காரில் ஜெயலலிதா சிலை: கவனம் ஈர்க்கும் அதிமுக தொண்டர்
சென்னை, மெரீனா கடற்கரை சாலை. கொதிக்கும் வெயிலில் கூலாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. ரெஜிஸ்ட்ரேஷனுக்காகக் காத்திருந்த காரின் அமைப்புகள் அனைத்திலும் 'ஜெ.' மயம்.
வெள்ளை நிற வோல்ஸ்வேகனின் அனைத்துப்புறங்களிலும் முதல்வரின் படம். பின்னால், 'நடமாடும் உலக அதிசயமே' என்ற வார்த்தைகளோடு 234 என்ற குறியீடு. எல்லாவற்றுக்கும் மேலாக (நிஜமாகவே மேலேதான்) ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை. அந்தக் காருக்குச் சொந்தக்காரரான அதிமுக தொண்டரின் பெயரும் வித்தியாசமாகத்தான் இருந்தது. பிஸ்கட் பாபு.
போனில் அழைத்தால், 'நாளை உலகை ஆள வேண்டும்; உழைக்கும் கரங்களே!' என்ற எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கிறது.
யார் அவர்? அவரே சொல்கிறார்.
''என்னோட பேர் பிஸ்கட் பாபுங்க. அப்பா பேக்கரி பிஸினஸ் பண்ணிட்டு இருந்தார். அதனால என்னை பிஸ்கட் பாபுன்னு கூப்ட ஆரம்பிச்சாங்க. பொறவு அதுவே நிலைச்சுடுச்சு. சென்னைல கார்கள வாங்கி, வேலூர்ல விக்கறதுதான் என்னோட பிஸினஸ். அப்பா, தீவிர தி.மு.க.காரர்; 2001-ல இறந்துட்டார்.
ஆனா எங்க குடும்பத்துல எல்லோருமே அதிமுகதான். முதல்வர் அம்மா மேல அளவில்லாத பாசம் இருக்கறதால, அவங்களுக்காக எதாவது செஞ்சுகிட்டே இருப்பேன். முதல் முறையா, 'அம்மா' பிறந்த நாளுக்கு 58 அடி நீள கேக் வெட்டினேன், நாலு வருஷம் முன்னாடி, 'அம்மா'வோட 63 வது பிறந்தநாள் அன்னிக்கு, நகர செயலாளர், வட்டச் செயலாளர் முன்னிலைல 630 அடில கேக் வெட்டினோம். அம்மாவோட போன பிறந்தநாளுக்கு சாய்பாபா சிலையை அவங்க வீட்டுக்கு அனுப்பினேன்.
'அம்மா'வோட கொள்கைகள், கோட்பாடுகள் மேல பெரியளவுல எனக்கு நம்பிக்கை உண்டு. அவங்க ஒரு 'நடமாடும் உலக அதிசயம்'. அவங்க புகழை பரப்பத்தான் வண்டி வாங்கி இருக்கேன்''.
சரி, காரின் டாப்புல சிலை வைக்கணும்னு யோசனை எப்படி வந்தது?
" 'அம்மா' மாதிரி யாரும் பிறக்கப்போவது இல்லை. இந்தியாவுக்கு இன்னொரு 'அம்மா' வரப்போறதும் இல்லை. எங்க எல்லோருக்கும் அம்மாவைத் தெரியும்னாலும், வருங்கால சந்ததிக்கும் அம்மாவைப் பத்தி நல்லாத் தெரியணும். என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அப்போதான் சிலை வைக்கற ஐடியா வந்துது.
'அம்மா' சிலையை வைக்கறதுக்காகவே, 8.5 லட்ச ரூபாய்க்கு புது வோல்ஸ்வேகன் காரை வாங்கினேன். அது மேல சுவாமி மலைல பண்ணிய, 18 கிலோ 'அம்மா வெண்கல சிலை'யை வச்சுருக்கேன். இதை தயார் பண்ண 80 ஆயிரம் ரூபாய் ஆச்சு''.
சிலை காரை வச்சு என்ன பண்ண போறீங்க?
''தேர்தல் வேலைக்காக பயன்படுத்தப் போறேன். அம்மா நலத்திட்ட உதவிகளை, தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் பண்ணனும்''.
எதுக்காக இதெல்லாம்?
''காரணம் எதுவுமில்லை. எல்லாமே அம்மாவுக்காகத் தான். வேலூர்லயும் அணைக்கட்டுலயும் எம்.எல்.ஏ, சீட் கேட்டிருக்கேன். மூணாவது தடவையா பணம் கட்டுறேன். இந்த தடவை கிடைக்கும்ங்கற நம்பிக்கை இருக்கு. அதிமுகவுல தொண்டனா இருக்கறதே மகிழ்ச்சி. 234 தொகுதிகளிலும் அம்மா ஜெயிக்கணும். அவ்ளோதான்''.
உங்க குடும்பம்?
''ஒரு அக்கா, ஒரு அண்ணன் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆய்டுச்சு. தங்கச்சிக்கு பார்த்துகிட்டு இருக்கோம். அம்மா வீட்ல இருக்காங்க''.
கட்சிக்காக உழைக்கிறதை பாத்துட்டு உங்க சொந்த அம்மா என்ன சொல்றாங்க?
யோசிக்கிறார்... ''நான் கட்சிப் பணி செய்யறதுல என்னோட அம்மாவுக்கு மகிழ்ச்சிதான்''.
நன்றி --தி இந்து--பத்திரிகை
No comments:
Post a Comment