Tuesday, July 20, 2004

வாழ்க்கை என்பது இதுதானோ?

னக்கு நினைவு தெரிந்தநாளில் இருந்து காலையில் கோப்பி(காப்பி)குடிப்பது எப்படி தவறாதோ அதே போல பத்திரிகை படிப்பதும் தவறியதில்லை  சரியாக 7.00  மணிக்கு  பத்திரிகை பையன்(பையர்)  வந்து  பெல் அடிப்பார். பத்திரிகையையும் கையோடு கொண்டு ஓடுவது சாப்பாட்டு மேசைக்கு, சாப்பிட்டுக்கொண்டே 8.00  மணி பாடசாலைக்கு போகுமுன்னர் பத்திரிகை முழுவதும் படித்துவிடுவேன்.  இப்படிஆரம்பித்த பழக்கம் பின்னர் சாப்பிடும் நேரத்தில் எதாவது ஒரு புத்தகம் அல்லது பத்திரிகை இருந்தால் தான் சாப்பாடு உள்ளே போகும் என்ற அளவில் வந்து விட்டது.


 புத்தகம் வாசிக்காமல் சாப்பிட்டால் சாப்பிட்டது போலவே இருப்பதில்லை. இப்படி எல்லாவற்றையும் படித்ததால் நிறைய பொதுவிடயங்கள் அரசியல் விடயங்கள் எனது மண்டையினுள் புகுந்துகொள்ள பாடசாலையில் நடைபெற்ற ஒரு பொதுஅறிவு போட்டி நிகழ்சியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றேன். அதிலிருந்து நண்பர்,உறவினர் வீடுகளுக்கு சென்றால் ஒருவர் சொல்லுவார் இந்த பொடியன் சரியான கெட்டிக்காறன்.பொது விடயத்தில் என்ன கேட்டாலும் பதில் சொல்லுவான் என்று. உடனே மற்றவர்கள் 4, 5 கேள்விகள் கேட்பார்கள். இப்படி எங்கள் உறவினர், நண்பர்கள், மற்றும் பாடசாலை வட்டாரங்களில் நான் பொது அறிவில் பிரபலம்ஆனேன்.

இனி நான் வாசிப்பது  கூட மிக வேகத்தில் தான்.எனது அப்பப்பாவுக்கு (எனது அப்பாவின் தந்தை)  சந்தேகம் இப்படி மிக வேகத்தில் வாசிப்பது மனதில் நிற்குமா என்று'ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு இராமாயணத்தை எடுத்து கையில் தந்து சொன்னார் குறிப்பிட்ட பக்கத்தினை எடுத்து இதிலிருந்து 5 பக்கத்தினைப் படிகேள்விகள் கேட்பேன் என்று.  5 பக்கங்களையும் படித்தவுடன் கேள்விகள் கேட்டார். நான் கேள்விகளுக்கு பதில் சொன்னதுடன் மட்டும் அல்ல எந்த பக்கத்தில் எந்தெந்த  விடயம் இருக்கு என்பதனையும்சொன்னதுடன் அசந்துவிட்டார். எனக்கு ஒரு சிறு பரிசு கூட தந்த ஞாபகம். 

சில தினங்களுக்கு முன்னர் எனது பகுதி MP  யிடம் ஒரு அலுவலாக சென்றிருந்தேன். MP யின் காரியதரிசி பெண் எல்லா விபரங்களையும் பதிந்துவிட்டு  எனது மனைவியின் Date Of Birth கேட்டார். எனக்கு உடனடியாக ஞாபகம் வரவில்லை. சில நிமிடங்கள் யோசித்தேன்.நான் யோசித்துக்கொண்டு நிற்பதை கண்ட அருகில் அமர்ந்திருந்த மனைவி வந்து விபரம் சொல்லகாரியதரிசி பதிந்தார்.

பின் சிரித்துக்கொண்டு சொன்னார் எல்லா கணவர் மாரும் இப்படிதான் போலும்என்று. பின்னர் எது நடக்கும் என நினைத்தீர்களோ அதுவே சரியாக நடந்தது.வீடு வந்து சேருமட்டும்  எனக்கு திட்டுத்தான். வீட்டிலும் தொடர்ந்து  திட்டுதான்.திருமணம் முடித்தவர்களுக்குதெரியும் தானே பின் என்ன நடந்திருக்கும் என்று.

பிழை என்னில் தானே. ஞாபக மறதி ஏற்படும் அளவிற்கு எனக்கு வயதில்லை.ஏன் இப்படி?  இரவு படுத்திருக்கும்போது எனது நினைவுகள் சற்று பின்னோக்கி போனது.அது தான் மேலே உள்ளது.  நான் மட்டும் தான் இப்படியா? அல்லது காரியதரசி பெண் சொன்னது போல பெரும்பாலான கணவன்மார்  இப்படிதானா?   உங்கள் அனுபவங்கள் எப்படி?


2 comments:

சாகரன் said...

ஞாபகமறதி என்பது குறிப்பாக மனைவியின் விபரம் குறித்த சிறு விசயங்களில் ஏற்படும் என்பது இயல்பானதுதான் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்...

என்னைப்பத்தி கேட்கறீங்களா? ... அட அதெல்லாம் சொல்லி மறுபடி திட்டு வாங்க நான் ரெடி இல்லீங்கோ..! :-)

Chandravathanaa said...

பிழைக்கத் தெரியாத ஆண் நீங்கள்.
மனைவியின் பிறந்தநாள், இரவரதும் திருமணநாள்... போன்ற விபரங்களை
ஞாபகத்தில் வைத்தே பலர் யமாய்த்து விடுவார்கள்.
நீங்கள்...?
இதிலா கோட்டை விட்டீர்கள்...?