Saturday, May 02, 2015

கொத்துரொட்டி 001


ண்மையில் ஆப்கானிஸ்தானை பற்றிய ஒரு விவரண சித்திரம் ஒன்றினை பார்த்துக்கொண்டிருந்தேன் அங்கு முன்னர் தொண்டாற்றிய ஒரு பெண்மணி சொன்ன ஒரு விடையத்தினை பார்த்ததும் நான்
அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன் ,அவர் சொன்னது பொதுவாகவே ஆப்கான் கிராமங்களில் கணவனும் மனைவியும்  சரிசமமாக நடந்து வரமாட்டார்களாம் ,பொதுவாகவே ஆண்கள் முன்னால் நடந்து வர
பெண்கள் பின்னால் நடந்துவருவார்களாம் ,என்ன சுமை என்றாலும் பெண்கள் தான் தூக்கி வருவார்கள் ,தூக்கவேண்டும் .பிள்ளைகளையும் தூக்கிகொண்டு சுமைகளையும் தூக்கிக்கொண்டு பெண்கள் நடந்து வர ஆண்கள் இரண்டு கைகளையும் வீசிக்கொண்டு நடந்து வருவதையுமே கண்டிருந்த தனக்கு ஒரு நாள் ஒரு கிராமத்துக்கு போய்க்கொண்டிருந்த போது ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக ஒரு பெண்  சுமைகளை
தூக்கிக்கொண்டு முன்னேவர அவளின் கணவன்  சிறிது இடைவெளிவிட்டு பின்னே வந்து கொண்டிருப்பதை கண்டவுடன் ஆச்சரியம் தாளாமல் வாகனத்தினை நிறுத்திவிட்டு இறங்கி  அந்த மனிதனிடம்
சொன்னாராம் நீதான் உணமையான ஆண் மகன் உனது மனைவிக்கு இப்படி ஒரு சரிசமமான அந்தஸ்தினை கொடுத்திருக்கிறாயே என்று .


அதற்கு அந்த மனிதன் சொன்னானான் .அந்தஸ்தாவது புடலங்காயாவது இந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அதிகம் அதனால் தான் எனது பாதுகாப்புக்காக எனது  மனைவியை முன்னால்  நடக்க சொல்லிவிட்டு நான் பின்னால் நடந்து வருகிறேன் என்றானாம் .இதை கேட்ட அந்த பெண்மணி மட்டுமல்ல நானும் கூட அதிர்ந்து தான் போனேன்

மேலும் அந்த விவரணத்தில் பல விடையங்களை  சொன்னார்.ஒரு முறை அப்போதைய அப்கான் அதிபரைசந்தித்தபோது இப்பெண்மணி பெண்களின் கல்வி ,சுகாதாரம் என்று கதைத்தபோது அதிபர் சலிப்புடன் சொன்னாராம் நாங்கள் இங்கு பெண்களை உயிருடன் வாழவைக்கவே பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என்றாராம் .ஆப்கன் பாகிஸ்தான் போன்ற நாடுகளில்  பெண்களின் நிலை என்பது மிகவும் பரிதாபம் தான் .சமைக்கவும் பிள்ளை பெறவும் ,உடல் தேவைக்கு மட்டும் தான் பெண்கள் தேவை என்பது அங்குள்ள ஆண்களின்  கொள்கை பெண்கள் கல்வி  என்பது அவர்களால் அனுமதிக்க முடியாத ஒன்று .



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



இங்கே கனடாவில் கடைகளில் விற்கப்படும்  பழங்கள் மரக்கறிகளின் மீது விதவிதமான  ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன் ,
.நான் இவைகள்  பிஎல்யு கோட் என்றே இதுவரையில் எண்ணி இருந்தேன் .சில் நாட்களுக்கு முன்னாள் ஒரு  இணைய தளத்தினை பார்த்தபோது  அதில் ஸ்ரிக்கர்களை வைத்து அந்த பழங்கள் எந்த முறையில்விளைவித்துள்ளனர் என்று காணமுடியும் என கூறப்பட்டிருந்து .அதாவது இயற்கையாக உரங்கள் பாவிக்காது விளைந்ததா அல்லது மரபணு மாற்றபட்ட 
 பழங்களா? அல்லது முற்றுமுழுதாக இரசாயன உரங்களை கொண்டு விளைவித்ததா என்பதை அறியமுடியுமாம் 

01)  பிஎல்யு கோட்டில் நாலு இலக்கம் இருந்தால்  அது பாரம்பரியமுறையில் ஆனால் முற்று முழுதாக இரசாயன உரங்கள் இட்டு விளைவிக்கப்பட்டது 

02)  பிஎல்யு கோட்டில் ஐந்து இலக்கங்கள் இருந்து அது எட்டு என்னும் முதல் எழுத்தில் ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது 

03)  பிஎல்யு கோட்டில் ஐந்து இலக்கங்கள் இருந்து அது ஒன்பது  என்னும் முதல் எழுத்தில் ஆரம்பித்தால் அது முற்றும் முழதாக இயற்கை முறையி விளைவிக்கப்பட்டது 

இப்போது உங்களுக்கு ஒரு  தெளிவு கிடைத்திருக்கும் .இனி நீங்கள் வாங்கும் போது என்ன பழங்கள் வாங்கும் போது எப்படி விளைவிக்கப்பட்டது என் பார்த்து வாங்குவதுடன் உங்கள் உடல் நலத்தினையும்
பாதுகாத்து கொள்ளுங்கள் .சரி நீங்கள் பழங்களை சாப்பிடும் போது பொதுவாக அந்த ஸ்ரிக்கர்களை உரித்து  எறிந்துவிட்டுதானே சாப்பிடுவீர்கள் .சில வேளைகளில் அந்த ஸ்ரிக்கர்களை அகற்ற முடியாவிட்டால் என்ன செய்வீர்கள் ? ஒரு செலோ டேப்  துண்டினை அந்த ஸ்ரிக்க்ரின் மீது ஒட்டி விட்டு பின்னர் செலோடேப்பினை அகற்ற ஸ்ரிக்கரும் சேர்த்து வரும் .பின்பு  நன்றாக் கழுவிவிட்டு சாப்பிடலாம் 


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



பொதுவாக இங்கு கனடாவில் லிப்ட் கேட்பது என்பது மிக மிக குறைவு ,சில வேளைகளில் பெருந்தெருக்களில் (High way,Free way) நுழையும் போது சிலர் கட்டை விரலை உயர்த்திப்பிடித்தபடி நிற்பதை கண்டிருக்கிறேன் .
ஆண்கள் பெண்கள் பொதுவாக இளம் வயதினர்  அப்படி கேட்பதை கண்டிருக்கின்றேன்,பொதுவாக நான் இப்படி லிப்ட் கொடுப்பதை விரும்புவதும் இல்லை .சில தினங்களுக்கு முன்னர் இப்படி தான் பெரும் 

தெருவில் உள் நுழைய எனது ஜீப்பினை திருப்புகிறேன் .ஒரு வெள்ளை இனத்தவர் மாணவனை மாதிரி தோற்றம் கொண்டவர் கட்டைவிரலை உயர்த்தியபடி, சரி மாணவன் தானே என எண்ணியபடி அவசரகால 
விளக்குகளை எரிய விட்டபடி அவரருகில்  நிறுத்துகிறேன் .தான் செல்லவேண்டிய இடத்தினை சொல்லி அங்கு தன்னை இறக்கிவிடுவாயா எனக் கேட்டார் .அவர் கேட்ட இடத்தினை தாண்டி தான் நான் 
போகவேண்டும் அதனால் அவருக்கு நான் சொன்னேன் .சரி நான் உன்னை நீபோக வேண்டிய இடத்துக்கு அண்மையில் பெருந்தெருவில் இருந்து வெளிய வந்து இறக்கி  விட்டுவிட்டு மிண்டும் பெருந்தெருவுக்குள் 
போய்விடுவேன் சம்மதமா என்றேன் .அவரும்  சம்மதித்து ஏறினார் .

 எனது பக்கத்துக்கு இருக்கையில் இருந்து கதைத்துக்கொண்டு வந்தார்  இங்கு ரொறொன்ரோவுக்கு அலுவலாக வந்ததாகவும் காசை மிச்சம் பிடிப்பதற்காக லிப்ட் கேட்டதாகவும் சொன்னதுடன் தான் தனது ஊரில் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார் .இறங்க வேண்டிய இடம் வந்தது  வாகனத்தினை  அவசரகால விளக்குகளை
போட்டுவிட்டு ஓரமாக நிறுத்துகிறேன். 

உங்கள் உதவிக்கு நன்றி என சொன்னவர் ஒரு துண்டு காகிதத்தினை எடுத்து தனது செல்பேசி இலக்கத்தினை எழுதி என்னிடம் நீட்டிக்கொண்டே எனது தொடையில் மெதுவாக தடவிகொண்டே  சொன்னார் உங்கள் உதவிக்கு நன்றி, என்ன உதவி வேண்டும் என்றாலும்  கேளுங்கள் உங்களுக்காக செய்வேன் என்றார் .நான் சிரித்துவிட்டு பாய் சொன்னேன் இறங்கிவிட்டார் .
எனது வாகனம் நகர பின்  கண்ணாடியில் பார்த்தேன் ,எந்தவித சலனமும் இல்லாமல் அவர் தனது பையை எடுத்துக்கொண்டு போய்கொண்டிருந்தார் .ஓ அவனா நீ ????

வாகனம் ஓடிகொண்டிருக்க எனது மனதிலும், ஒரு சந்தேகம் எதை பிடிப்பதற்காக வாகனத்தில் ஏறினார் காசையா? ஆளையா?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



சரி சரி ஒரு நகைச்சுவை மனதினை லேசாக வைத்திருப்பதற்காக்  மனைவிமார் மன்னிக்கவும் 

*அண்ணே நீங்க எந்த கடவுளை கும்புடுவீங்க 

*கல்யாணத்துக்கு முன்னாடியா? பின்னாடியா?

*சரி கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன் 

*கல்யாணதுக்கு முன்னாடி முருகனைதன் பிடிக்கும் 

*அப்போ கல்யாணத்துக்கு பின்னாடி?

*அதை என் கேக்கிறிங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான்  வேண்டாத  
தெய்வங்களே இல்லை 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மீண்டும் சந்திக்கிறேன் .அதுவரையில் அன்புடன் கரிகாலன்.















Friday, May 01, 2015

ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்….!

