* ஈழப் பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கைக் கடற்படையினரால் தமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு பிணங்களாகக் கரை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மீனவர்களைப் படுகொலை செய்தது, `இலங்கைக் கடற்படையா விடுதலைப் புலிகளா' என்ற ஆய்வில் தமிழக, மத்திய அரசுகள் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள் நாசப்படுத்தப்பட்டு வருகின்றன. பல மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களின்போது மயிரிழையில் உயிர் தப்பி கரைசேரும் மீனவர்கள் ஒருமித்த குரலில் இலங்கைக் கடற்படையே படுகொலைகளைச் செய்கின்றதென கூறிவருகின்ற நிலையில், அவர்களின் வேதனைகளையும் உணர்வுகளையும் சீண்டிப்பார்க்கும் விதமாக இலங்கை அரசும் இந்திய மத்திய அரசும் விடுதலைப் புலிகளை குற்றவாளிகளாக்கப்பார்க்கின்றனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மீனவர்கள் தயாரில்லை.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டும் மத்திய அரசோ, இலங்கை அரசோ அதனை காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.
இதேவேளை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்பில் தமிழக அரசும் மென்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே தெரிகிறது. நெய்வேலி அனல் மின் நிலையப் பிரச்சினையின்போது தனது ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டிய தமிழக அரசு, தினமும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரம் தொடர்பில் மத்திய அரசிடம் மென்போக்காகவே நடந்து கொள்கின்றது.
மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியும், கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடுகளையும் அரச வேலைவாய்ப்புக்களையும் வழங்கி அவர்களை சாந்தப்படுத்த முனையும் தமிழக அரசும் ஏனைய அரசியல் கட்சிகளும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண முன்வரவில்லை.
தம்மீது இலங்கைக் கடற்படையினரே தாக்குதல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுவதாக மத்திய அரசிடம் முறையிட்ட தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிநின்றபோது இந்தியக் கடற்படைத் தளபதி இப் படுகொலைகளில் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாமென கூறிய கருத்து தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியபோது, தமிழக மீனவர்களை படுகொலை செய்யவேண்டிய தேவை இலங்கைக் கடற்படைக்கு இல்லையென, இலங்கை அரசின் பேச்சாளர் போன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது மீனவர்களை சினமடைய வைத்துள்ளது.
இலங்கை அரசும் இந்திய - இலங்கை நட்புறவை சீர்குலைப்பதற்காக விடுதலைப் புலிகளே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாகவும் தமது கடற்படை தமிழக மீனவருக்கெதிராக ஒரு `ரவை' கூட சுட்டதில்லையென்றும் கூறுகின்றது.
இந்திய மத்திய அரசும் இலங்கையரசும் இவ்வாறு புலிகளின் மீது பழிபோட முயற்சிக்கையில் தமிழக அரசோ, மீனவர்களின் குற்றச்சாட்டை புறந்தள்ளிவிட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணைக்குழு நியமிக்குமாறு கோருவது நகைப்புக்கிடமாகவுள்ளது.
தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் பழியை விடுதலைப் புலிகள் மீது போடவேண்டிய தேவை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் நிறையவே உள்ளது.
இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் ஆதரவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிது காலம் புலிகளுக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறுபூத்த நெருப்பாக இருந்தபோதும் தற்போது அது வெளிப்படத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் அண்மையில் இலங்கை கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது புலிகளின் விமானப் படை நடத்திய தாக்குதல் தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்தியது. இதன் வெளிப்பாடாக தமிழகத்தின் ஊடகங்கள் விடுதலைப் புலிகள் பலம் தொடர்பில் பெரும் பிரசாரங்களை முன்னெடுத்தன. இவையெல்லாம் மத்திய அரசையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சுற்றியுள்ள எம்.கே.நாராயணன், சிவ்சங்கர்மேனன் போன்றோரையும் சினமூட்டியதன் விளைவே புலிகள் மீது பழிபோடும் இந்த முயற்சி.
தமிழக மீனவர்களை புலிகள்தான் படுகொலை செய்கிறார்களென்ற பிரசாரத்தை முன்னெடுப்பதன் மூலம் தமிழகத்திலே புலிகளுக்கு அதிகரித்து வரும் ஆதரவை சீர்குலைக்க மத்திய அரசும் உளவுத் துறையும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றன. அதன் வெளிப்பாடே இந்தியக் கடற்படைத் தளபதியும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரும் விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் விதமாக வெளியிட்ட கருத்துகளாகும்.
இலங்கையரசைப் பொறுத்தவரையில் புலிகள் மீது பழிபோட வேண்டிய தேவைகள் நிறையவேயுள்ளன. விடுதலைப் புலிகளிடம் உள்ள கடற்புலிகளை வெற்றிகொள்ள முடியாத நிலையில் இலங்கைக் கடற்படையினர் உள்ளனர். கடற்புலிகளை வெற்றிகொள்ள வேண்டுமானால் இந்தியக் கடற்படையின் உதவி இலங்கைக்கு இன்றியமையாதது. ஆனால், இலங்கை விடயத்தில் இந்தியா சற்று எட்டவே நிற்பதனால் இலங்கைக்கு நேரடியாக உதவ பின்னடித்தது.
இலங்கைக் கடற்படையுடன் கூட்டு ரோந்தில் ஈடுபடுமாறு இலங்கை அரசு பலமுறை இந்தியாவிடம் வற்புறுத்திக் கேட்டபோதும் அதற்கு இந்தியா இணங்கவில்லை. இந்நிலையில் இந்தியாவை வழிக்குக் கொண்டுவர இலங்கை தெரிந்தெடுத்த வழிமுறையே தமிழக மீனவர் படுகொலை.
தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் தமிழக அரசினூடாக மத்திய அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தமிழக மீனவர்களை பாதுகாப்பதென்ற போர்வையில் கூட்டு ரோந்திற்கு இந்திய கடற்படையை இணங்கவைப்பதே இலங்கையரசின் நோக்கம். அதேவேளை, தம்மீது தமிழக அரசின் கோபப் பார்வை திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே சிவிலுடைகளில் வந்து தமிழக மீனவர்களை தாக்கிவிட்டு விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடும் முயற்சி.
அத்தோடு, புதுடில்லியில் கூடிய சார்க் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் தமக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் நிலைப்பாடுகளை எடுக்க வைக்க வேண்டுமென்ற நோக்கிலும் தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள்.
ஆனால், இந்த மாநாட்டில் இலங்கை நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டது. இலங்கை கூட்டு ரோந்திற்கு இந்தியா சம்மதிக்கும் என்ற பெரு நம்பிக்கையிலிருந்த இலங்கையரசு கூட்டுரோந்து தொடர்பில் இந்தியா சாதகமான பதிலை தந்துவிட்டதாக இலங்கையிலுள்ள அரச ஆதரவு ஊடகங்கள் மூலம் பெரிய பிரசாரத்தை முன்னெடுத்தது.
ஆனால், நெய்திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையுடன் கூட்டு ரோந்துக்கு இணங்க வேண்டாமென மத்திய அரசை வலியுறுத்தினார். கருணாநிதியின் இந்த வலியுறுத்தலுக்கு பின்னணியில் மீனவர்களின் வாக்கு வங்கி இருந்ததே தவிர கூட்டு ரோந்தினால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளோ இருக்கவில்லை என்பது வேறு விடயம்.
இலங்கை அரசுடன் கூட்டு ரோந்துக்கு இணங்கும் நிலையிலிருந்த மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்கியது. இதனால் கூட்டு ரோந்துக்கு தயாரில்லையென தெரிவித்ததுடன் யுத்த மூலம் தீர்வுகாணும் முயற்சியை கைவிட்டுப் பேச்சு மூலம் தீர்வு காண முன்வரவேண்டுமென இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறி அனுப்பியது.
சார்க் மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட உறுதி எடுக்கப்பட்டதே தவிர, புலிகளுக்கு எதிராகவோ அல்லது இலங்கை அரசுக்கு சார்பாகவோ எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனால், சார்க் மாநாட்டை தமக்கு சார்பாக பயன்படுத்த திட்டமிட்டிருந்த இலங்கையரசு தோல்வி கண்டது.
சார்க் மாநாடு முடிந்த சில தினங்களிலேயே இலங்கைக் கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை வேட்டையாடத் தொடங்கிவிட்டது. கூட்டு ரோந்து என்ற தமது சூழ்ச்சித் திட்டத்துக்கு இந்திய அரசு இணங்கும்வரை தமிழக மீனவர்கள் மீதான படுகொலைகளை இலங்கையரசு தொடர்ந்து முன்னெடுக்குமென்பதே உண்மை.
இலங்கை அரசு, இந்திய மத்திய அரசு கூறுவதுபோல் தம் மீதான தாக்குதல்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்புமில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இதேபோன்றே, விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அந்த அமைப்பின் இராணுவப் பேச்சாளரான இளந்திரையன் ஆகியோர் இலங்கை, இந்திய அரசுகளின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளனர். தமிழக மக்களும் தமது உறவுகளென தெரிவித்துள்ள அவர்கள் தம்மை தமிழக மக்களிடமிருந்து வேறுபடுத்தவே இலங்கைக் கடற்படையினர் செய்யும் படுகொலைகளை தம்மீது இலங்கை அரசு சுமத்துவதாக விளக்கியுள்ளனர்.
தமிழகத்தில் தமக்கு அதிகரித்து வரும் ஆதரவினை இழக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் இழந்த ஆதரவினை மீண்டும் பெறுவதற்கு புலிகள் பெரும் சிரமப்பட்டார்கள். இவ்வாறான நிலையில் தமிழகத்தில் தற்போது ஈழப் போராட்டத்திற்கு சார்பாக மீண்டும் ஏற்பட்டுள்ள எழுச்சியை சீரழிக்கும் முயற்சியில் புலிகள் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் இந்த எழுச்சியை சீர்குலைக்கும் தேவை இலங்கையரசுக்கும் இந்திய மத்திய அரசுக்குமே அதிகளவில் உண்டு.
தமிழக மீனவர்கள் படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித தொடர்புகளுமில்லையென்பது தமிழக, மத்திய அரசுகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் தமது அரசியல் நோக்கங்களுக்காக இலங்கையரசுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை பகடைக்காயாகப் பார்க்கின்றனர். ஆனால், இவர்களின் புலிகள் மீதான பழிப் பிரசாரங்கள் தமிழக மக்களிடையே எடுபடவில்லை. இதற்கு இங்கு அதிகரித்து வரும் இலங்கையரசுக்கும் அதன் கடற்படைக்கும் எதிரான தொடர் போராட்டங்களே எடுத்துக்காட்டாகும்.
இலங்கைக் கடற்படையின் தாக்குதலினால் கொல்லப்பட்ட மீனவர்களின் கிராமங்களுக்கு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, `இலங்கைக் கடற்படையை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டுமென' கூறியமை இந்திய அரசே உண்மை நிலையை உணர்ந்துள்ளமைக்கு எடுத்துக்காட்டாகும்.
தமிழக மீனவர்களைப் பொறுத்தவரை தமது ஜீவாதாரப் பிரச்சினையை அரசியலாக்காது அன்றாட வாழ்வுக்கு வழியேற்படுத்தி தரவேண்டுமென்பதே ஒரே கோரிக்கையாகும்.
கலைஞன்/thinakkural
No comments:
Post a Comment