இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அரசபடைகளால் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகள் போல் சிறைகளிலடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோதும் அதன் வலி தமிழகத்தில் உணரப்படாதது தமிழக அரசியலின் சந்தர்ப்பவாதத்தை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது.
மலேசிய அரசுக்கெதிராக அங்குள்ள இந்தியத்தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 38 பேர் கைதுசெய்யப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழகமும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் மலேசியாவை விட அருகிலுள்ள இலங்கையில் இந்தியவம்சாவளித் தமிழரும் தமது இரத்த உறவுகளும் ஆயிரக்கணக்கில் ஆண் பெண் பேதமின்றி வயதுவித்தியாசமின்றி கைது செய்யப்பட்டபோது அமைதிகாத்ததற்கும் வலுவான அரசியல் பின்னணி உண்டு.
தமிழகத்தில் தற்போது இரு கொள்கைகளையுடைய அரசியல் கட்சிகள் உண்டு. ஒருதரப்பு ஈழத்தமிழருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவு தெரிவித்து அரசியல் நடத்துவார்கள். இன்னொரு தரப்பு விடுதலைப் புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரான கருத்துக்களைக்கூறி அரசியல் பிழைப்பு நடத்துவார்கள். இது ஒரு கொள்கையுடைய இரு அணிகள்.
மத உணர்வையும் மதத்தையும் பயன்படுத்தி அரசியல் நடத்துவது இன்னொரு கொள்கை. ஒரு தரப்பு மத உணர்வுகளை புண்படுத்தி மதவாதிகளை தாக்கிப் பேசி மதவாதக் கொள்கைகளை உடைத்தெறிந்து நாஸ்திக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னொரு தரப்பு மதஉணர்வுகளையே மூலதனமாகக் கொண்டு மதவாத அரசியலை முன்னெடுக்கும் ஆஸ்திக அரசியலை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறான நிலையில் இன்று தமிழகத்தின் அரசியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் மதவாதமுமே செல்வாக்குச் செலுத்திக் கொண்டிக்கின்றது. இதனால், இங்கு மனிதாபிமானம் தார்மீக கடமை, இரத்த பாசம் போன்றவையெல்லாம் கடைநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.
இதன் வெளிப்பாடே மலேசியாவில் இந்தியத் தமிழர்கள் கைது செய்யப்பட்ட போது கொதித்தெழுந்து உரிமைக்குரல் எழுப்பி கண்ணீர் விட்ட தமிழக் முதலமைச்சரும் தமிழக அரசியல் தலைவர்களும் இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளி மக்களான தோட்டத் தொழிலாளர்கள் 400 க்கும் மேற்பட்டோர் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டு சிறைகளிலடைக்கப்பட்ட போது கண்டு கொள்ளாமலிருந்தனர்.
மலேசியாவில் 38 இந்தியவம்சாவளித் தமிழர் கைதுசெய்யப்பட்ட போது கண்டனக்குரல் எழுப்பிய தமிழகம் இலங்கையில் 400 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர் கைதுசெய்யப்பட்ட போது ஏன் கண்டனம் செய்யவில்லை. மலேசியாவிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர் வேறு இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர் வேறா ?
மலேசியாவிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழருக்கு உரிமைகளை வழங்க வேண்டுமென மத்திய அரசு ஊடாக வலியுறுத்தும் தமிழக அரசு இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழருக்கு உரிமைகளை கொடுக்க வேண்டுமென எப்போதாவது குரல்கொடுத்ததுண்டா? குரல் கொடுக்க நினைத்தாலும் அவர்களால் முடியாது. அதுதான் தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலைவரம்
வழக்கமாக வடக்கு-கிழக்கு தமிழர்களை மட்டுமே இலக்கு வைத்து செயற்பட்டு வந்த இலங்கையரசும் அதன் படைகளும் இம்முறை இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர்கள் மீதும் கைவைத்துள்ளனர். இது தொடர்பாகத் தமிழக இந்திய அரசுகள் மௌனம் காத்து வருவது எதிர்காலத்தில இந்தியவம்சாவளித் தமிழர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தப் போகின்றது.
இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் இலங்கை அரசில் அங்கம் வகித்தாலும் அவர்கள் அரசுக்கு கூசா தூக்கி சேவகம் செய்பவர்களாக இருப்பதால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் அநாதைகள் போலவே இருக்கிறார்கள். அராதைகள் போன்றே இலங்கையரசினாலும் நடத்தப்படுகிறார்கள்.
இவ்வாறான ஒரு நிலையில் இந்திய வம்சாவளித் தமிழ்மக்கள் இலங்கைப் படைகளால் வீதிகளிலும் வீடுகளிலும் தொழில் புரியும் இடங்களிலும் வைத்துக் கைது செய்யப்பட்டு ஆடு மாடுகளைப்போல் சிறைகளில் அடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோது அதனை தமிழக அரசும் இந்திய அரசும் வேடிக்கை பார்த்து தமது மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்துள்ளது.
உலகத்தமிழரின் காவலன் என தன்னைக் கூறிக்கொள்ளும் தமிழகத்தின் முதலமைச்சர் கருணாநிதி இலங்கைத் தலைநகரில் வடக்கு-கிழக்கு தமிழர்களும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கைப்படைகளால் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட போது தனது காவலன் பணியிலிருந்து கடமை தவறிவிட்டார். இது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது.
எஸ்.ஆர்.பி.யின் அபாண்ட குற்றச்சாட்டு
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சர் இளங்கோவன் புயலைக்கிளப்பிக் கொண்டிருக்க தமிழ்ச்செல்வனை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இலங்கையரசுக்குத் காட்டிக்கொடுத்து படுகொலை செய்தாரென தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பி.என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அபாண்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக காங்கிரஸின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர் எஸ்.ஆர்.பி.அண்மைக்காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் திடீரென தமிழ்ச்செல்வன் கொலைக்கு பிரபாகரன் தான் காரணமென்ற குற்றச்சாட்டுடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். இது காங்கிரஸ் கட்சியினரையே கொஞ்சம் திகைக்க வைத்துவிட்டது.
அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த எஸ்.ஆர்.பி. மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வதற்காகவே தமிழ்ச்செல்வன் விவகாரத்துடன் ஊடகவியலாளர்கள் முன் தோன்றியதாக காங்கிரஸிடையே முணுமுணுப்புகள் கேட்கின்றன. இக் கருத்தை நிராகரிப்பதற்கில்லை. ஏனெனில், ஊடகங்களில் பிரதான செய்தியாக வேண்டுமென்றால் ஒன்று இராமரைப் பற்றிக் கூறவேண்டும். இல்லையென்றால் விடுதலைப் புலிகளைப் பற்றிக்கூறவேண்டும்.
ஆனால், இக்குற்றச்சாட்டை மறுக்கும் எஸ்.ஆர்.பி. அரசியலுக்காக பரபரப்பாக செய்ய வேண்டிய தேவை எதுவும் தனக்கில்லை எனக்கூறியுள்ளார். தமிழ்ச்செல்வனை பிரபாகரன் படுகொலை செய்ததாகக் கூறும் அவரின் குற்றச்சாட்டுக்கு அவர் கூறும் ஆதாரம் இலங்கையில் தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள ஆனந்தசங்கரி கூறிய கருத்து மட்டுமே.
இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் . அவர்கள் இரண்டாம்தர பிரஜைகளாக நடத்தப்படக் கூடாது என்பதை தாம் வலியுறுத்துவதாகக்கூறியுள்ள காங்கிரஸின் மத்திய அமைச்சர் இளங்கோவன் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும். அவர்களை மன்னிக்கவோ, மறக்கவோ காங்கிரஸ் தயாரில்லை எனக் கூறியுள்ளதுடன் புலிகளை ஆதரிப்போர் தமது முதல் எதிரிகளென்றும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் அவர்களை தமது காவலர்களாக போற்றுபவர்கள் இலங்கைத் தமிழர்கள். அவ்வாறெனில் இளங்கோவனின் கூற்றுப்படி இலங்கைத் தமிழர்கள் தான் காங்கிரஸின் முதல் எதிரிகள். அதனால்தான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கைத் தமிழரை அழிப்பதற்காக இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றதா?
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டுமெனக் கூறும் அமைச்சர் இளங்கோவன் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமெனவும் கூறுகின்றார்.
இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணமுடியும்?
இளங்கோவனின் கருத்துப்படி விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது மணமகன் இல்லாமல் நடக்கும் திருமணம் போன்றது. இளங்கோவன் தொண்டர்களை உசுப்பேற்றும் கருத்துகளை கூறுகிறாரே தவிர யதார்த்த பூர்வமானவற்றை ஏற்கமறுக்கிறார். இதுதான் இளங்கோவனின் இலங்கைத் தமிழர் தொடர்பான நிலைப்பாடு.
அமைச்சர் இளங்கோவனின் கருத்தையே இந்திய பார்ப்பன ஊடகமும் தமிழர் விரோதப் போக்கைக் கொண்டதுமான த ஹிந்து தனது ஆசிரிய தலையங்கத்தில் வலியுறுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதன் மூலமோ அல்லது அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதன் மூலமாகவே தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமென கருத்து வெளியிட்டிருந்தது.
இலங்கைத் தமிழர்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும் தமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருவாரென நம்பியிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டுமென்பதிலேயே இந்தியாவின் அதிகார சக்திகள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. பிரபாகரனை அழிப்பதன் மூலம் ஒரு இனமே அழிந்து விடுமென்பதை நன்குணர்ந்தும் அதனை மூடிமறைத்து பிரபாகரனை அழிப்பதன் மூலமே தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்குமென்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.
இதனாலேயே பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் தமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக இந்தியா செய்த வரலாற்றுத் தவறுகளை சுட்டிக்காட்டியதுடன் மீண்டும் அவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாமெனவும் தமது போராட்டத்துக்குத் தார்மீக ஆதரவை தருமாறும் கோரியுள்ளார்.
இக்கோரிக்கை பிணத்திடம் கேட்டதற்கு ஒப்பானதாகும்.
ஏனெனில், தமிழர்களை இலங்கையரசு சிறுகச்சிறுக அழித்தாலும் ஒட்டுமொத்தமாக அழித்தாலும் இந்திய அரசோ, தமிழக அரசோ கண்டுகொள்ளாது. அதேவேளை, தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கத் தேவையான உதவிகளை வழங்கத்தயார் என்பதே தமிழக, மத்திய அரசுகள் இலங்கை தொடர்பில் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வரும் செயற்பாடுகளின் உண்மை வடிவமாகும்.
-கலைஞன்-/thinakkural
1 comment:
மிக நல்ல பதிவு. ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டபோது தமிழகம் பொங்கி எழவில்லை. நியாயமான கோபம். இருந்தாலும் ஒரு ஈழத்தமிழனாக என் நெஞ்சில் எழும் ஒரு கேள்வியையும் அடக்க முடியவில்லை.
கொழும்பில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க மலையக எம்.பிக்கள் திரு ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன், மனோ கணேசன் ஆகியோர் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் செய்தார்கள். எங்கள் வட கிழக்கு தமிழ் 21 எம்.பிக்கள் என்ன செய்தார்கள்?
தமிழகத்தைக் குறைசொல்வதை மட்டும் ஒரு தொழிலாக கொள்வதை முதலில் நிறுத்திக் கொண்டு நாம் என்ன செய்யத் தவறுகிறோம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
எங்களுக்காக தமிழகம் என்னல்லாம் செய்திருக்கிறது என்பதையும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
ஒரு ஈழத்தமிழன்
Post a Comment