11200808_551839561623148_7292822590549398262_n


விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு…
அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு…
கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு…
த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது…
சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு…
அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது…
பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு…
விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு…
ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்…
எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய, யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க சம்பாதிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?
முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க…
அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்.!!!!!!!!
நன்றி -இணையம் 

Monday, April 13, 2015

நீங்கள் வாங்கும் தங்கம் உண்மையிலேயே தங்கம்தானா?

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன். சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியாவில்  ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே.

தங்கம் வாங்காமல் இன்றைக்கு யாரும் இருப்பது கிடையாது. அந்தளவுக்கு தங்கம் நமக்கு தவிர்க்க முடியாத மிக முக்கியப் பொருளாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தங்கம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்துள்ளோம்.

பணக்காரர்கள் ஏமாந்தால் அது அவர்களுக்கு ஒரு விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், தினம் தினம் உழைத்து குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த பணத்தில் தங்கம் வாங்கும் ஏழைகள் ஏமாறுவது எந்த விதத்தில் நியாயம். இன்றைக்கு தினமும் அதுதான் நடந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். அதனால், இன்றைக்கு அதிகமான நகைக் கடைகள், தரமான நகை, அது இது என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

'ஹால்மார்க்' முத்திரையோடு விற்கிறோம் என்று சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி வாங்குகிறார்கள். உண்மையில் இன்றைக்கு விற்கப்படும் தங்கத்தில் சராசரியாக 100-க்கு 60 சதவிகிதம் மட்டுமே தங்கம் உள்ளது. 40 சதவிகிதம் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. கலப்படத்திலும் இன்றைக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்களை கலந்து விற்பனை செய்கிறார்கள் என்பது உச்சகட்ட கொடூரம். நாமும் இதெல்லாம் தெரியாமல் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவது வேதனையிலும் வேதனையான ஒன்று.

எனவே, இதை முடிந்தவரை தடுத்து நிறுத்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கம் குறித்த போதிய விழிப்புணர்வை பெறவேண்டியது மிகமுக்கியம். அதற்காகத்தான் நாங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டோம். முடிந்தவரை தங்கம் வாங்குவதை தவிருங்கள். இப்போது அரசாங்கத்திடம் இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை கொடுக்க உள்ளோம். மும்பை போன்ற இடங்களில் தங்கம் விற்பனையில் பல கட்டுப்பாடுகள் இருப்பதுபோல், இங்கேயும் வந்தால் தங்கம் விஷயத்தில் இனியும் மக்கள் ஏமாறுவதை தடுக்கலாம்" என்றவர்,
 ''வரும் 21-ம் தேதி தங்கம் வாங்க உகந்த நாள் என்று சொல்லப்படும் அக்க்ஷய திரிதியை கொண்டாடப்படவிருக்கிறது. இதனால் தங்கம் விஷயத்தில் இன்னும் பலவித ஏமாற்றங்களும், மோசடிகளும் நடக்கக்கூடும். எனவே, மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.." என்று கோரிக்கை வைத்தவர், தங்கம் குறித்த இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களையும் பட்டியலிட்டார்.

Thursday, January 08, 2015

நீரிழிவு /சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள .......

நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இங்கு பல்வேறு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருகின்றன, பின்பற்றி வளமோடு வாழ்க

* எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்’ முறையினை பின்பற்ற வேண்டும்.

* நல்ல நார்ச்சத்து, கொழுப்பில்லாத பால், மோர், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றினை அளவோடு உண்டாலே நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

* ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை இரவில் 100 மி.லி., தண்ணீரில் ஊற வைத்து, காலை அந்த நீரினையும், வெந்தயத்தினையும் எடுத்துக்கொள்ள இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

* 60:20:20 என்ற விகிதத்தில் நார்ச்சத்து மிகுந்த கார்போ ஹைடிரேட், புரதம், நல்ல கொழுப்பு இருக்கவேண்டும். 1500-1800 கலோரி சத்து அவரது வயது, உழைப்பினைப் பொறுத்து கூறப்படுகின்றது.

* உலர்ந்த பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும், சர்க்கரை அளவை கூட்டி விடும். ஆனால், பாதாம் 4-6 வரை எடுத்துக் கொள்ளலாம்.

* தக்காளி ஜுஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* முழு தானியம், ஓட்ஸ், சிறு தானியங்கள், முளை தானியங்கள் இவையே பிரதான உணவாக இருக்கவேண்டும்.

* கொழுப்பற்ற பால் தினமும் 2 கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* பட்டாணி, பீன்ஸ், பசலை, பயறு வகைகள் மிக மிக சிறந்தவை.

* ஒமேகா-3 என்ற சத்து மாத்திரையாவது எடுத்துக் கொள்ளுங்கள். மீன் உண்ணும் பழக்கம் இருந்தால் அவர்கள் நன்றாக மீன் எடுத்துக் கொள்ளலாம்.

* பப்பாளி, ஆப்பிள், கொய்யாப்பழம், பேரிக்காய், ஆரஞ்சு இவைகளை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

* பெரிய உணவாக ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் சிறு சிறு உணவாக நாள் ஒன்றுக்கு 5 முறை எடுத்துக்கொள்ளுங்கள்.

* மூன்று வேளை உணவு அவசியம். 4-5 மணிக்கொரு முறை உணவு எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவினை சீராய் வைக்கும். எப்போதுமே குறைந்த கார்போஹைடிரேட் கொண்ட ஏதாவது ஒரு உணவினை வெளியில் செல்லும்போது உடன் எடுத்துச் செல்லுங்கள்.

* உங்கள் சர்க்கரை அளவினை நீங்களே தெரிந்துக் கொள்ளும் உபகரணத்தினை கண்டிப்பாய் உடன் வைத்திருங்கள். இதில் நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளலாம்.

* உடலுக்குச் சத்தான உணவை தேர்ந்தெடுங்கள். சர்க்கரை, உப்பு இரண்டுமே குறைவாக இருப்பதே நல்லது.

* வேக வைத்த உணவுகள், நார்ச்சத்து உணவு, கொழுப்பில்லாத பால், பால் சார்ந்த பிரிவுகள், முழுதானிய உணவு, காய்கறி, பழ உணவுகள் மிக சிறந்தது.

* 3-4 மாதத்தில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு என்பதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

* இந்த பரிசோதனையில் 6-7சதவீதம் என்ற அளவு முறையானது. அதற்கு கூடுதலாக இருப்பின் கடந்த சில மாதங்களாக சர்க்கரை அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் அதன் எண்ணைக் கொண்டு (உ-ம் 10.5 சதவீதம்) எந்த அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் தெரிந்து உடனடி சீர்ப்படுத்த முயல வேண்டும்.

* ஆல்கஹால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இதில் எந்த சத்தும் இல்லை. ஆனால் கலோரி சத்து மட்டுமே அதிகமாக உள்ளது. மது, நீரிழிவு மருந்துடன் இணைந்தால் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. வெறும் வயிற்றில் ஆல்கஹால் எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் ஆபத்தை விளைவிக்கும்.

* உடற்பயிற்சி மூலம் எடை குறைப்பு செய்யுங்கள்.

* வருடத்திற்கு 4 முறையாவது ரத்த அழுத்தத்தினை பரிசோதனை செய்து பாருங்கள்.

* பாதங்களை அன்றாடம் கவனியுங்கள். அடி, காயம் இவை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பாதங்களை சாக்ஸ் அணிந்து கூட சிறிது வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

* முறையான சர்க்கரை அளவு இல்லாவிடில் சிறு சிறு ரத்தக்குழாய்கள் பாதிப்பிற்குள்ளாகும். குறிப்பாக, கண்கள் பாதிக்கப்படும். எனவே, வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

* நீரிழிவு பல், ஈறு இவற்றினை பாதிக்கும். கவனம் தேவை.

* பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் மாற்றமும், உடல் உழைப்பு கூடுதலும் 80 சதவீதம் வரை சர்க்கரை அளவை சீராக்கி விடும்.

* ஆப்பிள் சுமாரான அளவு ஒன்று 21கி கார்போ ஹைடிரேட், 3.7 நார்ச்சத்து, .5கி கொழுப்பு, .3கி புரதம், கலோரி 81 உடையது.

* ஒரு சாதரண சிறிய வாழைப்பழம் 23.7கி கார்போ ஹைடிரேட், 2.4கி நார்ச்சத்து, .5கி கொழுப்பு, 1.0கி புரதம், 93 கலோரி சத்து உடையது.

* காபி குடித்த பிறகு பலருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகின்றது. பால் இல்லாத காபி குடித்தாலும் சிலருக்கு இது இருக்கின்றது. சிலருக்கு க்ரீன் டீ, சத்து பானம் போன்றவைக் கூட சர்க்கரையின் அளவினை கூட்டுகின்றது. காபியின் சில ரசாயனங்கள் பிரிவு 2 நீரிழிவினை தடுக்கவும் செய்கின்றன. பொதுவில் அவரவர் உடல் வாகினை தெரிந்து இவற்றினை எடுத்துக்கொள்வது நல்லது.

* சர்க்கரை இல்லாதது என எழுதப்பட்ட உணவினாலும் ஏன் இதனை எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறுகின்றது என சிலர் எண்ணலாம். அந்த உணவில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து கூடுதலாக இருக்கலாம். கவனம் தேவை.

* நோய் காலத்தில் உடல் அந்த நோயினை எதிர்த்துப் போராடும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். நன்கு தண்ணீர் குடியுங்கள். மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது இவை சர்க்கரையின் அளவினை கூட்டுபவையா என்ற மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

* அதிக மன உளைச்சல் உள்ள பொழுது உடலில் வெளியாகும் ஹார்மோன்களால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடலாம். இது பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளிடையே சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. எனவே, பிராணாயாமம், யோகா, தியான முறையில் மனதினை அமைதியாய் வைத்திருங்கள்.

* பச்சை நிற காலிப்ளவர், பசலைக் கீரை, பீன்ஸ் இவை நிறைய நார்ச்சத்து கொண்டவை. மாவுச்சத்து குறைவாகக் கொண்டவை.

* சைவ உணவும், காய்கறிகளை அதிகமும் உட்கொண்ட 43 சதவீதம் மக்கள் (பிரிவு 2-வைச் சார்ந்த நீரிழிவு நோயாளிகள்) மருந்திலிருந்தே வெளிவர முடிந்தது என அமெரிக்க நீரிழிவு ஆய்வகக் குறிப்பு கூறுகின்றது.

