Sunday, June 08, 2008

வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு

தமிழக மீனவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை கடற்படை உருவெடுத்துள்ள நிலையில், இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களின் உயிரற்ற உடல்கள் கரை சேர்வதை வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளமை குறித்து கடும் கண்டனங்களும் விசனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தினமும் வேட்டையாடப்படுகின்றனர். வயிற்றுப் பசிக்காக மீனுக்கு வலைவீசச் செல்லும் இந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை வலைவீசிப்பிடித்து சுட்டுக் கொல்கிறது. காயப்படுத்துகிறது. கைது செய்து தமது முகாம்களுக்குக் கொண்டு சென்று கொடூர சித்திரவதைகளைச் செய்கிறது.

கடலுக்குச் சென்ற தமது உறவுகள் மீனோடு திரும்புவரென எதிர்பார்த்து குடும்பங்கள் பசியோடு காத்திருக்க மீன்பிடிக்கச் சென்றவர்கள் இலங்கை கடற்படை சுறாக்களால் குதறப்பட்டு பிணமாகக் கரை ஒதுங்கும் சம்பவங்கள் இன்று தமிழக கடற்கரையோர கிராமங்களில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

தமிழக மீனவர்களின் இந்த அவலநிலை கண்டு அவர்கள் குடும்பங்களின் பரிதாப நிலை பார்த்து தமிழக அரசியல்வாதிகளைத் தவிர தமிழ் இரத்தம் ஓடும் அனைவரும் துடித்துப் போய் கொதித்துப் போய் நிற்கின்றார்கள். ஆனால், அரசியலுக்காக பிணத்தையும் மணமுடிக்கும் கீழ்ப்புத்தி கொண்ட அரசியல்வாதிகள் மட்டும் இதனைப்பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை.

அண்மைய சில நாட்களாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றது. அதுதவிர பல தமிழக மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் நீதிமன்றங்களில் கூட ஆஜர்படுத்தப்படாமல் இலங்கை கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் இந்த அவலநிலைக்கு தமிழக ஊடகங்களே முக்கிய பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகளை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் சிறுவிடயங்களைக் கூட ஊதிப் பெருப்பித்து செய்திகளை வெளியிடுவதன் பலாபலனையே தமிழக மீனவர்கள் அனுபவிக்கின்றனர். பரபரப்புக்காகவும் பணத்துக்காகவும் வெளியிடப்படும் செய்திகள் ஒரு இனத்திற்கே சாவுமணி அடிப்பதை தமிழக ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதக் கடத்தல், இரசாயனப் பொருட்கள் கடத்தல், பற்றறிகள் கடத்தல், எரிபொருள் கடத்தல், தமிழக கடற்பரப்பில் நுழைந்த விடுதலைப்புலிகள் கைது, தமிழகத்திற்குள் கடல்வழியாக புலிகள் ஊடுருவல், தமிழக மீனவர்கள் புலிகளுக்கு பொருட்கள் கடத்துகின்றனர் என்று எவ்வித ஆதாரமுமற்ற செய்திகளை தமிழக ஊடகங்களில் தினமும் அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான செய்திகள், தகவல்களாலேயே தமிழக மீனவர்களை தமது பரமவிரோதிகளாக இலங்கை கடற்படையினர் கருதுகின்றனர். தமிழக மீனவர்களை கடற்பரப்புகளில் வைத்து சுட்டுக் கொல்வதன் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல்களை, அவர்களின் ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்தி விட முடியுமென இலங்கை கடற் படையினர் கருதுகின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது தான் வளர்ந்துவரும் ஒரு போராட்டக்குழுவல்ல. அவர்கள் 30 வருடங்களுக்கு மேற்பட்ட போராட்ட அனுபவத்தைக் கொண்டவர்கள். விமானப்படை, கடற்படையை வைத்துள்ளவர்கள். இலங்கைக் கடற்படையின் யுத்தப் படகுகளுக்கும் அதிவேக படகுகளுக்கும் ஒப்பான கடற்கலங்களை வைத்துள்ளவர்கள். கப்பல்களில் ஆயுதங்களை தருவிப்பவர்கள் .

அவ்வாறானவர்கள் சிறிய மீன்பிடிப்படகுகளில் ஆயுதங்களை கடத்துகிறார்கள். அவர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் தமிழக செய்தியாளர்களால் மட்டுமே எழுதக்கூடிய விடயம். 25 லீற்றர் டீசல் ஒருபடகில் கொண்டு செல்லப்பட்டால் கூட அது விடுதலைப்புலிகளுக்கு கடத்தப்பட்டதாக இந்த தமிழக ஊடகங்கள் கண்டுபிடித்துவிடும்.

இந்த ஊடகங்களின் ஆதாரமற்ற செய்திகளால் தாம் பல சிக்கல்களை எதிர்கொள்வதுடன், சில சம்பவங்கள், வழக்குகளின் போக்கையே தமிழக ஊடகங்கள் மாற்றி விடுவதாக சில உயர் பொலிஸ் அதிகாரிகளே விசனப்பட்ட சம்பவங்கள் பலவுண்டு. புலிகளுக்கெதிராக செயற்படுவதாக நினைத்துக் கொண்டு தமது உறவுகளுக்கே இந்த தமிழக ஊடகங்கள் கொள்ளி வைக்கின்றன.

