இனி எங்களுக்கு ஆடைகள் வேண்டாம். எங்கள் பெண்கள் கற்பழிக்கப் படுவதும், கொல்லப்படுவதும் சர்வ
சகஜமாகிவிட்டபோது எதற்காக நாங்கள் உடலை மூடி மறைக்க வேண்டும்? எங்கள் கண்ணியமும், கவுரவமும்,
மானமும் காற்றில் பறக்க விடப்படும்போது ஒப்புக்கு ஆடை எதற்கு?
இந்திய ராணுவமே... வா, வந்து எங்கள் கற்பை சூறையாடு. எங்களைக் கொன்று சதைகளை அள்ளிக் கொள்.
ஆனால், மனோரமாக்களை விட்டுவிடு! மனோரமாவின் அம்மா ஸ்தானத்திலிருந்து நாங்கள் மன்றாடி
கேட்கிறோம்’’ சமீபத்தில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவு
அலுவலகத்தின் வாசலில், ஒரு டஜன் மணிப்பூரி பெண்கள் கூடி நின்று எழுப்பிய கோஷம் இது.
இந்திய ராணுவத்தைக் கண்டித்து எழுதப் பட்ட வாசகங்கள் அடங்கிய துணி பேனர்களைக் கையில் பிடித்தபடி
நின்றிருந்த அவர்கள் உடலில் ஒட்டுத் துணிகூட கிடையாது. முழு நிர்வாணம்!
மனோரமா..
நம் கலாசாரத்தின் தலையில் தடியால் அடிக்கும்படி, ஒட்டு மொத்த இந்தியாவும் அதிர்ச்சியில் உறையும்படி ஏன்
இப்படியொரு போராட்டம்? கட்டிய கணவன் எதிரில்கூட ஆடை களைந்து நிற்க கூசும் பெண்களை, பலர்
முன்னிலையில் இப்படி பிறந்த மேனியாய் நிற்க துணிந்து முன்வரச் செய்தது எது?
இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்த இந்தப் போராட்டத்துக்குக் காரணம் முப்பத்திரண்டு வயது மனோரமாதேவியின் கொடூர மரணம்!
கடந்த ஜூலை 10ம் தேதி இரவு மனோரமாவின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்தது இந்திய ராணுவம்.
மனோரமா, தலை மறைவுத் தீவிரவாத இயக்கம் ஒன்றின் கமாண்டோ என்று உளவுத்துறை ரிப்போர்ட்
கொடுத்திருப்பதாக அதற்கு காரணம் சொன்னது.
மனோரமாவின் வயதான அம்மாவும், இரண்டு தம்பிகளும் ஹாலில் இருக்க, அவர்கள் கண்ணெதிரிலேயே
படுக்கையறையில் புகுந்த ராணுவத்தினர், மனோரமாவைத் தரதரவென இழுத்துவந்து, தாழ்வாரத்தில் கிடத்தி இருக்கிறார்கள்.
அதன் பிறகு மனோரமாவின் அலறல் சத்தம் மட்டுமே கேட்டிருக்கிறது. மூன்று மணி நேர சித்ரவதை... தாங்க
முடியாமல் மனோரமா மயங்கி விழ, பிறகும் தொடர்ந்திருக்கிறது கொடூர இம்சை. நடுவில்,
சமையலறையிலிருந்து கத்தியை எடுத்து சென்றிருக்கின்றனர். அதைத் திரும்பவும் கொண்டுவந்து வைத்தபோது, கத்தி முழுக்க ரத்தம்!
அதிகாலை மூன்று மணிக்கு, மனோரமாவை கைது செய்திருப்பதாகச் சொல்லி, அவரை இழுத்துச் சென்றிருக்கிறது இந்திய ராணுவம்.
இரவில் பெண்களைக் கைது செய்யக் கூடாது, பெண்கள் விசாரிக்கப்படும்போது கூடவே ஒரு பெண்
அதிகாரியாவது இருக்க வேண்டும் என்ற விதிகளை எல்லாம் தூக்கி தூரப் போட்டுவிட்டு அவர்கள் இழுத்துச்
சென்ற மனோரமா, மறுநாள் பக்கத்துத் தெருவில், ரோட்டோரப் புதரில் அரைகுறை ஆடைகளுடன் பிணமாகக் கிடந்திருக்கிறார்.
உடல் முழுக்கக் காயங்கள்... அந்தரங்க இடங்களில் நகக்கீறல்கள்... தொடையில் கத்தியால் வெட்டிய ஆழமான
காயம்... முதுகில் ஐந்து இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த அடையாளம்... என்று ரத்தக் களறியாக,
மனோரமா உயிரை விட்டிருந்த அந்த கொடூரத்துக்கு காரணம் ராணுவம் என்று மனோரமாவின் குடும்பம் கதற,
அவர் பயங்கரத் தீவிரவாதி. வெடிகுண்டு, ஏ.கே.47 துப்பாக்கி, வயர்லெஸ் எல்லாம் வைத்திருந்தார். அவரைக்
கைது செய்தபோது தப்பியோட முயன்றார். அதனால் சுட்டோம்! என்றது ராணுவம்.
மனோரமா சடலமாக..
ஆனால், அதை நம்பத் தயாராக இல்லை மக்கள். சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரும்
இதேபோல ராணுவத்தால் சீரழிக்கப்பட்டு, தற்கொலை செய்துகொண்டார். அப்போதுகூட அமைதி காத்த
மணிப்பூர், இப்போது பொறுக்க முடியாமல் பற்றி எரிகிறது!
மணிப்பூரில் பதினைந்துக்கும் மேற்பட்ட தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன. இவர்களைச் சமாளிப்பதற்காக
இங்கே வரவழைக்கப்பட்டதுதான் ராணுவம். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்படி ராணுவம்
சந்தேகத்தின்பேரில் யாரையும் கைது செய்யலாம், விசாரிக்கலாம். அதை எவரும் கேள்வி கேட்க முடியாது!
ஆனால், இந்தச் சட்டம் தீவிரவாதிகளை ஒடுக்குவதைவிட, அப்பாவிகளை சித்ரவதை செய்யத்தான் அதிகம்
பயன்பட்டதாக மணிப்பூர் மக்கள் குமுறுகின்றனர்.
இருபத்துநான்கு வருடங்களாகத் தீவிரவாதிகளை ஒழிக்க
முடியாதபோது, எதற்கு இந்தச் சட்டம்? எதற்கு ராணுவம்? என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த மணிப்பூர்
மக்கள், மனோரமாவின் மரணத்துக்குப்பிறகு, இந்தச் சட்டத்தை உடனே நீக்கவேண்டும் என்று ஆவேசக்
குரலோடு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிவிட்டனர். அதில் ஒன்றுதான் நிர்வாண போராட்டம் (இதனால் மிரண்டுபோன
ராணுவம், மனோரமா விவகாரத்தில் தவறுகள் நடந்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது).
இந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றிருப்பது, "மீரா பைபி" (meira paibi"-தீப்பந்தம் ஏந்திய பெண்கள்) என்ற
பெண்கள் அமைப்பு. இதன் பொதுச்செயலாளரான தோக்கம் ரமணி (இவருக்கு வயது 70!).
எங்கள் பாதுகாப்புக்காக என்று வரவழைக்கப்பட்ட ராணுவத்தால்தான் எங்கள் பாதுகாப்பே பறிபோய்விட்டது.
எங்கள் இயல்பு வாழ்க்கையையும், நிம்மதியையும் தொலைத்துவிட்டோம். எங்கள் இளைஞர்கள் என்கௌண்ட்டர்
என்ற பெயரில் தினம் தினம் கொன்று வீசப்படுகிறார்கள். பெண்களின் கற்பையும் உயிரையும் கடைச் சரக்காக்கிவிட்டது ராணுவம்.
இதையெல்லாம் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சகிப்பது? இனியும் சும்மா இருந்தால் எங்களின் அடுத்த
தலைமுறை அடியோடு அழிந்துவிடும். அதை மீட்டெடுக்கத்தான் நாங்கள் போராடுகிறோம். இதனால் எங்களுக்கு
என்ன இழப்பு ஏற்பட்டாலும் கவலையில்லை! அதிகபட்சம் உயிரை எடுப்பார்கள், அவ்வளவுதானே?’ என்கிறார் ஆவேசமாக.
ராணுவத்தை வெளியேறச்சொல்லி, அதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவும் வைத்திருக்கும் இந்த ஆவேசத்
தாய்மார்களின் பின்னால் மொத்த மணிப்பூரும் அணிவகுத்து நிற்க, இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்க, திகைத்து நிற்கிறது அரசாங்கம்.
இது 27.08.04 அவள் விகடன் இதழில் வந்த மணிபூர் நிலவரம் தொடர்பான கட்டுரை.
No comments:
Post a Comment