நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்.கண்டதையும் கற்பவன் பண்டிதன் ஆவான் என்று எங்கள் பாடசாலை நூலகத்தில் எழுதப்பட்டிருந்தது இப்போதும் எனது நினைவில் இருக்கிறது .இங்கு கண்டது என்பது பலதரப்பட்ட நூல்கள் என்ற பொருள் கொள்ள வேண்டும் .இனி வாசிப்பு சம்பந்தமாக சில விடயங்கள்
• நாம் ஒரு நூலில் .சில பக்கங்களைப் படிக்கிறோம். ஆனால் படித்த பிறகு என்ன படித்தோம் என்று நினைவுக்கு வருவதில்லை. காரணம் மனம் அதில் ஈடுபடாமல் இருப்பதால், கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் குறிப்புகள் எடுப்பது சிறந்தது.
• கண்கள் 5 சதவிகிதம் தான் வேலை செய்கிறது. 95 சதவிகிதம் மூளைதான் வேலை செய்கிறது. 1 மணி நேரம் படியுங்கள். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
• காலையில் கிழக்குப் பக்கமும், மாலையில் மேற்குப் பக்கமும் உட்கார்ந்து படியுங்கள். தெற்கு நோக்கிப் படிப்பதை தவிர்க்கவும்.என சொல்லப்படுகிறது
• என்ன புத்தகத்தினை படிக்க வேண்டுமென்று முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் புத்தகங்களின் எழுத்தின் அளவினையும் கவனத்தில் கொள்ளவேண்டும்
• அவசியமில்லாததை ஒதுக்கித்தள்ள வேண்டும். மூளை ஒரு சேமிக்கும் வங்கி.அவசியம் அல்லது முக்கியம் என்று கருதுவதை நன்கு படித்து நினைவுப் பெட்டியில் பத்திரப்படுத்த வேண்டும்.. வாசிக்கும் எதையும் புரிந்து கொண்டு மனதில் பதியவைத்தல் எப்போதும் நினைவிலிருக்கும்.
• படிக்கும் வேகம் என்ன என்று அறிந்து, அதனைப் படிப்படியாக அதிகரித்துக் கொள்ளவும் ஒரு நிமிடத்திற்கு 150 வார்த்தைகளைப் படிக்கவும், அதில் 100 வார்த்தைகளையாவது கிரகிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் 200-150, 200-250 எனப் படிப்படியாக உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யவும்.
• தினசரி பொது அறிவினை வளர்க்கக் கூடிய ஏதேனும் ஒரு புத்தகத்தை குறைந்தது 15 நிமிடமாவது படிக்கவும். ஒரு வாரத்தில் சுமார் 2 மணி நேரம், மாதத்தில் 8 மணி நேரம் கிடைக்கிறது. ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க சுமார் 4 மணி நேரம் தேவை. மாதத்தில் இரண்டு புத்தகங்களைப் படிக்கலாம். ஆண்டில் 24 புத்தகங்களைப் படிக்கலாம்.
• வெளியில் போகும் போது, ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள், பயணம் செய்யும் போதும், பலவற்றிற்காகக் காத்திருக்கும் போது, நமது நேரத்தை வீணாகச் செலவிடாமல், பயனுள்ள வகையில் செலவிடலாம்.
• படிப்பதைக் கடமையாகக் கருதாமல் பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக மறக்காது.
• படிக்கிற நேரம் உங்களுக்கு எந்த நேரம் சிறந்தது என்று கருதுகிறீர்களோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
• படிக்கின்ற போது முக்கியமானவற்றை அடிக்கோடிடுங்கள். தனி குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
• படிக்கும் பழக்கும் ஒரு சிறந்த பழக்கம். அதனை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன், வழிபோக்கத் துணைவன்.