கடந்த வாரம் கூட கச்சதீவுக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவரான தங்கச்சிமடத்தை சேர்ந்த சந்தியா என்பவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தாம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்விடத்துக்கு வந்த இலங்கை கடற்படை எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தப்பிவந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீனவரின் படுகொலையையடுத்து இராமேஸ்வரத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவக் கிராமங்களில் கொந்தளிப்பான நிலையும் ஏற்பட்டது. மீனவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த இராமேஸ்வரம் மருத்துவமனை முன்பாக திரண்ட மீனவர்கள் இலங்கை கடற் படைக்கெதிராகவும் தமிழக அரசைக் கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழக அரசோ மத்திய அரசோ எந்தவிதமன நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.தி.மு.க.பொதுச் செயலர் வைகோவும் அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதாவும் மட்டுமே இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். வைகோ வழக்கம் போலவே பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

ஆனால் இந்த மீனவர் படுகொலை தொடர்பில் சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதுவர் ஹம்சா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவரொருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் செய்தி எமது கவனத்தை ஈர்த்துள்ளது.இது தொடர்பில் நாம் விசாரணைகளை நடத்தினோம்.

இலங்கை கடற்படையினரிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் பலமுறை நடுக்கடலில் சிக்கித் தத்தளித்த போது இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு தங்களுக்கு உதவி செய்துள்ளதாக தமிழக மீனவர்களே பலமுறை நன்றியுடன் கூறியுள்ளனர்.

எனினும் சில தீய சக்திகள் சுயநலத்துக்காக தமிழக மீனவர்களிடையே இலங்கை கடற்படைக்குள்ள நற்பெயரைக் கெடுக்க சதி செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் இலங்கை கடற்படை, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்கள் உட்பட அனைத்து இந்திய மீனவர்களையும் மனிதாபிமானத்தோடு கையாளும் தனது கொள்கையை தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது, என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கை துணைத்தூதுவர் ஹம்சாவின் அறிக்கை கடைந்தெடுக்கப்பட்ட பொய் என மீனவர்கள் கூறுகின்றனர். ஹம்சா இலங்கைக்கான துணைத் தூதுவரல்ல.அவர் ஒரு உளவாளி. தமிழக மீனவர்களுக்கு புலிச்சாயம் பூசி அவர்கள் கொல்லப் படுவதற்கு முக்கிய காரணமானவர் இந்த ஹம்சா. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் பல சூழ்ச்சிகளை இங்கு செய்து கொண்டிருப்பவர் இந்த ஹம்சா.

எம்முடன் வந்த மீனவர் சந்தியா இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை நாம் எமது கண்களால் பார்த்தோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு இலங்கை கடற்படையே காரணம். வேறு எவரும் எம்மை சுடுவதில்லை. இலங்கை கடற்படை இப்படுகொலைகளை செய்வதை பல முறை எமது மீனவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதலில் இந்த இலங்கைத் துணைத்தூதரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென அந்த மீனவர்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.

நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களையும் கைது செய்யப்படும் மீனவர்களையும் இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை துணைத் தூதுவர் சொன்ன கருத்து மிகப்பெரும் நகைச்சுவையென்கிறார் பல நாட்களாக இலங்கை கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டு மிகக்கொடூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மீனவரான அருளானந்தம்.

கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அருளானந்தம் கூறுகையில்;

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை அரசு பொய்ப்பிரசாரம் செய்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளிலும் கடற்படைத் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டு கொடூர சித்திரவதைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர்.

கடந்த மே 9 ஆம் திகதி இலங்கை கடற்படை எம்மை பிடித்துச் சென்றது. எம்மில் 19 பேர் இருந்தோம். அங்கு சிறையிலடைத்தனர். கண்களைக் கட்டி உணவு வழங்காமல் சித்திரவதை செய்தனர். 6 நாட்களாக சாப்பாடு தரவில்லை. இதனால் மயக்கமடைந்தோம். பிளாஸ்டிக் பையில் பெற்றோலை ஊற்றி எமது முகத்தை அதனால் மூடி சித்திரவதை செய்தனர். துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டினர்.

கடுமையாகத் தாக்கினர். போனவர்கள், வந்தவர்கள் எல்லாம் எம்மை மோசமாகத் தாக்கினர். நாம் புலிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்களெனக் கூறியே எம்மைத் தாக்கினர். புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் படகுகளை காட்டிக்கொடுத்தால் எம்மை விட்டு விடுவதாகக் கூறினர்.

இதற்கிடையில் இந்தியக் கடற்படை எம்மைத் தேடுவதாக அறிந்து மன்னார் நீதிமன்றில் எம்மை மே மாதம் 15 ஆம் திகதி ஆஜர்படுத்தினர். பின்னர் 26 ஆம் திகதியே நீதிமன்றம் எம்மை விடுதலை செய்தது.

எம்மைப் போல் பல மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதாக நாம் அறிந்தோம். எனவே, அவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கையெடுக்கவேண்டும்.

தமிழக மீனவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது என்று தெரிவித்தார்.

இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அவர்களை இந்திய கடற்படை சுடுவதில்லை. அவர்களை கைது செய்து மிகவும் கௌரவமாக நடத்தி ஒரு சில தினங்களுக்குள் நீதிமன்றில் கூட ஆஜராக்காமல் விடுதலை செய்துவருகின்றது. ஆனால், இலங்கை கடற்படை தமிழக மீனவரை சுட்டுக் கொல்கிறது. கைது செய்து சிறைகளில் அடைக்கிறது. கொடுமைப்படுத்துகிறது. இதனைப்பார்த்தால் இந்தியா வல்லரசா? இலங்கை வல்லரசா என்ற சந்தேகம் தமக்கு ஏற்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வதும் அதனை தமிழக, மத்திய அரசுகள் வேடிக்கை பார்ப்பதும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் வரை தொடரத்தான் போகின்றது.

எனவே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தமிழக மக்கள் எதனையாவது செய்தால் மட்டுமே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து அவர்களால் காப்பாற்ற முடியும்.

கலைஞன்/thinakkural

1 comment:

கிரி said...

எனக்கும் நீண்ட நாட்களாக இந்த வருத்தம் உண்டு :-(