Sunday, April 19, 2020

கரிகாலன் : - அன்றைய நாட்களும்.... முடி வெட்டுவதும்.....

 இந்த அனுபவம் பொதுவாக பெண்களுக்கு கிடைக்காதது .இது ஓரு ஆண்களுக்கான உலகம்.
இப்படித்தான் அன்றைய நாட்கள் இருந்தன.

நான் சொல்வது மயிர் வெட்டுவது பற்றி , அம்பட்டன், பாபர் இப்படி பல பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டதும் சாதிய படி நிலையில் இவர்களுக்கு ஓரு இடம் தந்து நாங்கள் "கவுரவித்ததும் "எங்கள் நினைவில் இருந்து அகலாதது.

நான் சிறுவனாக இருந்த காலங்களில் பார்த்தது எங்கள் அப்பப்பா வீட்டுக்கு ஒருவர் வருவார் .பொதுவாக அவர் வரும் நாட்கள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும்.

கையில் ஓரு பெட்டி , அரையில் மடித்து கட்டிய வேட்டி, மேலே வெறும் மேனி,முகத்தில் ஒரு வார தாடி அத்துடன் காலமும் சமூகமும் கொடுத்த அனுபவங்கள் முகத்தில் சுருக்கங்களாய்.

கதவை திறந்து ,வீட்டுக்கு முன்னே வந்து அய்யா என்று அழைப்பார். இதற்காகவே காத்திருக்கும் அப்பப்பா அவரை வீட்டுக்கு பின்னே அழைத்து செல்ல ஒரு தென்னை மரத்துக்கு கீழே அப்பப்பா ஒரு சிறு கம்பளம் விரித்து அமர வைக்கப்படுவார்.

வந்தவர் கொண்டுவந்த பெட்டியை திறந்து தனது பொருட்களை எல்லாம் எடுத்து வைப்பார். அப்பப்பா கையில் ஒரு சிறிய கண்ணாடி கொடுக்கப்படும். ரசம் போன கண்ணாடி அது
வந்தவர் கத்திரிக்கோலும் சீப்பும் கொண்டு மயிர் வெட்ட தொடங்குவார். கைகள் வேலை செய்ய இருவரின் வாய்களும் ஊர் அண்டல் அளப்புகள் எல்லாம் பேசி நிற்கும்.

மயிர் வெட்டி முடிய ஒரு நீள பிரஸ் எடுத்து சோப்பில் குழைத்து அப்பப்பாவின் முகம் முழுவதும் சோப் பூசி தாடியை சவரம் செய்ய தொடங்குவார்.இந்த கட்டடத்தில் அப்பப்பா மிகவும் அமைதியாக இருப்பார். முடி வெட்டுபவர் ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார். அப்பப்பா எதுவும் பேச மாட்டார். நாங்கள் ஏதும் கேட்டாலும் பதில் வராது. ஏனெனில் கத்தி கழுத்தில் இருக்கும்.

இதுவும் முடிய அடுத்த கட்டம் இனி அப்பப்பா ஒவ்வொரு கைகளாக தூக்க கமக்கட்டு மயிர் வழிக்கப்படும். இது எனக்கு அருவருப்பாக இருக்கும் என்பதால் முதல் இரண்டு கட்டங்கள்
முடிந்து மூன்றாம் கட்டடத்துக்கு வரும் போது நான் அந்த இடத்தை விட்டு ஓடி விடுவேன்.

அப்பொழுது எல்லாம் ஒரு நீளமான கத்தி தான் சவரம் செய்ய பாவிக்கப்படும். அது குப்பனுக்கு தலைமயிரும் வெட்டும் சுப்பனின் முகத்தினையும் மழிக்கும்
தர்மனின் கமக்கட்டு மயிரையும் சிரைக்கும். கீதையில் கண்ணன் சொன்மாதிரி அதன் கடமையை செய்து கொண்டே இருக்கும்.

அதை சுத்தம் செய்கிறார்களா? இல்லையா? யாரும் அந்த நாட்களில் அதைப் பற்றி கவலைப் பட் டதில்லை. அப்பொழுது கோரோனா ,எயிட்ஸ் போன்ற இன்ன பிற வியாதிகள் இல்லை தானே.

எல்லாம் முடிந்த பின்னர் அப்பப்பா அப்படியே கிணற்றடிக்கு போய்விடுவார் முழுக்கு போடுவதற்காக. "பத்தல் "
அடைக்கப்பட்டு அதற்குள் தென்னோலைகள் போடப்பட்டிருக்கும் ஊறுவதற்காக, அதற்கு மேலே நின்று துலாவால் இறைத்து முழுக்கு போடத் தொடங்கி விடுவார். துலா இறைப்பது என்பது ஒரு கலை. உடனடியாக எல்லோராலும் இறைக்க முடியாது. போதுவாக ஊரில் எல்லா வீடுகளிலும் "கப்பி" கயிறுதான் இருக்கும்.

மயிர் வெட்டியவரை அப்படியே விட்டு விட்டேன். அவர் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்பக்கம் வந்து திண்ணையில்அமர்வார் .அப்பாச்சி அவரின் சுக நலன்களை விசாரித்துக் கொண்டே "மூக்குபேணியில்"
"தேத்தண்ணி " கொண்டுவந்து கொடுப்பார். அவர் அதை குடித்து விட்டு காசை வாங்கிக்கொண்டு போவார். அந்த மூக்கு பேணி கழுவி ஒரு ஒரமாக வைக்கப்படும் மீண்டும் அவர் வந்தால் கொடுப்பதற்காக, அல்லது அவரை போன்றவர்கள் வந்தால் கொடுப்பதற்காக....

அப்பப்பா ---அப்பாவின் அப்பா
 அப்பாச்சி ---- அப்பாவின் அம்மா
  பத்தல் ---- கினற்றடியில் நின்று குளிப்பதற்காக  போடப்                                                                பட்டிருக்கும்    சீமெந்து மேடை ....
 துலா :- கிணற்றில் நீர் அள்ள  உபயோகிக்கும்  ஒரு முறை .
                                    முழு பனை மரம் இதில் பயன்படுத்தப்படும் .
  மூக் கு பேணி ---   நீர் , டீ போன்றவை அருந்துவதற்காக                                                                                       பயன்படுத்தப்பட்ட ஒரு  ரம்ளர்  ,    கேத்தலில்                                                                     இருப்பது மாதிரி ஒரு       வெட்டு   இருக்கும்
  தேத்தண்ணி --- தேநீர் ,டீ

   * யாழ்ப்பாணத்தில்  பொதுவாக மயிர் என்று தான் சொல்வார்கள் ,
                         தமிழகத்தில் முடி என்பார்கள் .

தொடர்வேன்....

No comments: