Wednesday, December 21, 2005

இந்தியப்பிரதமருக்கு வேண்டுகோள்

பலாலி விமான தளம்: இந்திய பிரதமருக்கு இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள்!

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எதுவித இராணுவ உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:

சிறிலங்கா படையினரது வலுவை அதிகரிப்பதற்கான தங்களது ஒத்துழைப்பு தமிழின அழிப்புக்கு வழிவகுக்கும்.
சிறிலங்காப் படையினரது பலாலி விமான ஒடுபாதையை விரிவாக்கவும் மேலதிக இராணுவ வளங்களை அளிப்பதற்காகவுமான உடன்படிக்கையை சிறிலங்கா அரசாங்கத்துடன் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்துகொண்டோம்.

இத் தகவலானது இன்னலுறும் தமிழ் மக்களுக்கு பெரும் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சர்வதேச அனுசரணையாளரின் ஒத்துழைப்புடன் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆகையால் சிறிலங்கா படைத்தரப்பினரது அடாவடித்தனங்கள் அதிகரிப்பதுதான் அண்மைக்கால நிகழ்வுகளாகும். இதனால் தமிழ்மக்களின் சமாதானத்தின் மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுவிட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கபடமான போக்கு காரணமாக சமாதான முன்னெடுப்புகளும் தடைப்பட்டுவிட்டன.
தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடுவது என்பது அவர்களது சுதந்திரமான, கௌரவமான, பாதுகாப்பான வாழ்வுடன் சம்மந்தப்பட்டது.

எனவே, இத்தகைய
ஜனநாயகத்துக்கான போராட்டம் நியாயமானதும், நீதியானதுமானதாகும். அத்துடன் நீடித்த நிரந்தர சமாதானத்திற்கான போராட்டமாகும். இப்போராட்டத்ததை எவ்வகையிலேனும் ஒடுக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அரசாங்கத்தினால் தலைமை தாங்கப்படுகின்ற சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் முனைப்பாகும்.

சிறிலங்கா புதிய அரச தலைவர் பதவியேற்றதன் பின் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துவருகின்றன. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் திணிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகிவிட்டது என்பதற்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் படைத்தரப்பு அடாவடித்தனங்கள் சான்று பகிர்கின்றன.
அதே நேரத்தில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களது எதிர்ப்புணர்வு தம்மை தற்காத்துக்கொள்வதற்கான போராட்டங்களாக உருவாகி வருகின்றன.
பெண்கள் மீதான முன்முறைகள், அறிவுஜீவிகள், மாணவர்கள் மீதான திட்டமிட்ட வகையிலான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், அதிகரித்துவரும் சுற்றிவளைப்புக்கள் தேடுதல்கள், ஊடகவியாலாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

அத்துடன் அனைத்துலக மனித நேய ஒழுங்குவிதிகள், மனித உரிமைகள் ஆகியவற்றை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளாகும்.
சிறிலங்கா அரசாங்கமானது சமாதானம் என்ற முழக்கத்தை முன்வைக்கும் அதே நேரத்தில் தமிழ்மக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களை உருவாக்குவது சிறிலங்கா அரசாங்கத்தினது வஞ்சகப் போக்கினையே வெளிக்காட்டுகின்றது.

இந்த நிலையில் பலாலி விமான ஒடுபாதை விரிவாகத்துக்கான தங்களது ஒத்துழைப்பும், இராணுவ வள உதவிகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைப்பதானது தமிழ் மக்களை கவலையடைய வைக்கின்றது.
இந்தியாவுக்கும் இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கும் உள்ள உறவுகள் பன்நெடுங்காலமானவை.

இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் இங்கு வாழ்கின்ற தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களை புறம்தள்ளப் போவதில்லை என்பதே எமது எதிர்ப்பார்பாகும்.

நாம் இந்தியாவை எமது நேச சக்தியாகவே என்றும் கருதி வருகின்றோம்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது இத்தகைய நட்புறவைச் சிதைத்து தமது பேரினவாத மேலாண்மையை நிலைநிறுத்த முயல்கின்றது. மிகவிரைவிலேயே தமிழின அழிப்புக்கான அனைத்து முயற்சிகளையும் உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எனவே சிங்கள பௌத்த பேரினவாதம் எம்மீது திணிக்கவுள்ள பேரவலங்களுக்கு இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் எவ்வகை ஆதரவோ, ஒத்துழைப்போ வழங்கக் கூடாது.
நாம் இந்திய மக்கள் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை உயர் நிலைக்கு கொண்டு செல்ல தாங்கள் உரிய வகையில் செயற்பட்டுஇ தடைப்பட்ட நிரந்தர சமாதானத்திற்கான பாதையை மீண்டும் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

சிறிலங்கா பலாலி விமானத்தள விரிவாக்கத்துக்கான உதவிகளையோ, இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பையோ வழங்க வேண்டாம் எனவும், தமிழ் மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

நண்பன் said...

பங்களாதேஷில் கிளர்ச்சி நடந்த பொழுது, இந்தியா பங்காளிகள் சார்பாக யுத்தத்தில் இறங்கியது. அதற்கான அரசியல் காரணங்கள் பல.

மொரார்ஜி தேசாயும் அவரது ஸிண்டிகேட்களையும் தோற்கடிப்பது மிக சிரமம் என இந்திரா காந்தி உணர்ந்தார். மக்களிடம் தன் செல்வாக்கை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்க விரும்பினார்.

அது தான் இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம். மறைமுகமாக ஆனால் அதே சமயம் வெளியே தெரியும் படியாக யுத்த உதவிகள் செய்தார்- முக்தி வாஹினி போராளிகளுக்கு.

ஏராளமான அகதிகள் இந்தியா வந்தனர். அந்த அகதிகளைத் தேவை ஏற்பட்டால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அகதிகள் வருவதை அவர் தடுத்து நிறுத்தவில்லை. ஏனென்றால் அது உலக நாடுகள் மத்தியில் ஒரு கேடயமாக பயன்படுத்தப்பட ஒரு வாய்ப்பாக அமையும்.

பாக்கிஸ்தான் இதை தடுத்து நிறுத்த விரும்பியது.ஆயுதங்கள் வரும் வழியில் ஆயுதக் கடத்துவோரை தாக்கியது. அது இந்திய நிலையாக இருக்க, கிடைத்த வாய்ப்பு - இந்திராகாந்தி தவறவிடவில்லை.

இந்தியாவின் வலிமையான ராணுவம் அவர் விரும்பிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. பங்களாதேஷ் பிறந்தது. இந்திரா பார்லிமெண்டைக் கலைத்தார்.தேர்தல் வைத்தார். பெரு வெற்றி பெற்றார். அந்த யுத்தம் அவருக்குத் தேவையாக இருந்தது.

ஆனால் - இலங்கை அவ்வாறில்லை. இங்கு வெற்றி பெற்றாலும் - மத்தியில் இருக்கும் கட்சிகளால் வெற்றி பேற முடியாது. மேலும் தமிழ் பேசிக் கொண்டே தமிழுக்கு எதிராக செயல்படும் சிந்தனை வளமிக்க இனமொன்று அரசியல் ஆலோசனைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது - டெல்லியில் ஆளும் வர்க்கத்திற்கு. அந்த தவறான ஆலோசனைகளால் தான் இன்று தவறான உதவிகளை வழங்கிக் கொண்டிரூக்கிறது.

இவர்கள் உதவ வேண்டாம். ஆனால் தான் வழங்கப் போகும் உதவி,தன் நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்தும் என்ற அளவிலாவது சிந்த்திக்க இயன்றால் தமிழக மக்கள் மனம் குளிரும்..

Anonymous said...

மிக சிக்கலான விசயம்.

ஈழத்தில் தமிழர் மீது தாக்குதல் நடத்த இந்தியா எந்தவித உதவியும் செய்ய கூடாது என்பதே எனது நிலை.

Anonymous said...

India lost the credibility to impose the Indian pattern of Federal system in SriLanka.Srilankan etenic problem has been Internationalised when the
SriLanka signed the PEACE deal as equal PARTNER with LTTE.Only way to
safegard the division is to accept
COFEDERATION.In coferal system TWO
NATIONS agreed to fuction as one country with the right to SECEDE.