Friday, March 29, 2013

ஜெனிவாவுக்கு பழிதீர்க்குமா சிறிலங்கா? – நடுக்கத்தில் இந்தியா

 

புதினப்பலகை இணையதளத்தில் வெளிவந்த   கட்டுரை இது .நன்றியுடன் இங்கே பயன்படுத்தி இருக்கிறேன் .நட்பு நாடு ,நட்பு நாடு என்கிறார்களே நட்பு நாட்டின் இலட்சணத்தை பார்திர்களா?

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியான முறுகல், இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மனிதஉரிமைகள் விவகாரத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியாக எடுத்துள்ள நிலைப்பாடு, இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதித்துறையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை அடுத்து, இந்திய வாகனங்களின் இறக்குமதிக்கான தீர்வைகளை சிறிலங்கா அதிகரித்தது.
இந்த ஆண்டும் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளதால், கடந்த ஆண்டைப் போலவே அது மோட்டார் வாகனத்துறையில் எதிர்விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று இந்திய உற்பத்தியாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான தீர்வையை 120 தொடக்கம் 291 வீதத்தில் இருந்து 200 தொடக்கம் 350 வீதமாக அதிகரித்தது சிறிலங்கா.


அதுபோலவே,முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமதித்தீர்வை 51 தொடக்கம் 61 வீதத்தில் இருந்து 100 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
இருசக்கர வாகனங்களுக்கான இறக்குமதித் தீர்வையும் 61வீதத்தில் இருந்து 100 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
ஐந்து மாதங்களுக்கு முன்னர் சுங்க வரியையும் சிறிலங்கா அதிகரித்தது.
இந்தியாவின் டாடா மோட்டோர்ஸ், மகிந்திரா அன் மகிந்திரா, ரிவிஎஸ், ஹீரோ மோட்டோர் கோர்ப்பரேசன், பசாஜ் ஓட்டோ அன் மாருதி சுசுகி, போன்ற நிறுவனங்கள் சிறிலங்காவை தமது முக்கிய ஏற்றுமதிச் சந்தையாக கொண்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி தீர்வையை அதிகரித்ததால், இந்திய வாகனங்களின் விலை அதிகரித்து அவற்றுக்காக கேள்வி குறைந்துள்ளது.
ஏற்றுமதித் தீர்வை அதிகரிக்கபட்டதால், டாடா நனோ கார் ஆரம்பத்தில் விற்கப்பட்ட விலையை விட இரட்டிப்பாக அதிகரித்தது.
சிறிலங்காவில் ஆரம்பத்தில் 9.25 இலட்சம் இலங்கை ரூபாவுக்கு விற்கப்பட்ட நனோ கார், தீர்வை அதிகரிப்பினால், 15.5 இலட்சம் ரூபாவாக அதிகரித்தது.
இதுபோலவே, 14 இலட்சம் ரூபாவாக விற்கப்பட்ட டாடா 207 கார், 25 இலட்சம் ரூபாவாக அதிகரித்தது.


சிறிலங்காவின் தீர்வை அதிகரிப்பினால் இந்திய வாகனங்களின் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த நிதிஆண்டின் இறுதிக் காலாண்டில் 20 ஆயிரம் தொடக்கம் 22 ஆயிரம் வரையாக இருந்த ஒரு மாதத்துக்காக பஜாஜ் வாகனங்களின் இறக்குமதி, இந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில் மாதம் ஒன்றுக்கு 8 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையாக குறைந்து விட்டது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிறிலங்காவின் வாகனச்சந்தையில் இந்தியா மிகப்பெரிய பங்கை வகித்து வருகிறது.
அதில் பஜாஜ் நிறுவனம் மட்டும் 60 வீத பங்கைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியா 6 பில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை ஏற்றுமதி செய்தது.


இதில் சிறிலங்காவுக்கான ஏற்றுமதி 800 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: