அன்பரசு எழுதிய கட்டுரை இது. நன்றியுடன் இங்கு பயன்படுத்தியிருக்கிறேன்.
டிக்சிற்றின் வருகைக்கு முன்பு இந்தியத் தூதரகம் எங்கே இருக்கின்றது. அதில் தூதராக யார் பணியாற்றுகிறார் போன்ற விடயங்கள் பற்றி ஈழத் தமிழர்கள் பெரிதாகச் சிந்தித்தது கிடையாது அவருடைய நியமனம் ஈழத்தமிழரின் விளிப்பைத் தூண்டியதோடு இந்தியா சம்பந்தமான அச்சத்தையும் ஏற்படுத்தியது.
டிக்சிற்றின் காலத்தில் இந்திய நேரடித் தலையீடு ஏற்பட்டது என்று சொல்வதைவிட இந்தியத் தூதரின் அழுத்தம் மிகக்கூடுதலாகக் காணப்பட்டது என்று சொல்வதுதான் மிகப்பொருத்தம். அதாவது தனது நாடு எதிர்பார்த்ததைவிடக் கூடுதலான முயற்சிகளை டிக்சிற் மேற்கொண்டார் என்று பொருள். முன்பு பதவி வகித்த இலங்கைக்கான இந்தியத் தூதர்களிலும் பார்க்க இவர் வித்தியாசமானவர். அதன் காரணமாக அவர்களுடைய பெயர்களைக்கூட நாம் மறந்துவிட்டோம். டிக்சிற் ஒரு அளவு கோள். முன்பு, பின்பு பதவி வகித்த இந்தியத் தூதர்களை அளவீடு செய்வதற்கு அவர் உதவுகிறார்.
இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு நிகரான சக்தி மையமாக இந்தியத் தூதரகத்தை தரமுயர்த்திய சிறப்பு டிக்சிற்கு உண்டு. இதை மாற்று அதிகார நிலையம் (ALTERNATE POWER CENTER) என்று அழைப்பார்கள் திடீரென்று இது ஏற்பட்டதல்ல. மிகவும் மெதுவாக ஆனால் இடைவிடாது இலங்கை விவகாரங்களில் தன்னையொரு ஆதிக்க சக்தியாக இந்தியா வளர்த்துக் கொண்டது. இந்த வளர்ச்சியின் உச்சம் டிக்சிற் காலத்தில் எட்டப்பட்டது. இடையிடையே ஒய்ந்து விட்டது போல் தென்பட்டாலும் இந்தியத் தூதரகத்தின் டிக்சிற் கால அழுத்தம் இன்னும் தொடர்ந்தபடி இருக்கிறது. இலங்கையின் இறைமையைச் செயலற்றுப் போகச் செய்வதில் இந்தியத் தூதரகம் முனைப்பாகச் செயற்படுகிறது. சிறிஜெயவர்த்தன புரத்திலுள்ள நாடளுமன்றமா, காலிமுகத்திடலிலுள்ள சனாதிபதி அலுவலகமா, காலி நெடுஞ்சாலையிலுள்ள இந்தியத் தூதரகமா எது ஆகக்கூடிய தரம் வாய்ந்தது என்று கேட்க வேண்டிய காலம் பிறந்து விட்டது.
இதற்கு விடையாக இந்தியத் தூதர் நிரூபம் சென் நடத்திய ரணில் ஆட்சிக் கலைப்பைச் சுட்டிக்காட்டலாம். 2002 முதற் பகுதியில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோது கொழும்பில் இந்தியத் தூதராக இருந்தவர் கோபாலகிருஸ்ணகாந்தி இராஜ கோபாலாச்சாரியார் மகள் லக்ஷ்மியும் மகாத்மா காந்தியின் மகனும் திருமணம் திருமணம் செய்து பெற்றெடுத்த புதல்வர்களில் ஒருவர் கோபி என்று அழைக்கப்படும் கோபாலகிருண காந்தி ஆவார். தமிழ், குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகியமொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர் சிறந்த இலக்கியவாதி. ஆனால் இந்திய அரசு மனங்கொண்ட சூழ்ச்சி, சதிபோன்றவற்றில் அவ்வளவு திறமை இல்லாதவர். இதன் காரணமாக இந்தியாவின் நோர்வே நாட்டிற்கான தூதுராகப் பதவி வகித்த நிரூபம்சென் இங்கு கொண்டுவரப்பட்டார். கோபாலகிருஸ்ண காந்தி நோர்வேத் தூதுராக அனுப்பப்பட்டார்.
