Thursday, March 01, 2007

தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் .......

கடந்த காலங்களில் பல தவற்றை செய்த பல தலவர்களின் வரலாறுகள்
பிறபட்ட காலங்களில் அவர்களின் ஆதரவாளர்களினால் நல்லவிதமாக
திருத்தப்பட்டு அவர்களினைப் பற்றிய ஒரு புனித பிம்மமே வளர்க்கப்பட்டு
ஈற்றில் அவர்களின் ஒரு பக்கமே மக்களின் முன் காட்டப்படுகிறது.இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய ஒரு தகவல் இது.


தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு பழி சுமத்தும் -ஈழவேந்தன் எம்.பி. கூறுகிறார்

கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றது. சிறந்த ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது குறைகாண்பது மனிதப்பண்பல்ல. ஆனால் நாட்டின் மிகப்பெரும் ஒரு தலைவர் செய்கின்ற தவறை மன்னிக்கலாம். மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு எம்மீது பழிசுமத்தும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மா.கா.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு தின விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை டியூ.குணசேகர தலைமையில் நடைபெற்ற போது இணைப்பாட்சி தத்துவத்தில் ஈடு இணையற்ற புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து பேராசிரியர் சிறப்புரையாற்றினார்.

கூட்ட முடிவில் சுவிட்சர்லாந்து பேராசிரியருடன் கலந்துரையாடிய ஈழவேந்தன் கொல்வின் ஆர்.டி.சில்வா தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது;

கொல்வின் ஆர்.டி.சில்வா ஆழ்ந்து படித்த மேதை - வரலாற்றாசிரியர். என்.எம்.பெரேராவுடன் இணைந்து இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்பியவர். மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமைக்காக குரலெழுப்பியவர்.
ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பியவர். தொலைநோக்குடன் ஒரு மொழி எனில் இருநாடு, இருமொழி எனில் ஒரு நாடு என்ற சிந்தனையுடன் 1954 இல் அவர் எழுப்பிய குரலை நாம் மறந்துவிட முடியாது. மாறாக நன்றி உணர்வுடன் நினைவு கொள்கின்றோம்.

அயர்லாந்து மக்கள் மீது ஆங்கிலத்தை திணித்த போது அதனை எதிர்த்து அந்த மக்கள் வாந்தியெடுத்தார்களோ அவ்வாறே சிங்களத்தை தமிழர் தொண்டைக்குள் திணித்தால் தமிழர் வாந்தியெடுப்பதும் உறுதியென்று அவர் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா பெருந்தகை சோல்பரியின் அரசியல் யாப்பில் மாற்ற முடியாத விதி என்று கூறப்பட்ட 29 ஆவது விதியை நீக்கி தமிழர்களுக்கு துளியளவும் பாதுகாப்பாற்ற நிலைமையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் 1972 இல் உருவாக்கிய வரும் இவரேயாவார்.

அத்துடன் தனிச் சிங்களச் சட்டத்துடன் பௌத்த மதத்தை ஆளும் மதமாகவும் மாற்றியமைத்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவேயாவார். நிலைமை மேலும் மோசமடைவதை உணர்ந்த செனட்டர் நடேசன், தமிழ் மக்களுக்கு உரிமை வழங்காவிடினும் உள்ளதையும் கெடுக்காதே என்று கெஞ்சிக் கேட்ட போது சாத்தியமானதை செய்வதே அரசியல் என்று கூறி இருந்த சலுகைகள் சிலதை இல்லாமல் செய்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவே.
எனவே தான் கொல்வினின் சட்டம் தமிழர்களை கொல்லும் சட்டம் என்று அப்போது எதிர்ப்புக்குரல்கள் எழுப்பியது என்றும் ஈழவேந்தன் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை சுவிட்சர்லாந்து பேராசிரியருக்கு ஈழவேந்தன் சுட்டிக்காட்டிய போது; அரசியல் வாதிகள் பலர் சூழ்நிலையின் கைதிகளாக மாறி தடம்புரள்வது இயல்பு. டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் இந்த தவறுக்கு ஆளானார் எனத் தெரிவித்தார்.

அடிக்கடி மறதிக்கு ஆளாகின்ற தமிழர்கள் மறதி தவறாதிருக்க வேண்டுமென்பதற்காகவே இச்செய்திகளை தெரிவிக்கின்றேன் என்றும் ஈழவேந்தன் அவரிடம் மீண்டும் சுட்டிக் காட்டினார்.

தினக்குரல்..


Thursday, February 22, 2007

5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை.

5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை-14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கைக்கு இரு தரப்பும் தயார் !!!

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நாளையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அழிவுகளையும் துயரங்களையும் தந்துகொண்டிருந்த கொடிய யுத்தத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இந்த உடன்படிக்கை அமையுமென்ற நம்பிக்கை அது கைச்சாத்திடப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாகவே அற்றுப்போய்விட்டது.

இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையிலிருப்பதாகவும் அதனைப் பேணிப் பாதுகாப்பதில் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இருதரப்பினரும் கூறிக்கொள்கின்ற போதிலும், அதற்கு முரணான நடவடிக்கைகள் எந்தவித தயக்கமுமின்றி முன்னெடுக்கப்படுவதைத்தான் தாராளமாகக் காணக்கூடியதாகவிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவேளையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தவர் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவர் இந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். அந்த எதிர்ப்புக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணமாக இருந்தது. அந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் பதவி கவிழ்த்தார். அதன் பின்னர் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைத்துக் கொண்டபோது புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாகவே திருமதி குமாரதுங்க தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் இரட்டை அணுகுமுறையொன்றைத்தான் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதை இது புலப்படுத்துகிறது.

சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள் பின்னர் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை மீது பற்றுறுதி கொண்டிருப்பதாக காட்டிக்கொண்டார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கின்றார். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்தார். "இந்த உடன்படிக்கையானது வரலாற்றில் ஒரு தவறு" என்ற நிலைப்பாட்டைத்தான் அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால், "புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதன் மூலமாக இந்த வரலாற்றுத் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்" என ஜே.வி.பி. உட்பட இனவாத அமைப்புகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு அடிபணிய அவர் தயாராயில்லை. புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவது சர்வதேச ரீதியாக பாதகமான விளைவுகளை அரசுக்கு ஏற்படுத்துவதாக அமையும் என ஜனாதிபதி ராஜபக்ஷ கருதுகின்றார்போலும்.

ஒரு போராளி அமைப்பு ஐந்து வருட காலமாக உடன்படிக்கை ஒன்றை பாதுகாக்கும் நிலையில், அரசாங்கம் அதற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதென்பது சமாதானத்தில் அதற்கிருப்பதாக சர்வதேச சமூகம் இன்னமும் நம்பும் பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்குவதாக அமையலாம். அத்துடன், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதென்பது சமாதானத்துக்கான கதவை மூடிவிடுவதாகக் கருதப்படும் என்பதும் இதற்கான மற்றொரு காரணம். அதாவது, சமாதானத்தில் நம்பிக்கை வைத்து அதற்காக செயற்படுவதாகக் காட்டிக்கொள்ள வேண்டுமாயின், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிந்துவிட முடியாது! ஆக, அழுத்தங்களுக்கு அடிபணிந்து புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறியும் முடிவை அரசாங்கம் எடுக்கப்போவதில்லை எனக் கூறலாம்.

மறுபுறத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கையை செயலற்றதாக்குவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு கணிசமானதாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்றம், பொதுக் கூட்டங்களிலிருந்து படையினரது வெளியேற்றம், துணைப் படைகளின் ஆயுதக்களைவு மற்றும் அவை செயலிழக்கச் செய்யப்படுதல் என்பன எழுத்தில் மட்டுமே உள்ளன. இவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான அக்கறையும் காட்டப்படவில்லை.
இதனைவிட, கட்டுப்பாட்டு எல்லைகள் பேணப்பட வேண்டும் என்பது புரிந்துணர்வு உடன்படிக்கையில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சம்பூர், வாகரை ஆகிய பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது காணப்பட்ட இராணுவச் சமநிலை இதன்மூலம் மாற்றமடைந்திருக்கிறது.

விமானத் தாக்குதல்கள் போர் நிறுத்த விதிகளுக்கு முரணானதாக இருக்கின்றபோதிலும், அவை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கான ஒரே தரைவழிப் பாதையான ஏ-9 பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவிடப்பட வேண்டும் என புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும், கடந்த ஆறு மாதகாலமாக அது மூடப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அம்சம் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள், தடுத்துவைத்தல் என்பன மேற்கொள்ள முடியாது என்பதாகும். ஆனால், இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், எழுந்தமான கைதுகளும், விசாரணையற்ற தடுத்து வைத்தல்களும் தாராளமாக இடம்பெறுகின்றன.