* நீரிழிவு நோயாளிகள் எளிதில் இருதய நோய்க்கு ஆட்படுவர். ஆகவே மேற்கூறிய உணவுமுறை அவர்கள் எடையை குறைத்து, கெட்ட கொலஸ்டிராலையும் குறைக்க பெரிதும் உதவுகின்றது.

பொருத்தமான உணவு :

ஓட்ஸ் போல் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தி, சீராக்கும் ஒரு உணவுக்கு நிகர் ஓட்ஸ் மட்டுமே. ஓட்ஸ் உணவும் கார்போ ஹைடிரேட் வகையினைச் சேர்ந்ததுதான். இருப்பினும், இது நல்ல கார்போ ஹைடிரேட். செரிக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவினை ஏற்றாது.

அடிக்கடி அல்லது அன்றாடம் ஓட்ஸ் உணவினை எடுத்துக்கொள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். இதிலுள்ள நார்சத்து வயிற்றினை நிறைவாக வைப்பதோடு எடை குறைப்பிற்கும் உதவும். டைப் 2 நீரிழிவு பிரிவினரின் எடை குறைப்பிற்கு உதவும்.

இது இணையதில் இருந்து எடுத்தது .
எந்த மருந்தினையோ அல்லது  சிகிச்சையினையோ  எடுக்கும் போது உங்கள்
உடல் நிலையை கருத்தில் கொண்டு சொந்தப்பொறுப்பில் செயற்படவும் அத்துடன் வைத்தியரிடம்  கலந்து ஆலோசிப்பது சிறந்தது
கரிகாலன்

Friday, January 02, 2015

எங்கும். எப்போதும் சொல்வோம் நன்றி வணக்கம்!


னடா வந்தபின்பு நான் நிறைய நல்லவிடயங்களை கற்றுக் கொண்டேன் .மற்றவர்களுக்கு கதவை பிடித்திருப்பது ,பெண்களுக்கு மரியாதை தருவது
தொலைபேசியில் பண்பாக கதைப்பது ,நேரம்தவறாமை,மற்றவர்களின்  தனி மனித சுதந்திரத்தை மதிப்பது ,பொறுமையாக வரிசையில்நிற்பது,
எந்தப்பெரிய  கொம்பனாலும் பெயர் சொல்லி அழைப்பது இப்படி பலவற்றை சொல்லலாம் .இதில் ஒன்றுதான் வணக்கம் சொல்லப் பழகியது.
இங்கே இயங்கும் எந்த தமிழ் வானொலி நிலையத்திற்கு அழைத்தாலும் ஹலோ சொல்லமாட்டார்கள் .வணக்கம் என்றுதான் சொல்வார்கள் ,
அழைப்பவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லுவார்கள் இப்படியாக கேட்டுக்கேட்டு உறவினர்கள் நண்பர்கள் தொலைபேசும்போது பலரும் வணக்கம் தான் சொல்வார்கள்  பல தமிழர்களுடைய நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புக்களில் வணக்கம் என்றே தொடங்குவார்கள் .

இன்று பெரும்பாலான புலம்பெயர்ந்த நாடுகளில் இதுவே வழக்கமாகிவிட்டது .மக்களின் வார்த்தைகளில் வணக்கத்தை தவழவிட்ட பெருமை வானொலி அறிவிப்பாளர்களையேசாரும் .அவர்களுக்கு எனது பாராட்டுகள் .உங்களுக்கு தெரியுமா கனடாவில் உள்ள ஒரு இருபத்தினாலு மணிநேர தமிழ் பண்பலை வானொலி நிலையத்தின் பெயர் "வணக்கம் எவ் எம் "பெருமை கொள் தமிழா
என்பது அவர்களது இலச்சினை

மேலை நாடுகளிலும் ,மலேசியா ,சிங்கப்பூர் ,இலங்கை போன்ற நாடுகளிலும் உள்ள வானொலி தொலைக்காட்சிகளின் பெயர்கள் தமிழில் இருக்கும்போது
தாய் தமிழகத்தில் இயங்கும் வானொலி ,தொலைக்காட்சிகளின் பெயர்கள் பெரும்பாலும் ஆங்கிலப்பெயர்களாக இருப்பது தமிழர்களுக்கு பெருமை
சேர்ப்பதாக இருக்கிறதா ? இந்தநிலை மாறவேண்டாமா சிந்தியுங்கள் பதிவர்களே...

நான் ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவில்லை .ஆங்கிலத்தினை ஆங்கிலமாக கதையுங்கள் ,தமிழை தமிழாக பேசுங்கள் ,இரண்டையும்
கலந்து கட்டி தமிழை கெடுக்காதீர்கள் .

இனி புதிய ஆண்டில் இருந்து ஒரு சபதம் எடுத்துகொள்வோம் தமிழர்களுடன் உரையாடும்போது தமிழில் உரையாடுவோம்
அத்துடன் எங்கும் எப்போதும் நன்றி வணக்கம் சொல்ல பழகிகொள்வோம்.

நன்றி ,கரிகாலன் 

Thursday, January 01, 2015

விஷ் யு ஏ ஹாப்பி நியூ இயர்! இளையராஜா, கமல்,பாலசுப்பிரமணியம்

விஷ் யு ஏ ஹாப்பி நியூ இயர்! இளையராஜா, கமல்,பாலசுப்பிரமணியம்

 ரவு 12.00 மணிக்கு காரில் பயணித்துக்கொண்டிருந்த போது கேட்ட முதல்  பாடல்  சரியாக 12.00 மணிக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் வானொலி.தொலைக்காட்சிகளில் ஒலித்த பாடல்களில் முதலாவதாக இருந்த ஒரு  பாடல் ..கடந்த முப்பது  வருடங்களுக்கு மேலாக  ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் ஒரு தமிழனின்  தமிழ் தேசிய கீதம் .ஆம்  சகலகலாவலவனின் " இளமை இதோ இதோ".இருபது வருடங்களை கடந்தும் இந்தப்பாட்டை அடித்துக்கொள்ள இசையாலும் சரி மெட்டாலும் சரி ஒரு பாடல் இன்னும்
 இன்னும் ஒரு பாடல் வரவில்லை .புத்தாண்டின் புத்துணர்ச்சியை கேட்பவர் மனதில் அப்படியே கொண்டு வருவதில் இப்பாடலுக்கு அருகில்
 எந்தப்பாடலும் கிட்ட நிற்க முடியாது .ஆப்படி ஒரு  புத்துணர்ச்சி தரும் இப்பாடல் .

1982 ஆண்டளவில் வெளிவந்த சகலகலாவல்லவன் படத்தில்  இடம்பெற்ற  பல பாடல்கள் புகழ்பெற்றன இருந்தும் காலத்தை
கடந்து நிற்பது இந்த ஒரு பாடல் மட்டும் தான் .(மற்றைய பாடல்கள் பற்றி எழுத பதிவர் நம்பள்கிக்கு அழைப்பு விடப்படுகிறது ).


பாடலுக்கு மெட்டமைத்து இசையமைக்கும் போதும் சரி அதைப்படமாகும் போதும் சரி இப்பாடல் முப்பது  ஆண்டுகளை கடந்தும்ஒ(ளி)லித்துகொண்டிருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்களே நினைக்கவில்லையாம் .ஆனால் காலங்களை கடந்தும் கமல்ஹாசன்,இளையராஜா மற்றும் பாலசுப்பிரமணியத்தின் பெயரினை சொல்லிக்கொண்டிருக்கிறது  என்பது மட்டும் நிச்சயம்..இந்தபாடல்  கமல்ஹாசனை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல் .பாடலில்  கமல்ஹாசன் பல விதமான வித்தைகளை செய்வதாகக் காட்டுவார்கள்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாடங்கள் பிரபல்யம் இல்லாத காலத்தில் வந்த இப்பாடல் ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் இக்  காலத்திலும் ஈடு கொடுத்து நிற்பதால் தால் இப்பாடலையே சகலாகலாவல்லவன் எனலாம்.இப்போது நாற்பது  வயதுக்கு மேலே இருப்பவர்களுக்கு தெரியும் அந்த நாட்களில் இப்படம்,பாடல்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் ,பலருக்கும் பல மலரும்
நினைவுகளைக்கொண்டு வரும் இருந்தாலும் பாரதி ராஜா போன்றவர்களால் நல்லதொரு வழியில் சென்ற  தமிழ்சினிமா உலகம் ஏவிஎம் இன் சகலகலாவல்லவன்
படத்தால்,இதன் வெற்றியால் மீண்டும் மசாலா பட தயாரிப்புக்கே திரும்பியதாக ஒரு குற்றசாட்டு  ஒன்று உண்டு .இது உண்மையும் கூட.

 பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும் ,சந்தோசத்தினையும் தரவேண்டும் என இறைவனை
பிரார்த்திக்கிறேன் .குறிப்பாக ஈழத்திலே அல்லறும் எனது உறவுகளுக்கு

Sunday, December 28, 2014

அமெரிக்காவையும் ,இணையத்தையும் தனது நேர்மையால் நெகிழவைத்த வீடற்ற மனிதர்


மெரிக்காவைப்பற்றி ஒரு பதிவை  சில நாட்களுக்கு முன்னர் இட்டிருந்தேன் .பலரும் பார்த்திருப்பீர்கள் .அமெரிக்காவில் வீடு இல்லாமல் வாகனங்களில்  வாழ்கின்ற மனிதர்கள் பலர் இருக்கின்றார்கள்.அதைவிட ரோட்டில் படுத்து எழும்புபவர்களும் இருக்கிறார்கள் .அதில் ஒருவரைப்பற்றிய சம்பவம் தான் நான் சொல்ல போவது .

கடந்த சில தினங்களாக யூரியுப் இல் பலகோடிப் பேர்களால் பார்வை இடப்பட்டு அமெரிக்காவிலும் இணையத்திலும் புகழடைந்த ஒரு சம்பவம் இது .

இவர்களை போன்ற மனிதர்களை இங்கு கனடாவில் கூட பெருந்தெருக்களுக்கு அண்மையில் கண்டிருக்கிறேன் .பெரும்பாலும் இவர்கள் மது ,போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள்
அவர்களை பார்க்கும் போதே அதை தெரிந்து கொள்ளலாம் .பொலிஸ் இவர்களை கண்டால் கூட்டிக்கொண்டு போய் காப்பகங்களில் ஒப்படைத்து விடுவார்கள் .அங்கு உடை ,உணவு உட்பட
அத்தியாவசியமான  பொருட்கள் கொடுப்பார்கள் .அனால் இவர்களுக்கு அத்தியாவசியம் மது ,போதைவஸ்து அல்லவா ? எனவே சில நாட்களில் அங்கிருந்து கம்பி நீட்டிவிடுவார்கள் .
பெரும்பாலும் வெள்ளையர்களை தான் கண்டிருக்கிறேன் . ஒரே ஒரு முறை ஒரு முஸ்லிம் பெண்மணியை கண்டேன் .ஒரு அட்டையில் "பசிக்கிறது உதவவும்", "வீடில்லாதவன் உதவவும்"
இப்படி தான் எழதி வைத்திருப்பார்கள் ,வாயால் எதையும் கேட்கமாடடார்கள்.

இனி விடையத்துக்கு வருகிறேன்

அந்த யுரியுப் விடியோ எடுக்கப்பட்டது என்னவோ நையாண்டி மற்றும் கிண்டலுக்காக தான் .அந்த விடியோவை எடுத்த ஜோஸ் என்பவரோ அல்லது விடியோவைப்  பார்த்துக்கொண்டிருக்கும் நாமோ அந்த வீடில்லாத மனிதர் எங்கு போவார் என்று எதிர் பார்த்தோமோ அங்கு தான் போகின்றார் .பின்பு வெளியில் வந்து அவர் செய்வது தான் திருப்பம்' மனிதநேயத்தினைப் பற்றி
யாவருக்கும் உணர்த்தியிருக்கிறார் அந்த வீடற்றவர் .

சரி இனி வீடியோவை  பாருங்கள்





அமெரிக்கா இளைஞரான ஜோஸ் பேலர் லின் (josh Paler Lin) யூரியூப் உலகில் வெகு பிரபலம். ஜோஷ் குறும்பும் நையாண்டியும் கலந்த
வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு,  உலகில் தனக்கென ரசிகர்களை
தேடிக்கொண்டிருப்பவர். அவரது வேலையே இப்படி ஏதேனும் குறும்பு செய்து அதில் சிக்குபவர்களை வீடியோவில் படம் பிடித்து தன்னுடையை யூரியூப் சேனலில் வெளியிடுவதுதான்.
இதற்காக என்றே பிரத்யேகமாக யோசித்து புத்துப்புது குறும்புகளாக உருவாக்கி இருக்கிறார்.இப்படி பல சனல்கள் இருக்கின்றன

இப்படிதான் கடந்த வாரம் அவர்   வீடில்லாத மனிதர் ஒருவரிடம் 100 டாலரை கொடுத்து அவர் என்ன செய்கிறார் என ரகசியமாக படம் பிடித்து வெளியிட வேண்டும் என்னும் நோக்கத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கண்ணில் பட்ட வீடில்லாத மனிதர் ஒருவரை தேர்வு செய்தார். அவர் யார் என்றும் தெரியாது.
அவரது பெயரும் தெரியாது. அவரிடம் ஜோஸ் 100 டாலர்களை கொடுத்தார். வீடில்லாத மனிதருக்கு முதலில் ஆச்சர்யம். 100 டாலர்களை திகைப்புடன் வாங்கியவர், பின்னர் அது மிக அதிகம் என திருப்பிக்கொடுக்க முயன்றார். ஜோஸ் உங்களுக்குதான் பணம் என்று வலியுறுத்திக் கொடுத்தார்.

வீடில்லாத மனிதர் பணத்தை வாங்கி கொண்டு விடைபெற்று சென்றார். ஜோஸ் சிறிது இடைவெளி விட்டு அவரை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றார். எதிர்பாராமல் 100 டாலர் கையில் கிடைத்ததும் வீடில்லாத மனிதர் என்ன செய்கிறார் என அவர் படம் பிடித்துக்காட்ட விரும்பியிருந்தார். வீடில்லாத மனிதர் கொஞ்ச தூரம் நடந்து மதுக்கடை ஒன்றுக்கு சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.நாம் நினைத்தபடியே

இது வரை ஜோஷ் மனதில் உருவாக்கி வைத்திருந்த திரைக்கதை படி எல்லாம் நடந்தது,
ஆனால் இதன் பிறகு அந்த வீடில்லாத மனிதர் செய்தது தான் ஜோஸ்கொஞ்சமும் எதிர்பாரதது. அந்த மனிதர் அருகே இருந்த பூங்காவுக்கு சென்று, அங்கே இருந்த தன்னைப்போன்ற வீடில்லாத மனிதர்களுக்கு தான் வாங்கி வைத்திருந்த உணவு பொருட்களை விநியோகிக்க துவங்கினார்.
மதுக்கடையில் உணவுப்பொருட்கள் தான் வாங்கியிருக்கிறார் அந்த வீடற்றவர் .


இந்த காட்சியை பார்த்ததும் ஜோஸ் வியந்து போனார். வீடில்லாதவர் கையில் கிடைத்த பணத்தை குடித்து மகிழ்வார் என நினைத்தற்காக தன்னை தானே நொந்துகொண்டார். உடனே அந்த மனிதரிடம் சென்று தான்
 அவரைப்பற்றி தவறாக நினைத்ததற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரது செயலை படம் பிடித்துக்கொண்டிருப்பதையும் ஒப்புக்கொண்டார்.