நிரூபம் சென் கொழும்புக்குப் புதியவரல்ல. இவர் இந்திய இராணுவப் படையெடுப்பு காலத்தில் 1988தொடக்கம் 1989 வரை உதவி இந்தியத்தூதுவராகக் கொழும்பில் இருந்தவர் டிக்சிற் அப்போது தூதராகப் பதவி வகித்தவர் என்பது தெரிந்ததே இருவருக்கும் மனப்பொருத்தம் கிடையாத காரணத்தால் சதா முரண்பாடகளும் முட்டிமோதல்களும் நடந்தன. அப்போது இந்தியாவின் நுழைவுக்கு எதிராக ஜே.வி.பி சிங்கள நாடு தழுவிய கிளர்ச்சி நடத்திய காலம். ஜே.வி.பி தலைமைகளோடு நிரூபம் சென் இரகசியத்தொடர்புகளை வைத்திருந்தார். இதை டிக்சிற் விரும்பவில்லை. தொடர்பை நிறுத்தும்படி கட்டளை இட்டார். ஆனால் தொடர்புகள் நீடித்தன. ஜே.வி.பி கிளர்ச்சிகள் தோல்வி கண்டு றோகண வீஜயவீர கொல்லப்பட்டபின் இப்போதைய தலைவர் சோமவன்ச அமசிங்க நாட்டைவிட்டுத் தப்பி ஓடினார்.
இதற்கான உதவிகளை இந்தியத் தூதரகத்தினூடாக நிரூபம்சென் செய்துகொடுத்தார். பிரேமதசாவின் வலதுகரம் என்று போற்றப்படும் பாதாள உலகத் தலைவரும் அமைச்சருமாகிய சிறிசேன கூரே சோமவன்ச அமரசிங்கவின் திருமண உறவுமூலமான மைத்துனராவார். நிரூபம் சென் ஒரே கல்லில் இரு மாங்காய் வீழ்த்தினார். யு.என்.பியின் தலைமைப் பீடத்திற்குள் நுழைந்ததோடு ஜே.வி.பியின் நல்லுறவை இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுத்தார். சந்திரிகாவின் அழைப்பை ஏற்ற சிறிலங்காவுக்கத் திரும்பிய பின் பத்திரிகையாளர் மாநாடு நடத்திய சோமவன்ச அமரசிங்க, தான் தப்பியோடுவதற்கு இந்தியத் தூதரகம் உதவியதை ஒத்துக்கொண்டார்.
கடும் இந்திய எதிர்ப்பு அமைப்பாக ஆரம்பித்த ஜே.வி.பி இன்று இந்தியாவின் சொற்படி நடக்கும் அமைப்பாக மாறியதற்கு நிரூபம்சென் பாரிய பங்களிப்பு செய்துள்ளார். அத்தோடு அண்மைக்கால நிகழ்வுகளில் மிக முக்கியமானதாக் கருதப்படம் ரணில் ஆட்சிக்கவிழ்ப்பிலும் அவர் முக்கிய பங்களிப்பு செய்தார். நவம்பர் 04. 2003 இல் ரணில் ஆட்சிக் கவிழ்ப்பின் முதற்கட்ட நடவடிக்கையாக மூன்று முக்கிய அமைச்சுக்களை சனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்திச் சந்திரிகா தனது பொறுப்பில் எடுத்தார். இதில் பாதுகாப்பு அமைச்சும் அடங்கும். இதன் பின் பதிலடி நடவடிக்கையாக சந்திரிகாவைப் பதவி இறக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை ரணில் ஆரம்பித்தார்.
‘இம்பீச்மென்ற்’ (IMPEACH MENT) எனப்படும் அத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தடுப்பதில் நிரூபம்சென் வெற்றிகண்டார். ரணிலிடம் சென்ற அவர் ‘அவசரப்படாதீர்கள் உங்கள் ஆட்சி அதிகாரங்களுக்க ஆபத்து வராமல் இந்தியா பார்த்துக் கொள்ளும். சந்திரிகாவை வழிக்கு கொண்டுவர எம்மால் முடியும், கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறி அவருடைய கையைக் கட்டிப்போட்டார். ரணில் நன்றாக ஏமாற்றப்பட்டார், சந்திரிகாவும் நிரூபம்சென்னும் சேர்ந்து விளையாடுகிறார்கள் என்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டது ஜெயவர்த்தனாவின் அச்சில் வாக்கப்பட்ட ரணில் புலிகளை ஓரங்கட்டுவதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபின், முனைப்பாக ஈடுபட்டார்.
இந்தியா உட்பட பல உலக நாடுகளுடன் இணைந்து புலிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு வலை பின்னுவதில் ஈடுபட்ட அவருக்குத் தனக்கு எதிராக உள்நாட்டில் ஒரு சதிவலை பின்னப்படுவதை அறியாமல் போய்விட்டது. பெரும்பான்மை இருந்தும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான தார்மீகப்பலத்தை நிரூபம் சென் வழங்கினார். தனது ஜே.வி.பி மீதான செல்வாக்கை சந்திரிகாவுக்கு ஆதரவு திரட்ட பயன்படுத்தினார். அத்தோடு யு.என்.பியிலிருந்து தொண்டமானை பிரித்தெடுக்கும் சதிக்கும் அவரே மூலகாரணம் ஆவார்.
இந்திய உளவுத் துறையின் சூரிய நாராயணனின் பிடியில் ஆறுமுகம் தொண்டமான் சிக்கிப் பலகாலமாகிறது. தொண்டமான் சுயமாகச் சிந்திக்கும் மனிதனல்ல, சுயநலமே உருவான தலையாட்டிப் பொம்மைதான்.
ரணில் ஆட்சிக் கவிழ்ப்போடு புரிந்துணர்வு உடன்படிக்கை கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டதெனலாம். அதை முற்றாகத் தூக்கி ஏறிய சிறிலங்காவால் முடியாது.அது சர்வதேச உடன்படிக்கை. நோர்வேயும் ஸ்கன்டிநேவிய நாடுகள் ஐந்தும் சம்பந்தப்பட்டதானபடியால் இந்தியா எவ்வளவு விரும்பினாலும் அதைக் கிழித்தெறியவது இயலாத காரியம். ஆனால் அதை பலமிழக்கச் செய்யலாம்., அததைத்தான் இந்தியா இப்போது செய்துகொண்டிருக்கிறது; இதற்கு சந்திரிகா கை பலமிழக்காமல் இருக்கவேண்டும். பௌத்த சிங்கள பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி அரசிலிருந்து விலகினாலும் அரசைக் கவிழ்க்க முயலக் கூடாது என்ற நிபந்தனையை இந்தியா அதன் மீது விதித்துள்ளது.
மிகவிரைவில் பொதுத்தேர்தல் ஒன்று சிறிலங்காவில் வருவதை இந்தியா விரும்பவில்லை. யு.என்.பி மீண்டும் அதிகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற பயம் இந்தியாவுக்கு உண்டு. அதே சமயத்தில் ஜே.வி.பியும் ஒரு கேந்திர சக்தியாக இத்தீவின் அரசியல் நீடீக்க வேண்டும் என்ற இந்தியா விருபம்புகிறது. சந்திரிகாவின் கட்சி ஆட்சியில் தொடரவேண்டும் என்பதே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு.
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை மேடையேறக்கூடாது, அது சம்மந்தமான பேச்சுக்கள் நடைபெறக்கூடாது என்பது தான் இந்தியாவின் உடனடி இலக்கு. இதற்காகவே நிரூபம்சென் ஆட்சிக்கலைப்பைக் கனகச்சிதமாக நிறைவேற்றினார். பொதுக்கட்டமைப்பு விவகாரத்திலும் இந்தியா தனது தலையை நுழைத்தது நினைவிருக்கலாம். தனியாக விடுதலைப்புலிகளோடு பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் செய்யவேண்டாம்.
எல்லாத் தமிழ்கட்சிகளையும் பங்காளிகளாக பொதுக்கட்டமைப்பில் இணையுங்கள் என்பது இந்தியாவின் பரிந்துரை – புலிகளின் சர்வதேச ஆதரவுத்தளம் பலமாக இருப்பதால் பரிந்துரை எடுபடவில்லை. இப்போது இலங்கை - இந்தியப் பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிப் பேசப்படுகிறது. இரு நாடுகளும் தனது தனித்தனி இலாபத்திற்காக பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிச் சிந்திக்கின்றன. புலிகளுக்கு எதிரான கவசமாக இந்தியாவை பயன்படுத் இலங்கை அரசு விரும்புகிறது.
மீண்டுமொரு நேரடி மோதலில் ஈடுபட இந்தியா தயக்கம் காட்டுவது போல் தெரிகிறது. ஆனால் பரஸ்பரப்பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் இரு இலக்குகளை அடைய இந்தியா விரும்புகிறது. சேது சமுத்திரத்திட்டம் அரங்கேறினால் அதனுடைய முழுப்பாதுகாப்பிற்கு இக் கடற்பாதையின் இருபக்கப்பாதுகாப்பும் இந்தியாவின் பக்கம் இருக்க வேண்டும் என்பது இந்தியத் திட்டமிடல் அதிகாரிகளின் தீர்மானம். இதற்கு குடாநாட்டின் கரையோரமும் பலாலி விமானத்தளமும் இந்தியக் கட்டுப்பாட்டில் வரவேண்டும். வெளிநாட்டுச்சக்திகள் இத்தீவில் கால்பதிக்காமல் தடுக்கவேண்டும், இது இரண்டாவது இலக்கு.
இந்த இலக்களை அடைய முடியுமானால் இந்தியா தயங்காமல் இலங்கை அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யும். ஆனால் 1987இல் புலிகளின் சம்மந்தம் பெறாமல் ஒப்பந்தம் செய்து பெற்ற அனுபவத்தை இந்தியா இன்னும் மறக்கவில்லை. இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னோடி நிகழ்ச்சியாக அமைந்த வானத்தில் இருந்து பருப்பும் பூசணிக்காயும் போடும் விளையாட்டை நடத்திய அதே நட்வர் சிங் இப்போது இந்திய வெளியுறவு அமைச்சராகப் பதவிவகிக்கிறார். அண்மையில் கொழும்பு வந்தபோது, இதோ பாதுகாப்ப ஒப்பந்தம் கைச்சாத்திடும் நேரம் நெருங்கிவிட்டது என்று பண்டாரவெட்டி வைத்துவிட்டுப் போய்விட்டார். இலங்கை எதிர்நோக்கும் புலிகளின் விமானப்பலம் சம்மந்தமான விவகாரத்தில் இந்தியா உதவி வழங்கத் தயாராகி வருகிறது போல் தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று அனுமானிக்க வேண்டுமாயின் இந்தியத் தூதுவர் எப்படிப்பட்டவர் என்பதை அவதானிக்க வேண்டும்.
என்ன சொல்ல வருகிறோம் என்றால் . இப்போது பதவியில் இருக்கும் தூதுவரான நிரூபமாமேனன்ராவ் இவ்வுயர் பதவிக்குப் புதியவர். ஒரு டிக்சிற் அல்லது நிரூபம்சென் வந்தால் மாத்திரமே ஏதேனும் செப்படி வித்தை செய்து பார்க்கலாம். அப்படி இலகுவாகக் காரியம் சாதிக்கமுடியுமா என்றால் காலம் மாறிவிட்டது என்றாலும் இந்தியா மாறமாட்டாது என்றாலும் என்பது தான் பதில். இந்த அடிப்படையில் மிக விரைவில் ஒரு இந்தியத் தூதுவர் மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
நன்றி:-திரு.அன்பரசு மற்றும் சூரியன் இணையதளத்தினருக்கு.
No comments:
Post a Comment