Saturday, February 06, 2016

கரிகாலனின் உளறல் --001

எங்கள்  பதிவர்கள் எல்லாம்":கருத்து சித்திரம் "போட்டு கலக்கும் போது  என்னால்  முடிந்த  ஒரு முயற்சி . இந்த "கருத்து கந்தசாமி" இனி எனது வலைப்பதிவில் அடிக்கடி வந்து கருத்து சொல்லுவார் .உங்கள் ஆக்கமும் ஊக்கமும்தான்  என்னை மகிழ்வடைய  வைக்கும் .

எனவே மதிப்புக்குரியவர்களே  உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் .நன்றி

கருத்து  கரிகாலன்  

Monday, February 01, 2016

அவுஸ்திரேலிய உணவகமொன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இலங்கை பெண்ணிடம் வசமாக சிக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் காலை உணவிற்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உணவருந்துவதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த அவரது முகாமையளார், குறித்த இலங்கைப் பெண்ணைப் பார்த்து “ காலை உணவின் போது இல்லை ” என தெரிவித்துள்ளார். 
இதையடுத்து நகைச்சுவையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி குறித்த பெண்ணின் கணவர் தனது முகப்புத்தகத்தில் நகைச்சுவையாக தரவேற்றியுள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஹோட்டலில் குறித்த பெண் தனது கணவருடன் காலை உணவிற்காக வரிசையில் காத்துக்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த கோலியின் முகாமையாளர் திடீரென “ காலை உணவின் போது இல்லை ” என தெரிவித்துள்ளார்.
இதனால் குழப்பமடைந்த பெண் “ காலை உணவின் போது என்ன இல்லை ”   என வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கோலியின் முகாமையாளர்  “ படங்கள் இல்லை ” என்று கூறியுள்ளார்.
அதற்குப் பெண் “ படங்களா ??? யாருடன் ? என்று கேட்டுள்ளார்.
இதற்கிடையில் குறுக்கிட்ட கோலி “ என்னுடன் நீங்கள் படம் எடுக்க வருவதாக அவர் நினைத்து விட்டார் ” என தெரிவித்துள்ளார். 
உடனடியாக குறித்த பெண் கோலியைப் பார்த்து “ நான் ஏன் உம்முடன் படம் எடுக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார். இதன் போது கோலியின் முகம் அதிர்ச்சியடைந்து காணப்பட்டதாக பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனுடன் நிற்காது “ நீர் யார் ? நீரென்ன பிரபலமானவரா ? ..... ” என கேட்டு அவர்களை திகைக்க வைத்துள்ளார்.
இதையடுத்து கோலியும் அவரது முகாமையாளரும் மன்னிக்குமாறு தெரிவித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்துள்ளனர்.
இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ள குறித்த பெண்ணின் கணவர், தனது மனைவி ஹோட்டல் முகாமையாளரிடம் சென்று அந்த இந்தியப் பையன் தன்னை தொந்தரவு  செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
                                                              
நன்றி --வீரகேசரி 

சகாயம் ஐ.ஏ.எஸ். சொன்னது !!

''மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன். கைலி, அழுக்கு சடையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள் யார்?’ என்று அவரிடம் கேட்டேன். 

'அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்துவருகிறோம். சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.                               

நான் அதிர்ந்துபோனேன். 'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன். 

வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம். வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது. தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்"

இதில் நான் சொல்ல என்ன இருக்கு ? சிந்திப்பீர் ,செயற்படுவீர்


மேலும் சில தகவல்கள்..............................

01)வறுமையில் வாடும் வா.உ.சி  பரம்பரை 

02)இறப்புக்கும் பிறகும் புறக்கணிக்கப்பட்ட வா.உ.சி 

03)கப்பலோட்டிய தமிழன் - வீதியோரத்தில் வ.உ.சி. கொள்ளுப்பேத்தி, பேரன்!

04)வ.உ.சி யின் பணத்தை மகாத்மா காந்தி மோசடி செய்தாரா?

Saturday, January 30, 2016

சின்ன மாமியே உங்கள் சின்னமகள் எங்கே? பாடலுக்கு பின்னால் ஒரு" சுட்ட" கதை .

சின்னமாமியின் சின்னமகளுக்கு  உண்மையில்
சொந்தக்காரர் 

சின்ன மாமியே உங்கள் சின்னமகள் எங்கே பள்ளிக்கு சென்றாளோ படிக்கசென்றாளோ?" எனும் ஈழத்தின் பொப்பிசைப் பாடலை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது .

ஒரு காலத்தில் தமிழ்கூறும் உலகம் எங்கும் பட்டையை கிளப்பிய ஒரு பொப்பாடல்

பாடகர் நித்தி கனகரத்தினம் பாடிய இப்பாடல் ஒலிக்காத வீடுகளோ ,மேடைகளோ ,வானொலிகளோ இல்லாத ஒரு நிலை ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்திமூன்றாம் ஆண்டுக்கு முன்னர்  காணப்பட்டது

இன்றைய நாள்  வரையில் இப்பாடலை இயற்றி ,பாடியவர் நித்தி கனகரத்தினம் என்றே நான் நினைத்துக்கொண்டிருந்தேன் .அப்படிதான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தாலும் இந்த பாடலுக்கு பின்னாலும் ஒரு "சுட்ட கதை " இருப்பது சில தினங்களுக்கு முன்னர் தான் எனக்கு தெரியவந்தது .


 எம்.எஸ். கமலநாதன் என்பவர்  கடந்த 25 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்பாணத்தில்  காலமானார். அவரின் இறுதிக்கிரியைகள் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் வடமராட்சியில் நடைபெற்றன. அவரின் இறப்பின் போதுதான்   மேற்படி பாடலை எழுதி, ,மெட்டமைத்து, பாடியவர் மேற்படி எம் .எஸ் .கமலநாதன் என்பதும் பிற்பட்ட காலங்களில் இது பொப்பிசை பாடகர் நித்தி கனகரத்தினத்தினை பாட வைத்து மீளவும் ஒலிநாடாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதும் நித்தி கனகரத்தினத்தின் குரலில் இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்ததும் தெரியவந்துள்ளது .

யாழ். வடமராட்சி  வதிரியில்  பிறந்தவர் .கால்பந்தாட்டம், கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தவர் எம்.எஸ்.கமலநாதன்,     1950களில் வதிரி டயமன்ட்ஸ் விளையாட்டுக்கழக வீரரராக அவர் விளங்கினார்.   1957இல் காங்கேசன்துறை றோயல் விளையாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அக்கழகம் வென்றபின் தனது நாட்டம் கால்பந்தாட்ட மத்தியஸ்த்தினை நோக்கித் திரும்பியதாக எம்.எஸ். கமலநாதன் ஒரு போது  தெரிவித்திருந்தார்.

 கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் பங்குபற்றி அப்பரீட்சைகளில் சித்தி யடைந்து முதல்தர
நடுவராக  தகுதியை பெற்று கால்பந்தாட்ட மத்தியஸ்தராக அவர் பல வருடங்கள்  பணியாற்றினார் என்பதுடன்   பல குறுந்திரைப்படங்களையும் அவர் இயக்கியுள்ளார் எனவும் தெரிய வருகிறது .


இனி திரு எம்.எஸ்.கமலநாதனின் ஒரு கட்டுரையில்  இருந்து அவரது வார்த்தைகளில்  வருபவை ..........................   
  
       
“1962இல் என்னால் இயற்றி மெட்டமைத்துப் பாடப்பட்ட  ”சின்னமாமியே உன் சின்னமகளெங்கே………” எனப் பாடப்பட்ட பாடல் இலங்கையின் முதல் பொப் இசைப் பாடலாகும். இப்பாடல் செவி வழியாகப் பல மேடைகளிலும் குறிப்பாக இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டு கேட்ட பாடலாகும். 

இதனை இன்னொருவர் காவிக்கொண்டு தனது தயாரிப்பென விளம்பரப்படுத்தி வந்த நிலையில்  இப்பாடல் திரு எம்.எஸ்.கமலநாதனால் எழுதி மெட்டமைத்து பாடப்பட்டது என்ற உண்மையினை அறிந்த பலர் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அதனை இரவல் வாங்கியவரே ஒத்துக்கொண்ட நிலையில் தீர்த்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றும் திரு எம்.எஸ்.கமலநாதனின் பாடல் என்ற முகவரியோடு அறுபத்தேழு நாடுகளில் பவனிவருகிறதென்பது சாதாரண விடயமல்ல.இவை எனது முயற்சியின் வெற்றி அனுபவமாகும் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.”