நான் எனது தொலைபேசியில் நிறைய நூல்களை தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன் .எங்கு சென்றாலும் என்னோடு இருக்கும் எதற்காகவும் காத்து இருக்கும் நேரங்களில் இப்பொழுது எல்லாம் ஈ -நூல்களை படிக்கிறேன் தொலைபேசியில் .அதைவிட எனது வாகனத்தில் குறைந்தது மூன்று புத்தகங்களாவது வைத்திருப்பேன் .முக்கியமாக தொலைபேசியில் தேவை இல்லாமல் நோண்டிக்கொண்டு இருப்பதை சுத்தமாக விட்டுவிட்டேன்
.இப்பொது சில காலங்களாக நிறைய நூல்களை படிக்க முடிகிறது. முக்கியமாக உங்கள் பிள்ளைகளை நூலகம் செல்ல புத்தகங்கள் வாசிக்க ,இரவல் பெற ஊக்கப்படுத்துங்கள் .இங்கு கனடாவில் பாடசாலையில் சீனியர் கிண்டர்கார்டனுக்கு பிள்ளை போனவுடனேயே பொது நூலகத்தில் அங்கத்தவர் ஆவதற்கு விண்ணப்ப படிவம் கொடுக்கப்படும் .படசாலையில் இருந்து தினசரி ஒரு நூல் வீட்டுக்கு கொண்டுவருவார்கள் .வாசித்து அது சம்பந்தமாக எழுதி மறுநாள் கொண்டு போகவேண்டும் .
எப்போதும் தாய் மொழி வாசிப்பே சிறந்தது ஏனெனில் தாய்மொழியில் வாசிக்கும் போது,அல்லது பேசும் போது அது ஒருவரின் இதயத்தால் உணரப்படுகிறது ,மாறாக அந்நிய மொழி மூளையால் கிரகிக்கப்படுகிறது .இங்கு கனடாவில் பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளின் முதல் மொழி தமிழ் என்று குறிப்பிட்டாலும் நடைமுறையில் ஆங்கிலம் தான் முதல் மொழி .இது தான் இங்குள்ள யதார்த்தம்.
எனது பிள்ளைகளை நான் முதல் முதலில் பாடசாலையில் சேர்க்கும் போது எனது இரண்டு பிள்ளைகளின் ஆசிரியர்கள் இருவரும் வெள்ளை இனத்தவர்கள் ,ஆங்கிலேய பெண்கள் எனக்கு சொன்னது ஆங்கிலத்தை உங்கள் பிள்ளை இலகுவாக கற்றுக்கொள்ளுவார்கள் .அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் . நீங்கள் உங்கள் பிள்ளைக்கு உங்கள் தாய் மொழியை சொல்லிக்கொடுங்கள் என்று .ஒருவர் அல்ல இருவருமே சொன்னார்கள் .இன்றைக்கு எனது பிள்ளைகள் நன்றாக தமிழ் கதைப்பார்கள் .ஓரளவு எழுதுவார்கள் ஓரளவு வாசிப்பார்கள் .நாளை எனது பிள்ளைகள் தமிழ்
சார்ந்து சிந்திப்பார்கள், தமிழ் சார்ந்து செயற்படுவார்கள் என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம் .
ஏனெனில் எனது பிள்ளைகளுக்கு நான் சொல்லியிருக்கிறேன் தமிழ் கதைப்பவர்கள் என்பதற்காக தாக்கப்பட்டிருக்கிறோம் ,கொல்லப்பட்டிருக்கிறோம்.தமிழுக்கா உயிர் கொடுத்தோர் வரலாறுகளையும் சொல்லியிருக்கிறேன் .
ஏனெனில் வரலாறு முக்கியம் அல்லவா அமைச்சரே !!!!!!!!!!!!
மீண்டும் மறு பதிவில் சந்திப்போம் அன்புடன் கரிகாலன்.
3 comments:
பயனுள்ள பதிவு நண்பரே
புத்தகம் போற்றுவோம் புத்தகம் போற்றுவோம்
தாய்மொழியில் புத்தகங்களைப் போற்றுவோம்
சிந்திக்க வேண்டும் இன்று பலர் தமிழில் பேசுவதே அவமரியாதை என்று நினைக்கும் கூட்டம்!
கருத்துக்களுக்கு நன்றி
திரு கரந்தை ஜெயகுமார் மற்றும் தனிமரம் அவர்களுக்கு .
Post a Comment