அதாவது, புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலுள்ள அனைத்து அம்சங்களுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இரு தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கண்காணிப்புக் குழுவும் செயலிழந்து போயிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அதிகளவில் காணப்பட்ட சர்வதேச சமூகத்தின் அக்கறைதான் அதில் பெருமளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. நிரந்தரமான ஒரு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்துப் போய்விட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கையின் எந்தவொரு அம்சமுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலைதான் இன்றுள்ளது.

இதன் தோல்விக்கான பொறுப்பை சர்வதேச சமூகம் இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாது.

Saturday, February 10, 2007

"ஒரு பேப்பர்"காரர்களின் "ஒரு ரேடியோ"

ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர் என்ற மகுட வாசகத்துடன் லண்டனில் இருந்து வெளிவந்து இப்போது கனடா.பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து
வெளிவரும் ஒரு பேப்பர் பத்திரிகைகாரர்களால் ஒரு புதிய வானொலி
லண்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு பேப்பர் என்ற அவர்களது
பத்திரிகை பெயரினைப் போலவே வானொலிக்கும் ஒரு ரேடியோ என்று
பெயரிட்டுள்ளனர். பேச்சுவழக்கிலே பத்திரிகையினை வெளியிட்டு ஆரம்பத்தில் எதிர்ப்பினை சந்தித்தாலும் பின்னர் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொண்டதைப் போல வானொலியிலும் முற்று முழுதாக பேச்சு தமிழினை கொண்டுவருவார்கள் என்பதனை நம்பலாம்.அவர்களின் பத்திரிகையினைப் போலவே வானொலியும் தரமானதை கொண்டுவரும்
எண்டு நம்புகிறேன்.

சிலர் ஒரு பேப்பரினை வீட்டுக்கு கொண்டுபோவது வடை ,ரோல்ஸ் என்பவற்றில் இருக்கும் எண்ணையினை ஒற்றுவதற்காக ,ஏனெனில் ஒரு
பேப்பர் பத்திரிகை தாள்கள் நல்லா எண்ணையினை ஒற்றுதாம் என்று
யதார்த்தத்தினையும் சமூகத்தினையும் கிண்டலடிக்கும் ஒரு பேப்பர்காரர்களின் "ஒரு ரேடியோ" விளம்பரம் இப்படி சொல்லுகிறது.
பேச ,கதைக்க,குரைக்க ,கனைக்க ஒரு ரேடியோ.

வித்தியாசமாக செய்பவர்கள்,யோசிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.அந்தவகையில் வித்தியாசமாக செய்வோம் என்று ப்ல வானொலிகள் இருக்கும் களத்தில் இறங்கி இருக்கும் ஒரு ரேடியோகாரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ரேடியோ கேட்க:-http://www.oruradio.com/

கொசுறு:-

எனது பக்கத்து வீட்டுக்காரர் சில நாட்களாக காரில் இருந்து இறங்கும்போது நிறைய தமிழ் பத்திரிகைகளை கொண்டு போறதை
பாத்தன். நேற்று அவற்றை வீட்டை போகவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. பாத்தன் அவரின் லோண்றி ரூம் முழுக்க கனடாவில் வெளிவரும் ஒரு
பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை. 120 பக்கம் கொண்ட அந்தபத்திரிகையில்
7,8 பக்கம் தான் ஏதாவது விசியம் வரும் அதுவும் இணையத்தில் இருந்து
உருவியது.மிகுதி முழுவது விளம்பரம்,விளம்பரம். 10 பக்கத்தில் முழுக்க முழுக்க முழுப்பக்க மரணஅறிவித்தல்கள். இந்த பத்திரிகைக்கு எனது நண்பர்கள் வட்டாரத்தில் செத்தவீட்டு பத்திரிகை என்ற பட்ட பெயர்.

