-கலைஞன்- /thinakkural
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தப்படும் சிறு குற்றச் செயல்களில் கூட விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி அவர்கள் தலையில் பழியைப் போட்டு தமது சாதனைப்பட்டியல்களை நீட்டிக் கொள்ளும் விதத்தில் தமிழக பொலிஸ் துறையின் செயற்பாடுகள் அமைந்துள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
கடந்த சில தினங்களுக்குட்பட்ட தமிழக நாளிதழ்களை எடுத்தப் பார்த்தால் அவற்றில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் புலிகளின் எண்ணிக்கையும் இலங்கையில் தமது தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறும் புலிகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே காணப்படுகின்றன.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் 20 க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தாலும் கூட அவர்களை விடுதலைப் புலிகளாக காட்டவே பொலிஸ்துறையும் சில ஊடகங்களும் தீவிரமாக முயற்சிக்கின்றன.
பீடி பண்டல் கடத்துவோர், 1015 லீற்றர் டீசல் கடத்துவோர், ஒன்றிரண்டு பற்றரிகள் கடத்துவோர், கடன் அட்டை மோசடிக்காரர்கள், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றக்காரர்கள் இவர்களை கைது செய்துவிட்டுத்தான் பாரிய கடத்தல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிக்கை விடுக்கின்றனர்.
ஊடகங்களும் உடனடியாக அச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதுடன் கிழடு தட்டியவர்களினதும் விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளுமற்றவர்களினதும் புகைப்படங்களை பிரசுரித்து இவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களெனக் கொட்டை எழுத்துகளில் போட்டு தம்மை திருப்திப்படுத்திக் கொள்கின்றன.
அண்மையில் மங்களூரில் வைத்து இரு இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி கடவுச்சீட்டுகள், ஒன்றரை லட்சம் ரூபா பணம், சில நகைகள் மீட்கப்பட்டன. எவ்வித விசாரணைகளும் இடம்பெறாத நிலையில் உடனடியாகவே இவர்களை விடுதலைப் புலிகளென பொலிஸ் அறிவித்தது. அதனை அப்படியே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன.
அத்துடன், இவர்கள் போலி கடனட்டைகளை பயன்படுத்தி நகைக் கடைகளில் நகைகளை கொள்வனவு செய்வதாகவும் பின்னர் அந்த நகைகளை வேறு நகைக் கடைகளில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பிவருவதாகவும் ஊடகங்கள் தமது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு கதையளந்தன.
மங்களூரில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பான செய்திகள் இலங்கையிலுள்ள அரசு ஊடகங்களிலும் இராணுவ இணையத் தளங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தன. இது மட்டுமல்லாது தமிழக ஊடகங்கள் புலிகள் தொடர்பாக வெளியிடும் தவறான செய்திகளையெல்லாம் இலங்கை அரசு, இராணுவ ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வருகின்றன.
மங்களூரில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடமும் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணைகளின் போது இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதமாக தொடர்புமில்லை என்பது தெரியவந்தது. இதனை மங்களூர் பொலிஸ் ஆணையாளரே தம்மால் கைது செய்யப்பட்ட இரு இலங்கையருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால், பீடி பண்டல் கடத்தல்காரர்களைக் கூட விடுதலைப் புலிகளாக்கும் ஊடகங்கள் சில, நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான மறுப்புகளை வெளியிடும்போது அதனை திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பு செய்கின்றன. புலிகள் மீது பழியைப்போடும் வேலையை மட்டுமே இந்த ஊடகங்கள் செய்கின்றன.
தமிழக ஊடகங்களின் இவ்வாறான திட்டமிட்ட விஷமப் பிரசாரங்களால் இலங்கைத் தமிழர்களை ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய சூழல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பாதுகாப்புக்கும் சட்டம் ஒழுங்குக்கும் இலங்கைத் தமிழர்கள் அச்சுறுத்தலானவர்கள் என்ற எண்ணமொன்றை ஏற்படுத்துவதே இவ்வாறான ஊடகங்களின் தலையாய கடமையாகவுள்ளது.
முன்னர் இலங்கைத் தமிழர்கள் தமிழகம் சென்றால் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கமுடியும். இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகளை வாடகைகளுக்கு கொடுப்பதற்கு போட்டிநிலை ஏற்படும். எங்கும் சென்றுவரமுடியும். எவ்வேளையிலும் நடமாட முடியும். மிக இலகுவாக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், இன்று ஊடகங்களின் விஷமத் தனமான பிரசாரங்களினால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. தற்போது இலங்கைத் தமிழர்கள் வீடொன்றை வாடகைக்கெடுப்பது கூட முயற்கொம்பாகி விட்டது. ஓரிடத்தில் சிறிது நேரம் நின்றாலே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் கேவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள லொட்ஜ்களில் கூட இலங்கைத் தமிழர் தங்குவது ஆபத்தாக மாறி வருகிறது. புலிச் சந்தேக நபர்களை தேடுகிறோமென்ற போர்வையில் தமது இலஞ்ச லாவண்யங்களுக்காக லொட்ஜ்களில் தேடுதல்களை நடத்தும் பொலிஸார் தமது தலைமை அதிகாரிக்கு கணக்கு காட்டுவதற்காக அங்கு தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களை புலிச் சந்தேக நபரென்ற பேரில் கைது செய்கின்றனர்.
