இங்கிலாந்தின் ஜ.ஆர்.ஏ அமைப்பானது தனது ஆயுதப்போராட்டத்தினை
கைவிட்ட நிலையில் அதே போலவே இலங்கையிலும் புலிகள் ஆயுதக்களைவினை செய்யவேண்டும் என்று அரசாங்கம் கேட்டுள்ள நிலையில், ஆயுதங்களை புலிகள் கைவிட சர்வதேசத்தின் அழுத்தங்கள் புலிகள் மீது போதுமானதாக இல்லை என இலங்கையின் நலன் விரும்பியும் இலங்கைக்கு இலவச ஆலோசனை கூறிவரும் "இந்து" பத்திரிகை கவலைப்பட்டு கண்ணீர்விட்டுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிவரும் "தினக்குரல்" பத்திரிகையின் இன்றைய ஆசிரிய தலையங்கம் மேற்படி விடையங்கள் தொடர்பாக அலசி நல்லதொரு
பதிலை விடையாக தந்துள்ளது.அதை இங்கு தருகிறேன்.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் ஆனால் எருமை மாட்டுக்கு?
தினக்குரல் பத்திரிகையின் தலையங்கம்:-
இலங்கையில் சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் போர்நிறுத்த உடன்படிக்கை சீர்குலைந்துவிடக் கூடாது என்றும் அக்கறை காட்டும் சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்ற அளவுக்கு விடுதலை புலிகளுடனான விவகாரங்களில் கடும் போக்கைக் கடைப்பிடிக்காமல் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கிறது என்ற அபிப்பிராயமொன்று தென்னிலங்கையில் வலுவடைகிறது. பாதுகாப்பு நிலைவரம் படுமோசமாகிக் கொண்டு போவது குறித்து விசனம் தெரிவித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் 2003 டோக்கியோ மகாநாட்டுக் கூட்டுத் தலைமை (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வே) கடந்த மாத நடுப்பகுதியில் விடுத்திருந்த அறிக்கை அரசாங்கத்தையும் விடுதலை புலிகளையும் சமத்துவமாக நோக்குவதாகக் கூட அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
கொலைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை புலிகள் இயக்கம் அதன் போராளிகளினால் மேற்கொள்ளப்படும் சகல கொலைகளையும் நிறுத்த வேண்டும். போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்க இலங்கை அரசாங்கம் சகல பரா இராணுவக் குழுக்களும் நிராயுதபாணிகளாக்கப்பட்டு, வன்செயல்களுக்கு வழிவகுக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுத பாணிகளான விடுதலை புலிகளின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்' என்று கூட்டுத் தலைமையின் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அரசாங்கம் கூறுவது போன்று, போர்நிறுத்த உடன்படிக்கைக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் சம்பவங்களுக்கு விடுதலை புலிகள் மாத்திரம் காரணமல்ல, அரசாங்கமும் அதன் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச சமூகம் கருதுவதன் பிரதிபலிப்பாகவே அந்த அறிக்கையை நோக்க வேண்டியிருந்தது. அதையடுத்து தன்னைச் சந்தித்த கூட்டுத் தலைமை நாடுகளின் இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க, போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் விடுதலை புலிகளுடன் மீளப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதாக அறிவித்தார். தற்போதைய நிலைவரங்களுக்கு வழிவகுத்த சம்பவங்களில் அரசாங்கத்துக்கு குறிப்பாக, பாதுகாப்பு படைகளுக்கு இருக்கின்ற தொடர்புகளை மறைக்கும் அல்லது மறுதலிக்கும் நோக்குடனேயே திருமதி குமாரதுங்க இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
இதற்குப் பிறகு இரு வாரங்கள் கடந்த நிலையில், போர்நிறுத்த உடன்படிக்கை எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்களில் ஒருவித தணிவை ஏற்படுத்தக் கூடியதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முயற்சிகள் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால், போர்நிறுத்த உடன்படிக்கையுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் எந்தளவுக்கு பயனுறுதியுடைய ஊடாட்டத்தையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கூறக் கூடியதாக இல்லை. இத்தகையதொரு பின்புலத்திலேயே, விடுதலைப் புலிகள் மீது நெருக்குதல்களைக் கொடுக்காமல் நெகிழ்வுத் தன்மையுடன் சர்வதேச சமூகம் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படும் கருத்துகளை அவதானிக்க வேண்டியிருக்கிறது.
வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக மேற்கொண்டு வந்த ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக ஐரிஷ் குடியரசு இராணுவம் (ஐ.ஆர்.ஏ.) அறிவித்ததையடுத்து இலங்கையில் விடுதலை புலிகளும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதியின் சுயசரிதம் நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றுகையில் ஐ.ஆர்.ஏ.யின் அறிவிப்பை வெகுவாகப் பாராட்டிய வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், இலங்கையில் விடுதலை புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படாதமை குறித்து கவலை தெரிவித்திருத்தார். `தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் மற்றும் எமது விவகாரத்தில் பங்கொன்றை ஆற்றும் சர்வதேச சமூகம் உட்பட இலங்கை நெருக்கடியில் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஆயுதங்களைப் பயன்பாட்டில் இருந்து விலக்கி வைப்பது அல்லது ஆயுதக் களைவு தொடர்பில் குறிப்பிடுவதை மிகுந்த கவனத்துடன் தவிர்த்திருக்கின்றன' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்றே ஐ.ஆர்.ஏ.யின் அறிவிப்பு குறித்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆசிரிய தலையங்கம் தீட்டிய இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான சென்னை `இந்து' வன்முறைப் பாதையைக் கைவிட வேண்டுமென்று விடுதலை புலிகள் மீது போதுமான சர்வதேச நெருக்குதல்கள் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு முழுமையான ஒரு சிவில் அமைப்பாக மாறும்வரை இலங்கை நெருக்கடிக்கு இறுதித் தீர்வைக் காண முடியாது என்று கதிர்காமர் கூறிய அதேதொனியில்
`இந்து'வும் விடுதலைப் புலிகள் தங்களை மாற்றிக் கொள்ளாதவரை, நிலையான சமாதானத்தைக் காண்பதற்கான இலங்கையின் பிரயத்தனங்கள் பயனளிக்காத நிலையே நீடிக்கும் என்று அந்த ஆசிரிய தலையங்கத்தில் தெரிவித்திருக்கிறது. சர்வதேச சமூகம் விடுதலை புலிகள் மீது போதிய நெருக்குதலைக் கொடுக்கவில்லை என்பதே இந்துவின் விசனம்.
உண்மையில், விடுதலைப் புலிகள் மீது சர்வதேச சமூகம் போதியளவு நெருக்குதல்களைப் பிரயோகிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் அதன் விளைவாக அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கின் கணிசமான பிரதேசங்கள் வந்ததையும் ஒரு பிரச்சினையாகக் காண்பிக்கும் நோக்குடனானதே. ஆனால், அவர்களின் இராணுவக் கட்டமைப்பு அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாகத் தீர்க்கப்படாத ஒரு அரசியல் நெருக்கடியின் தவிர்க்கமுடியாத உருவாக்கம் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். இலங்கை இனநெருக்கடியை சர்வதேச மயப்படுத்திய விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டமல்ல உண்மையான பிரச்சினை, அந்தப் போராட்டத்துக்கான நிர்ப்பந்தத்தை தோற்றுவித்த கொழும்பு அரசாங்கங்களின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையே யாகும்.
2 comments:
No wonder. Have you ever seen Mr. Kadirkamar and Mr.Ram differing in their views on Sri Lankan / Ezham ethnic issue?
அதுசரி இலங்கைக்கு தேள் கொட்டினால்
இந்துவுக்கு நெறிகட்டும்.அவாளுக்கும்
இவாளுக்கும் இதில ஒத்துமைதான் போங்கோ.
Post a Comment