கப்படும் ஆளும் தரப்புக் கட்சிகள்!



ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தமிழ்த் தேசம் தேர்தலைப் பகிஷ்கரித்தமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, சிறிய பெரும்பான்மையினால் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அணியினர் இனவாத அரசியலை முன்வைத்த அணியினராக இருந்தமையினால், தமிழ்த் தேசத்தின் பகிஷ்கரிப்பு காரணமாகத்தான் வெற்றியடைந்தோமென வெளியில் கூறுவதற்கு மிகவும் சங்கடப்படுகின்றார்கள்.

ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தங்கள் இனவாதக் கோஷங்களைச் சற்று அடக்கியே வாசிக்கின்றார்கள் ஜே.வி.பி.யினர்.முழுமையாகவே மௌனமடைந்துவிட்டனர் போலவே தெரிகின்றது. புலிகள்-ஐ.தே.க. கூட்டுப் பற்றிக் கற்பனைக் கதைகளையெல்லாம் சிருஷ்டித்தவர்கள் இன்று வாயே திறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மறு பக்கத்தில் வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையொப்பமிட்டுத் தருமென நினைத்து ஏமாந்த ரணில் விக்கிரமசிங்க அணியினர், கோபம் உச்சந்தலைக்கேறிய நிலையில் ஏதோவெல்லாம் பிதற்றத் தொடங்கியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தனித்துப் போட்டியிடவில்லை. அவருக்குப் பின்னால் சர்வதேச ஆதிக்கச் சக்திகள் அனைத்தும் நின்றன. இந்திய-அமெரிக்க உறவின் காரணமாக இந்தியாவும் இறுதி நேரத்தில் ரணிலுக்குப் பின்னால் நின்றதாகவே செய்திகள் வந்தன.

கத்தோலிக்க மதபீடம் உட்பட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் பின்னால் நின்றன. இவையனைத்தும் தமிழ்த் தரப்பிற்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தும் தமிழ்த் தேசம் தனது கொள்கை வழிநின்று மாறவில்லை. விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பகிஷ்கரித்தன. விடுவிக்கப்படாத பிரதேசங்களில் பல்வேறு அழுத்தங்களிலிருந்தும் கூட பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர். கிழக்கில் பகிஷ்கரிப்புப் பிரசாரம் குறைவாகவிருந்தது. அதேவேளை, அழுத்தங்கள் வலிமையாகவிருந்தன. ஆனாலும், பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர்.

தமிழ்த் தேசத்தின் கத்தோலிக்க ஆயர்கள் வெளியழுத்தங்கள் காரணமாகவும், தமிழ்த் தேசப் போராட்டத்தினை அவர்கள் பார்க்கும் பார்வைக் கோளாறு காரணமாகவும் பகிஷ்கரிப்பினைக் கைவிடுமாறு கோரியிருந்தனர்.ஆனால், பகிஷ்கரிப்புப் போராட்டம் வளரத் தொடங்கியதைத் தொடர்ந்து மக்களிடம் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பிரசாரம் செய்ய முயலவில்லை. இதனால், குடாநாட்டில் வாழும் கத்தோலிக்க மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், மன்னாரில் சிறியளவில் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

கத்தோலிக்க ஆயர்களின் இந்தக் கருத்து பற்றி ஒரு சைவ முக்கியஸ்தர் என்னுடன் தொலைபேசியில் ஒரு மணி நேரமாக வாதாடினார். அன்று தொடக்கம் இன்று வரை தமிழ்த் தலைமைகள் உட்பட தமிழ்த் தேசிய சக்திகள் கத்தோலிக்க ஆயர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தயங்குகின்றனரென்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன. அவர்கள் செய்தால் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால், சைவப் பிரமுகரொருவர் இவ்வாறு செய்தால் எல்லோரும் திரண்டு தாக்க வந்துவிடுவார்களென்ற வகையில் அவரது கருத்துக்கள் சென்றன. தேசிய இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல் சைவ-கிறிஸ்தவ முரண்பாடுகள் பற்றியே வாதம் சென்றதால் ஒரு கட்டத்தில் நான் தொலைபேசி உரையாடலைத் துண்டித்துவிட்டேன்.

கத்தோலிக்க ஆயர்கள் இந்த விடயங்களைப்பற்றிக் கவனத்திலெடுக்க வேண்டுமென்றே விரும்புகின்றேன்.

கத்தோலிக்க ஆயர்களென்றாலும் சரி, சைவ மதப் பெரியார்களென்றாலும் சரி தமிழ்த் தேசம் சம்பந்தமான விடயங்களில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமானது. கிழக்கிலேற்பட்ட பிரதேசப் பிரச்சினைகள் போல மத முரண்பாடுகளை அவர்கள் தோற்றுவித்துவிடக் கூடாது. இந்த அக முரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நலனுக்குச் கீழ்ப்படுத்தி நட்பு முறையில் தீர்த்துக் கொள்வதற்கான மார்க்கங்களை அவர்கள் கண்டாக வேண்டும்.பிரதேச முரண்பாட்டின் விளைநிலமாக மட்டக்களப்பும்,மத முரண்பாட்டின் விளைநிலமாக மன்னாரும், சாதி முரண்பாட்டின் விளைநிலமாக குடாநாடும் இன்று இருக்கின்றன. இவ்வக முரண்பாடுகள் தமிழ்த் தேசத்தை, அதன் இருப்பினையழிக்கும் வெடி குண்டுகள். தமிழ்த் தேசிய சக்திகள் இவ்வெடி குண்டுகள் தொடர்பாகத் தொடர்ந்தும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை பற்றிச் சிறிதும் அக்கறையற்று இவற்றினை மட்டும் தூக்கிப் பிடிப்பவர்கள் இன்றும் நம் மத்தியிலிருக்கின்றனர்.

