Thursday, November 01, 2007

முரண்பட்ட கருணா குழுவினர் ஒன்றுகூடி மீண்டும் சேர்ந்தியங்குவர் என அறிவிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) என்று அழைக்கப்படும் கருணா அணிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் உள் முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன என்று அந்த அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்திருக்கிறார்
.
இது தொடர்பாக அவர்களுடைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பவை வருமாறு:
கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பில் கட்சியின் சகல உயர் மட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி மக்களினதும், கட்சியினதும் எதிர்கால நலனையும், சமகால நிலைமையையும் கருத்தில் கொண்டு நடைமுறைச் சாத்தியமான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவின் ஆலோசனையிலும் பணிப்புரையின் கீழும் பிள்ளையான் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு கருணாவின் நேரடிக் கண்காணிப்பில் கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆறுபேர் கொண்ட அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன் உறுப்பினர்களாக பிள்ளையான், திலீபன், பாரதி, அசாத் மௌலானா, மார்க்கன், பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் நிதிநிலைகள் தொடர்பாக கையாள்வதற்கு 7 பேர் கொண்ட நிதி செயற்குழு ஒன்றும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நற்பெயருக்கும், கட்டுக்கோப்பிற்கும்,விதிக்கு முரணாகச் செயற்படும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பதவி நிலை கருத்தில் கொள்ளப்படாது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பலவாரங்களாக கருணா அணிக்குள் முரண்பாடுகள் உருவாகி இருந்தமை உண்மையே.
அதற்குப் புறம்பாக தலைமைத்துவப் போட்டி, நிதிமோசடி என்றெல்லாம் கூறப்பட்டவை கற்பனை இவ்வாறான கருத்தையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது
.
அண்மையில் தமது அமைப்புக்குச் சொந்தமான பல கோடி ரூபா நிதியை அதன் தலைவர் கருணா மோசடி செய்துவிட்டார் என்றும், ரி.எம். வி.பி. அணியில் இருந்தும் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தும் அவரை மத்தியகுழு இடைநிறுத்தியிருக்கிறது எனவும் அறிவித்திருந்தமை தெரிந்ததே

No comments: