திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமப்புற முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரை மறைவுச் சதி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியா பிரதேச சபைப் பிரிவிலுள்ள பல இடங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு பொலிஸார் அச்சுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்கள் வன இலாகாவுக்குட்பட்ட காணிகளில் அத்துமீறிக்குடியேறி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கம் 1971 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வந்த முஸ்லிம்களை தமது பிறந்த இடங்களிலிருந்துவெளியேற்ற திட்டமிட்டுச் செயற்பட்டுவருவதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்திருக்கின்றார்.
இது பற்றி அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்ட மடு, செம்பி மோட்டை,வழைமடு, பனிச்சங்குளம், கள்ளரப்பு, குரங்குப் பாஞ்சான், போன்ற கிராமங்களில் முஸ்லிம்களுக்குரிய குடியிருப்புக்காணிகள், விவசாய காணிகளிலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் உட்பட அதிகாரிகள் அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 1971 ஆம் ஆண்டிலும், 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் வழங்கப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்களுக்கமையவே இக்காணிகளில் முஸ்லிம் மக்கள் குடியிருப்புகளில் குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.
1990 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் காரணமாக இப்பிரதேச மக்கள் தமது விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் கைவிட்டு வெளியேறி வேறுபகுதிகளில் தஞ்சமடைந்தனர். சுமார் 17,18 வருடங்களுக்குப் பின்னர் இந்த முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பி விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அரச காணிகளில் அத்துமீறி குடியேறியிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தி இவர்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்காணிகள் வனபரிபாலன திணைக்களத்துக்குரியதெனக் கூறி அதிகாரிகளும், வான் எல பொலிஸாரும் அக்குடியிருப்புக்களில் மக்களை அச்சுறுத்தி உடன் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.
கிழக்கு மாகாணத்தை அரசு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், அங்கு மக்கள் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமெனக் கூறும் அரசாங்கம் மறுபுறத்தில் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கின்றது.
அரசு இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் பெற்றுக்கொடுக்கத் தவறினால் இப்பகுதி முஸ்லிம்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாமெனவும் அந்த மக்களை இன்னுமொரு தடவை அகதிகளாக்க வேண்டாமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
thinakkural
No comments:
Post a Comment