Saturday, July 15, 2006

இந்தியாவின் "முதலாவது விடுதலைப் போர்"

இருளிலிருந்து மெல்ல வெளிவரும் இந்தியாவின் "முதலாவது விடுதலைப் போர்"


தனது பங்கை உறுதிப்படுத்தும் தமிழகம்

வரலாறு வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. தோல்வியுற்றவர்களைப் பற்றி அது கவலை கொள்வதில்லை. ஆனால், வென்றவர்களில் ஒரு பகுதியினராக இருந்தும் தங்களது வரலாற்றை இழந்தவர்களை என்ன சொல்வது? தமது சரித்திரத்தை பதிவு செய்யாமல் அல்லது அதற்கு உரிய இடத்தை வழங்குவதை உறுதிப்படுத்தாமல் விட்டமைக்கான அவர்களின் அக்கறையின்மையையும் அசட்டையையுமே நாம் குற்றஞ்சாட்ட முடியும்.
இந்திய வரலாற்றைப் பதிவு செய்யும் பொழுது வடஇந்தியா எப்பொழுதும் தென்இந்திய நிகழ்வுகளை புறக்கணித்தே வருகின்றது என்பது தென்னக வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நீண்டகால குமுறலாக இருந்து வருகின்றது. ஆனால், அதனை உரிய இடத்தில் வைப்பதற்கு அவர்கள் முயற்சி எடுத்தார்களா என்பது கேள்விக்குறிதான்.

இந்தியா கிறிஸ்துவிற்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே மத்திய ஆசியாவிலிருந்து வந்த மொகலாயர்களிடம் அடிமைப்படத் தொடங்கிவிட்டது. ஆயினும், இக்காலப் பகுதியிலும் தென்னகம் தனது சுதந்திரத்தை காப்பாற்றியே வந்துள்ளது.
அதற்குப் பின்னர், பிரஞ்சுக்காரர்களிடமும் போத்துக்கீசரிடமும் பாரத தேசத்தின் சில பகுதிகள் அடிமைப்பட்டுக் கொண்டன. ஆயினும், ஒட்டுமொத்த இந்தியப் பெருநிலப்பரப்பும் அடிமைப்பட்டுக் கொண்டது ஆங்கிலேயரிடம்தான்.
வியாபாரம் செய்வதற்காக உள்நுழைந்தவர்கள், படைபலத்தையும் பல்வேறு யுத்திகளையும் பயன்படுத்தி படிப்படியாக இந்திய பெருநிலத்தை கைப்பற்றிக் கொண்டனர்.


ஆயினும், அவர்களினால் அதை இலகுவாக செயற்படுத்த முடியவில்லை. ஹைதர் அலி, திப்புசுல்தான், புலித்தேவர், சென்னம்மாள், வேலு நாச்சியார், சின்ன மருது, பெரிய மருது போன்ற மன்னர்களினதும் இராணிகளினதும் கடுமையான எதிர்ப்பை முறியடித்தே தென்னிந்தியாவை அவர்களால் கைப்பற்ற முடிந்தது.

இவ்வாறாக, இந்தியாவெங்கும் ஆதிக்கத்தை பரப்பி வேரூன்றிய ஆங்கிலேயர்களிற்கு எதிராக அவர்களின் கீழ் பணிபுரிந்த இந்தியச் சிப்பாய்கள் இறந்தொழிந்தனர். 1857 இல் வடஇந்தியாவில் கல்கத்தாவிலிருந்து மீரட் வரை பரவிய சிப்பாய்களின் கிளர்ச்சியையே பெரும்பாலான இந்திய வரலாற்றாசிரியர்களும் இந்திய அரசாங்கமும் "சிப்பாய் கலகம்" அல்லது முதலாவது விடுதலைப் போர் என்று அழைக்கின்றனர்.

இந்திய அரசாங்கம் இந்தச் சம்பவத்தின் 150 ஆண்டு நிறைவை அடுத்த வருடம் பிரமாண்டமாகக் கொண்டாடுவதற்கான திட்டங்களைத் தற்பொழுது தீட்டி வருகின்றது. ஆனால், 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்னதாகவே தென்னிந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகம் வரலாற்று இருளிற்குள் மறைந்து கிடக்கின்றது.

1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி காலை தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 130 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள வேலூரில் இடம்பெற்ற சிப்பாய் கலகம், வடஇந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தைவிட 51 ஆண்டுகள் முந்தையதாகும். வரலாற்றில் நிகழ்வுகளை வரிசைப்படுத்தும் வழக்கப்படி இது "முதலாவது சிப்பாய் கலகம்" என்றும் வடஇந்தியாவில் நடைபெற்றது" "இரண்டாவது சிப்பாய்க் கலகம்" என்றே கூறப்பட வேண்டும்.

வடஇந்திய சிப்பாய் கலகத்திற்கு அடிப்படையாக சிப்பாய்களின் துப்பாக்கிகளில் பன்றி மற்றும் மாட்டுக் கொழுப்பை பிரிட்டிஷ் பேரரசு பயன்படுத்தியமை அமைந்தது.
இதனால், ஆத்திரமுற்ற இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்கள் கிளர்ச்சியில் குதித்தனர்.

வேலூர் சிப்பாய் கலகத்திற்கு பிரிட்டிஷாரின் ஆடை அணிகலன் தொடர்பான உத்தரவுகள் அடிப்படையாக அமைந்தன.
1799 இல் மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியர் வேலூர் கோட்டையில் தடுத்துவைத்தனர்.
1806 இல் பிரித்தானியர் படையினரிற்கான புதிய ஆடை விதிமுறைகளை அறிமுகப்படுத்தினர். இதன்படி இந்தியச் சிப்பாய்கள் சாதிக் குறியீடுகள், காதணிகள் மற்றும் தாடி என்பன அகற்ற வேண்டும். இதற்குப் பதிலாக தோலால் அலங்கரிக்கப்பட்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட தலைப்பாகைகளை அணியுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

பெரும்பாலான இந்தியப்படை வீரர்கள் இதனை எதிர்த்தனர். மறைவில் குமுறிக் கொண்டிருக்கும் எதிர்ப்பை, 1806 ஆம் ஆண்டு மே மாதமளவில் சென்னையிலிருந்த பிரித்தானிய அதிகாரிகள் அறிந்தனர்.
எதிர்ப்பை வெளிப்படுத்திய சில படையினரை அவர்கள் அடையாளம் கண்டனர். அவர்களிற் சிலரை பகிரங்கமாக அடித்ததுடன் வேறு சிலரை பணியை விட்டு நீக்கினர்.

ஆனால், கிளர்ச்சிப் படைவீரர்கள் பணியவில்லை.
ஜூலை மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த திப்பு சுல்தானின் மகள்களில் ஒருவரின் திருமணத்தை காரணம் காட்டி, வேலூர் கோட்டையில் கிளர்ச்சி படையினர் குழுமினர். அடுத்த நாள் பத்தாம் திகதி காலை மூன்று மணிக்கு ஆரம்பமான தாக்குதலில் 1,500 பேரைக் கொண்ட வலுவான இந்தியச் சிப்பாய்களிடம் வேலூர் கோட்டை வீழ்ந்தது.
அங்கிருந்த 350 வெள்ளையர்களில் 100 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிப்பாய்கள் பாரிய தவறை இழைத்தனர். வெற்றிக் களிப்பிலிருந்த அவர்கள் கோட்டை வாயில்களை பாதுகாப்பாக மூடத் தவறினர். வேலூரிலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவிலிருந்த ஆட்காட்டில் தளத்தைக் கொண்டிருந்த பிரித்தானிய மற்றும் சென்னை குதிரைப்படையினர் பிந்திய காலைப் பொழுதில் திறந்திருந்த வாயில்களினூடாக உள்ளே புகுந்தனர். தாக்குதல் தொடங்கியது.

350 கிளர்ச்சிப் படையினர் கொல்லப்பட்டனர். அதே தொகையினர் காயமடைந்தனர். பிரிட்டிஷார் இறுதியில் கோட்டையை மீளக் கைப்பற்றினர்.
மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சியை தூண்டியதாக சந்தேகப்பட்ட பிரித்தானியர்கள் அவர்களை கல்கத்தாவிற்கு இடம்மாற்றினர்.
இருளிற் கிடந்த வரலாற்றின் 200 ஆவது ஆண்டு நிறைவு இம்மாதம் 11 ஆம் திகதி நினைவு கூரப்பட்டது. இதை முன்னிட்டு இந்தியத் தபால் துறை முத்திரை வெளியிட முன்வந்தது. இதை "இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்டத்திற்கு" இறுதியில் கிடைத்த உரிய அங்கீகாரம் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

தபால்தலையில் வரலாறு பதியப்பட்டுவிட்டது. ஆனால், மக்கள் மனதில் பதியும் வகையில் பணி முன்னெடுக்கப்படுமா என்பது இன்னமும் கேள்விக் குறியாகத்தான் உள்ளது.

நன்றி-என்.சிவேந்திரன்/தினக்குரல்

5 comments:

பாலசந்தர் கணேசன். said...

யாருக்கும் தெரியாமல் இருந்த நிகழ்வுகள், இப்போதாவது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. இன்னமும் ஊக்கத்தோடு அரசு செயல்பட்டு தமிழக சரித்திர நிகழ்ச்சிகளை மக்களிடையே பரப்பட்டும்

மின்னுது மின்னல் said...

thankxx

பாவூரான் said...

//1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி காலை தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 130 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள வேலூரில் இடம்பெற்ற சிப்பாய் கலகம், வடஇந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தைவிட 51 ஆண்டுகள் முந்தையதாகும். வரலாற்றில் நிகழ்வுகளை வரிசைப்படுத்தும் வழக்கப்படி இது "முதலாவது சிப்பாய் கலகம்" என்றும் வடஇந்தியாவில் நடைபெற்றது" "இரண்டாவது சிப்பாய்க் கலகம்" என்றே கூறப்பட வேண்டும்.//


இந்த இரண்டு கலகங்களுக்கும் இடையில் பல கலகங்கள் நடந்துள்ளன. எனவே மீரட்டில் நடைபெற்ற கலகத்தை, இரண்டாம் சிப்பாய் கலகம் என அழைப்பதே தவறு.

எந்த சிப்பாய் கலகத்தையும், முதல் இந்திய சுதந்திரப்போர் என அழைப்பது அபத்தம்.

பாவூரான்

தமிழ்வாணன் said...

வணக்கம் கரிகாலன்,

தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நானும் எனது பதிவில் வேலூர் புரட்சி எனும் தலைப்பில் இதுபற்றி சில விடயங்களைதொகுத்து இருந்தேன். வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். தகவல் முழுமைக்காக அதற்கான இணைப்பை தந்திருக்கிறேன்.

அன்புடன்
தமிழ்வாணன்.

Chameleon - பச்சோந்தி said...

http://special-aappu.blogspot.com/

இங்கே விபரமாக எழுதி இருக்கிறார்கள்.