கடந்த காலங்களில் பல தவற்றை செய்த பல தலவர்களின் வரலாறுகள்
பிறபட்ட காலங்களில் அவர்களின் ஆதரவாளர்களினால் நல்லவிதமாக
திருத்தப்பட்டு அவர்களினைப் பற்றிய ஒரு புனித பிம்மமே வளர்க்கப்பட்டு
ஈற்றில் அவர்களின் ஒரு பக்கமே மக்களின் முன் காட்டப்படுகிறது.இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய ஒரு தகவல் இது.
தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு பழி சுமத்தும் -ஈழவேந்தன் எம்.பி. கூறுகிறார்
கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றது. சிறந்த ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது குறைகாண்பது மனிதப்பண்பல்ல. ஆனால் நாட்டின் மிகப்பெரும் ஒரு தலைவர் செய்கின்ற தவறை மன்னிக்கலாம். மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு எம்மீது பழிசுமத்தும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மா.கா.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு தின விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை டியூ.குணசேகர தலைமையில் நடைபெற்ற போது இணைப்பாட்சி தத்துவத்தில் ஈடு இணையற்ற புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து பேராசிரியர் சிறப்புரையாற்றினார்.
கூட்ட முடிவில் சுவிட்சர்லாந்து பேராசிரியருடன் கலந்துரையாடிய ஈழவேந்தன் கொல்வின் ஆர்.டி.சில்வா தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது;
கொல்வின் ஆர்.டி.சில்வா ஆழ்ந்து படித்த மேதை - வரலாற்றாசிரியர். என்.எம்.பெரேராவுடன் இணைந்து இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்பியவர். மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமைக்காக குரலெழுப்பியவர்.
ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பியவர். தொலைநோக்குடன் ஒரு மொழி எனில் இருநாடு, இருமொழி எனில் ஒரு நாடு என்ற சிந்தனையுடன் 1954 இல் அவர் எழுப்பிய குரலை நாம் மறந்துவிட முடியாது. மாறாக நன்றி உணர்வுடன் நினைவு கொள்கின்றோம்.
அயர்லாந்து மக்கள் மீது ஆங்கிலத்தை திணித்த போது அதனை எதிர்த்து அந்த மக்கள் வாந்தியெடுத்தார்களோ அவ்வாறே சிங்களத்தை தமிழர் தொண்டைக்குள் திணித்தால் தமிழர் வாந்தியெடுப்பதும் உறுதியென்று அவர் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா பெருந்தகை சோல்பரியின் அரசியல் யாப்பில் மாற்ற முடியாத விதி என்று கூறப்பட்ட 29 ஆவது விதியை நீக்கி தமிழர்களுக்கு துளியளவும் பாதுகாப்பாற்ற நிலைமையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் 1972 இல் உருவாக்கிய வரும் இவரேயாவார்.
அத்துடன் தனிச் சிங்களச் சட்டத்துடன் பௌத்த மதத்தை ஆளும் மதமாகவும் மாற்றியமைத்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவேயாவார். நிலைமை மேலும் மோசமடைவதை உணர்ந்த செனட்டர் நடேசன், தமிழ் மக்களுக்கு உரிமை வழங்காவிடினும் உள்ளதையும் கெடுக்காதே என்று கெஞ்சிக் கேட்ட போது சாத்தியமானதை செய்வதே அரசியல் என்று கூறி இருந்த சலுகைகள் சிலதை இல்லாமல் செய்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவே.
எனவே தான் கொல்வினின் சட்டம் தமிழர்களை கொல்லும் சட்டம் என்று அப்போது எதிர்ப்புக்குரல்கள் எழுப்பியது என்றும் ஈழவேந்தன் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை சுவிட்சர்லாந்து பேராசிரியருக்கு ஈழவேந்தன் சுட்டிக்காட்டிய போது; அரசியல் வாதிகள் பலர் சூழ்நிலையின் கைதிகளாக மாறி தடம்புரள்வது இயல்பு. டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் இந்த தவறுக்கு ஆளானார் எனத் தெரிவித்தார்.
அடிக்கடி மறதிக்கு ஆளாகின்ற தமிழர்கள் மறதி தவறாதிருக்க வேண்டுமென்பதற்காகவே இச்செய்திகளை தெரிவிக்கின்றேன் என்றும் ஈழவேந்தன் அவரிடம் மீண்டும் சுட்டிக் காட்டினார்.
தினக்குரல்..
No comments:
Post a Comment