Tuesday, February 09, 2016

பயணங்கள் முடிவதில்லை -- தொடர் பதிவு

                                                                                                                                       
 பயணங்கள் முடிவதில்லை தொடர்பதிவில் யாரும் அழைக்காமல் கலந்து கொள்ளும் முதல் ஆளும் நான்தான் கடைசியாக இணைந்து கொள்ளும் ஆளும் நான் தான் என நினைக்கிறேன் .

உண்மையில் இங்கு கனடாவில் கோடைகாலம் வந்து விட்டால் பயணங்களுக்கு குறைவேதும் இல்லை .உண்மையில் இயந்திரமயமான இந்த வாழ்க்கையில் மனிதர்களிடத்து "மனிதத்தை" மீட்டுக் கொடுப்பதே இந்த பயணங்கள் தான்.பெரும்பாலான .வெள்ளையர்கள் ஒவ்வொரு வருடத்திலும் பெரும்பாலும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டுக்கோ  பயணம் மேற்கொள்வார்கள் .ஒரு பயணம் முடிந்த உடனே அடுத்த பயணத்துக்கு நாள் குறித்துவிட்டு அதுக்காண  பணத்தினை சேமிக்க ஆரம்பித்துவிடுவார்கள் 

.இப்பொழுது நம்மவர்களும் இப்படி நடந்துகொள்வது மிகவும் சந்தோசமாக இருக்கிறது .ஆனால் நம்மவர்கள் பெரும்பாலும்  பயணம்  செய்வது உறவினர்கள் ,நண்பர்கள் இருக்கும் நாட்டுக்கு அல்லது  இடத்துக்கு தான்  .வேறு என்னத்துக்கு தங்கும் இடத்தினை மிச்சப்படுதத்தான்.

சரி இனி விடையத்துக்கு வருகிறேன் ,இந்த தொடர் பதிவை  முதன் முதலில் தொடங்கிவைத்த மைதிலிக்கு நன்றிகள் உரித்தாகட்டும். எனது பயண அனுபவங்களை கிழே படிக்க போகின்றீர்கள் .


1) பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

 எப்போதும்  பெரும்பாலரின் மறக்க இயலாத பயணத்தில் ரயிலுக்கு முக்கிய இடம் உண்டு .எனக்கும் முதல் ரயில் பயணம் நினைவில் இருக்கிறது பசுமரத்து   ஆணிபோல. ஆனால் அந்த நாட்களிலும் சரி இன்றைய நாட்களிலும் சரி மனதில் நினைக்கும்போதே வேதனை தரும் .அப்போது பொறியியலாளரான எனது தந்தை வேலை செய்தது புத்தளம் எனும் ஊரில்.

அரசு  ஊழியர் என்பதால் வருடத்தில் ஒருமுறை குடும்பத்துடன் பயணம் செய்ய இலவச பாஸ் இருந்தது .நீண்ட பாடசாலை விடுமுறை காலங்களில் நாங்கள் யாழ்பாணம் போவோம் எங்கள் அம்மம்மா வீட்டுக்கு.,பெரும்பாலான உறவினர்கள் அங்குதான் இருந்தார்கள் .புத்தளத்தில் இருந்த நாங்கள்,  அங்கு இருந்து  பேருந்து  ஏறி  அநுராதபுரம் எனும் ஊருக்கு வந்து, கொழும்பில் இருந்து வரும் "யாழ்தேவி"  ரயிலைப் பிடிக்கவேண்டும்.

இந்த யாழ்தேவி ரயிலே இலங்கை தலைநகரம் கொழும்பில் இருந்து யாழ்பாணத்தில் இருக்கும் காங்கேசன்துறை வரைக்கும் செல்லும்.இதில் நான் குறிப்பிடும் இந்த அனுராதபுரம் என்னும் இடம் தமிழர்கள் மீதான வன்முறைக்கு பெயர் போன இடம் அத்துடன் முற்றுமுழுதாக சிங்களவர்கள் வசிக்கும் இடம் .நான் இங்கே குறிப்பிடும் காலகட்டங்களில் இந்த ஊர் வழியே போய்வருவது என்பது உயிர் போய் திரும்பிவருவது போன்றது.


 புத்தளத்தில் இருந்து பேருந்து  புறப்பட்ட சில நிமிடங்களில் எனது தாயார் நெற்றில் இடப்பட்டிருக்கும் "பொட்டை" அழித்து விடுவார் ,"தாலிக்கொடியை" கழற்றி கைப்பையில் வைத்துவிடுவார் .எங்களுக்கு சொல்லப்படும் தேவையில்லாமல் கதைக்கக்கூடாது  .அனுராதபுரம் ரயில் நிலையத்தில் நிற்கும் போது  கண்டிப்பாக தமிழில் கதைக்கக்கூடாது என்று சொல்வார்கள். எனது தந்தையும் ,தாயும் சிங்களம் சரளமாக கதைக்கக்கூடியவர்கள் எனவே பிரச்சனை இல்லை .நாங்கள் அப்போது சிறு பிள்ளைகள் எங்களுக்கு சிங்களம் ஓரிரு சொல்லுதான் தெரியும் .தவறுதலாக அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் தமிழில் கதைத்தால் தலையில் ஒரு குட்டு விழும்.


அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் நடைபாதையில்  நிற்கும் போது போய் வருகின்ற யாரைப்பார்த்தாலும்  எங்களை வெட்டவோ ,கொல்லவோ வருகின்றவர்கள் மாதிரி தான் தோன்றும் .யாழ்தேவி ரயிலில் ஏறினாலும் கூட யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான வவுனியா வரும் வரையில் எங்களுக்கு மட்டும் அல்ல பெரும்பாலான தமிழ்பயணிகளுக்கு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும்  ரெயில் வவுனியாவுக்குள் நுழைந்தவுடன்தான் தமிழர்கள் நிம்மதிபெருமூச்சு விடுவார்கள் .

என் தாயின் கழுத்தில் "தாலியும்" நெற்றியில் "பொட்டும்" மீண்டும்  குடியேறும் .இதுதான் எனது முதல்  ரெயில் பயண அனுபவம்.ரெயில் பயண காட்சிகளைவிட இன்றைய நாள் வரையில் மனதில் பதிந்தது இந்த சம்பவம்தான்

                                                     
இலங்கையின்  புகையிரத வரைபடம் 


2). மறக்கமுடியாத பயணம் எது?


 1983 ம்  ஆண்டு தமிழர் மீதான  இனவன்முறை ஆரம்பித்த போது நாங்கள் கொழும்பில் இருந்தோம் .வன்முறைகள் ஆரம்பித்த போது உடுத்த உடையுடன் அப்பாவின் ஒரு சிங்கள நண்பர் வீட்டில் தஞ்சம் அடைந்தோம் ,இரு தினங்கள்  அவரின் வீட்டில் இருந்துவிட்டுமேலும் அவர் வீட்டில் இருப்பது எமக்கும் அவருக்கும் பாதுகாப்பு இல்லை என்றபடியால்  அரசாங்கம் அறிவித்தபடி இந்துக்கல்லூரியில் தஞ்சம் அடைந்தோம் .


பின்னர் ஒரு வாரத்தின் பின்னர்  தமிழர்கள் எல்லோரையும் யாழ்ப்பாணம் அனுப்ப  அரசாங்கம் தீர்மானித்து தரைவழியாக அனுப்ப பாதுகாப்பு இல்லாதபடியால் கடல் வழியாக கப்பல் மூலம் அனுப்பிவைத்தார்கள் .கப்பல் என்றவுடன் சொகுசு கப்பல் என்று எண்ணக்கூடாது .சரக்கு கப்பலில் கொழும்பு துறைமுகத்தில் எல்லோரையும் ஏற்றி யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் கொண்டுவந்து இறக்கினார்கள் .ஒருநாள் முழுவதும் பயணம் .கப்பலின் மேல்தளம் முழுவதும் நாங்கள் .வாந்தி எடுப்போர் ஒருபுறம்,இறந்தவர்களை நினைத்து அழுவோர் ஒருபுறம் .எதிர் காலத்தினை நினைத்து கலங்கியபடி சிலர் .

வெயில் ஏற ஏற கப்பலின் மேல்  தளம் கொதிக்க தொடங்க அதற்கும் குறைவில்லாதபடி கொதிக்கும் மனதோடு பலர் .இதற்குள்ளும் தங்கள் செல்ல நாய்க்கு ஒழுங்காக சாப்பாடு இல்லையே என்று கவலைப்படும் சிலர் இப்படியாக தொடங்கிய பயணம் .காங்கேசன்துறை வரும் வரையில் கடலையும் கடல் அலையையும் பார்த்தபடி கடலில் துள்ளிக்குதிக்கும் மீன்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட  தமிழனாக பிறந்த எங்களுக்கு ஏன் இல்லை என்று சிந்தித்தபடி நான் .

காங்கேசன்துறை வந்தடைந்ததும் எமது தந்தையின் பெயரை அறிவித்து உறவினர்களிடம் ஒப்படைத்ததும், மாமாக்கள் ,சித்தப்பாக்கள்  ,உறவினர்கள் எம்மை கட்டிபிடித்து அழுததும்,அம்மா மயங்கி விழந்ததும்  கரிகாலனின் உயிர் கட்டையில் ஏறும் வரையில் மறக்கமுடியாத பயணங்களில் ஒன்று .இதைபோல வேறு சில பயணங்களும்  இருந்தாலும்  சிறு வயதில் உயிர் வரை "உறைத்தது" இது ஒன்றுதான் .



3). எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

இங்கு கனடாவில் எனக்கு எனது வாகனத்தில் பயணம் செய்யவே பிடிக்கும் .நீண்டதூரம் என்றால் நானும் எனது மனைவியும் மாறி மாறி ஓட்டுவோம்.பெரும்பாலும் எனது குடும்பம் மட்டும்தான் மற்றவர்களை  சேர்த்துக்கொள்வதில் என்ன பிரச்சனை என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பு வெறுப்பு இருக்கும் .இது சிலவேளை அது  எமக்கு தொந்தரவு தருவதாக இருக்கும். எனவே பெரும்பாலும் தனிப் பயணம்தான்.

மனைவியிடம் வாகனத்தினை ஓட்ட கொடுத்துவிட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்து  கொண்டு   சுடச்சுட "ரிம் ஹோட்டனிலோ" அல்லது "ஸ்ரார் பக்சிலோ" "டபிள் டபிள்"  "கோப்பி"  வாங்கி குடித்துக்கொண்டு "பக்கோடா" பொட்டலத்தில் இருக்கும் "பக்கோடா" வையும்  எடுத்து கடித்துக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே தெரியும் காட்சிகளை ரசித்துகொண்டிருக்க, உள்ளே ஒலிபெருக்கி  வழியாக "ஆல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சைக் கூசுதே பிபிசி செய்தி எல்லாம் நம்மைப் பேசுதே" என ஹரிகரனும் பவதாரனியும் குழையும் குரலால் காதை வருட  இப்படி   பயணிக்கதான் பிடிக்கும் என சொல்ல எனக்கு என்ன தயக்கம் ?

4.) பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

 குத்துப்பாட்டு ,கானா பாடல்கள்,ஆங்கிலப்பாடல்கள்,
பக்திப்பாடல்கள்.புரட்சிபாடல்கள்  ஏன் சிங்களப் பாடல்கள்  கூட கேட்பேன் பலதரப்பட்ட இசை வடிவங்களை கேட்பதில் ஆர்வம்  உடையவன் நான்.யாருடைய பாடல்கள் நன்றாக் இருந்தாலும் கேட்பேன்.மனநிலைக்கு ஏற்றவாறு பாடல்கள் கேட்டாலும் பெரும்பாலும் எனது நீண்ட தூர  பயணங்களில்  ஒலிப்பது இளையராஜாவின் இசையில் வந்த  பாடல்களும், தொண்ணுறுகளில் வெளிவந்த  தேவா இசையில் ஹரிகரன் பாடிய பாடல்களுமே ஆகும் .  பொதுவாக ஹரிகரனின் எல்லாப் பாடல்களுமே பிடிக்கும் .. மெலோடி ரக பாடல்கள் அதிகம் பிடிக்கும் .அத்துடன் போக்குவரத்து தகவல்களுக்காக   இடையிடையே செய்திகளும் கேட்பேன் .


