’த்தூ..!’ என்று செய்தியாளர்களை விஜயகாந்த் இகழ்ந்ததற்கு பெருமளவு ஆதரவு கருத்துக்கள் வெளிப்படுவது என்னவிதமான மனநிலை என்று தெரியவில்லை. அது பற்றிய விவாதம் இப்போதைக்கு தேவையில்லை. விஜயகாந்த் செய்தது சரியா என்பதை மட்டும் இப்போதைக்கு பேசுவோம்!
‘2016-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஆட்சியமைக்க அ.தி.மு.க.விற்கு வாய்ப்புள்ளதா?’ என்பது செய்தியாளர்களின் கேள்வி. ‘நிச்சயம் வாய்ப்பில்லை’ என்பது வலுவான எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் பதில். கேள்வியில் எந்தத் தவறும் இல்லை. அது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். அதற்கு விஜயகாந்த் சொன்ன பதிலும் தொடக்கத்தில் தவறாக வெளிப்படவில்லை. ஆனால், பதிலின் நீட்சியாக தொடர்ந்த வார்த்தைகள், ‘இதே கேள்வியை ஜெயலலிதாவிடம் போய்க் கேட்பீர்களா? செய்தியாளர்களா நீங்கள்? த்தூ..’ என்று தெரித்தது, வழக்கம்போல தன்னிலை மறந்தவராக அன்று விஜயகாந்த் இல்லை. ஆனாலும்கூட, செய்தியாளர்களின் கேள்விக்கான பதிலில் வார்த்தைகள் வன்மத்துடன் தெரித்தன. அதில் உடைந்து நொறுங்கியது விஜயகாந்தின் ‘தராதரம்’ மட்டுமல்ல, அது ஏற்கனவே பலமுறை சட்டமன்றத்தில், பொதுக்கூட்ட மேடையில், தேர்தல் பிரசாரத்தில், ஊடகங்களில் உடைந்து சிதறி நொறுங்கிப்போய் இருக்கிறது. விஜயகாந்தின் அநாகரீக வார்த்தைகள் இப்போது கலைத்துப்போட்டது, தமிழக அரசாங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல், அதை அம்பலப்படுத்தி கேள்விக்குட்படுத்தாத பெரும்பான்மை ஊடகங்களின் நிலைப்பாட்டைதான். ஊடகத்தினரை விஜயகாந்த் இவ்வளவு கிள்ளுக்கீரையாகக் கருதக் காரணம் என்ன?
விஜயகாந்தை ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கவில்லை!
மதுரையில் பிரம்மாண்ட மேடை அமைத்து, நல்ல நேரம் பார்த்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் நீங்கள் தொடங்கியபோது, உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று ஒன்றைச் சொல்லவில்லை. அப்போது செய்தியாளர்கள் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டனர். அதற்கு, மழுப்பலாக, ‘மக்கள் நலன்தான் என் கட்சியின் கொள்கை’ என்று சொல்லிச் சமாளித்தீர்கள். அந்தக் கேள்விக்கு அதற்கு மேல் உங்களால் பதில் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது. அப்படியிருக்கும்பட்சத்தில், நீங்கள் சொல்லிய அந்த ஒற்றை வார்த்தையைச் சொல்லியே, ‘விஜயகாந்த் கொள்கை இல்லாத ஒரு கட்சியின் தலைவன்’ என்று ஊடகங்கள் விமர்சித்திருக்க வேண்டும்.
2006 சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. விருத்தாச்சலம் தொகுதியில் நீங்கள் மட்டும் வெற்றி பெற்றீர்கள். ஆனால், மொத்தமாக உங்கள் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. சில இடங்களில், 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைக் கூட உங்கள் வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். எதிர்காலத்தில் வலுவான கட்சியாக வரும் என்று ஊடகங்கள் தே.மு.தி.கவை அடையாளப்படுத்தின. அந்தச் சூழலில், நீங்கள் முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தீர்கள். அப்போது தி.மு.க ஆளும்கட்சி. கருணாநிதி முதலமைச்சராக இருந்த அந்த சட்டமன்றத்தில், சர்வாதிகாரப்போக்கு, இன்று இருப்பதுபோல் நிச்சயம் இருக்கவில்லை. ஆனால், அப்போதுகூட உங்கள் தொகுதிக்காக, நீங்கள் உருப்படியாக எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. வந்தீர்கள். கையெழுத்துப்போட்டுச் சென்றீர்கள். சட்டமன்றத்தில்தான் எதுவும் சாதிக்கவில்லை என்றால், உங்களை நம்பி வாக்களித்த விருத்தாச்சலம் தொகுதி மக்களையாவது எட்டிப் பார்த்தீர்களா? அதுவும் இல்லை. அதனால்தான், அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடாமல், ரிஷிவந்தியம் சென்றீர்கள். உங்களின் அந்த பொறுப்பற்ற செயல்பாட்டை ஊடகங்கள் அன்றைக்கு நீங்கள் சொல்லி அந்த ஒற்றை வார்த்தையைக் கொண்டு விமர்சிக்கவில்லை!
கட்சி தொடங்கிய நாள் முதல், ‘மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் கூட்டணி’ என்று தொடர்ந்து லாவணி பாடிக் கொண்டிந்தீர்கள். இடையில் வந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் தனித்தே போட்டியிட்டு உங்களின் ஓட்டு சதவீதத்தை நிரூபித்துக் கொண்டே வந்தீர்கள். அந்த நேரத்தில், 2011 சட்டமன்றத் தேர்தல் வந்தது. உங்களுக்கு எல்லா பக்கமும் இருந்து அழைப்பு வந்தது. அதனால் தெய்வத்தை அம்போ என விட்டீர்கள். மக்களைத் தெருவில் விட்டீர்கள். ‘குடிகாரன்’ என்று உங்களை குறிப்பிட்ட ஜெயலலிதாவும், ‘அவர் வந்து ஊற்றிக் கொடுத்தாரா?’ என்று அவரிடம் கேட்ட கேட்ட நீங்களும் கூட்டணி வைத்துக் கொண்டீர்கள். அந்தக் கூட்டணி குறித்து பலப்பல ஹேஷ்யங்கள் உலவியபோது, அதைக் குறிப்பிட்டு நீங்கள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை கொண்டு உங்களை ஊடகங்கள் விமர்சிக்கவில்லை!
அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று எதிர்க்க்ட்சித் தலைவராக சட்டசபைக்குள் கெத்தாக நுழைந்த உங்களால், ஒரு கூட்டத்தொடரைச் சமாளிக்க முடியவில்லை. கையை மடித்து நாக்கைத் துருத்தி வெளியில் வந்த உங்களை, நீங்கள் சொன்ன ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஊடகங்கள் புறக்கணிக்கவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி கேட்க முடியாதவர்கள் நீங்கள் என்று செய்தியாளர்களைப் பார்த்து துப்புகிற விஜயகாந்த் அவர்களே, நீங்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவைப் பார்த்து கேட்ட கேள்விகள் எத்தனை? உங்கள் எம்.எல்.ஏ.க்கள் கேட்ட கேள்விகள் எத்தனை? நீங்கள் கேட்கமுடியாதபடி உங்களை வெளியேற்றினால், அதைக் கண்டித்து நீங்கள் சட்டப்பேரவை வளாகத்திற்குள்ளும், சட்டமன்றத்தின் முன்பும் கூடி நடத்திய போராட்டங்கள் எத்தனை? 29 எம்.எல்.ஏக்கள் ஜெயித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் சட்டமன்றத்திற்குப் போய், ஜெயலலிதாவை எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாமல், அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கும் உங்களைப் பார்த்து, நீங்கள் சொல்லிய வார்த்தையைக் கொண்டு ஊடகங்கள் விமர்சிக்கவில்லை.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திலும் பணியாற்றாமல், தொகுதிக்குள்ளும் பணியாற்றாமல் தன்னிலை மறந்து கிடந்த நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அத்தேர்தல் தொடர்பான ’பலனளிக்கும் கூட்டணி’ அமைக்க தி.மு.க.வுடனும் பாரதிய ஜனதாவுடனும் ஒரே சமயத்தில் பேச்சு வார்த்தை நடத்தினீர்கள். ரகசிய ஒப்பந்தங்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா அணியில் போய்ச் சேர்ந்ததுடன், 14 தொகுதிகளையும் வாங்கினீர்கள். அதில் ஒரு இடம் உங்கள் மச்சானுக்கு ஒதுக்கப்பட, மற்ற இடங்களை வாங்க முடிந்தவர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஆனால், போட்டியிட்ட 14 இடங்களிலும் தோல்வி. அப்போது கட்சியை விஜயகாந்த் அடகு வைத்துவிட்டார் என்று நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லி ஊடகங்கள் உங்களை விமர்சிக்கவில்லை!
தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியையும் எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கட்சிகளில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் தனிப்பட்ட முறையில் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம். அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும், கட்சியின் மேடையிலோ, தேர்தல் பிரச்சார மேடைகளிலோ என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறுவதுமான காட்சியைத் தமிழகம் ஒருநாளும் கண்டதில்லை. ஆனால், விழுப்புரத்தில் நீங்கள் நடத்திய லஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் உங்கள் நிலை எப்படி இருந்தது? அங்கு உங்களைத் தலைவராக நம்பி லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பு நீங்கள் ஆற்றிய அந்த அரிய உரை, என்னவென்று இன்றுவரை யாருக்கும் புரியவில்லை. அந்தக் காட்சிகள் தேவைப்பட்டால், உங்கள் கேப்டன் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் போய்க் கேளுங்கள். போட்டுக்காட்டுவார்கள். இல்லையென்றாலும் பிரச்னை இல்லை. இப்போதும் அந்த அவமானப் பேச்சு வலைத்தளங்களில் இருக்கிறது. அன்றே ஊடகங்கள் உங்களை நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லி உங்களை விமர்சிக்கவில்லை!
“ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி கேட்க தைரியமில்லை. செய்தியாளர்களா நீங்கள்? த்த்தூ” என்று துப்பிய திரு. விஜயகாந்த் அவர்களே… நீங்களே சொந்தமாக ஒரு ஊடக நிறுவனம் நடத்துகிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? அ.தி.மு.க தலைமைக் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகள், அறிவாலயத்தில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்புகள், கம்யூனிஸ்ட் தலைவர்களும், பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நடத்தும் கூட்டங்களில் உங்கள் செய்தியாளர்களும், சுற்றி சுற்றி வந்து மற்ற செய்தியாளர்களைப்போல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அங்கெல்லாம் அவர்கள் மிக கண்ணியமாகவே நடத்தப்படுகிறார்கள். ’நீ கேப்டன் டி.வியா? உன் கேள்விக்கு நான் பதில் சொல்லமாட்டேன் என்று தி.மு.க தலைவர் கருணாநிதியோ, அன்புமணி ராமதாஸோ ஒருநாளும் அவர்களிடம் சொன்னதில்லை. ஆனால், நீங்கள் பிற ஊடகவியலாளர்களை அதன் நிர்வாகத்தை மனதில் வைத்தே எதிர்கொள்கிறீர்கள்… வசை பாடுகிறீர்கள். ஆக, திரு விஜயகாந்த் அவர்களே, உடனடியாக நீங்கள் ஏன் கேப்டன் டி.வி செய்தியாளர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்து, ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கக் கூடாது? ஒருவேளை அது முடியாதென்றால், அப்போது நீங்கள் யார் மீது துப்பிக்கொள்வீர்கள். உங்கள் மீதா?
ஊடகங்களைப் பார்த்து ஜெயலலிதாவுக்கு அச்சமா?
ஜெயலலிதாவும் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். போயஸ் கார்டன் வேதா நிலைய வாசல், தலைமைச் செயலகம், அ.தி.மு.க அலுவலகம் மற்றும் ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்று வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்கள் ஜெயலலிதாவிடமும் கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் இருந்தனர். ஆனால், கருணாநிதியிடம் கேள்வி கேட்கும் போது, இருக்கும் எளிமையான மனநிலை-உரிமையான மனநிலை, ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கும்போது செய்தியாளர்களிடம் இருக்காது என்பது உண்மை. ஜெயலலிதா ‘சிடுசிடு’ முகத்தையே காட்டுவார். இறுக்கமாக இருப்பார். ‘பிரஸ். அமைதி’ என்று அதட்டவும் செய்வார். அதனால், அவர் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு இறுக்கம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில், 2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், பத்திரிகையாளர்களை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் சந்தித்த ஜெயலலிதா, இனிமேல் நான் உங்களை வாரம் ஒருமுறை சந்திப்பேன். நான் போகும் இடங்களில் எல்லாம் நீங்கள் மைக்கை எடுத்துக்கொண்டு என்னைத் துரத்தத் தேவையில்லை என்று ஒரு ஒப்பந்தம் போட்டார். சொன்னதுபோல் முதல் வாரம் சந்திக்கவும் செய்தார். ஆனால், அதற்கடுத்த வாரத்தில் இருந்து அந்த பிரஸ்மீட் நடக்கவில்லை. அதன்பிறகு, பத்திரிகையாளர்களும் கேமராவும் தன்னை நெருங்க முடியாத வகையில் ஜெயலலிதா தனக்குத் தானே ஒரு இரும்புத் திரையைப் போட்டுக் கொண்டார். எந்தச் சூழலிலும் கேள்விகளை எதிர்கொண்டு, அதில் தன் நிலை என்ன என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் கருணாநிதியின் ஆற்றல் ஜெயலலிதாவிடம் கிடையாது. அதனால், அவர் அந்த இரும்புத் திரையை அணிந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார். அவர் அதைத் தனக்குப் போட்டுக் கொண்டதோடு அல்லாமல், தனது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி அடிப்படை உறுப்பினர் வரை அனைவரையும் அதற்குள் சிக்க வைத்துள்ளார். பொதுநிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை பக்கத்திலேயே அனுமதிப்பதில்லை. வார இதழ்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று ஒரு சர்வாதிகாரத்தன்மையோடு அரசாங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு அர்த்தம் ஊடகங்கள் அவரைப் பார்த்து பயப்படுகிறது என்பதல்ல… ஜெயலலிதா ஊடகங்களை எதிர்கொள்ள அஞ்சுகிறார் என்பதே..!
ஜெயலலிதாவைப் பிடித்துள்ள அந்த அச்சம், அவர் தலைமையின் கீழ் இயங்கும் ஒட்டுமொத்த அரசு எந்திரத்திற்கும் இன்று கடத்தப்பட்டுள்ளது. அதன்விளைவுதான், கடந்த மாதம் சென்னையை வெள்ளம் மூழ்கடித்து தேசியப் பேரிடர் அளவிற்கு சேதத்தை உருவாக்கிய நிலையிலும் ஒரு முதலமைச்சரை ஊடகங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஊடகங்களைத் தொடர்பு கொள்ள முதலமைச்சரும் விரும்பவில்லை. சரி உடல்நிலையில் கோளாறா? என்று சந்தேகத்தை கிளப்பி செய்தி வெளியிட்டால், அதற்குப் பதில் இல்லை. ஆனால், கேள்வி எழுப்பிய பத்திரிகை மீது அவதூறு வழக்குப் போடப்படுகிறது. அமைச்சர்கள் ஊடகங்களிடம் பேச மறுக்கிறார்கள். குறிப்பிட்ட அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் ஓடி ஒளிகிறார்கள். இப்படிப்பட்ட இருட்டான அரசாங்கம் தான் நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்தெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் போகிற போக்கில் நீங்கள் ‘தூ’ என்று துப்புவது சரியா திரு.விஜயகாந்த் அவர்களே!
இங்கு விஜயகாந்த் த்த்த்தூ என்றதும், அவரைத் நோக்கித் திருப்பித் துப்புவதற்கு செய்தியாளர்களிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், பிரச்னையின் மையப்புள்ளி அதுவல்ல. இப்படிப்பட்ட அராஜகப் போக்கை முதன் முதலில் உருவாக்கி வைத்த, ஜெயலலிதாவின் இருட்டு அரசாங்கத்தை மௌனமாக வேடிக்கை பார்ப்பதை விடுத்து, அதை கேள்விகளால் உடைக்கத் தொடங்க வேண்டும் ஊடகங்கள்.
இல்லையென்றால், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியாத முதலமைச்சரும், 24 மணி நேரமும் என்ன பேசுகிறோம் என்றே தெரியாத ஒரு தன்னிலை மறந்த எதிர்க்கட்சி தலைவரும் உள்ள மாநிலத்தில் இப்படிப்பட்ட அவமானங்களைச் செய்தியாளர்கள் தினமும் சந்திக்கத்தான் வேண்டும்!
– ஜோ.ஸ்டாலின்
2 comments:
விஜயகாந்த் செய்த செயல் தவறு என்று சொல்லும் நீங்கள் ஊடகத்துறையின் கோழைத்தனத்திர்க்கு என்ன பதில்
விஜயகாந்த் செய்த செயல் தவறு என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை.
அவரது சொந்த நிறுவனத்தால் இதுவரையில் கேள்வி கேட்டமுடிந்ததா இதுவரையில் .இதுவரையில் விஜ்ஜகாந்த் பொதுவெளியில் நடந்து கொண்ட முறைகள் சரி என்கிறீர்களா? நாளை ஜெய்லலிதாவிடம் போய் கேளுங்கள் என்று வேட்டியை தூக்கி காட்டி சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா ?சரி தனது சொந்த கட்சிக்காரர்களை தாக்கியதை என்ன சொல்வீர்கள் ?உண்மையில் ஜெயலலிதாவை கேள்வி கேட்டவில்லை என்ற கோபத்தில் தான் ஊடகவியலாளருடன் வி.காந்த் இப்படி நடக்கிறார் என்று நினனத்தால் உங்களை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன் .கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொரிய முடியாது .தமிழ் நாட்டுக்கு ஒரு கருணாநிதி ஓரு ஜெயலலிதா போதும்
இன்னுமொரு ஜெய லலிதா தேவையா நண்பரே ,
உங்கள் சொந்த பெயரில் பதிலிடாமல் போனதிலேயே தெரிகிறது உங்கள் சங்கடம்
Post a Comment