உண்மையில்  எம்.எஸ்.கமலநாதனின் இறப்பின் பின்னர் இப்பாடல் பற்றிய ஒரு உண்மை வெளிவந்திருக்கிறது .உண்மையில் இவ் விடையத்தில் என்ன நடந்தது  என்பது  பற்றி உண்மை தெரிந்தவர்கள் வாய் திறக்கவேண்டும் . பதிவர் ,ஒலிபரப்பாளர் கானா பிரபா போன்றவர்களால் இந்த விடையத்தில் பங்களிப்பு செய்யமுடியும்  என நினைக்கிறேன் .முடியுமானவர்கள் இந்த
விடையத்தில் ஆர்வம் காட்டவும் ,நன்றிகள்  

பொப்பிசை பாடல்கள் பற்றி நான் முன்னர் எழுதிய ஒரு பதிவு.




Tuesday, January 19, 2016

நாவடக்கம் எப்போது அவசியம்?-குட்டிக்கதை

சிலர் இருக்கிறார்கள் எப்போதும் ஏதாவது தொணணத்துக்கொண்டிருப்பார்கள். சிலர்  கதைப்பதையே மிகவும் குறைவாக செய்வார்கள் அதாவது பெரும்பாலும் மவுனமாக இருப்பார்கள் .இரண்டுமே சங்கடம்தான் அளவுக்கு அதிகமாக கதைப்பது எவ்வளவு சங்கடமோ அதேபோல தேவையானவற்றை கதைக்காமல் இருப்பதும் சங்கடம் தான் .பெரும்பாலும் திருமணம் ஆனவர்களுக்கு மிகவும் நன்றாக விளக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று .பெரும்பாலும் பெண்கள் பல விடையங்களில் கோடு தான் காட்டுவார்கள் நாங்கள் தான் புரிந்து கொண்டு ரோடு போடவேண்டும் .




மனைவி சமைக்கிற நேரத்தில் தலையிடிக்குது ,இயலாமல் இருக்குது என்றால் நீங்கள் உடனே கடையில் எடுப்பம் நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று சொல்லவேண்டும் இதைவிடுத்தது ஒரு குளிசையை போட்டிட்டு சமையுங்கள் என்றால் உங்களுக்கு முன்னால் சனி வந்து நின்று நாட்டியம் ஆடுகிறான் என்று அர்த்தம்.எதோ சொல்ல வந்து .... உண்மையில் சரியான சந்தர்ப்பத்தில் ,சரியாக கதைப்பவனும் மெளனமாக இருக்கவேண்டிய நேரத்தில் பேசாமல்  இருப்பவர்களுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்
இப்படியும் சொல்லலாம் பேசவேண்டிய சமயத்தில் பேசாமல் இருப்பதும் மெளனமாக இருக்கவேண்டிய சமயத்தில் பேசுவதும் கூட மனிதர்களுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது 

பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்த கலையை திறம்பட கற்றுவைத்திருக்கிறார்கள்,அதனால் தான் அவர்கள் அரசியலில்   வெற்றி பெறுகிறார்கள். வாழ்க்கையில் எதோ  ஒரு வகையில் வெற்றிபெற்ற பலரைப் பார்ப்பீர்கள்  அவர்களில் பலர் இக்கலையை திறம்பட கற்று வைத்திருக்கிறார்கள் .மேலாண்மை துறையில் படித்தவர்கள் பலருக்கு இது பற்றி பாடங்கள் படித்த நினைவு வருகிறதா? 
.சரி நான் ஒரு கதையை தருகிறேன்  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தருவீர்களா ?


நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக் கண்டதும் கோபமாக, 
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" 
என்று கதறினார்.

மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், 
நான் மருத்துவமனையில் இல்லை... 
எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் 
இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" 
என்று கூறினார்.

"பொறுமையாக இருக்கவா?" 
அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், 
"உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் 
நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? 
உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
என்று கொந்தளித்தார்.

மருத்துவர் சிரித்த முகத்துடன், 
"எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், 
நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.

"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார்.

அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், 
"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" 
என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" 
என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.

சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், 
"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? 
என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?" 
என்று நொந்துகொண்டார் தந்தை.

அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, 

"அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்...
இன்று, 
அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார்... 
உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் 
என்று அழைத்தவுடன் 
அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்"
என்று கூறினாள்.

"பேசவேண்டிய சமயத்தில் பேசாமல் இருப்பதும் மெளனமாக இருக்கவேண்டிய சமயத்தில் பேசுவதும்  மனிதர்களுக்கு பிரச்சனைகளை கொண்டு வருகிறது"



Monday, January 11, 2016

கொத்துரொட்டி --009

கனடாவில் இருக்கும் மக்மாஸ்டர்  பல்கலைக்கழகத்தினை சேர்ந்த இரு மொழியியலாளர்கள் இருவர் ஒரு வித்தியாசமான
ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர் .அதாவது ஆங்கிலமொழி பேசும்  மக்களைக் கொண்ட அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் ருவிற்றர் பயன்படுத்தும்போது  என்னமாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என ஒரு ஆய்வினை கடந்த வருடம் பெப்ரவரி தொடக்கி ஒக்ரோபர் வரை மேற்கொண்டதில் அமெரிக்கர்களை விட கனேடியர்கள் ருவிற்றரில் மிகவும் நம்பிக்கை , மிகவும் உற்சாகமான ,மகிழ்சியான எண்ணம் கொண்டவர்களாகவும்  சாதகமான மனநிலை கொண்டவர்களாக காணப்பட்டது  கண்டுபிடிக்கப்பட்டது .

சரி கனேடியர்கள் அதிகம்   “great,” “amazing” மற்றும் “beautiful”  போன்ற சொற்றொடர்களை உபயோகிக்கின்றனரென தெரிய வந்திருக்கிறது மாறாக அமெரிக்கர்கள் “hate,” “hell,” “tired,” “hurt” and “annoying.” போன்ற எதிர்மறை வார்த்தைகளை உபயோகிக்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

 அமெரிக்கவும் கனடாவும் அயல்நாடுகள் என்பதோடு இருவரின் கலாச்சார ,பண்பாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்றாலும் பல வகைகளில் அமெரிக்காவை விட கனடா  வேறுபடுகிறது .கனடாவின் உற்பத்தி பொருட்களின்  எண்பது வீதம் அமெரிக்கா சென்றாலும் கனடா அமெரிக்காவின் சொல்படி ஆடும் ஒரு நாடு அல்ல.

      can2



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



அண்மையில் யூடியுப்பில் உணவு தயாரிப்பது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை தேடும் போது தான் நியூஸ்7 தமிழ்  தொலைக்காட்சியின் "சுற்றலாம் சுவைக்கலாம் " எனும் ஒரு நிகழ்ச்சியை காணமுடிந்தது .தமிழகத்தின் எல்லா ஊர்களுக்கும் சென்று அந்தந்த ஊர்களுக்கே உரிய சுவையான உணவுகளையும் அந்த உணவுகளை தயாரித்து வழங்கும் உணவகங்களையும் படம்பிடித்து காட்டுவதுடன் அல்லாமல் தயாரிப்பு முறைகள், பேட்டிகள்  என சிறப்பாக செய்கிறார்கள் உண்மையில் ஒரு சிறப்பான ஒரு நிகழ்ச்சி 

.தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று  சென்று நிகழ்சிகளை வழங்கும் அவர்களின் பாங்கு சிறப்பாக இருக்கிறது .அத்தோடு "பேசும் தலைமை " என்று இன்னொரு நிகழ்ச்சி தமிழகத்தின் பிரபலமான பலதுறை சார்ந்தவர்களை பேட்டி காணும் ஒரு நிகழ்ச்சி .மிகவும் அருமையான ஒரு நிகழ்ச்சி பல்துறை. ட்ரம் சிவமணி ,கே .பி .என் அதிபர் அபிராமி ராமநாதன் இப்படி பலரையும் பேசவைக்கும் நிகழ்ச்சி பேட்டி காணும் விதம் அருமை .பேட்டி காணும் தொகுப்பாளர் விஜயனுக்கு பாராட்டுக்கள் அவரின் தமிழுக்கு பாராட்டுக்கள் .விரைவில் முன்னுக்கு வரக்கூடிய ஒரு இளைஞர் விஜயன் என்பது இப்போதே தெரிகிறது அது சரி யாருடைய தொலைகாட்சி நிறுவனம் அது ?



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அண்மையில் படித்து ரசித்த ஒரு  நீதிக்கதை .எமக்கு பலருக்கு பாடமாக இருக்கவேண்டிய ஒரு கதை ,இனி கதையை படியுங்கள் 

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!

ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் “சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்” என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் ” கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது” என்றும் சொன்னாள் !!

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



கடந்த வருடம்(2014 )மிக அதிகமாக இணையத்தில் இருந்து சட்ட விரோதமாக ,தரவிறக்கப்பட்ட  ஹொலிவூட் திரைப்படங்கள்  தொடர்பான ஒரு கட்டுரையை  இன்று ரொறன்ரோவில்  வெளிவந்த ஒரு பத்திரிகையில் வந்திருந்தது .உங்களுக்காக அந்த விபரங்களை தருகிறேன் Interstellar திரைப்படம் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது கிறிஸ்ரோபர் நோலன் இயக்கி இரண்டாயிரத்து பதினாலாம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம்  46 மில்லியனுக்கு அதிகமாக சட்டவிரோத தரவிறக்கம் செயயப்பட்டு முதல் இடத்தில இருக்கிறது .இரண்டாவதாக Furious 7 திரைப்படம் 44 மில்லியன் தடவை சட்டவிரோதமாக  தரவிறக்கம் செய்யப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது .மற்றைய திரைப்படங்களின் விபரம் கிழே தந்துள்ளேன்

1) Interstellar  (2014) 46,762,310 

2) Furious 7     (2015) 44,794,877 

3) Avengers: Age of Ultron  (2015)  41,594,159 

4) 3 Jurassic World (2015) 6,881,763 

5) Mad Max: Fury Road (2015)  36,443,244

6) American Sniper (2014) 33,953,737 

7) Fifty Shades of Grey (2015) 32,126,827 

8) The Hobbit: Battle Of The Five Armys (2014)    31,574,872  

9) Terminator: Genisys (2015) 31,001,480 

10) The Secret Service (2014) 30,922,987 

11) Focus              (2015) 26,792,863 

12) San Andreas   (2015) 25,883,469 

13) The Minions   (2015) 23,495,140

14)  Inside Out (    2015) 22,734,070


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



வலைபதிவர் ராஜ நடராஜன் மரணம் அடைந்ததாக தகவல்கள் வந்திருக்கின்றன .எனது  பதிவுக்கு வந்து கருத்துக்கள் இட்டிருக்கும்  ஒரு அன்பு உறவு,சக வலைபதிவர்  என்ற வகையில் தான் அவரைத் தெரியும் .இருந்தும் அவரது மறைவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது அன்னாரின் ஆத்மா  சாந்தியடையவும் அவர்களின் குடும்பத்தினர் ஆறுதல் அடையவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


புது வருடம் பிறந்து பத்து நாட்கள் கடந்து விட்டது . இங்கு காலநிலை  பூச்சியத்துக்கு கீழே சென்று விட்டதுடன் பனிப்பொழிவும் தொடங்கிவிட்டது .கொண்டாடங்கள் எல்லாம் ஓய்ந்து  இயல்பான வாழ்க்கைக்கு எல்லோரும் திரும்பி விட்டார்கள் .
தைப்பொங்கல் பண்டிகை வருகிறது .எல்லோரும் சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருப்பீர்கள் .பிறந்திருக்கும் இந்த புது ஆண்டு அனைவருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.அத்துடன் புது வருடத்தில் நிறைய சொந்தச்சரக்குகளை எழுத எண்ணி இருக்கிறேன் .பல யோசனைகளை இருக்கின்றன .பார்ப்போம் .கடவுள் அனுக்கிரகம் மட்டும் அல்ல மனைவியின் அனுகிரகமும் வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாது அல்ல .
மீண்டும் சந்திக்கின்றேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@#####################

Tuesday, January 05, 2016

இலங்கை மீனவரின் படகு மூழ்கடிப்பு ! தமிழக படகு சிறைப்பிடிப்பு !

முல்லைத்தீவு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவை படகு மோதியதில் முல்லைத்தீவு மீனவர்களின் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இதனால் கோபமடைந்த முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய இழுவை படகு ஒன்றையும் 8 மீனவர்களையும் சிறைப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(௦௪-௦௧ -௨௦௧௬  காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு- கள்ளப்பாடு தீர்த்தக்கரை மீனவர்கள் கடலில் தொழிலுக்கு சென்றிருந்த வேளை முல்லைத்தீவு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகுகள் முல்லைத்தீவு மீனவர் ஒருவருக்கு சொந்தமான படகை இடித்து தள்ளியதில் படகு சேதமடைந்து அதிலிருந்த மீனவர்கள் கடலில் வீழ்ந்து தத்தளித்த நிலையில் அங்கிருந்த சக மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். இதனை அறிந்து கரையிலிருந்து சென்ற மீனவர்கள் இந்திய இழுவை படகு ஒன்றை முற்றுகையிட்டு அதிலிருந்த 8 மீனவர்களையும் கரைக்கு கொண்டு வந்தனர்.இதனை அடுத்து மாவட்டச் செயலர், படையினர், பொலிஸார், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் சென்று மீனவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய நிலையில் முல்லைத்தீவு மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த முல்லை மீனவர்களின் படகும் கடலில் மூழ்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.