ஏன் இதைநிறைய அடுக்கி வைத்திருக்கிறார் என்று சந்தேகம் ,அவரிடமே
கேட்டேன்.ஏன் அங்கிள் பத்திரிகை டெலிவறி செய்யுறீங்களோ? ரூம் நிறைய
பேப்பராய் இருக்கு. அவரின் பதில் இல்லை தம்பி நாங்கள் எல்லோ இப்ப
ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறோம்.எனக்கு ஒண்டும் புரியவில்லை
நாய்க்குட்டி வாங்கினதுக்கும் பத்திரிகைகள் ரூம் முழுக்க அடுக்கி வைத்திருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?இல்லை தம்பி இது குட்டி நாய் தானே கக்கா இருக்கிறதுக்கு இப்பதான் பழகிறார்.4,5 பத்திரிகை தாள்களை ஒரு மூலையில்
போட்டால் அவர் அதில கக்கா இருப்பார்.அதுக்கு தான் இந்த பத்திரிகைகளை
ஒவ்வொரு கிழமையும் கொண்டுவாரனான்.நான் மூச்...........

Tuesday, February 06, 2007

அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டார் அடேல்.

விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன.

""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ்ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகளின் புதிய சர்வதேச ""குரலாக'' திருமதி அடேல் விளங்குவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின்னர் அது குறித்து அவர் தமது கருத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என்றும் "த டெய்லி டெலிகிராப்' குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் திருமதி அடேல், தமது கணவர் அன்ரன் பாலசிங்கம் வகித்த பதவியை ஏற்றுப் பணியாற்றுவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் அவரைக் கைது செய்யுமாறு ஸ்ரீ லங்காவின் ராஜதந்திரிகள் பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.எனினும் 57 வயதான திருமதி அடேல் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் நீண்டகால தீவிர ஆதரவாளர் என்பதாலும் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற வகையிலும் கணவருடன் சேர்ந்து சர்வதேச மட்டத்தில் பணியாற்றுவதில் மிகுந்த அனுபவம் உள்ளவர் என்ற வகையிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அவருக்குக் குறிப்பிடத்தக்க இடமொன்று உண்டு என்று புலிகளுக்கு நெருங்கிய வட் டாரங்கள் கருதுவதாகவும் "த டெய்லி கிராப்' தெரிவித்துள்ளது.

உதயன்

Sunday, February 04, 2007

சுப்புஅம்மானும் ,சுப்புகுட்டியும்

எனது இந்த பதிவில் இனி சுப்புஅம்மானும்,சுப்புக்குட்டியும் இடையிடையேசந்தித்து கதைக்க போகிறார்கள்.பல்வேறுபட்ட பல விடையங்களை அவர்கள்கதைப்பார்கள். நகைச்சுவையுடன் அதே நேரம் சிந்திக்க வைக்ககூடியதாகவும்அவர்களின் உரையாடல் இருக்கும்.

எண்ணத்தில் உதித்து சில மாதங்களேஆன ,முதன்முதலாக வலையேறும் சுப்பு அம்மானையும் சுப்புக்குட்டியையும்வரவேற்க நீங்கள் தயாரா? சரி ,சரி கைதட்டியது போதும்.இன்றைக்கு அவர்கள் கதைக்கும் விடையம் அரசியலாக இருந்தாலும்தொடர்ந்து பல்வேரு விடையங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்..இதோ சுப்பு அம்மானும் சுப்புக்குட்டியும் இணைந்து கலக்கும்.................................... என்ன பெயரை வைக்கலாம் என்பது உங்களிடமே விட்டுவிடுகிறேன்.ஒரு பெயரை முன்மொழியுங்கள்.

அன்புடன் கரிகாலன்..

Photobucket - Video and Image Hosting



.சுப்புக்குட்டி:-வணக்கம் அம்மான்.

சுப்பு அம்மான்:-வணக்கம்டா மோனை.எங்க துலையாலையோ?

சுப்புக்குட்டி:-இல்லை அம்மான் சும்மா ஒரு தேத்தண்ணி குடிப்பம் எண்டு வந்தனான்.

சுப்பு அம்மான்:-இல்லையடா மோனை நீ அடிக்கடி அம்மான் அம்மான் எண்டு கூப்பிட எனக்கொரு விசியம் எல்லோ ஞாபகத்துக்கு வருது.அம்மான் எண்டு யாரை சொல்லுறது எண்டு தெரியுமோ. அந்த காலங்களில அப்பு,ஆச்சி ,குஞ்சிஅப்பு எண்டு கூப்பிட்ட காலங்களில தாயின்னரை சகோதரங்களை தான் அம்மான் எண்டு சொல்லுறது.அனால் இப்ப சிலதுகள் அம்மான் எண்டால்அது இது எண்டு கரடிவிட்டுக்கொண்டிருக்கினம்.

சுப்புக்குட்டி:- அம்மான் நீங்கள் சந்தடி சாக்கில எங்கேயோ அம்பு விடுறீங்கள் போல கிடக்கு.

சுப்பு அம்மான்:- அதை விடு மோனை.. என்ன மோனை புதினங்கள்?

சு.குட்டி:-எங்கடை ரணிலார் எல்லோ நேபாளம் போயிருந்தவராம்.

சுப்பு அம்மான்:-எட மோனை அவர் அங்க என்னத்துக்கடா மோனை போனவராம்.?எங்கடை அரசியல் வாதிகள் அங்கை எல்லாம் போகமாட்டினமே.

சுப்புக்குட்டி:-நேபாளத்திலே சண்டைஎல்லாம் முடிஞ்சு போச்செல்லே அம்மான்.அதுதான் அங்கை ஒரு மகாநாடாம் இலங்கையின் அனுபவத்தின் அடிப்படையில் மோதலின் பின்னரான பொருளாதார முகாமைத்துவம்எண்ட தலைப்பிலே.அதுக்கு தான் ரணிலை கூப்பிடவையாம்.

சுப்புஅம்மான்:-அடிடா எண்டானாம் புறப்படலையிலை.சரி,சரி அவர் அங்கை என்ன சொன்னவராம்?

சுப்புக்குட்டி:-நேபாளம் முன்னேற வேண்டும் எண்டால் நாடும் அதன் மக்களும் ஒற்றுமைப்படவேண்டும் எண்டும் நேபளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என்றும் வேற பல விசியங்களையும் சொன்னவராம்.

சுப்பு அம்மான்:- எனக்கெண்டா சிரிப்புதான் வருதடா தம்பி.கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டம் ஏறி... எண்டெண்டு ஒரு பழமொழி இருக்கெல்லே.தன்ரை நாட்டிலே,நாட்டையே சீரழிக்கும் இனப்பிரச்சனையையே தீர்க்க மனதில்லாதவர்கள் அடுத்த நாட்டுக்கு போய் அவர்களுக்கு அறிவுரை சொல்றதை நினைச்சா சிரிப்பு சிரிப்பு தான் வருது. ஊருக்கு தான் உபதேசம் உனக்கு இல்லையடி பெண்ணே எண்டதுதான் எனக்கு ஞாபகம் வந்து துலைக்குது.

சுப்பு குட்டி:- கூப்பிட்டவர்களை தான் சொல்லவேணும்.அம்மான் நீங்கள் நீங்கள் சிரிப்பா சிரிக்க எண்டு சொல்ல தான் எனக்கு ஞாபகம் வருது இவர் இப்படி வெளிநாட்டில இருக்க இவரின் கட்சியிலை இருந்து 17 பேர் எல்லோ கூண்டோட கட்சி மாறிட்டினம்.கட்சி மாறினதுமல்லாமல் எல்லாருக்கும் அமைச்சு பதவிகள் நாடே சிரிப்பா சிரிக்குது.

சுப்பு அம்மான்:- இப்ப இலங்கையின்னரை அமைச்சரவையயை பாத்தியே தம்பி 107 பேர்.2 கோடி பேர் இருக்கிற ஒரு நாட்டுக்கு 107 அமைச்சர்கள் எண்டால் ,இனி அவயின்றை சம்பளம்,கிம்பளம் எண்டு எவ்வளவு செலவுகள் பாத்தியேடா மோனை. பதவியாசை எப்படி எல்லாம் மனுசரை ஆட்டுது பாத்தியோ தம்பி. முந்தின காலங்களிலே எல்லாம் தொண்டமானின்றை கட்சி மட்டும்தான் யார் ஆட்சிக்கு வரீனமோ அவரோடை கூட்டு வைக்கும்.அதிகாரத்தில் இருந்தால் தான் தனது ம்க்களுக்கு எதாவது? நன்மை செய்யலாம் எண்டு.இதிலே கண்டியோ ஆருக்கு நன்மை எண்டு சொல்லாமலே தெரியும் தானே.

சுப்பு குட்டி:-ஓம் அம்மான் இண்டைக்கும் அந்த மலையக மக்கள் கல்விஅறிவு பெறாமல் ,சரியான வீட்டு வசதிகூட இல்லாமல்,குடிக்கும்,சினிமாவுக்கும் அடிமையாக இருப்பதற்கே காரணமே மேற்படி தலைவர்கள் தான்

சுப்பு அம்மான்:-இப்படி இருந்த இலங்கையில் இப்ப பிரதான எதிர்க்கட்சியில் இருந்தே கட்சி தாவுறாங்கள் எண்டால் இலங்கை அரசியல் எப்படி சாக்கடையா போட்டுது பாத்திட்டியோ?இலங்கையிலே பெரும்பாலான அரசியல் வாதிகள் சட்டத்தரணிகள்,படித்தவர்கள் இருந்தும் அதிகார போதை அவங்களை எப்பிடி ஆட்டுது பாத்தியோ?இதில இரண்டு பேர் மகிந்தவை கடுமையா விமர்சித்தவை

சுப்புக்குட்டி:-இப்பிடி வர்றவைக்கு எல்லாம் பதவி குடுத்தால் மகிந்தற்றை கட்சிக்குள்ள பிரச்சனை வராதோ அம்மான்.சு.அம்மான்:-ஏன் வராது? இப்பவே புகைச்சல் கிளம்பிட்டுது எண்டு லேசுபாசா கதை வருது.ஜே.வி.பி காரங்கள் வேற முறுக்கிக்கொண்டு நிக்கினம் பாப்பம் என்ன நடக்குதெண்டு.சில வேளை இலக்சன் வந்தாலும் வரும் கண்டியோ.

சுப்புக்குட்டி:- சரி, அம்மான் வீட்டை போகவேணும் பிறகு சந்திப்பம் என்ன?சுப்பு அம்மான்:- ஓமடா தம்பி பிறகு சந்திப்பம் என்ன?
சு.குட்டி:- ஓமோம்

Monday, January 29, 2007

ஆத்தா புது ப்ளாக்கரில் சேந்திட்டேன்.

பாம்பு தின்ற ஊருக்கு போனால் நடு முறி எனக்கு என்பது பெரியோர் சொன்ன வாக்கு அதற்க்கு இணங்க நானும் புது ப்ளாக்கரில் ஜக்கியம்
ஆகிவிட்டேன்.இனி தமிழ்மணத்திலும் பிரச்ச்னை இல்லாமல் எல்லாம்
நல்லபடி நடக்கும் என்று நம்புகிறேன்.

Wednesday, January 24, 2007

ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் புலிகளைப் பணிய வைக்குமா?

எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது.ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது. ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அர சியல் முதிர்ச்சியற்ற சாத்தியமற்ற ஒன்றுக் கொன்று முற்றிலும் முரண்பட்ட அணுகு முறையைத்தான் சிங்கள ஆட்சிப் பீடம், இவ் விடயத்தில் தொடர்ச்சியாகப் பின்பற்றி வரு கின்றது என்பதை ஏற்கனவே இப்பத்தியில் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம்.

ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கி விடும் இராணுவக் கெடுபிடிப் போக்கு. மறுபுறம் சமா தான வழித் தீர்வு குறித்து பிரபலாபம். இதுவே சிங்களத்தின் இரட்டை வேட அணுமுறை.கடந்த காலக் கொழும்பு அரசுகளால் தீவிர முயற்சியுடன் முன்னெடுக்கப்பட்டுத் தோல்வி கண்ட தந்திரோபாயம் இது என்ற உண்மையைக் கவனத்தில் கொள்ளாது, அதே பாணியைப் பின்பற்ற மஹிந்தரின் அரசும் முயல்கின்றது.விடுதலைக்கான உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான நீதி, நியாயம் பெறு வதற்கான தமிழரின் போராட்டம், ஆயுத வழிக் குத் திரும் பியுள்ள இன்றைய சூழலில் அந்த வழியிலேயே தீர்வையும் தனக்கு விருப்பமான முடிவையும் தமிழர் தரப்பு மீது திணிக்க முயல் கிறது தற்போதைய அரசு. தமிழரின் அரசியல் தலைவிதியை, படை பலத்தை அடிப்படையாகக் கொண்டே நிர்ண யிப்பதற்கு, இந்த அரசு முயன்று வருகின்றது என்பதைக் கடந்த வாரம் இப்பகுதியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று, தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிடுவதே அரசின் திட்டம் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தோம். அக்கருத்துக்களை ஊர்ஜிதம் செய்வது போன்று, இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் அறிவிப்பு அமைந்திருக்கின்றது.

கிழக்கில் கணிசமான பகுதியைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுக் கைப்பற்றிய பின்னர் வாகரை வெற்றியை அடுத்து இறுமாப்புடன் இந்த அறிவிப்பை அவர் விடுத்திருக்கின்றார்.மோதல்களை நிறுத்தி, பேச்சு மேசைக்குத் திரும்புவதற்குப் புலிகள் விரைந்து உடன்பட வேண்டும். இல்லையேல் மென்மேலும் சண் டைக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியி ருக்கும். என்று எச்சரித்திருக்கின்றார் அவர்.யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்துக் கொண்டே அந்த ஒப்பந்தப்படி ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் மற்றத் தரப்பு, படை நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற தெளிவான ஏற்பாடு இருக்கத் தக்கதாகவே கிழக்கில் பெரும்பாலான பகுதிகளிலிருந்து புலிகளைப் படை நடவடிக்கை மூலம் விரட்டி, அப்புறப்படுத்தி விட்டு இந்த அறிவிப்பை அரசு விடுக்கின்றது.

முன்னைய சிங்கள அரசுகள், இதே போன்ற தந்திரத்தைக் கையாண்டு பெற்ற அனுபவம் என்னவென்பது மறக்கப்பட்ட சரித்திரம் அல்ல.இலங்கை யுத்தக் களத்தில் படைவலுச் சம நிலை, காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டிருப்பதும், ஒரே சமச்சீர் நிலை நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிப்பதில்லை என்பதும் அனுபவப் பாடங்கள்.

பதினெட்டு மாதங்களாக ஜெயசிக்குறு இரா ணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, அரசுத் தரப்புக்குச் சாதகமாக மேம்பட்டிருந்த படைச் சமவலு நிலை, திடீரெனப் பதினெட்டு மணித்தியாலங்களில் தலைகீழாக மாறியமை மறுக்கப்படக் கூடியதல்ல. அது போல, கட்டு நாயக்கா விமானப்படைத் தளம் மற்றும் விமான நிலையம் மீதான அதிரடித் தாக்குதலினால், ஒரு சில மணி நேரத்தில் படை வலுச் சமநிலை தலைகீழானதும் நினைவுகொள்ளத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில் பாரிய படைக் கலச் சக்தியையும், சுடுகல வலுவையும் பயன் படுத்தி, புதிய புதிய படையெடுப்புகளை நடத்தி, தமிழர் மண்ணை ரணகளமாக்கி விட்டு, உடன் பேச்சுக்கு வராவிட்டால் இது போன்ற மென்மேலும் பல விபரீதங்களை எதிர்கொள்ள நேரும் என்று தமிழர் தரப்பை எச்சரிப்பதால் உருப்படியாக நடைபெறப்போவது எதுவுமில்லை.இராணுவச் சமநிலை நிலையில் வீழ்ச்சி அல்லது பின்னடைவு கண்ட நிலையில், பேச் சுக்கு அமைதி வழித் தீர்வுக்கு புலிகள் இறங்கி வந்தனர் என்று கூறுவதற்கும் கடந்த காலங் களில் எந்தப் பதிவோ அன்றி உதாரணமோ இல்லை.

எனவே, இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையும், அதை அச்சுறுத்தலாகக் காட்டி பேச்சுக்கு மசிய வைக்கும் மடக்கிப் போடும் மிரட்டல் தந்திரமும் புலிகள் விடயத்தில் பயன் தருமா என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. இத்தகைய நெருக்குதல் போக்கு அல்லது அழுத்த நடவடிக்கை, அமைதி எத்தனங்களில் இருந்து இரு தரப்புகளையும் மேலும் மேலும் விலத்திப்போக வைத்துப் பகையுறவையும், விரோத மனப்பான்மையையுமே வளர்க்கும். அதன் விளைவு மோசமானதாகவும், விபரீத மானதாகவும் அமையும் என்பதும் சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல.

இதனைப் பட்டறியவும் காலம் அதிகம் செல்லாது என்பதும் கடந்தகால அனுபவம்.

-uthayan-