அப்போது அந்த மனிதர், "பணத்தை வாங்கி நான் குடித்து மகிழ்வேன் என நினைத்தீர்களா? பணத்தால் வாங்க முடியாத பல இருக்கின்றன, நான் செய்யும் செயல்கள் மூலம் மகிழ்ச்சியை பெற முயற்சிக்கிறேன் “ என்று பதில்
சொல்லியிருக்கிறார். அதை கேட்டு நெகிழந்து போன ஜோஸ் அவரது பின்னணியை கேட்டிருக்கிறார்.

தோமஸ் எனும் பெயர் கொண்ட அந்த மனிதர் , நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது பெற்றோர்களை கவனித்துக்கொள்வதற்காக வேலையை விடும் நிலை ஏற்பட்டதாகவும், அதன் பிறகு பெற்றோர்கள் இறந்துவிட , பார்த்து கொண்டிருந்த வேலை, இருந்த  பெற்றோர்களின் வீடு இரண்டும் போய் வீதிக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
 ஜோஸ் அவரிடம் மீண்டும் 100 டாலர் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு , தனது போன் நம்பரையும் தந்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் இந்த முழு சம்பவத்தையும் வீடியோவாக தனது சனலில் பகிர்ந்து கொண்டார். "இது போன்ற ஒரு காட்சியை நான்
எதிர்பார்க்கவில்லை, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வீடில்லாதவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன்.
ஆனால் இத்தகைய ஒரு அருமையான காட்சியை படம் பிடிக்க முடிந்தது எனக்கு மகிச்சியை தருகிறது . இந்த சனலின் வரலாற்றில்
 இதுதான் அற்புதமான தருணம். ஒரு வீடில்லாதவருக்கு நான் உதவ முடிந்ததுடன் ,ஒரு மகத்தான் மனிதர் மற்றும் நண்பரையும் சந்தித்துள்ளேன்”
 எனும் அறிமுகத்துடன் இந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.

வீடில்லாமல் வசிக்கும் எல்லோரும் சோம்பேறிகள் அல்ல, வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோட்டு
 விடக்கூடாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த எல்லோருமே வீடில்லாத மனிதர் தோமசின் கருணையால் நெகிழ்ந்து போயினர். தன்னிடம் காசு இல்லாத நிலையிலும், தனக்கு கிடைத்த பணத்தை
தன்னைப்போன்றவர்களுக்கு கொடுத்து மகிழந்த அவரது செயல் எல்லோரையும் உருக வைத்தது. அடுத்த சில நாட்களில்
அந்த வீடியோ விரைவாக  பரவியது. நான்கு நாட்களுக்குள் அந்த வீடியோ 2 கோடிக்கும் அதிமான முறை பார்க்கப்பட்டுள்ளது


இதனிடையே ஜோஸ் அந்த மனிதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவருக்காக நிதி திரட்டும்
முயற்சியில் ஈடுபட்டார். இணையம் மூலம் நிதி திரட்டுவதற்கான இண்டிகோகோ  இணையதளத்தில் தோமஸுக்காக  ஒரு பக்கத்தை துவக்கி , அவருக்கு நிதி அளிக்க கோரிக்கை வைத்தார். தோமஸ் புது வாழ்வு துவங்க கைகொடுங்கள் எனும் கோரிக்கையோடு , இந்த வீடியோவையும் அதன் பின்னே உள்ள கதையையும் குறிப்பிட்டு நிதி உதவி கேட்டிருந்தார்.

தன்னிடம் எதுவும் இல்லாத நிலையிலும் அடுத்தவருக்கு உதவிய தோமஸு க்கு உதவுவோம் என அவர் குறிப்பிட்டிருந்ததை இணையவாசிகள் பலரும் ஏற்றுக்கொண்டு நிதி அளித்தனர். விளைவு.. வீடியோ நான்கு நாளில் ஹிட்டானது போல் நான்கே நாட்களில் தோமாஸுக்கு உதவுதற்காக ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் நிதி குவிந்திருக்கிறது. இன்னும் குவிகிறது.
இப்பொது நான் இந்த பக்கத்தினை பதிவேற்றும்  போது அண்ணளவாக $116,693 USD கிடைத்திருக்கிறது.அவரின் இலக்கை விட அதிகம் பணம் திரட்டப்பட்டுள்ளது

நிதி அளித்த பலரும் இந்த பக்கத்தில் தோமஸ் பற்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்,
 தோமஸுக்குகு பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் அவருக்கு உதவி செய்ததன் மூலம், இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் சிறப்புமிக்கதாக மாறியதாகவும் தெரிவித்திருந்தனர்.

 உங்கள் செயலால் அசந்து போனேன். உங்களைப்போல் மேலும் பலருக்கு, கொடுக்கும் தன்மை வர வேண்டும் அத்துடன்  கிறிஸ்மசின் உண்மையான அர்த்ததை இது புரிய வைத்துள்ளது” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய எல்லோரும் அதை கருத்தைதான் கொண்டிருந்தனர். கூடவே மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இனி தோமஸ் தனது புது வாழ்க்கையினை புது வருடத்தில் தொடங்குவார் என்ற நம்பிக்கையுடன் கரிகாலன் ........................