மறுபக்கத்தில் இம் முரண்பாடுகளெதுவும் இல்லையென நாம் பூசி மெழுகவும் கூடாது. கோட்பாட்டு ரீதியாக இம் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அடித்தளங்களை நாம் கண்டாக வேண்டும். அதிகாரம் வந்ததன் பின்னர் இவற்றிற்கிடையேயுள்ள சமமற்ற தன்மைகளைத் தீர்ப்பதற்கு முன்வரலாம்.தமிழ்த் தேசிய எதிர்ப்புச் சக்திகள் தமிழ்த் தேசத்தின் இராணுவ வலிமை பற்றித் தற்போது அதிகம் ஆய்வு செய்வதில்லை.தமிழ்ச் சமூகவமைப்புப் பற்றியும், அங்கு வலிமையாகவிருக்கின்ற அக முரண்பாடுகள் பற்றியுமே ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்திலுள்ள இடைவெளிகளைக் கண்டு அதற்கூடாக நுழைந்து தமிழ்த் தேசிய அரசியல் மையத்தை அழிக்கப் பார்க்கின்றனர். அக முரண்பாடுகள் பற்றிய குரல்களனைத்தும் யாழ்-சைவ-வேளாளப் பிரிவினரையே நோக்கியிருப்பதால், இது விடயத்தில் முன்கையெடுத்துச் செயற்படும் பொறுப்பு இவர்களுக்கேயுண்டு. தமிழ்த் தேசிய அரசியற் தலைமையினால் மட்டுமே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பகிஷ்கரிப்புப் பற்றிய ஆயர்களின் கருத்துக்கள், நான் முன்னைய கட்டுரையில் கூறியது போல இலங்கைத் தேசியத்திலிருந்து விடயங்களைப் பார்த்ததனால் ஏற்பட்டவொன்றுதான். இலங்கைத் தேசியத்திற்குள் நின்று விடயங்களைப் பார்ப்பதென்பது ஐம்பதுகளிலும், அறுபதுகளின் ஆரம்பத்திலும் முன்வைக்கப்பட்ட அரசியல். அது காலாவதியாகி நீண்ட காலமாகிவிட்டது. இன்று தமிழ்த் தேசம் இலங்கைத் தேசியத்திற்கு வெளியே நின்றுதான் விடயங்களைப் பார்க்கின்றது.

தமிழ் மக்கள் தற்போது தங்களை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை.மாறாக, தமிழர்களாக மட்டுமே பார்க்கின்றனர். சமஷ்டி கூட தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் கோரிக்கையல்ல. அது சர்வதேசச் சமூகத்தின் கோரிக்கை. ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கேற்ற சமஷ்டி முறையினைச் சிபார்சு செய்தால், அதனைப் பரிசீலிக்கலாமென்ற நிலையில்தான் தமிழ்த் தேசம் இருக்கின்றது. அதன் பின்னர்தான் நாம் தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இருப்பது பற்றி யோசிக்கலாம். தற்போது எம்மால் தமிழர்களாக மட்டுமேயிருக்க முடியும்.

நாம் தமிழர்களாக மட்டும் இருப்பதற்காக இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து ஒவ்வொன்றாகக் கழன்று வருகின்றோம். தனியான கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள்,தனியான நிர்வாகத்துறை, தனியான நீதித்துறை, தனியான காவல்துறை, தனியான முப்படைகளென்பன இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து கழன்று வந்த அம்சங்கள்தான்.

ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பையும் இக்கழன்று வரும் அம்சங்களிலொன்றாகவே பார்க்க வேண்டும். பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் கோட்பாட்டுப் பின்னணி இதுதான்.

தமிழர்கள் இலங்கையரென்ற அடையாளத்திற்கு மீளவும் செல்வது சிங்கள தேசத்தின் பணியேயொழிய எமது பணியல்ல. நாம் அதற்காக உழைத்துக் களைத்துத் தான் தமிழர்களாக மட்டுமிருக்க முடிவெடுத்திருக்கின்றோம். எனவே, சிங்கள தேசம் செய்ய வேண்டிய பணியினை தமிழ்த் தேசம் தன் தலையில் சுமந்துகொண்டு திரியக்கூடாது. ஆயர்கள் அந்தச் சுமையினைத் தாங்கள் சுமக்க முற்படுகின்றனர். ஏதாவது தகுந்த உத்தரவாதங்களுடன் சுமக்க முற்பட்டாலும் சகித்துக் கொள்ளலாம். ஆனால், எந்தவித உத்தரவாதங்களுமில்லாமல் சுமக்க முற்படுகின்றனர். இந்தப் போக்கு ஆயர்களிடம் மட்டுமிருக்கின்றதெனக் கூறிவிட முடியாது. வேறு பல, கொழும்பு நலனைத் தளமாகக் கொண்ட தமிழர்களிடமும் ஐ.தே.கட்சி தொடர்பாகப் பிரமையிலுள்ளவர்களிடமும் இருக்கின்றது. பகிஷ்கரிப்புப் போராட்டம் இது பற்றிய பாடத்தினைத் தமிழ்த் தேசத்திற்குத் தந்திருக்கின்றதென்றே நினைக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளரும் அவரைச் சுற்றியுள்ள உள்நாட்டு,சர்வதேசக் கூட்டமும், அவர் ஜனாதிபதியாக வருவதை விரும்பிய அரசு சார்பற்ற நிறுவனங்களும் புலிகள் மக்கள் வாக்களிப்பதை தடைசெய்துவிட்டனரெனக் கூக்குரலிடுகின்றனர். முன்னைய தேர்தலில் கள்ள வாக்குப் போடப்பட்டதெனக் கூறினர். இத் தேர்தலில் வன்முறை மூலம் வாக்களிப்பதைத் தடுத்துள்ளனரெனக் கூறுகின்றனர். மக்கள் ஒரு போராட்டத்தினை நடாத்தும்போது உதிரிகள் அதனைக் குழப்ப முற்பட்டால், குறைந்தளவிலான வன்முறையைப் பயன்படுத்துவது உலகப் போராட்டங்களில் வழக்கம். அவ்வாறான சில வன்முறைகள் நடந்திருக்கலாம். ஆனால், இந்த வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதால் போராட்டத்தின் அரசியல் மறைந்துவிடுமென எவரும் நினைத்துவிடக் கூடாது.

இந்தக் கூக்குரலில் அதிகமீடுபடும் கூட்டம் ரணிலுக்குப் பின்னால் நின்ற ஐரோப்பிய அமெரிக்க முகாம்தான். அந்தக் கூட்டம் ரணிலுக்கல்ல, தமக்களிக்கப்பட்ட சவாலாகவே இப்பகிஷ்கரிப்பினைக் கருதுகின்றது. வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையெழுத்திட்டுத் தருமெனக் கனவு கண்டது ரணில் மட்டுமல்ல, இவர்களும்தான். தங்களுடைய அழுத்தங்களுக்கெல்லாம் ஒரு தேசமும், அதன் போராட்டமும் பணிந்துவிடுமென நினைத்தவர்கள் கோபம் உச்ச நிலைக்கேறிய நிலையில் புலம்பத் தொடங்கியுள்ளனர். எந்தத் தேசமும் இந்தச் சக்திகளுக்காகத் தன்னுடைய போராட்டத்தினைக் கைவிட்டது கிடையாது. வேண்டுமானால்,தற்காலிகமாகத் தோல்விகளைத் தழுவியிருக்கலாம். நிரந்தரத் தோல்வியை எந்தத் தேசமும் அடைந்துவிட முடியாது.

இந்தச் சக்திகளுக்குத் தமிழ்த் தேசம் "எம்மால் எதையும் செய்ய முடியும்" என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றது. எங்களை ஒடுக்க நினைத்தால், நீங்கள் இங்கு வர முடியாதென்பதைக் காட்டியிருக்கின்றது. இந்தியாவும் முதலில் இவ்வாறு நினைத்துத் தமிழ்த் தேசத்தை ஒடுக்கப் பார்த்தது. இன்று இனப்பிரச்சினைக்குள், தான் நுழைய வழியில்லாமல் வழிதேடிக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசத்தை ஒடுக்க நினைத்த இந்தியா இன்று முழு இலங்கையையுமே கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்று அதே நிலைக்கு ஐரோப்பிய முகாம் தள்ளப்பட்டிருக்கின்றது.
மறுபக்கத்தில் தமிழ்த் தேசம் பகிஷ்கரிப்பென்ற பெயரில் எறிந்தது சிறிய கல்தான்.ஆனால், அக்கல் சர்வதேசச் சக்திகள் உட்பட ஸ்ரீலங்காவின் அனைத்து அணிகளின் நிகழ்ச்சி நிரல்களையும் குழப்பி விட்டிருக்கின்றது.
மகிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பமேற்பட்டிருக்கின்றது. அது பண்டாரநாயக்க குடும்ப அணியாகவும், மகிந்த அணியாகவும் பிளவுபட்டிருக்கின்றது. அனுராவுக்கு முன்னர் கூறியதுபோல பிரதமர் பதவி வழங்கப்படவில்லை. இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும், தனக்கு ஒரு போட்டியாளராக இருக்கக் கூடாதென்பதற்காகவும் பாரம்பரிய இனவாதியான இரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதமராக்கப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி. யினர் மிகவும் ஆடிப்போயுள்ளனர்.தாங்கள் வீணாகச் சிரமமெடுத்து உழைத்திருக்கின்றோமென அவர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். சர்வதேசச் சக்திகள் ஐ.தே.கட்சியுடனிணைந்து சமாதானச் செயற்பாட்டினை முன்னெடுங்களென மகிந்தவிற்கு அழுத்தங் கொடுத்து வருவதால் ஜே.வி.பி.யினர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் புலி ஐ.தே.க. கூட்டு என்ற பிரசாரம் நான் முன்னர் கூறியது போல கண்ணுக்கு முன்னாலேயே பிசுபிசுத்துப் போயிருக்கின்றது. இனிமேல் அவர்கள் ஆரம்பத்திலிருந்து புதிய அரசியலைக் கட்டியெழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களை ஒதுக்க முற்படுவார்களென்பது அவர்களுக்குத் தற்போது கொஞ்சங் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியிருக்கின்றது.

சர்வதேசச் சக்திகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியாது தடுமாறுகின்றனர். சமாதானப் பொறிக்குள் தமிழ்த் தரப்பினை மாட்டி பலவீனப்படுத்துவதுதான் அவர்களின் பிரதான நிகழ்ச்சி நிரல். பகிஷ்கரிப்பு அந்த நிகழ்ச்சி நிரல் முன்னெடுப்பை முழுமையாகக் குழப்பியுள்ளது. இன்று மகிந்தவினைப் பயன்படுத்தி அதனை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அந்தச் செயற்பாடு இலகுவானதாகவிருக்கப் போவதில்லை.
மொத்தத்தில் தமிழ்த் தேசம் தனது அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான காலம் கனிந்து வருகின்றதென்றே நினைக்கின்றேன்.

நன்றி:- சுப்பிரமணியம்,தினக்குரல்

Thursday, November 24, 2005

கருத்துக்களுக்கான"கருத்து" இணையத்தளம்

கருத்துரிமைக்காக "கருத்து" அமைப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.கடந்த நவம்பர் 13 ந்திகதி தொடக்கிவைக்கப்பட்ட கருத்து என்ற அமைப்பும் அதன் இணையத்தளமும் தமிழ்நாட்டில் யாரும் சுதந்திரமாக கருத்துக்கள் சொல்லலாம் என்ற நோக்கிலே உருவாக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதில் பெரும்பங்கு வகித்தவர் கவிஞர் கனிமொழி.கருத்துரிமைக்கான இந்த அமைப்பின் இணையதளத்தில் யாரும் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் தமதுகருத்துக்களை சொல்லலாம்.குஸ்பு,சுகாசினி பிரச்சனை ஏற்பட்டுள்ள இந்த் நேரத்தில் இந்த அமைப்புதொடங்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

பார்ப்போம் கருத்து அமைப்பின் எதிர்காலம் எப்படிஇருக்கப்போகின்றது என்பதை.கருத்தினை எதிர் கொள்ளப்போகின்றவர்கள் "கருத்தினை" கருத்துக்களால் எதிர்கொள்வார்களா அல்லது கத்தி துடைப்பம் செருப்புக்களால் எதிர்கொள்ளப்போகிறார்களா என்பதை.ஏனெனில் சகிப்புத்தன்மை என்பது தற்போது தமிழனுக்கு இல்லாமல் போய்வெகு காலம் ஆகிவிட்டதே.சரி நீங்களும் கருத்து கொல்லப்போறீங்களா?இங்கேயே கருத்துக்கள் சொல்லி அடிச்சுக்கொள்வது போதாதா.இது எதற்கு வேறு என்கிறீர்களா?ஒரே இடம் போர் அடிக்கும் அதுக்குதான் புது இடம்.

தளம் இதுதான்.
http://www.karuthu.com

நேரடியாக கருத்துகளுக்கு செல்ல
http://www.karuthu.com/forum/forum_topics.asp?FID=4

Wednesday, November 23, 2005

தடுமாறும் தமிழோசை?!

