Friday, March 23, 2007

''சிங்களத்தரப்பு முழுவதுமாக தமிழருக்கெதிராகவே இயங்குகிறது''

-மனோகரன்-

மாதானக்காலத்தைவிடவும் யுத்த காலத்தில் சிங்களவர்கள் அதிகம் சுறுசுறுப்பாக இருப்பார்கள். யுத்தகாலத்தில் சிங்களவர்களின் ஊடகங்கள் மிகத்தீவிரமாக இயங்கும். அதிலும் சிறிலங்காப்படைகள் வெற்றிபெறுகின்றபோது அதை ஊடகங்கள் கொண்டாடுகிற விதம் சொல்லத் தேவையில்லை. அந்தளவுக்கு உண்மையும் புனைவும் கலந்த ஒருவகையான ஊடகப்பரப்புரை அப்போது நடக்கும்.

அதுபோலவே யுத்த்தின் போது சிறிலங்கா அரசாங்கமும் மிகத்தீவிரமாக இயங்கும். உள்நாட்டிலும் வெளியுலகிலும் யுத்தத்துக்கு ஆதரவான பரப்புரையை அரசாங்கம் மிக நுட்பமாக செய்யும். குறிப்பாக யுத்தத்தை நியாயப் படுத்துவதில் அரசாங்கம் மிகத்தீவிரமாகச் செயற்படும்.
இப்போது இது தான் நடக்கிறது மூதூர், சம்பூர், வாகரை பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் நியாயப்படுத்திவரும் விதம் சாதாரணமானதல்ல.

ஏ-15 பாதையை மூடி, தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி, மக்களை கொலை செய்து பட்டினிபோட்டு வாகரையை ஆக்கிரமிதத்து சிறிலங்கா அரசு. இதன் போது தமிழ் மக்களுக்குச் சார்பான அல்லது நியாயமான முறையில் சர்வதேச சமூகத்தின் கவனம் திசை திரும்பவேயில்லை. பதிலாக அங்கிருந்து மக்கள் வெளியேறி படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவுடன் சர்வதேச சமூகம் அந்த மக்களின் நலன்களைக் கவனிக்கவென வருகின்றது
.
இப்படி மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டுத்தூதுவர்கள் அணிதான் கடந்தவாரம் நடைபெற்ற தாக்குதொலொன்றில் சிக்கியுமிருந்தது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசம் மீது வாகரை சம்பூர் பகுதிகளில் பின்பற்றிய வழிமுறையையே தொடர்கிறது.
படுவான்கரை மக்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடி, அவர்களின் நாளாந்த இயக்கத்தையும் இயல்பு வாழ்வையும் நெருக்கடிக்கள்ளாக்கியது அது. ஒரு சில பாதைகள் மட்டும் இடையில் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக இருக்கின்றன.

தொடர்ந்து அங்குள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றன படைகள். கிராமங்கள் அழிகின்றன. மக்கள் இழப்புக்களுடன் இடம்பெயர்கின்றார்கள். மனிதப் பேரவலம் அங்கே தொடர்கிறது. சனங்கள் என்ன செய்வது எங்கே செல்வது என்று புரியாமல் தடுமாறுகிறார்கள்.

இந்த அவல நிலை குறித்தோ சிறிலங்காப்படைகள் நடத்துகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றியோ நியாயமற்ற முறையில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றியோ எந்தத் தகவல்களையும் செய்திகளையும் சிங்களத்தரப்பு ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இப்போதும் அவை இது விடயத்தில் அப்படித்தானிருக்கின்றன. சிங்களத்தரப்பினால் வெளியிடப்படும் சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் விடுதலைப் புலிகள் மீதே தாக்குதல்கள் நடத்தப் படுவதாகவும் இதில் புலிகளே பாதிக்கப்படுவதாகவும் அவை உறுதி உரைக்கின்றன.

படைதரப்பின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி அவை ஒரு சொல்தானும் வெளியிடுவதில்லை அதற்கு அவை தயாராகவும் இல்லை. அத்துடன் மக்களின் பாதிப்புகளையிட்டோ மக்கள் படுகின்ற பேரவல நிலையையிட்டோ அவை எதுவும் தெரியாமலே இருக்கின்றன.
இந்த ஊடகங்களின் மனதில் படையின் வெற்றி குறித்த எதிர்பார்ப்பும் அதற்கான வரைபடங்களுமே பதிவாகியிருக்கின்றன.

இதே வேளையில் மூதூரில் படையினர் மீது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையை விடுதலைப்புலிகள் நடத்திய போது இந்த ஊடகங்கள் மனித அவலங்கள் பெருகிவிட்டன என்றும் கண்டனங்களையும் ஒப்பாரிகளையும் பெரிய அளவில் வெளிப்படுத்தின. மூதூர் மீண்டும் படைத்தரப்பின் பிடிக்குள் வந்த போது சட்டென மறுபடியும் அமைதியாகிவிட்டன. மூதூரில் தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் அங்கள்ள முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல் தலைவர்களுக்கு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்திய பின்னரே தமது நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

அங்கோ படைதரப்புதான் பெரும் படுகொலைத் தாக்குதல்களை நடத்தியது. இதனை அப்போது களத்தில் நின்றிருந்த முஸ்லிம் மக்களே சாட்சி பூர்வமாக தெரியப்படுத்தினர். அத்துடன் சர்வதேச தொண்டு நிறுவனமான பிரான்சின் அக்ஸன்பெய்ம் அமைப்பின் பணியாளர்கள் பதினேழு பேர் படையினரால் படுகொலை செய்யப்பட்டுமிருந்தனர்.

இவ்வாறெல்லாம் சிறிலங்கா அரசு அங்கே நடத்திய படுகொலை மற்றும் மனித அழிவுகளையிட்டு எந்த வருத்தத்தையம் தெரிவிக்காமல் இருந்தன சிங்கள அறிவுலகமும் ஊடகமும்.
ஆக, படைத் தரப்போ சிறிலங்கா அரசோ தமிழ் மக்கள் மீது எந்த அழிவுகளையும் மேற்கொண்டாலும் அதுபற்றி சிங்கள மனதுக்கும் மூளைக்கும் எந்தச் சலனமும் ஏற்படுவதில்லை. அதனுடைய அறிவியக்கத்தில் தமிழ் மக்களின் அவலம்பற்றிய எந்தப் பதிவம் ஏற்படாது. அதேபோல சிங்கள மனச்சாட்சியிலும் தமிழ் மக்கள் மீதான அநீதிகளையிட்டு எந்த வருத்தமும் ஏற்படுவதில்லை.

இந்த ஊடகங்கள் மட்டக்களப்பு படுவான்கரை மீதான சிறிலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும் பற்றிய செய்திகளையும் இராணுவ நலன் சார்ந்தே அணுகுகின்றன.

படுவான்கரையில் இருந்து கடந்த மூன்று நாட்களுள் அறுபதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள அகதிகளாகி போக்கிடமின்றி இருக்கிறார்கள். ஏற்கனவே வாகரை சம்பூர் ஈச்சிலம்பற்று பிரதேசங்கிலிருந்து இடம்பெயர்ந்த தொண்ணூறாயிரம் அகதிகள் மட்டக்களப்பு அகதிகள் நகரில் அல்லற்படுகின்றனர் இப்போது படுவான்கரை அகதிகளும் சேர்ந்து ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் அகதிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
மாவட்டச் செயலகத்தினால் அகதிகளின் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சொல்கிறார் அகதிகளுக்கு அங்கே தங்குமிடமில்லை தவிர நகரில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டே படையினர் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களின் கிராமங்களின் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தினர் இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட அதிர்ச்சியில் படைமுகாமுக்கு அண்மித்ததாக இருந்த பாடசாலையின் மாணவிகள் சிலர் மயக்கமடைந்தமை இங்கே கவனிக்கதக்கது.

மக்கள் மத்தியில் பாரிய படைத்தளங்களை அமைத்துக் கொண்டு அங்கிருந்து பாரிய அளவில் தாக்குதல்களை மேற்கொள்வது அடிப்படையில் பெரும் மனித உரிமை மீறல் இதனை சர்வதேச சமூகம் ஏன் காண
மறுக்கிறது என்று அயலிலுள்ள மக்கள் கேட்கின்றனர்.

தவிரவும் மக்கள் மத்தியில் நின்று விடுதலைப் புலிகளைத் தாக்குவதானது தமக்குப் பாதுகாப்புhக இருக்கும் எனவும் படையினர் கருதுகின்றனர். மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதல்களை தம்மீது நடத்தமாட்டார்கள் என்று சிறிலங்கா படைதரப்புக்கு தெரியும்.