5). விருப்பமான பயண நேரம்?

விருப்பமான  பயண நேரம் அதிகாலை. இரவு நங்கை தனது ஆடைகளை களைந்து வெளிச்சத்தை மெல்லமெல்ல போர்த்திக்கொள்ளும் தருணங்களில் காற்று தலையை கோத புத்துணர்ச்சியுடன் பயணத்தினை ஆரம்பிக்க மிகவும்  பிடிக்கும்  கோடை காலங்களை விட பனி பொழியும் காலங்களில் பயணம் செய்யவும்  மிகவும்  பிடிக்கும்.


6.) விருப்பமான பயணத்துணை. ?


இப்படி ஒரு விடையத்தினை இதுவரையில் நான் சிந்தித்து இல்லை . இருந்தாலும் எனது மனைவி ,பிள்ளைகள்  இல்லாத பயணங்கள் இனிப்பாய் இருந்ததில்லை.  எல்லமே சரியாக இருந்தால்  எனது மனைவியின் காந்த கண்களில் தெரியும் கோலங்களை ரசித்துகொண்டே இயற்கையையும் ரசிக்க பிடிக்கும் .



7) பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

சிறு வயதில் இருந்து பயணங்களில் படிப்பது கண்களை பாதிக்கும் என்ற பெற்றோரின் சொல்லுக்கு இணங்க இன்றைய பொழுதுவரை புத்தகம் படிப்பதில்லை. வெளியே பார்ப்பது .அல்லது வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் மற்றவர்களை பார்ப்பது .(ஹி..ஹி ...)


8.) விருப்பமான ரைட் அல்லது டிரைவ்? 


  கோடையில் இரண்டு மாதம் இரவே இல்லாத பொழுதுகளைக்  கொண்டதும். பனிக்  காலத்திலே பகலே இல்லாத ஒரு ஒரு மாதத்தினை கொண்டதுமான  கனடாவின்  வட மாநிலங்களுக்கு  வாகனத்திலேயே தரை மார்க்கமாக   போய்  தங்கி வரவேண்டும் மனைவி பிள்ளைகளுடன் .




9). பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்? 


 பயணம் ...பயணம் ..ஆரம்பம் பள்ளிக்கு பயணம் .....

 நடந்தால்  இரண்டடி இருந்தால் நாலடி ........

 தென்பாண்டி சீமையிலே ....

 ஆல்ப்ஸ் மலைக் காற்று வந்து ......

 நான் தேடும்  செவ்வந்திப்பூ இது .......

 தென்மதுரை வைகைநதி ...........

 குமுதம் போல் வந்த குமரியே .....

அந்தி நேர தென்றல் காற்று .....

 கல்யாண தேன் நிலா  காய்க்காத . பால் நிலா ......

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி .....

நீ காற்று நன் மரம்  என்ன சொன்னாலும் .....

கூட்டத்திலே கோயில்  புறா யாரை இங்கு தேடுதம்மா ...?

மெரசாலாயிற்றேன் மெரசாலாயிற்றேன் நான் ......

தென்றல் வந்து தீண்டும் நேரம் என்ன வண்ணமோ ....?

ஆறரைக்கோடி பேர்களில் ஒருவன் ............

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் .....



10). கனவுப் பயணம் ஏதாவது?


 "இப்படி" ஒரு பயணம் சைக்கிளில், "இப்படி" ஓரு  இடத்துக்கு போகவேண்டும் .முடியாவிட்டால் எனது வாகனத்தில் ஆவது போகவேண்டும் .முடியுமா என்பது தெரியவில்லை .பார்க்கலாம் .நம்பிக்கையில் தானே வாழ்க்கை நகர்கிறது . கிழே தந்திருக்கும் வீடியோவை பாருங்கள் .இப்படியும்  மனிதர்கள்
பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதை .


மீண்டும் சந்திக்கிறேன் .அன்புடன் கரிகாலன்

1 comment:

Anonymous said...

Interesting...