Sunday, July 10, 2005

ரொரண்டோவில் தமிழ் நண்டுகள்!!!!!!

ரொரண்டோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சில விடயங்களை நினைத்தால் எனக்கு ஒரு கதை ஞாபகத்தில் வருது பாருங்கோ.முதலில் கதை, பின்னர் விடயம் சொல்லுறன்.

ஒரு நண்டு வியாபாரி ஒரு ஊரில் இருந்தார் பாருங்கோ.சரி அந்த ஊர் ரொரண்டோ எண்டு வைச்சுக் கொள்ளுங்கோ.அவர் எல்லா நாட்டு நண்டுகளையும் வாங்கி வியாபாரம் பண்ணிறவர்.அவரிட்ட பல நாட்டு நண்டுகள் பல வித சைசில்,ரகத்தில் வரும் பாருங்கோ.அப்படி இருக்கேக்க அவரின் நண்பர் ஒருவர் அவரின் கடைக்கு வந்தார்நண்டுவாங்க. அப்படி வந்தவருக்கு நண்டு வியாபாரி ஸ்பெஷலாக தானேகூட்டிக் கொண்டு போய் நண்டுகளை காட்டினார்.

ஒரு இடத்தில் நிறைய நண்டுகள் இருந்தது அவற்றை வியாபாரி நன்றாக பூட்டிவைத்திருந்தார்.அப்போது நண்பர் கேட்டார் "இதெல்லாம் சின்ன நண்டுகளாக இருக்கு பிறகேன் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு"?
அதற்கு வியாபாரி சொன்னார் "உங்களுக்கு தெரியாது. இது எல்லாம் சீன நண்டுகள்.இவை பார்க்க சின்னனாய் தான் இருக்கும்.ஆனால் நிறைய புத்தியுள்ளவை.கூட்டமாக சேர்ந்தால் தப்பி விடும் எண்டு" .அது தான் பூட்டுகள் போட்டு பூட்டிவைத்திருக்கிறேன் என்று.

அடுத்தது அமெரிக்க,மெக்சிகோ நண்டுகள்.அதுக்கும் கடும் பாதுகாப்பு.இப்படியே கொரிய ,ஜப்பான்.,ஜமேக்கா,சிலி இப்படி பல நாட்டு நண்டுகள் எல்லாம் நன்றாக கொள்கலன்களில் பூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருந்தன.காரணம் கேட்ட நண்பருக்கு வியாபாரி சொன்னார் "எல்லாம் ஒன்றாக சேர்ந்தால் தப்பி விடும் எண்டு".

கடைசியாக இன்னொரு பகுதிக்கு வந்தார் நண்டு வியாபாரியும் அவரின் நண்பரும்.ஒரு கொள்கலனில் நிறைய நண்டுகள் இருந்தன எந்தப் பாதுகாப்பும் இல்லாமல். நண்பருக்கோ பெரிய ஆச்சரியம் . எட்டிப் பார்த்தார் நல்ல உருண்டு திரண்ட நண்டுகள். நண்டு வியாபாரிடம் கேட்டார் "என்னப்பா ஆச்சரியமா கிடக்குது.இதை விட சின்ன சின்ன நண்டுகள் எல்லாவற்றையும் கண்ணாடி கொள்கலன்களில் இட்டு நன்றாக பூட்டிவைத்திருக்கிறாய்.அனால் இந்த பெரிய நண்டுகளை கண்ணாடிப் பெட்டிகளில் சுதந்திரமாய் விட்டுவைத்திருக்கிறாய் இவை தப்பி ஓடாதோ"? என்று கேட்டார்.

அதற்கு நண்டு வியாபாரி புன்சிரிப்புடன் சொன்னார்."என்னுடைய 25 வருட கால நண்டு வியாபாரஅனுபவத்தில் சொல்றன். ஒரு காலத்திலும் இந்த நண்டுகள் தப்பி ஓடியதில்லை எப்படி எண்டால் ஒரு நண்டு தப்பி ஓட முயற்சித்தாலும் மற்ற நண்டுகள் கீழே இழுத்தி விழுத்திவிடும்".இப்படிதான் என்றார்.
அப்ப நண்பர் கேட்டார்."ஒரு நண்டு சரி.எல்லா நண்டுகளும் ஒண்டா சேர்ந்து தப்பி ஓடாதோ"? நண்டு வியாபாரி சொன்னார் "ஒண்டா சேருறதோ? ஒரு காலமும் நடக்காது..இந்த நண்டுகளின் இயல்பே இப்படிதான்.நல்ல புத்தியுள்ள நண்டுகள் இவை ,ஆனால் ஒரு காலமும் இவை ஒற்றுமைப்படமாட்டாதவை,ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க கூடியவை, பொறாமை நிறைந்த நண்டுகள்"எண்டு வியாபாரி சொன்னார்.
நண்பருக்கு ஆச்சரியம் தாளமுடியவில்லை எல்லாம் சரி இவை எந்த நாட்டு நண்டுகள் எண்டு கேட்டார்.

நண்டு வியாபாரி பெருமையுடன் சொன்னார் இவை எல்லாம் இலங்கையிலிருந்து வரும் தமிழ் நண்டுகள் எண்டு.

நண்பர் சொன்னார் இப்படி பட்ட நண்டுகள்தான் எனக்கு வேண்டும் ஏனெனில் இப்படி பட்ட நண்டுகள் தான்அசையாது இருந்து நல்லா உண்டு கொழுத்திருக்கும். எனக்கு அவைதான் வேணும் என்றார் நண்பர்.

இது கதை.
இதை படித்தவர்களுக்கு இதனுடன் தொடர்புடைய பல சம்பவங்கள் ஞாபகம் வரும்.எதற்கும்அடுத்த பந்திக்கு வாங்கோ.

இதை ஏன் சொன்னேன் என்றால் ரொரண்டோ நடப்புக்கள் அப்படி இருக்கின்றன.தமிழ் குரோசரி(மளிகை)கடைகளுக்கு இடையே நடக்கும் வியாபர போரினை நினைத்தால் நண்டு கதைதான் ஞாபகம் வருகிறது.சில மாதங்களுக்கு முன்னர் "வடமெரிக்காவில் பெரிய கடை"என்ற கோசத்துடன் பெரிய விசாலமான இடப்பரப்புடன் ஒரு கடை தொடங்கினார்கள்.தொடங்கினார்களா அன்று முதல் மலிவு விலையில் பல பொருட்கள் கிடைக்குமென்று அறிவிப்புக்கள்.சரி புதுக்கடை ஆரம்பத்தில் அப்படிதான் இருக்கும் என்றால் இதற்கு முதல் பெரிய கடையாக இருந்த இன்னுமொரு நிறுவனம் சிலிர்த்தெழுந்து மலிவு விலையில் பொருட்களை வழங்கத் தொடங்கினார்கள். என்ன விசியம் என்று உள்ளால் விசாரிச்சால் புதிய நிறுவன முதலாளி பழைய நிறுவனத்தின் முன்னாள் முக்கிய ஊழியராம்.அதுதான் அந்த நிறுவனத்தைஅப்படி சிலிர்தெழவைத்து போட்டுதாம்.

பழைய நிறுவனம் புதிய நிறுவனத்தினை சந்தையில் இருந்து அகற்றும் நோக்குடன் மிக மலிவு விலையில் பல் பொருட்களை தர தொடங்கஇரண்டு நிறுவனத்துக்கும் போட்டியில் பல விற்பனைப் பொருட்கள் 99 சதத்திற்கு விற்கத்தொடங்கி விட்டார்கள். மலிவு விலையில் பொருட்கள் கிடைக்குது எண்டால் யார் தான் சந்தோஷப்படமாட்டார்கள் ,மக்களுக்கு சந்தோஷம் தான். இதைப் பார்த்து மக்கள் பலர் மேற்படி நிறுவனங்களுக்கு வந்து குவிய தொடங்க, மற்றைய நிறுவனங்களும் விழித்தெழுந்து தாமும் தம் பங்குக்கு மலிவிலை விற்காவிட்டால் தமது வாடிக்கையாளர்கள் கட்சி மாறிவிடும் அபாயம் உள்ளதை உணர்ந்து, தாமும் "மலிவு விலை" போட்டியில்குதிக்க வாடிக்கையளர்கள் பாடுதான் கொண்டாட்டத்தில் உள்ளது.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல.இரண்டு வணிக நிறுவனங்களுக்கிடையன போட்டி மாறி இன்று ரொரன்ரோவில் பல பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கும்இடையே போட்டி என்ற அளவில் வந்துவிட்டது.இன்றைய நிலையில் பல பெரிய நிறுவனங்கள் கொள்முதல் விலைக்கே சில பொருட்களை விற்பதுடன் பலபொருட்களை முன்பு விற்ற விலையில் பாதி விலைக்கே விற்கின்றனர்.இதில் என்ன வருத்தம் என்றால் பல சிறிய வணிக நிறுவனங்கள்விழிபிதுங்கி நிற்பதுதான். பலர் தமது வணிக நிறுவனங்களை மூடும் நிலைக்கு வந்துவிட்டதையும் காணமுடிகிறது.மொத்தத்தில் பல சிறு வியாபாரிகள் "திவாலாகப்" போகின்றனர்.