மக்கள் இடம் பெயர்ந்து படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு உயிர்பாதுகாப்புக் கருதிய அச்சத்தின் காரணமாகவே செல்கின்றனர். சிறிலங்காப்படையினர் பரவலலாக எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை மக்களின் வாழிடங்கள் மீது நடத்துவதாலும் போக்குவரத்து உணவுப் பொருட்களுக்குத் தடைகள் எற்படும் என்பதாலும் படையினரின் பகுதிக்குள் வேறு வழியில்லாத நிர்ப்பந்தம் காரணமாகக் செல்கின்றனர்.

மக்களை மிக நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களை இடம்பெயரச் செய்துவிட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை படையினர் மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா அரசாங்கம் சொல்கிறது.
இடம்பெயர்ந்துள்ள மக்களைக் காட்டி சர்வதேச சமூகத்திடம் இருந்து பெருவாரியான நிதியினையும் அது பெறுகிறது. படையினர் ஆக்கிரமித்த பகுதிகளுக்கு ஊடகவியளாளர்களை அழைத்துச் சென்று காட்டுகிறது.

அப்படியானால் படையினர் இப்போது தாக்குதல் நடத்துகின்ற பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்களை அனுப்பலாமே! அவர்கள் உண்மை நிலையையும், மக்களின் அவலத்தையும் அப்போது அறியமுடியும். சிங்கள ஊடகவியலாளர்களின் நடுநிலைமை ஊடகதர்மம், மக்கள் நலன், தேசியப்பாதுகாப்பு என்பனவெல்லாம் இந்த ஊடகங்களுக்கு அப்போது புரியும்.
இதனை நாம் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் ஊடகங்களும் அரசும் போர்காலத்தின் போது தமது ஊடகவெளிப்பாட்டையும் இராஜதந்திர அணுகுமுறையையும் வேகப்படுத்தி நுட்பமாகவே கையாள்கின்றன.

போர் தீவிரமாக நடக்கும் போது குறிப்பாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மிகப்பிரமாண்டமான அளவில் செய்யும் போது சிறிலங்கா அரசின் சனாதிபதியோ படைத்தளபதிகளோ வெளிவிவகார அமைச்சரோ வெளிநாடுகளில் சற்றுப்பயணங்கள் செய்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரையோ செய்கிறோம் என்று பரப்புரை செய்வார்கள்.
சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சிக்காலத்தில் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் இதனையே செய்தார். பின்னர் மங்களசமரவீர செய்தார். அமைச்சுப் பதவியை இழந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷவுடனான முரண்பாடுகள் அதிகரித்துவரும் சூழலில் மங்கள சமரவீர இந்த விடயங்களையெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். இப்போது புதிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் இதனையே செய்கிறார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் பணி என்பது தமிழ் மக்களுக்கு எதிரான போரை சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நம்பவைக்கும் பணியாகவே தொடர்கின்றது. ஏ-9 விதியை மூடியது மனித உரிமைக்கு முரணானது என்பதை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. பதிலாக கடல்வழி விநியோகத்துக்கு விடுதலைப்பலிகள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று அது சொல்வதன் பின்னணி என்ன?
முற்றுமுழுதான இராணுவ நலனை முதன்மைப்படுத்தியதன் விளைவுகளே இவையெல்லாம். இராணுவ நலன் இராணுவ மேலாதிக்கம் என்பதனூடாக தமிழ் மக்களை ஒடுக்குவதே அதன் ஒரே நோக்கம்.

இது தான் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரல் அந்த நிகழ்ச்சி நிரலுக்குத் தோதானமாதிரி இதற்கு சிங்களத் தரப்பு ஊடகங்கள் முழுமையாக துடிப்புடன் இயங்குகிறது.

இந்த நிகழ்ச்சி நிரல் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு எதிரானது. எனவே இதற்கு தமிழ் மக்கள் தங்களைத் தயார்படுத்தி செயற்பட வேண்டீயுள்ளது. சர்வதேச அளவில் தமிழர்கள் சிறிலங்கா அரசின் உண்மைத் தோற்றத்தை அதாவது தமிழரின் விடுதலை நடவடிக்கையை அம்பலப்படுத்த வேண்டும். புதிய ராஜதந்திர முயல்வுகளுக்கு நுட்பமாக தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து செயலாற்ற வேண்டும். ஒடுக்குமுறையை செய்வோர் அடக்குமுறையாளர் அநீதியை இழைப்போர் பொய் சொல்வதற்கு கூச்சப் படவோ வெட்கப்படவோ மாட்டார்கள். நீதியின் பக்கம் நியாயத்தோடு நிற்கும் நாங்கள் இனியும் பின்னிற்கலாமா?

நன்றி--ஈழமுரசு

No comments: