Saturday, January 30, 2016

சின்ன மாமியே உங்கள் சின்னமகள் எங்கே? பாடலுக்கு பின்னால் ஒரு" சுட்ட" கதை .

சின்னமாமியின் சின்னமகளுக்கு  உண்மையில்
சொந்தக்காரர் 

சின்ன மாமியே உங்கள் சின்னமகள் எங்கே பள்ளிக்கு சென்றாளோ படிக்கசென்றாளோ?" எனும் ஈழத்தின் பொப்பிசைப் பாடலை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது .

ஒரு காலத்தில் தமிழ்கூறும் உலகம் எங்கும் பட்டையை கிளப்பிய ஒரு பொப்பாடல்

பாடகர் நித்தி கனகரத்தினம் பாடிய இப்பாடல் ஒலிக்காத வீடுகளோ ,மேடைகளோ ,வானொலிகளோ இல்லாத ஒரு நிலை ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்திமூன்றாம் ஆண்டுக்கு முன்னர்  காணப்பட்டது

இன்றைய நாள்  வரையில் இப்பாடலை இயற்றி ,பாடியவர் நித்தி கனகரத்தினம் என்றே நான் நினைத்துக்கொண்டிருந்தேன் .அப்படிதான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தாலும் இந்த பாடலுக்கு பின்னாலும் ஒரு "சுட்ட கதை " இருப்பது சில தினங்களுக்கு முன்னர் தான் எனக்கு தெரியவந்தது .


 எம்.எஸ். கமலநாதன் என்பவர்  கடந்த 25 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்பாணத்தில்  காலமானார். அவரின் இறுதிக்கிரியைகள் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் வடமராட்சியில் நடைபெற்றன. அவரின் இறப்பின் போதுதான்   மேற்படி பாடலை எழுதி, ,மெட்டமைத்து, பாடியவர் மேற்படி எம் .எஸ் .கமலநாதன் என்பதும் பிற்பட்ட காலங்களில் இது பொப்பிசை பாடகர் நித்தி கனகரத்தினத்தினை பாட வைத்து மீளவும் ஒலிநாடாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதும் நித்தி கனகரத்தினத்தின் குரலில் இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்ததும் தெரியவந்துள்ளது .

யாழ். வடமராட்சி  வதிரியில்  பிறந்தவர் .கால்பந்தாட்டம், கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தவர் எம்.எஸ்.கமலநாதன்,     1950களில் வதிரி டயமன்ட்ஸ் விளையாட்டுக்கழக வீரரராக அவர் விளங்கினார்.   1957இல் காங்கேசன்துறை றோயல் விளையாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அக்கழகம் வென்றபின் தனது நாட்டம் கால்பந்தாட்ட மத்தியஸ்த்தினை நோக்கித் திரும்பியதாக எம்.எஸ். கமலநாதன் ஒரு போது  தெரிவித்திருந்தார்.

 கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் பங்குபற்றி அப்பரீட்சைகளில் சித்தி யடைந்து முதல்தர
நடுவராக  தகுதியை பெற்று கால்பந்தாட்ட மத்தியஸ்தராக அவர் பல வருடங்கள்  பணியாற்றினார் என்பதுடன்   பல குறுந்திரைப்படங்களையும் அவர் இயக்கியுள்ளார் எனவும் தெரிய வருகிறது .


இனி திரு எம்.எஸ்.கமலநாதனின் ஒரு கட்டுரையில்  இருந்து அவரது வார்த்தைகளில்  வருபவை ..........................   
  
       
“1962இல் என்னால் இயற்றி மெட்டமைத்துப் பாடப்பட்ட  ”சின்னமாமியே உன் சின்னமகளெங்கே………” எனப் பாடப்பட்ட பாடல் இலங்கையின் முதல் பொப் இசைப் பாடலாகும். இப்பாடல் செவி வழியாகப் பல மேடைகளிலும் குறிப்பாக இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டு கேட்ட பாடலாகும். 

இதனை இன்னொருவர் காவிக்கொண்டு தனது தயாரிப்பென விளம்பரப்படுத்தி வந்த நிலையில்  இப்பாடல் திரு எம்.எஸ்.கமலநாதனால் எழுதி மெட்டமைத்து பாடப்பட்டது என்ற உண்மையினை அறிந்த பலர் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அதனை இரவல் வாங்கியவரே ஒத்துக்கொண்ட நிலையில் தீர்த்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றும் திரு எம்.எஸ்.கமலநாதனின் பாடல் என்ற முகவரியோடு அறுபத்தேழு நாடுகளில் பவனிவருகிறதென்பது சாதாரண விடயமல்ல.இவை எனது முயற்சியின் வெற்றி அனுபவமாகும் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.”

உண்மையில்  எம்.எஸ்.கமலநாதனின் இறப்பின் பின்னர் இப்பாடல் பற்றிய ஒரு உண்மை வெளிவந்திருக்கிறது .உண்மையில் இவ் விடையத்தில் என்ன நடந்தது  என்பது  பற்றி உண்மை தெரிந்தவர்கள் வாய் திறக்கவேண்டும் . பதிவர் ,ஒலிபரப்பாளர் கானா பிரபா போன்றவர்களால் இந்த விடையத்தில் பங்களிப்பு செய்யமுடியும்  என நினைக்கிறேன் .முடியுமானவர்கள் இந்த
விடையத்தில் ஆர்வம் காட்டவும் ,நன்றிகள்  

பொப்பிசை பாடல்கள் பற்றி நான் முன்னர் எழுதிய ஒரு பதிவு.




2 comments:

கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

கண்டிப்பாக இதன் பின்னணி குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் எப்படியாவது தகவல் பெற்றுத் தருகிறேன்.

கரிகாலன் said...

நன்றி கானா பிரபா .
உங்களால் இவ் விடையத்தில் உதவி செய்ய முடியும் என நான் நம்பினதாலேயே
உங்கள் பெயரைக் குறிப்பிட்டேன் .உண்மைகள் கண்டிப்பாக வெளிவரவேண்டும் .
உங்கள் கரிசனைக்கு நன்றி காண பிரபா .