இதைவிட தற்போது விசா மூலம் இந்தியா வந்து விசாக்காலம் முடிந்த பின்னரும் இங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாகத் திரட்டுமாறு பொலிஸ் ஆணையகம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இங்கு விசாக்காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்போரின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் விசாவில் வந்து அது முடிவடைந்த பின்னரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் இலங்கை யுத்தத்தில் தமது வாழ்விடங்களை இழந்துள்ளனர். இலங்கைப் படைகளால் தேடப்படுவோர், உயிர் அச்சுறுத்தல்களுக்குள்ளானோர் மற்றும் வசதி படைத்தவர்களே இவ்வாறு விசாவில் வந்து அது முடிந்த பின்னரும் இங்கே தங்கியுள்ளனர்.
தற்போது இவர்களின் விபரங்களை பொலிஸார் திரட்டி வருவதால் தமது எதிர்காலம் குறித்த அச்சத்தில் பலர் காணப்படுகின்றனர். கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்களோ என்ற ரீதியில் பல இலங்கைத் தமிழர்கள் வீதியில் இறங்கக்கூட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இதேவேளை, விடுதலைப் புலிகள் தொடர்பாக தமிழகத்தில் பரவிவரும் வதந்திகள் பொலிஸாருக்கு தலையிடியைக் கொடுப்பதுடன் அவர்களை இரவு பகலாக அலையவும் வைக்கிறது.
கடந்த புதன்கிழமை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகம் வந்துவிட்டதாக பரவிய வதந்தி பொலிஸாரை வெறுப்படைய வைத்துவிட்டது.
பிரபாகரனின் மனைவி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடற்கரையொன்றில் அதிவேகபடகு மூலம் அகதிகளுடன் அகதியாக வந்திறங்கியுள்ளதாக பரவிய செய்தியினால் உஷாரடைந்த பொலிஸார் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சுற்றி வளைத்து தேடுதல்களை நடாத்தியதுடன் அகதிமுகாம்களையும் விட்டு வைக்கவில்லை.
வீடு வீடாக தேடுதல்களை நடத்தியதுடன் வீதிகளில் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தி அனைத்து வாகனங்களையும் துருவித்துருவி சோதனையிட்டனர். அன்று காலை தொடங்கிய தேடுதல்கள் இரவு வரை நீடித்தது. இதில் பல பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை முதல் இரவுவரை தேடுதல்களை நடத்தி சோர்வடைந்த பொலிஸார் பின்னர் நடாத்திய விசாரணைகளிலேயே அச்செய்தி வதந்தி என்பது தெரியவந்தது. இதனால் பல பொலிஸ் உயரதிகாரிகள் கடுப்படைந்து காணப்பட்டனர். இவ்வாறான செய்திகளை இனிமேல் நம்ப வேண்டாமெனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை இராணுவத்துடனான போரில் காயமடையும் புலிகள் சிகிச்சைக்கு தமிழகம் வருவார்கள். காயமடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகத்திற்கு சிகிச்சைக்கு வரவுள்ளார். பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்துக்கு வந்துவிட்டார். தமிழக டாக்டர்களை புலிகள் வன்னிக்கு கடத்திச் செல்லவுள்ளனர். சகல டாக்டர்களும வன்னி சென்றுவந்துள்ளனர். புலிகள் தமிழகத்துக்கு தப்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
இவையெல்லாம் தமிழகத்தையும் பொலிஸாரையும் அலைக்கழிக்க வைக்கும் ஊகங்களும் வதந்திகளும் கட்டுக்கதைகளுமாகும். ஆனால், இவற்றின் உண்மைக் தன்மை என்னவென்பது குறித்து கொஞ்சம் கூட சிந்திக்காது தேடுதல்வேட்டைகளையும் சோதனைகளையும் நடத்தும் தமிழக பொலிஸாரின் நிலைதான் பரிதாபமாகவுள்ளது.
புலனாய்வுத்துறையிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் மிகவும் பெயர் பெற்றவர்கள் தமிழக பொலிஸார். இந்தியாவிலேயே தமிழக பொலிஸாருக்கும் அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கும் தனிமரியாதையுண்டு. ஆனால் இவர்களின் புலிகள் தொடர்பான அண்மைக்கால செயற்பாடுகள் இதனைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.
1 comment:
nice Blog!
Post a Comment