இதில் எனது கேள்வி என்றால் வர்த்தகத்தில் போட்டி இருக்கத்தான் வேண்டும்.அப்போது தான் நுகர்வோருக்குதரமான, மலிவான பொருட்கள் கிடைக்கும்.ஆனால் பொறாமை இருக்கவே கூடாது.இங்கு போட்டி மறைந்து இப்போது பொறமைதான் நிகழ்கிறது. இப்போது மக்கள் பேசிக்கொள்கின்றனர் "அப்போ முன்பு எங்களிடம்கொள்ளை லாபம் தானே அடிச்சிருக்கினம்" இது மக்களின் எண்ணம்.

நான் சிந்திப்பது என்னவென்றால் நாளை சிறிய நிறுவனங்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்ட நிலையில்இந்த பெரிய நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து இப்போது தாம் "விடுவதை" பின்பு "பிடிக்க" நினைத்து பொருட்களின்விலைகளை உயர்த்தினால் யாரால் என்ன செய்யமுடியும். மொத்தத்தில் யார் யார் தமது தலையில் மண்அள்ளிப் போட்டிருக்கின்றனர் என்பதை சில காலத்தில் உணர்ந்து கொள்வார்கள்.அதுவரையில் நுகர்வோர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் மலிவு விலை பொருட்களுக்காக.

சரி.மேலே சொன்ன நண்டுக்கதை இப்போ ஞாபகத்தில் வந்து தொலைக்கிறதோ?

5 comments:

Anonymous said...

You're absolutely right karikalan and You bring the great example as well.....

Anonymous said...

Yarlton ,Shankanai santhai and Yarl Market

Venkat said...

கரிகாலன் - மிகச் சரியாக அவதானித்து எழுதியிருக்கிறீர்கள். நானும் கொஞ்சம் நாட்களாகக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். "அதுவும் 99 சதம்தான்" என்றும் "தொடர்ந்தும் இலவசம்" என்றும் அதிரடியாக விளம்பரம் நடக்கிறது. சிறிய வியாபாரிகள் நசிந்துபோகிறார்கள். நான் என்ன நினைத்தேனென்றால் இப்படிக் காரெட் ராத்தல் 30 சதம் என்று சொல்லிவிட்டு கடைக்குப்போனால் அந்த 30 சதம்/ராத்தல் விற்றுப்போய்விட்டது; இந்த 90 சதம்/ராத்தல்தான் இருக்கிறது என்று சொல்வார்கள்.

உண்மையிலேயே இந்த விளம்பரப்படுத்தப்பட்ட பொருள்களின் தரம் எப்படியிருக்கிறது என்று கவனிக்கவேண்டும். தரம் சரியில்லை என்றால் மக்கள் வரமாட்டார்கள். சிறிய கடைக்காரர்கள் விலையில் போட்டியிட முடியவில்லை என்றால் தரத்தை முன்னிருத்தி விளம்பரப் படுத்த வேண்டும்.

இது சந்தைப் பொருளாதாரத்தின் சங்கடம். - வெங்கட்

NONO said...

தரம், வாடிக்கையாளர் சேவை இவையெல்லாம் முக்கியமானவை... மலிவு என்று குப்பைகளையா வாங்கமுடியும்!!!

Anonymous said...

குணா,வெங்கட்,நோநோ,முகம்காட்ட
மறுத்தவர்.ஆகியோருக்கு நன்றி.
எனது கருத்துக்களை அடுத்த பின்னூட்டத்தில் தருகிறேன்.