Friday, July 16, 2004

தமிழ்நாட்டில் ஒர் அவலம்.

இன்று மதியம் விகடன்,தினமலர் இணயத் தளத்தில் வந்திருக்கும் செய்தி மனதினை என்னவோ செய்கிறது.கும்பகோணத்தில் ஒரு பாடசாலையில் தீப்பிடித்ததில் 85 இளம் துளிர்கள் (5,6 வயது பாலகர்கள்) தீயிலே கருகி மடிந்திருக்கின்றனர்.100 பேர் அளவில் தீக்காயமடைந்திருக்கின்றனர்.  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மாலை வீடு வருவார் என்று எதிர்பார்த்திருந்த பெற்றோர் மனதில் இடி விழுந்திருக்கிறது.எப்படி இது நடந்தது என்பது இன்னமும் தெரியவரவில்லை. ஆனால் கண்டிப்பாக விதிமுறைகளுக்கு மாறாகவே இப் பள்ளி நடத்தப்பட்டிருக்கவேண்டும். குறிப்பிட்ட தொகை மாணவர்கள் இருக்கும் கட்டடத்தில் குறிப்பிட்ட வெளியேறும் வாசல்கள் ,தீ ஏற்பட்டால் வெளியேறும் அவசரகால வழிகள், போன்றன அமைக்கப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியே? கண்டிப்பாக இப் பள்ளிக்கு விதி முறைகளுக்கு மாறாகவே அனுமதி வழங்கப்பட்டிருப்பது நாலு கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் இருந்தே தெரிகிறது. தமிழ் நாட்டில் பள்ளிகள் கல்லூரிகள் நடத்துவது வியாபாரம் அல்லது ஒரு ஒரு தொழில் என்றாகிப்போன நிலையில் சேவையை விட இலாபம் குறியாகிவிட்டநிலையில் இப்படி நிகழ்வுகள் நேர்வது தவிர்க்கவியலாது. எல்லா கல்லூரிகள்,பள்ளிகளில் கண்டிப்பாக இருக்கவேண்டிய விதிமுறைகள், மாணவருக்கான வசதிகள் "பத்திரங்களில்" மட்டுமே இருக்கும். அதிகாரிகளின் வாயினை பணம் அடைக்கும். சில காலங்களிற்கு முன்னர் தான் இதே போல ஒரு சம்பவம் திருச்சி,சிறீரங்கத்தில் நடந்து மணமகன் உட்பட பலர் இறந்தது நடந்தது. இப்போது இச் சம்பவம். இனி போட்டி போட்டுக்கொண்டு அரசியல்வாதிகள் பார்வை இடுவார்கள். பண உதவி செய்வார்கள்.அவர்களுக்கு வோட்டு குறிக்கோள். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் அவர்களுக்கு பத்திரிகை விற்பனை குறிக்கோள். இனி கீழ் நிலை அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள் மேல் நிலை அதிகாரிகளால், குறிக்கோள் குற்றத்தினை யார் தலையிலாவதுபோடவேண்டும் . பண உதவி ஒன்றும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உயிரினை மீட்டுகொண்டுவரப்போவதில்லை.காயமடைந்த மழலைகளிற்கு சிறந்த சிகிச்சை வசதிகள் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படுவதை அரசு உறுதிப்படுத்தவேண்டும்.இப்படி ஒரு சம்பவம் இன்னொரு இடத்தில் நடைபெறாமல் பார்ப்பதே அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கடமையாக இருக்கவேண்டும்.அனால் அவர்களுக்கு அது முக்கியமானதாக இருக்காது ஏனெனில் அவர்களின் பிள்ளைகள் படிப்பது இப்படிப்பட்ட பள்ளிகளில் அல்லவே. மொத்ததில் இச் சம்பவம் தமிழ்நாட்டில் இன்னும் இரண்டொரு மாதங்களுக்கு பரபரப்பாக இருக்கும் பின்னர் எல்லோரும் மறந்து விடுவார்கள்.இன்னொரு இப்படியான சம்பவம் நடைபெறும் வரை. உலக அரங்கிலே தமிழகத்திற்கு ஒரு கரும்புள்ளியாக இச் சம்பவம் இருக்கும் என்று கூறலாம். குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

No comments: