Saturday, December 05, 2015

ஆளுங்கட்சியினரின் அராஜகம்... கொந்தளிக்கும் மக்கள்!

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  தமிழகத் தலைநகர் இத்தகைய இடர்பாட்டினை எதிர்கொண்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்ட அரசு,  நிவாரணப்பணிகளை மேற்கொள்வதிலும் சுணக்கம் காட்டியது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும், உணவு பொருட்களையும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்,   நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி நாங்கள்தான்  விநியோகிப்போம் என்று பல பகுதிகளில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்னும் சில இடங்களில் அப்படி அபகரிக்கப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் வழங்குவதுபோல் இருக்க வேண்டும் என்று, அதற்காக முதல்வரின் படம் போட்ட 'ஸ்டிக்கர்களை உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது ஒட்டி வழங்குதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.


இன்னும் சில இடங்களில் 'ஸ்டிக்கர்களை' தயார் செய்ய தாமதமானதால், அந்த உணவு பொருட்களை  வழங்காமல் வைத்திருந்து ஸ்டிக்கர்கள் கிடைக்கப்பெற்ற பின் அதனை நிவாரண பொருட்கள் மீது ஒட்டி அரசு சார்பில் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால்  நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாமல்,  மக்கள் திண்டாடி வருகின்றனர்.


இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் ஆளுங்கட்டியினர் பாகுபலி திரைப்பட போஸ்டர்போல் முதல்வரின் படத்தை போட்டு பெரிய பெரிய அளவில் ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்து கொண்டு மலிவான விளம்பரங்களை தேடிக்கொண்டு நிவாரணம் வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதையெல்லாம் தட்டிக்கேட்கவும், தடுக்கவும் யாரும் முன்வராமல் கண்டும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் எங்களுக்கு மிகுந்த வேதனையுடன் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என்று பலர் குமுற ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் மே 17 இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களை அ.தி.மு.க.வினர் தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நிவாரணம் வழங்குவதில் அ.தி.மு.க.வினர் செய்து வரும் அராஜகத்தினை மே 17 இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது, இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், ''அ.தி.மு.க.வினரின் அராஜகத்தினை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். 

நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த மே 17 இயக்கத் தோழர்களிடத்திலும் அ.தி.மு.க.வினர் நெருக்கடியை கொடுத்தனர். தங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைக்கும்படியும், இப்பகுதி எங்களுடையது, எங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று மிரட்டினர்.அந்த  மக்களிடம் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மே 17 தோழர்கள் நிவாரணப்பணி செய்கின்ற காரணத்தினால் அப்பகுதி மக்களே அ,தி.மு.க.வினருக்கு எதிர்ப்பினை தெரிவித்து தோழர்களுக்கு பாதுகாப்பளித்தனர்.
வெளியூரில் இருந்து நிவாரணம் ஏற்றி வரும் வாகனங்களை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி நிவாரணப் பொருட்கள் மீது,  ஆளும் கட்சி சின்னத்தை பதிப்பதும் பின்னர்,  அவர்களே எடுத்துச் சென்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய எடுத்து செல்வதாக, பல தோழர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள்.
இதேபோல் ஒரு தனியார் நிறுவனத்தினரால் எடுத்து வரப்பட்ட 5 லாரிகளை இவ்வாறு தடுத்த  காரணத்தினால் அந்த வாகனங்கள் சேலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன.இதேபோல இஸ்லாமிய இயக்கத் தோழர்களின் வாகனத்திலும் அ.தி.மு.க.வின் கொடியும், ஜெயலலிதாவின் படமும் வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையால் சென்னை நகரம் சீரழிக்கப்பட்டு இன்று சந்திக்கும் பேரிடருக்கு அடித்தளமிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் இந்த நெருக்கடியான நேரத்தில் கூட  மக்கள் பணிக்கு இடையூறாக இருக்கும் அ.தி.மு.க.வினரை கண்டிக்க அனைத்து ஜனநாயக இயக்கத் தோழர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்" என்று கூறப்பட்டு உள்ளது

அதோடு மே17 இயக்கம், உதவி தேவைப்பட்டாலோ, பங்களிப்பு செய்ய விரும்பினாலோ 9444146806, 9884072010, 9962670409 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், முகநூலிலும் செய்தி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்பிங்களேவை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், சென்னை உள்ள தற்போதைய நிலையில், அவரை நாம் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும். 2004 பேட்ஜை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்பிங்களே. மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவிட்டு சாலை தர கட்டுப்பாட்டு பிரிவில், சென்னை மாநகராட்சி கூட்டு கமிஷனராக பணியாற்றியவர்.

இவர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான காரணமாக, பிங்களே ஒரு நேர்மையான அதிகாரி. சமீபத்தில் சென்னையில் பல சாலைகள் செப்பணியிடப்பட்டது. சில சாலைகள் புதிதாக போடப்பட்டது. அப்படி போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து அவர் காண்டிராக்டரை கண்டித்ததாலும், அபராதம் விதித்ததாலும் மாற்றப்பட்டு இருக்கிறார் என்று சென்னை மாநகராட்சியின் சில அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது விகடன் இணையதளத்தின் ஒரு கட்டுரை .நன்றியுடன்  இதை இங்கு 
பதிந்திருக்கிறேன் .விகடனுக்கு நன்றி .

3 comments:

Anonymous said...

வாக்காள பிச்சைக்காரர்களே! (மன்னிக்கவும்) அரசியல்வாதியை போன்று நினைத்துவிட்டேன், வாக்காள பெருமக்களே ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் அரசியல்வாதிகள் உங்களுக்கு இலவசத்தை தருவதற்கு அவர்கள் ஒன்றும் உங்களுடைய முதலாளியும் அல்ல அதை பெறுவதற்கு நீங்கள் தெரு நாய்களும் அல்ல, தேர்தலின்போது உங்களுடைய தொகுதியில் யார் மக்களுக்கு ஊழலற்ற ஊழியம் செய்வாரோ அவரை தேர்ந்தெடுங்கள் அப்படியில்லையென்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்கள் அது யாருக்கும் ஒட்டுப்போடவிரும்பவில்லை எனும் பொத்தானை அழுத்துவதற்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

இந்த பதிவை ஒட்ட வைத்தது நீங்கள்தானா? விகடன் என்றவுடன் செய்தியின் நம்பகத்தன்மை குறைகிற மாதிரியான அரசியல் வாடை வீசுகிறது.

எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னன்னா ஜெயலலிதாவே விரும்பி இந்த மாதிரி கட்டளையிடுகிறாரா அல்லது அவரின் அருள் பார்வை கிட்ட வேண்டுமென்ற நோக்கில் முதுகெலும்பு கூனர்கள் இந்த மாதிரி செயல் படுகிறார்களா?

அழகான வண்ணத்தில் பைகளில் தங்கள் நிறுவனம் பெயர்,விலாசம் போட்டு நிறைய பிளாஸ்டிக் பைகள் கிடைக்கின்றன. பொருளை வாங்கி வந்தபின் நாங்கள் குப்பை கூடை முடியாக மட்டுமே பயன்படுத்துகிறோம்.யார் பிரிண்ட் போட்டார்கள் என்று கண் அசந்து கூட பார்ப்பதில்லை:)

முதலில் தனி மனித வழிபாடு தமிழகத்திலிருந்து ஒழிய வேண்டும்.மற்றவை மெல்ல மாறும்.

கரிகாலன் said...

உண்மைதான் நண்பர்களே .இப்பொது ஆதாரங்கள் வீடியோ வடிவில் வந்துவிட்டதே