தமிழோசையில் சொல்வது நடுநிலையானது என்பதும் நம்பகத் தன்மையானது என்பதும் இறந்தகாலமாகிப்போனதை நாம் நன்கு அவதானித்து வருகிறோம்.

அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்குதமிழ்' நிகழ்வு குறித்துச் செய்தி சொன்ன தமிழோசையின் வவுனியா செய்தியாளர் 'புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட பொங்கு தமிழ்" என்று குறிப்பிட்டார். அந்த நிகழ்விலே பொதுச்சுடர் ஏற்றி அதனை ஆரம்பித்துவைத்தவர் யாழ் மாவட்ட அரச அதிபர்.

அப்படியாயின் தமிழோசைச் செய்தியின் பிரகாரம் யாழ்மாவட்ட அரச செயலகமும் புலிகள் ஆதரவு அமைப்புகளில் ஒன்று. அப்படித்தானே?
இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரிஸ்வி மீடினின் கொலை தொடர்பாகத் தமிழோசையில் சொல்லபட்ட செய்தியைப் பாருங்கள்.
மீடின் சுடப்பட்டது நள்ளிரவில்
மறுநாள் மதியம் 11 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் மீடின் கொலைதொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.

அதிலே தெளிவாக 'மீடினின் கிரிபத்கொட வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மீடினின் நண்பர் ஒருவர் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் மனைவியிடம் தெரிவித்தார்.." என்று குறிப்பிடப்பட்டடிருந்தது.

(''……Later one of his friends had telephoned his wife at home and informed that Lt. Col MEEDIN was lying dead near his home at KIRIBATHGODA.." . நன்றி: சிறிலங்கா இராணுவ களநிலை அறிக்கை: Situation Report as at UTC 0200 (0800) 30 October 2005 )

அன்று இரவு 9.45 (இலங்கை நேரம்) ஒலிபரப்பான தமிழோசையில் ரிஸ்வி மீடின் கொல்லப்பட்டது குறித்துத் தகவல் சொன்ன தமிழோசையின் செய்தியாளர் 'இனந்தெரியாத நபர்கள் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் சொன்னார்கள்.." என்று குறிப்பிட்டார்.

இது எதைக் காட்டுகிறது. செய்தியாளரின் உள்ளக் கிடக்கையையா? 'இனந்தெரியாதவர்கள்" என்ற பதத்தை உச்சரித்ததன் மூலம் செய்தியாளர் யாரையாவது இனங்காட்ட முயல்கிறாரா?அல்லது தமிழோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அக்கறையின்மையையா?

தகவல் தொடர்பு யுகமான தற்காலத்தில் செய்தியாளர் வழங்கிய தகவல் தொடர்பில் சிரத்தையெடுத்துச் சரிபார்க்க முடியாதவர்கள் எதற்கு நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார்கள்?

முன்னொரு காலத்தில் சங்கர
மூர்த்தி, ஆனந்தி போன்றவர்களின் நடுநிலையான செயற்திறன் மிக்க கூட்டணியால் தமிழோசை பெற்றிருந்த நற்பெயருக்கு தற்போது பொறுப்பிலிருப்பவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக வேட்டுவைக்கிறார்கள் போற்படுகிறது.

பி.பி.சி தமிழோசையின் விசேட நிருபராக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருப்பவருக்கும், அந்தச் சேவையின் லண்டன் ஒலிபரப்பாளர்களுக்கும் உண்மையில் ' ஏன் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்?' என்ற கேள்வி மனதைக் குடைகிறது. இதற்கான விடை நேற்றிரவு வரை அவர்களுக்குப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
உதாரணமாகத் தேர்தல் புறக்கணிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்மகன் ஒருவரிடம் 'இது சனநாயக மீறல் இல்லையா?' என்று கேட்டார் அந்த விசேட நிருபர். அதே கேள்வியைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரையும் அந்த நிருபர் கேட்டார்.

உண்மையில் இவருக்குச் சனநாயகத்தில் அக்கறை இருந்தால் அல்லது சனநாயகம் என்றால் என்ன என்று தெளிவான விளக்கம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இந்தக் காலப்பகுதியில் ''உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்கப்படாது ஏதிலிகள் தங்ககத்தில் உள்ள மக்களை எப்போது மீளக் குடியமர்த்தப் போகிறீர்கள். அவர்களை மீளக்குடியமர்த்தாது விடுவது சனநாயக மீறல் இல்லீங்களா?" என்று யாழ் மாவட்ட இராணுவத் தளபதியையோ அல்லது ஆகக் குறைந்தது யாழ்மாவட்ட அரச அதிபரையோ கேட்டு அவர்களது பதிலை ஏன் ஒலிபரப்பவில்லை?

''ஓட்டுப்போடுவது" மட்டும்தானா அங்கு நிற்கும் நிருபர் அறிந்திருக்கும் சனநாயகம்?

வாக்களிக்காமல் வீட்டிலிருப்பது சனநாயக மீறல் என்று கருதும் இந்த விசேட நிருபரின் தேசம்கூட உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற சட்ட மறுப்பு நடவடிக்கைகளால் தான் சுதந்திரம் அடைந்தது. அதனை அவர் முதலில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.

அடுத்து நேற்றைய தினம் ()19-11-2005) தமிழோசை செய்தியரங்கில் பின்வரும் செய்தி ஒரு பேராசிரியரால் கூறப்பட்டது.

'தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான்" என்றார் அவர்

இவர் வெளிப்படையாகவே 'ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டுவரும்" என்ற கருத்துகளுடன் கட்டுரைகளை எழுதியவர்.
ஆனால் தமிழ் மக்களாகிய எமக்கு சிங்களப் பேரினவாதிகளின் இந்தச் சமாதான வேடம் ஒன்றும் புதியதல்ல.

தேர்தல் தருணங்களில் ஒரு அறிவிப்பும் தேர்தல் முடிந்ததும் ஒரு அறிவிப்பும் செய்யும் பேரினவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களை ஏய்க்கவேண்டும் என்று தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எவராவது விரும்பினால் அதனை நம்பி ஏமாந்துபோகிற தமிழ் அரசியல் தலைமையல்ல தற்போது இருப்பது என்பதை இந்தப் பேராசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

இப்படித்தான் சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி வாக்குகளை அள்ளிய சந்திரிகா அம்மையார் பின்னர் தமிழருக்குத் திரும்பச் செய்த நன்றிக்கடனை எமது மக்கள் இன்னும் மறந்துபோகவில்லை.
அவ்வாறு ரணிலும் மாறாமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்தப் பேராசியர் எமது மக்களுக்குக் காட்ட முடியும்?

இறுதிநேரத்தில் சர்வதேச வலைப்பின்னல், சர்வதேச இராணுவ ஆலோசனை குறித்துத் தான் ரணில் தரப்பிலிருந்து செய்திகள் வந்ததே தவிர சமஷ்டியின் என்ன பரிமாணத்தில் இவர் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறார், இடைக்காலத் நிருவாக சபைகுறித்து என்ன கருதுகிறார்? என்பவை போன்ற நியாயமான -தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய -விடயங்களை எங்காவது ரணிலோ அல்லது அவரது அணியினரோ தெளிவுபடுத்தியதாக ஒரு ஆதாரத்தையாவது இந்தப் பேராசிரியரால் காட்டமுடியுமா?

இந்த ஒரு உதாரணமே சகல சந்தர்ப்பவாதிகளையும் இனங்காட்டப் போதுமென்று கருதுகிறேன்.

திருமகள் (ரஷ்யா)

Tuesday, November 15, 2005

மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர்! தீர்வு என்ன?

மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர்! தீர்வு என்ன?

ஒரு தேசிய இனம் தனது விடுதலைக்காகப் போராடி வரும் தருணம் இது. இந்தப் போராட்டத்தினை ஒடுக்க ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு ஆக்கிரமிப்பு வடிவங்களைப் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி எமது இளம் சந்ததியை நசுக்கிவிட, அவர்களைப் போராட்டத்தின் திக்கிலிருந்து திசை கெடவைக்க முனைப்புடன் முனைந்துவருகிறார்கள் என்பதும் உங்களுக்குப் புதிய செய்தியல்ல.தமிழனின் கை கொண்டே அவனது கண்ணைக்குத்தும் முயற்சியாக தமிழ்ச் சிறார்களின் மனங்களில் நச்சு விதைகளை விதைத்துத் தறிகெட வைக்கச் சிங்களப் புலனாய்வுத்துறை முயன்றுவருவதும், யாழ் மண் ஆக்கிர மிக்கப்பட்ட காலம் முதல் இந்த நடவடிக்கைக்கான பரீட்சைக் களமாக யாழ் மண் விளங்குவதையும் தமிழீழ மக்கள் நன்கு அறிவர். யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி மீதான வன்புணர்வு மற்றும் படுகொலையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டம் படிப்படியாக விரிவடைந்து இன்று ஆபாசப் படங்கள், போதைதரும் பாக்குகள், சாராயக் கடைகள், அப்பக் கடைகள் என்று பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு இளைய தமிழர்கள் திசை மாறவேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயற்படும் சிங்களதேசம் தனது நோக்கம் நிறைவேறி வருவதாகத் தற்போது எண் ணத்தலைப்பட்டுள்ளது. 06-10-2005 கொழும்பில் பிரசுரமான சண்டே ரைம்ஸ் வார இதழில் யாழ்ப்பாண இளைஞர்கள் அனைவரும் போராடப் போய்விட்டதாகத் தோன்றிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் தீபாவளி தினத்தன்று வடக்கின் தலைப்பட்டினத்தில நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மனோகரா திரையரங்கின் முன் புதிய திரைப்படமான சிவகாசியைக் காண வரிசை கட்டி நிற்கும் வித்தியாசமான காட்சியைக் காண முடிந்தது. என்ற விளக்கத்துடன் முதற் பக்கத்தில் படம் ஒன்று பிரசுரமாகி யிருப்பதாக அறிய முடிகிறது. (நன்றி சண்டேரைம்ஸ்)

இளைஞர்கள் படத்திற்குச் செல்வதும், வரிசைகட்டுவதும் அந்தக்காலத்திலிருந்து நடந்துவரும் காரியங்கள். இதற்கு இப் பொழுது என்ன முக்கியத்துவம் வந்தது என்று சிந்தித்துப் பாருங்கள்.சிறிலங்கா அரசினதும் அதன் புலனாய் வாளர்களினதும் உள்ளக்கிடக்கையை, அவர்கள் எதை விரும்பினார்களோ அதைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை மேற்படி செய்தியிலிருந்து நீங்கள் அறிய வில்லையா?

படம் பார்ப்பதால் என்ன வந்து கெட்டது. நாங்கள் பார்க்காத படமா? என்று உங்களிற் சிலர் நியா யமான ஒரு கேள்வியை எழுப்பலாம்.நீங்கள் படம் பார்த்தீர்கள், படலையைப் புரட்டி நட்டீர்கள். ஆனால் தெருவில் செல்லும் பெண் புரசுகளைப் பதம்பார்க்கும் எண்ணமோ, அல்லது முதுகின் பின்னே கத்தியைச் செருகிச்சென்று கண்முன்னே கண்டவரைச் சீவித்தள்ளும் வெறியோ உங்களுக்குள் இருக்கவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

யாழ்ப்பாணம போதனா வைத்திய சாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில்(Surgical words) போய்பாருங்கள். பெண் நோயியல் மருத்துவரை (Gynecologist) , சிறுவர் பிரிவில் கடமைபுரியும் வைத்தியர் களைக் (Pediatricians) கேளுங்கள். பேரினவாதத்தின் திட்டமிட்ட, ஆனால் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப் பட்டுவரும் இன அழிப்பின் புதிய வடிவம் குறித்து உங்களுக்கு ஒரு செய்தியை அவர்கள் சொல்லுவார்கள்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தினந் தோறும் அடிகாயங்களுடனும், வெட்டுக் காயங்களுடனும் விபத்துப் பிரிவில் (casualty) அனுமதிக்கப்படுபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பதின்வயதைச் (teenage) சேர்ந்த தமிழ் இளைஞர்கள். இவர்களில் பலருக்கு அடியும், வெட்டும் விழுவது தலையில். வெட்டுவதும் தமிழன். வெட்டப்படுவதும் தமிழன். வெட்டு விழுவதோ தலையில். தலை என்பது மிகவும் பிரதானமான அங்கம் என்பது எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்று என்றைக்கோ எழுதிவைத்த தமிழனின் இன்றைய வாரிசுகளுக்குத் தெரியவில்லை.

இனி வெளிநோயார் பிரிவைப் (OPD) பார்ப்போமா? அங்கும் இளைஞர்கள் தென்படுகிறார்கள். பார்க்க வாட்ட சாட்டமாக, அழகாகத் தென்படும் இவர்க ளுக்கு என்ன குறை?இவர்கள் தற்போது வருந்துவற்குக் காரணமே, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் தலையில் பட்ட அடிதான். அந்த அடியின் பின்விளைவாகத் தற்போது மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டதால், உடலின் ஏதாவது ஒரு அல்லது பல பாகங்களில் வலி, சோர்வு, செயலிழப்பு, உணர்வின்மை போன்ற நரம் புத்தொகுதி சார்ந்த வியாதிகள் இவர்க ளைப் பீடித்துள்ளது. அதாவது இத னை இன்னொரு விதமாகச் சொல்வதானால், யாழ்ப்பாணத்தை இரா ணுவம் ஆக்கிரமிப்புச் செய்து சிலகாலம் கழிகையில் அப்போது பதின்வயதில் இருந்த இந்த இளைஞர்கள், படங்களில் தாங்கள் பார்த்ததைப் பரீட்சித்துப் பார்த்ததன் பின்விளைவுகள் இவை.

இந்த நானாவித குளறுபடிகளுக்கும் காரணம் வைத்தியத் துறையால் இதுவரைக்கும் மாற்றுக் கண்டு பிடிக்கப்படாத அங்கமான மூளையில்- மைய நரம்புத் தொகுதியில் (CNS - Central Nervous system)- ஏற்பட்ட நிரந்தரப் பாதிப்புகள்.இனி மருந்து மாத்திரைகளுடன் கழியப் போகும் இவர்களது எதிர்காலம் என்ன? இவ்வாறு மௌனமாக ஒரு இனத்தின் இளம் சமூகம் திட்டமிட்ட விதத்தில் முடமாக்கப்படுவது குறித்துக் குடா நாட்டிலுள்ள எவருமே - விடுதலைப் புலிகளைத் தவிரப்- புரிந்துகொண்டிருப்ப தாகத் தெரியவில்லை.

இதற்குச் சற்றும் குறையாத வேதனைக் கதைகளுடன் பெண்கள் பிரிவும், சிறுவர் பிரிவும் இயங்குகின்றன. பராயமடையாத சிறுமிகளைக் கூட சிறுவர்களே தீண்டி யதாக வழக்குகள். பதின்வயதில் கர்ப்பமாகி நடுத்தெருவில் நிறுத்தப்படும் சிறுமிகள், சட்டவிரோத கருக்கலைப்பால் தினசரி ஒருவராவது ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொடுமை. இப்படிச் சிறுவயதிலேயே உளரீதியாக முடமாக்கப்படும் பெண்கள், சிறுமிகள் குறித்து எந்தப் பெண்ணுரிமை வாதிகளாவது, எந்தச் சர்வதேச சிறுவர் அமைப்புகளாவது கண்கொண்டு பார்த் தனரா? பாதிக்கப்பட்ட பின்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அறிக்கை விடுப்பதும்தான் இவர்களது செயற்பாட்டின் எல்லைகளா?? இப்படியான சம்பவங்கள் மேலும் நிகழாது தடுக்க இவர்களில் எவரிட மாவது தொலைநோக்கான திட்டங்கள் இருக்கிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தவிர வேறு எந்தச் சனநாயகத்தின் காவலராவது இந்தச் சீரழிவு குறித்து ஒரு வரியாவது சிந்தித்திருக்கிறார்களா? பேசியி ருக்கிறார்களா?

தாமே சனநாயகத்தின் காவலர்கள் என்றும் தமிழர்களைக் காக்க வந்த இரட்சகர்கள் என்றும் உளறித் திரியும் எவராவது இந்தச் சீரழிவுகளைத் தடுப்பது குறித்து ஏதாவது செய்திருக் கிறார்களா? தமிழ் மக்கள் அவசியம் தங்களைத் தாங்களே கேட்டுணரவேண்டிய கேள்வி இது. கேவலம்! இதிலே கூடப் புலிகளுக்கு ஆதரவான எவராவது அரிதாகச் சிக்குப்பட்டால் மட்டும் இவர்களது கண்ணுக்கு அது தென்படும். அதுவும் நீதிமன்றமே எச்சரிக்கும் அளவிற்கு அது பற்றி வீணையை மீட்டிக்கூச்சலிடுவார்கள். ஆனால் மற்றவர்கள் குறித்து அவர்களிற்குக் கவலையில்லை. ஏன் தெரியுமா? புலிகளை எதிர்த்துக் கூச்சலிட்டால் மட்டுமே இவர்களுக்குச் சம்பளமும், சலுகைகளும் கிடைக்கும். வயிறு நிரம்பும்.

இங்கே உதாரணத்திற்குக் குறிப்பிட்டது யாழ் குடாவின் -யாழ்ப்பாண வைத்திய சாலையின்- எல்லைக்குள்ளான நிலைவரம். வடக்குக் கிழக்கில் எத்தனை இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்பது உங்களுக்கே தெரியும். இவ்வாறு சொல்லுந்தரமற்ற வகையில் எமது இளம் சந்ததி இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில்; இரகசியமாக அழிக்கப்பட்டு வருவதை தடுப்பதற்கு வழி என்ன? நிச்சயமாக இதனை எமது மக்கள்தான் தடுக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் எவராவது வரவேண்டும் என்று பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து மக்களே செயலில் இறங்கவேண்டும். அதாவது அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து தமிழ் மக்களால் அகற்றப்படவேண்டும். அதுவே இந்தச் சிக்கலிற்கான இறுதித் தீர்வாக அமையும்.

நன்றி- திருமகள் (ரஷ்யா)







Friday, November 11, 2005

ஈழத்தமிழர் தொடர்பான சில பதிவுகள்.

கொழும்பிலிருந்து வெளிவரும் "தினக்குரல்" பத்திரிகையில் திரு சா.ஆ. தருமரத்தினம் அவர்களால் ஈழத்தமிழர் ஒடுக்குதலுக்குள்ளாகி வருதலை சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு உறுத்திய வரலாற்றுப் பதிவுகள் எனும் தலைப்பில் ஒரு தொடரெழுதப்பட்டுவருகிறது. இதுவரையில்
இந்ததலைப்பில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்துவிட்டன.நூலாக எழுதப்பட்டதை வெளியிடுகிறார்களோ அல்லது இப்போதுதான் வெளியிடப்படுகிறதோ என்பது எனக்கு தெரியவில்லை.ஆனாலும்
இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி.இன்றைய காலகட்டத்தில் ஈழத்தவர் அல்லாத உலகெங்கினும் பரந்து வாழும் பல தமிழர்களுக்கு ஈழப்போராட்டம்,ஈழசரித்திரம் சம்பந்தமாக சரியான தெளிவான அறிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த இணையம் வந்ததன் காரண்மாக சரியான தெளிவான அறிவினை பெற்றவர்கள் பலர்.அதில் இந்த வலைப்பூக்களுக்குகூட நிறைய
பங்கு இருக்கிறது. வலைபதிய வந்ததன் பின்னர் தான் ஈழம்,ஈழப்போராட்டம்,ஈழவரலாறு சம்பந்தமாக சரியான அல்லது தெளிவான அறிவை பெற்றுக்கொண்டதாக பலர் சொல்லியிருக்கின்றனர்.அந்தவகையில்
இக்கட்டுரைகளை எழுதுபவரும் இணையத்தில்வெளியிடுபவர்களும் பாராட்டுக்குரியவர்களே.
இனறைய இளைஞர் சமுதாயம் கூட வரலாற்றை தெளிவாக அறிந்து கொள்ள இது உதவும்.

இதுவரையில் வந்த இரண்டு கட்டுரைகளாவன.

"தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்"

"வட்டுக்கோட்டைத் தீர்மானம்"

Wednesday, November 09, 2005

ஐ.தே. க. பின்னிய சர்வதேச வலை!


.தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவாக்கமே கருணாகுழு. புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் யுத்தத்துக்குப் போனால் அவரது புலிப்படையை எதிர்த்துப் போராட அமெரிக்க, இந்தியப் படைகளைத் தயாராக ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றார் ரணில்'' என்று ஐ.தே. கட்சி எம்.பியான நவீன் திஸநாயக்கா பெருமிதத்தோடு கூறினார் என வெளியான செய்தியை அவரே மறுத்திருக்கின்றார். நவீ னின் மறுப்பு பிரசுரமான பத்திரிகை அச்சாகும் அதேவேளை யில் நவீன் திஸநாயக்கா கூறியவை என வெளியான கருத்தை ஒத்த விடயங்களை ஐ.தே. கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருங்கியவருமான மிலிந்த மொற கொட கூறியிருக்கின்றார் என்ற செய்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் அச்சாகியிருக்கின்றது.

ரணில் பிரதமராயிருந்த போது தமிழர் தரப்போடு முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளில் முக்கிய பங்காற்றிய வரும், தற்போது ரணிலின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான மிலிந்த மொறகொடவிடமி ருந்து இக் கருத்துகள் வெளிவந்திருக்கின் றன என்பது முக்கியமாகும்."" ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகளவான பங்களிப்பி னால் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளின் உருவாக்கமே கருணா.""யுத்தச் சூழ்நிலையில் கருணா போன்ற அதிருப்தியா ளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் உருவாகவே முடியாது. துப் பாக்கிகளை அமைதியடைய வைத்து தடைகளை அகற்றி பாதைகளைத் திறந்து அதன்மூலம் இரக்கமேயில்லாத விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு மாற்றுவழியை அளிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஐக் கிய தேசியக் கட்சியினரான நாங்கள்தான்'' இப்படி பெரு மிதத்தோடு கருணா குழுவின் உருவாக்கத்துக்கு உரிமை கோரி யிருக்கின்றார் மிலிந்த மொறகொட.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை உறுப்பினர்களுக்கும், அதிலிருந்து வெளியே மீண்டு வேறு மாற்றுப் பாதைக்குத் திரும்புவதற்கான சூழ்நிலையைத் தமது கட்சியே ஏற்படுத்திக் கொடுத்தது என்றும் அவர் அந்தச் செயலுக்கு தமது கட்சியின் சார்பில் பாந்தயம் கோருகின்றார்.இலங்கை அமைதி முயற்சிகளில் சர்வதேச வலைப் பின்னலை தமது ஐ.தே. கட்சி அரசு கொண்டு வந்து செருகியதையும் கூட இந்தப் பேட்டியில் தங்கள் சாதனையாக பெருமையாக மார்தட்டி சுட்டிக்காட்டியிருக்கின்றார் மொறகொட.

அந்த சர்வதேச வலைப்பின்னலை நாங்கள் ஏற்படுத்தியதால்தான் இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பினருமே யுத்தத்துக்குத் திரும்ப முடியாமல் யுத்த நிறுத்தத் தடத்தை விட்டு விலகமுடியாமல் அமைதி நிலையில் நின்று பிடிக் கின்றார்கள் என்றும் அவர் தம்பட்டம் அடித்திருக்கின்றார்.ஐ.தே.கட்சித் தலைவர்களாலும் அக்கட்சியின் முன்னைய அரசினாலும் பின்னப்பட்டது என்று பெருமிதத்துடனும், உரிமையுடனும் இப்போது கூறப்படுகின்ற இந்த சர்வதேச வலையை தமிழர்கள் எப்படி நோக்குகின்றார்கள்?முன்னைய சமாதானப் பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்ததற்கு இந்த வலைப் பின்னலும் முக்கிய காரணம் என் பதுதான் தமிழர் முடிவு. இந்த முயற்சிகளில் தமிழர் தரப்பில் தலைமை வகித்து நேரடியாக அதில் ஈடுபட்ட மதியுரைஞர் பாலசிங்கமே அதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இந்த சமாதான முயற்சிகள் தொடர்பான தமது மதிப்பாய்வின் இறுதியில் அவர் இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறார்.

""பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல் கேந் திர அபிலாஷைகளும் அதிகார வீச்சுகளும், பேச்சில் பங்கு கொண்ட இரு தரப்பினரது அதிகாரச் சமவலு உறவில் பாதிப்பை ஏற்படுத்தின. உலக அரசுகளின் கூட்டணியான சர்வதேசச் சமூகம், ஸ்ரீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நின்றது. இதனால், சம உறவு நிலை எமக்குப் பாதகமாக அமைந்தது. உதவி வழங்கும் சர்வதேச நாடுகள், ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதல் காரணமாக, அரசியல் தீர்வுக்கு வரம்பு களைத் திணிக்கத் துணிந்தன.

இத்தலையீடானது, எமது அரசியல் தகைமையையும் தலைவிதியையும் நாமே நிர்ண யித்துக் கொள்ளும் எமது சுயாதீன உரிமையைப் பாதித்தது. சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலி களைக் கட்டுப்படுத்தி, அமுக்கும் (இணிணtச்டிணட்ஞுணt) தனது அந்தரங்கத் திட்டத்தையே " சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறி வந்தார். சமாதானத்தின் பெயரால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் விக்கிரமசிங்க அரசு விரித்து வைத்த சர்வதேசச் சதி வலைப்பொறிக்குள் சிக்கி விடாது இருப்பதில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது.

சமாதானப் பேச்சுகளை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையைச் சர்வதேச மயப் படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால், அதே வேளை, எமது மக்களின் விடுதலைப் போராட்ட இலட்சியத் தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு, தலையீடு செய்வதை நாம் வன்மையாக எதிர்த்தோம். மூன்றாம் தரப்பு அனுசரணை யாளரின் மத்தியஸ்துடன், எமது மக்களின் பிரச்சினையை நேர்மையுடன் பேசித்தீர்க்கும் பக்குவமும், அதிகாரமும் அற்ற விக்கிரசிங்கவின் நிர்வாகம், அமெரிக்காவின் தலைமையி லான உலக நாடுகளை அணிசேர்த்து, புலிகளைப் பொறியிட முனைந்ததும் பேச்சுகள் முடங்கிப் போனதற்கு இன்னொரு காரணமாகும்'' என்கிறார் மதியுரைஞர் பாலா.

சமாதானப் பேச்சுகள் முடங்குவதற்குக் காரணமான சர்வதேச வலைப் பொறியை இப்போதும் தனது சாதனையாகத் தூக்கிப் பிடிக்கிறது ஐ.தே. கட்சி.அதன் உள்நோக்கங்களை அம்பலப்படுத்திப் புலப்படவைக்கின்றன மொறகொட போன்ற தலைவர்களின் கருத்துகள். அவ்வளவே.

யாழ் உதயன் பத்திரிகையின் 09-11-2005 இதழில் வந்த ஆசிரியர் தலையங்கமே இது.

Tuesday, November 08, 2005

வலதுசாரியாகிவிட்ட வாசுதேவா-ஒரு மடல்!

வாசுதேவ நாணயக்காரவுக்கு!

ஒரு காலத்தில் இடது சாரிகள் சிங்கள அரசியலில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளின் யதார்த்தத்தை ஒட்டுமொத்தமாகப் புரியாவிட்டாலும் சிறிதளவாவது அவர்கள் புரிந்து விட்டார்கள் போன்ற உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. வலதுசாரிகள் அல்லாமல் இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சி அமைக்குமானால் தமிழ் மக்களது பிரச்சினை விடயத்தில் அணுகுமுறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எண்ணபாடு இருந்தது.

இதற்குக் காரணம் உங்களைப் போன்றவர்களின் பேச்சுக்கள் ஒரு காலத்தில் சிங்களவர்களிடையே வாசு நல்லவர், நமது பிரச்சினையின் ஆள நீளத்தைப் புரிந்திருக்கிறார், இவரைப் போன்றவர்கள் தெற்கே கணிசமானளவு புரிந்து கொள்வார்களாயின் நல்ல சூழல் உருவாகும் என தமிழ் மக்கள் அபிப்பிராயப்பட்டதும் உண்டு.

ஆனால், அது இப்போ தப்பாகப் போச்சு. ஏனெனில் வாசு இப்போது இடது சாரியல்ல. இனவாதக் கூட்டுடன் நெருக்கமாகி விட்டார். பேரினவாதக் கயிற்றை விழுங்கி விட்டார். தமிழர்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும் என அன்று கூக்குரலிட்ட வாசுதேவா அல்ல இவர். நாட்டை துண்டாடக் கூடாது. தமிழனுக்கு உரிமையை வழங்கக் கூடாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு நிறுவக் கூடாது. போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்வோம் என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும் மங்களவுக்கு எப்படி ஐயா சாமரம் வீசமனசு வந்தது.

வெற்றிலைக்கு நேரே புள்ளடி போடுங்கோ! என தென்னிலங்கை மக்களிடையே துணிந்து கூறுகிறீர்களே! அன்று சொன்னதை ஒருக்கால் ஞாபகமூட்டிப் பாருங்கோ புரியும். போர்க் காலச் சூழலில் படையினர் தமிழ் மக்களை வெட்டிக் குதறி, கொலைசெய்த போது நீங்கள் தமிழ் மக்களது பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டுமெனக் கூறியது இப்போது என்னாச்சு. பேரினவாதம் இடது சாரிகளை ஆக்கிரமித்து விட்டது.

கட்டுக் கட்டாக பணம், கை நிறைந்த சலுகைகள் கொட்டித் தருகிறார்கள். உங்கள் மனதைக் குளுமைப்படுத்துகிறார்கள். அதற்கு பிரதியுபகாரமாக இடதுசாரிக் கொள்கைகள், முற்போக்கான சிந்தனைகள், சிறுபான்மையினம் தொடர்பான எண்ணங்கள் சிந்தனைகளையெல்லாம் புதைகுழியில் போட்டு மூடிவிட்டு இனவாதத்தில் உழன்று கொண்டிருக்கின்ற கூட்டத்துடன் ஒருவராக அங்கத்துவமாகி விட்டீர்கள்.

இனியும் ஏமாறாது எமது இனம். எங்கள் இனத்தின் மீது பரிந்து பேசுபவர்கள் நாளை பேரினவாதிகளுடன் நின்று குழிவெட்டுவார்கள். எமது தமிழினம் இனி எச்சரிக்கையாகவே இருக்கும். வாசு அல்ல வாசு போன்ற வழித் தோன்றல்கள் சிரித்த முகத்துடன் சமத்துவம் பேசினாலும் தமிழினம் ஏற்காது. ஏனெனில் இனி இடது சாரிகளையும் நம்பத் தேவையில்லை. நீங் களே வலது சாரியாகி விட்டீர்கள் என்று கூறி மடலை முடிக்கின்றேன்.

இங்ஙனம் ஈழமகன்
நன்றி ஈழநாதம் செய்திப்பத்திரிகை( மட்டு பதிப்பு)