இதில் வெட்கப்பட எதுவுமில்லை.
வண்ணத்தொலைக்காட்சி என்றால் வரிசையில் நிற்கிறோம்,
வாக்குக்கு பணம் என்றாலும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூடுதலாய்க் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறோம்.
தாய்த்தமிழ்நாட்டில் மானமும் அறிவும் இப்படித்தான் மலினப்பட்டுக்கிடக்கிறது.
இன உணர்வும், மொழி உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் குறைந்து வருகிறது.
ஆனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் இனப்பற்றும், மொழிப்பற்றும் விஞ்சி நிற்கும் இனமாக தமிழினம் அடையாளம் காணப்படுகிறது.
இலக்கிய வளம், தனித்து இயங்கும் ஆற்றல், வேர்ச்சொற்கள், சொல்வளம் ஆகியன தமிழ் மொழியின் சிறப்பியல்புகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
இத்தகைய மொழியும், அதனைப் பேசுகின்ற இனமும் பாரம்பரியம் மிக்க வரலாற்றைத் தன்னகத்தே கொண்டதென்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
நம் தமிழ்மொழி விழா எடுத்துக் கொண்டாடப்பட வேண்டிய மொழி, பெருமைப்படுத்தப்பட வேண்டிய மொழி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
ஆகவே உலக செம்மொழி மாநாடு நடைபெறுவதில் நமக்கு எவ்வித எதிர்ப்புமில்லை.
ஆயிரம் வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், ஆயிரம் கவிஞர்கள், ஆயிரக்கணக்கில் ஆய்வுக் கட்டுரைகள்,
ஐநூறுப்பக்கங்களில் சிறப்பு மலர், தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நடனங்கள்,
இலட்சக்கணக்கில் பார்வையாளர்கள் என உலக செம்மொழி மாநாடு களைகட்டத் தொடங்கி விட்டது.
முத்தமிழுக்கு நான்காம் தமிழான கணினித் தமிழும் அணி செய்கிறது.
இந்தத் திருவிழாவுக்கு இடையில் தமிழ்மொழியை நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
தமிழ்த் தாயின் நேரடி வாரிசுகளாய்ப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் அரியணையில் அமர்ந்து நாற்பத்து மூன்று ஆண்டுகள் மறைந்தோடி விட்டன.
எழுத்தில், பேச்சில், வசனத்தில், கவிதையில் எங்கும் தமிழ்வாசம் மணக்க மணக்க காட்சிகள் அரங்கேறின.
'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி' எனும் வசனம் காலங்காலமாய் எதிரொலித்துக்கொண்டே வருகிறது.
இத்தகைய வரலாற்றை உள்ளடக்கிய நம் தமிழ்மொழி எங்கெல்லாம் இருக்கிறதெனக் கேள்வி எழுப்பிப் பார்த்தால் எஞ்சி நிற்பது வேதனை மட்டுமே தான்!
நீதி மன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழ் இல்லை? கடவுளின் சன்னதியில் பூசிக்கும் மொழியாகத் தமிழ் இல்லை?
கடைப்பலகைகளில் தமிழ் இல்லை? பாட சாலைகளில் பயிற்று மொழியாகத் தமிழ் இல்லை?
கணிப்பொறியில் தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட மொழியாகத் தமிழ் இல்லை?
இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை? இப்படி இருக்க வேண்டிய இடங்களிலெல்லாம் தமிழ் இல்லை.
ஆனால் மேடைகளில் புகழ் மாலைகளில் தமிழ் தாராளமாய்க் கொஞ்சி விளையாடுகிறது.
ஆங்கில ஆட்சியாளர்களிடமிருந்து நூல்கள் பதிப்பிக்கும் உரிமை நம் கைக்கு வந்து சுமார் எழுபது ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன.
ஆனால் நம்மிடம் கால வரிசைபடி தமிழ்நூல்களின் பதிப்பு வரலாறு இல்லை.
தொல்காப்பியம் உள்ளிட்ட நமது பழம் இலக்கியங்களின் ஆய்வியல் நோக்கிலான வரலாறு நம்மிடம் இல்லை.
நமது இலக்கியங்கள் உருவான காலம் குறித்த பரந்து பட்ட ஆய்வுகள் இல்லை.
தமிழ்மொழியை உலக மொழிகளோடு ஒப்பாய்வு செய்யும் ஆய்வு மையங்கள் இல்லை.
அதற்கான முயற்சிகள் கூட இல்லை.
இதையெல்லாம் செய்து முடித்து விட்டு தான் விழா எடுக்க வேண்டுமா? என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.
ஆனால் இதைக்கூட செய்ய முடியாத நாம் விழா எடுத்து என்ன செய்து விடப்போகிறோம் என்பது தான் நம் கேள்வி.
இப்படி தமிழின் உரிமைகள் நிலைநாட்டப்படாத சூழல் மட்டுமல்ல, தமிழரின் உரிமைகளும் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பது குறித்தும் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழரின் ஆற்று நீர் உரிமை காவிரியில் தொடங்கி, முல்லைப்பெரியாற்றில் வேகம் பிடித்து கிருட்டிணாவில் வந்து நிற்கிறது.
நல்லவேளை கடலில் மட்டும் சிக்கலில்லை என நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை.
அங்கோ இலட்சோப இலட்சம் மீனவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது.
தமிழுக்கான உரிமைகளும் நிலை நாட்டப்பட வில்லை, தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளும் நிலை நாட்டப்பட வில்லை.
ஆனால் இது பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் வெட்கப்படாமல் விழா எடுக்க முனைந்துள்ளோம்.
தமிழுக்கு விழா எடுக்கும் உரிமை நமக்கு மட்டும் சொந்தமானதா? என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்த பூமிப்பந்திலுள்ள எல்லா நாடுகளிலும் தமிழர் இருக்கின்றனர்.
இணையத்தில் தமிழ்மொழி வனப்புடன் உலா வருவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தான் காரணம் என்பதனை மறுக்க இயலுமா?
மொழி மேம்பாட்டிற்கு அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை மறைக்க இயலுமா?
தமிழ்மொழியை உலக மக்கள் அறிந்திட ஏதுவாக தமிழ்மொழியின் சிறப்பை இணையத்தில் ஆங்கிலத்தில் தொகுத்து வருவதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தானே?
தமிழ் என்பது தமிழ்நாட்டுத் தமிழரின் தனிச்சொத்து அல்ல.நாம் மட்டும் முடிவு செய்து கொண்டாடுவதற்கு நமது குடும்ப விழாவும் அல்ல.
உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களின் நலனை மையப்படுத்தியே கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.
ஈழத்தமிழர்கள் மீளாத்துயரிலிருந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நமது உறவுகள் துயரத்தில் தவிக்கையில் விழா எடுப்பது க ல் நெஞ்சம் கொண்டோரையும் பதைபதைக்க வைக்கும் நிகழ்வல்லவா?
காலங்காலமாக பழம் பெருமை பேசுவதிலேயே சுகம் கண்டு போன சமூகமாகத் தமிழ்ச்சமூகம் மாறிவிட்டது.
இந்த இனம் இப்படியே இருக்க வேண்டுமென இனப்பகைவர்கள் மட்டுமல்ல நம்மை ஆள்வோரும் நினைக்கின்றனர்.
தமிழர் கேளிக்கைகளில் மூழ்கடிக்கப்படுகின்றனர்.
போரைக்கூட வேடிக்கைப்பார்கின்ற நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
செம்மொழி மாநாடு மானாட மயிலாட நிகழ்ச்சியின் அளவுக்கானத் தாக்கத்தையாவது உருவாக்குமா என்பது சந்தேகமே.
அண்மையில் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குருதி காயும் முன்பு இப்படி ஒரு மாநாடு தேவையா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.
திருவிழா ஆரவாரத்தில் இந்தக்கேள்வி ஆள்வோர் காதுகளில் விழாது தான்.
ஈழக்கொலைகள் தொடர்பாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறலை இன்னமும் விடாமல் எழுப்பிக்கொண்டே உள்ளன.
வதை முகாமிலிருந்து இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீளவே இல்லை, காணமல் போனோர் தொடர்பில் தகவலே இல்லை.
ஆனால் நாம் மொழிக்கு மாநாடு கூட்டுகிறோம். அதில் உலகெங்குமிருந்து கவிதைகளோடும், ஆய்வுக்கட்டுரைகளோடும் புறப்பட்டு விட்டான் மறத்தமிழன்.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையைப் பன்னாட்டு நீதிமான்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஆனால் நாம் தமிழுக்கு விழா எடுப்பதில் ஆர்வமாக உள்ளோம்.
இதனையெல்லாம் வருங்கால தலைமுறை மன்னிக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல, நிகழ்காலம் நிச்சயம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.
தமிழ்மொழி பேசும் தமிழ்நாட்டு தமிழனின் வாழ்விலும் மகிழ்ச்சியில்லை,புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் வாழ்நிலையிலும் ஏற்றமில்லை.
ஆனால் மொழி பேசும் நா பற்றி கவலைபடாமல் மொழியைப்பாதுகாக்க போர் மறவர்கள் களம் கண்டுள்ளனர்.
இத்தகைய அறிவார்ந்த மொழி வளர்ச்சியை உலகில் வேறெந்த இனமும் முன்னெடுத்திருக்குமா? என்பது சந்தேகம் தான்.
நவீன நீரோமன்னர்கள் புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
புலவர் படை பரிசில் பெற வசனங்களோடும், கவிதைகளோடும் செம்மொழி மாநாட்டில் அணி திரள இருக்கிறார்கள்.
இதில் வெட்கப்பட எதுவுமில்லை.
'புதினப்பலகை'க்காக மாரியப்பன் மலர் வண்ணன்.
1 comment:
nice blog
visit my blog
tamil web library
Post a Comment